வெள்ளி, 27 மே, 2011

சமச்சீர் கல்வி என்னும் மாயை

சமச்சீர் கல்வி கடந்த பத்து நாட்களாக எல்லோரிடமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் என் பங்கிற்கு நானும். எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற இரு நிலைப்பாடுகளையே பார்ப்பதனால் எழுதத் தோன்றியது.

முதலாவது திமுக அரசு ஆட்சிமுடியும் தருவாயில் அவசரமாக காசு பார்க்க நினைத்ததன் விளைவுதான் இந்த திட்டம்.தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும், எந்த திட்டமானாலும், அதில் காசு, கமிஷன், லஞ்சம், வேண்டியவர்களுக்கு ஆர்டர், மறைமுகப் பலன் இவையெல்லாம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.கழக கண்மணிகள் இந்த ஏப்ரல், மே மாதங்களில் அச்சகங்களை ஆரம்பித்து பின் மூடிவிடுவர். ஆசிரியர்கள் குழு அமைத்தலில் தொடங்கி புத்தகங்களை அச்சடிக்க ஆர்டர்கள் கொடுப்பதில், அச்சிட்ட புத்தகங்களை விநியோகிக்க, விற்க என எல்லா நிலையிலும் காசு பார்த்துவிடுவர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஊழல் அவர்களிடையே (அதிமுக,திமுக) பிரசித்திப் பெற்றது.அதேபோல் ஒருகழகத்தால் ஆரம்பிக்கப்படும் திட்டத்தை இன்னொரு கழகம் அப்படியே செயல்படுத்த இயலாது. பின் அடுத்த தேர்தலுக்கு எதை சொல்லி ஓட்டு கேட்பதாம்?
இதில் கலைஞர் குடும்பசரிதப் புகழ், கண்களை உறுத்தும் எழுத்துப்பிழைகள் வேறு. தவறான ஒன்றை கொடுப்பதற்கு பதில் கொடுக்காமலே இருந்து விடலாம்.
ராஜசேகர ரெட்டி தொடங்கிய விவசாயிகளின் காப்பீடு திட்டம் தான் தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுதிட்டம். ஆனால் ரா.ரெட்டி அவர் பெயரை அந்த திட்டத்திற்கு சூட்டவில்லை. கருணாநிதி எந்த திட்டத்தையும் மக்கள் நலனுக்காக மண்டையை உடைத்து கண்டுபிடிக்கவில்லை. ஓட்டுக்காக அவர் ஆரம்பிப்பார், நோட்டுக்காக குடும்பத்தினர் செயலாக்குவார்கள். கழகங்களின் ஊழல்களும் அநாகரீக அரசியலும் எழுதி முடிக்க முடியா காவியங்கள்.

நாம் விஷயத்திற்கு வருவோம்.

முதலில் மெட்ரிக்குலேஷன் எனும் படிப்பு முறையை ஒரு பாடத்திட்டமாக மாற்றிய புண்ணியவான்கள் யாரோ தெரியாது!12 வருட பள்ளி படிப்பு (அதாவது 5 வயது முதல் 16 வயது வரை) படித்தப் பின்னரே கல்லூரி படிப்புக்கு தகுதியானவர்கள் என்று அளிக்கப்படும் சான்றிதழ்தான் மெட்ரிக்குலேட். இது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். நமது நாட்டில் பத்து வருட பள்ளிபடிப்பு (6 வயது முதல் 15வரையிலான) முடிந்தவுடன், பியூசி (pre University degree) இரண்டு வருடம் படித்த பிறகே இளங்கலை படிப்புக்கு தகுதி பெறுவர். அதாவது மேற்கத்திய நாடுகளில் 12+3(4or5).
இந்தியாவில் 10+2+3(4 or 5) (இந்த 4,5 என்பது பொறியியல் &மருத்துவம்) பின்னர் பியூசி +1,+2 என்று மாற்றம் செய்யப்பட்டு பள்ளிகளிலேயே படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. உண்மையில்
மற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் பொதுவான அதாவது (நேஷனல்) தேசிய பாடத்திட்டம் என்று மட்டுமே இருக்கும். உலக அளவில் நம்முடையது இந்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ). நம்மளவில் மத்திய பாடத்திட்டம், மாநில பாடத்திட்டம் என்றுதான் உள்ளது. காரணம் மற்ற நாடுகளில் இல்லாத பண்மொழி கலாச்சாரம்.

சிபிஎஸ்இ (மத்திய கல்வி) மற்றும் எஸ்பிஇ (மாநிலக்கல்வி) இரண்டையும் கலந்த ஒரு ஜல்லியடி பாடத்திட்டம்தான் மெட்ரிக்குலேஷன் என்பது. மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டங்கள் உயர்ந்தது என்ற மாயையை உருவாக்கி காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே. தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி தரத்தின் பிரச்சனை பாடங்களில் அல்ல. படிப்பிக்கும் முறைகளில்தான். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் புவியியல் இவற்றின் பாடத்திட்டங்கள் சமமாகத்தான் இருக்கின்றன. படிக்கும் முறையிலும் எழுதும் முறையிலும்தான் வித்தியாசப்படுகின்றன. மெட்ரிக்குலேஷனைப் பொறுத்தவரையில் பாடங்களில் எழுதும் தன்மை அதிகம். ஒரு பாடம் நடத்தப்பட்டால் கேள்வி பதில்களை க்ளாஸ் வொர்க் எனப்படும் பள்ளி நோட்டில் ஒரு முறையும், வீட்டுப்பாட நோட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுத வேண்டும். அதைத் தவிர வொர்க்புக் எனும் பயிற்சி புத்தகம். ஒரு ஆங்கில இலக்கணத்திற்கு மூன்று புத்தகங்கள் வெவ்வேறு பெயர்களில். இங்கு அறிவியல் லேப்கள், கம்ப்யூட்டர் லேப்கள் இருக்கிற மாதிரி, ஆனா இருக்காது. எனக்கு தெரிந்து மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலங்கள் கிடையாது. அல்லது நூலகம் என்ற பெயரில் பள்ளிகளில் இரண்டு அலமாரிகளில் சிறுவர் புத்தங்கள் அடுக்கிவைக்கப்பட்டு, குழந்தைகள் கண்களில் படாத வண்ணம் பராமரிப்பார்கள். அரசுப் பள்ளிகளிலாவது விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நேரம் ஒதுக்குவார்கள். இந்த தனியார் பள்ளிகளில் அதுவும் கிடையாது இடமிருந்தால்தானே அதைப் பற்றி யோசிக்க? ஆனால் லைப்ரெரி,லேப் மற்றும் ஸ்போர்ட்ஸ் மெயின்டனன்ஸ் ஃபீஸ் கண்டிப்பாக உண்டு.லைப்ரெரி,லேப் ஃபீஸ் வாங்குகிறீர்களே, அவற்றை குழந்தைகள் கண்ணில் கூட காட்டமாட்டேன் என்கிறீர்களே என்று எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. ஏனெனில் நமது எண்ணமெல்லாம் அர்ஜுனன் காண்டிபக்குறியாக தொண்ணூற்றி ஐந்து சதவிகித மார்க்கை நோக்கி நிலைகொண்டு விட்டதே! அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியப் பெருந்தகைகளைக் காட்டிலும் கைடு, நோட்ஸ் என்று அழைக்கப்படும் சாதனங்களின் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருப்பார்கள். மெட்ரிக்குலேஷனில் அந்தத் தொல்லை இல்லை. ஏனெனில் பள்ளிகளே அந்த நோட்ஸ்களை வாங்கி வைத்துவிடும் ஆசிரியர்கள் அந்த நோட்ஸை போர்டில் எழுதிப் போட்டு விடுவார்கள். இரண்டிலும் மாணவர்களின் புரிதல்கள் பிரச்சனை இல்லை. அவரவர் மனப்பாடத்திறனுக்கு ஏற்றபடி தேர்வுத் தாளில் கக்க வேண்டும்.


மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ எதுவாக இருந்தாலும், நல்ல முறையில் கற்பிக்கும் பள்ளிகளில் (இவைகளின் கட்டணம் மிக அதிகம்). வீட்டுப் பாடங்கள் என்பது படிப்பதும் அது சம்பந்தமான செயல்தயாரிப்புகளும்தான். உதாரணமாக மேல்தகவல்கள் சேகரிப்பு, சார்ட் தயாரிப்பது, படங்கள் வரைவது, அடுத்தநாள் பள்ளியில் அதைப்பற்றி விவாதிப்பது என்று இருக்கும். சோதனை செய்முறைகளை செயல்வடிவில் காண்பிப்பார்கள். கம்ப்யூட்டர், லைப்ரெரி, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் செயல்படுத்துவார்கள். ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அப்டேட் செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு மருத்துவ சோதனைகளும் செய்யப்படும். இதுபோல் நடத்தும் போது செலவு அதிகம் என்பது அவர்களது வாதம்.

இது மாணவர்களை ஒப்பீட்டு பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல பள்ளியில் (நல்ல என்பது படிப்பிக்கும் முறையில்) ஸ்டேட்போர்டில் படிக்கும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவுத் திறன் மோசமாக நடத்தப்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவனின் அறிவுத்திறனை விட நன்றாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளும், மோசமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் தரத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எழுத்து பிழையின்றி எழுத (தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்) இவர்களுக்கு இயலாது.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சிறப்பாக செயல் படுத்தப்படும் பள்ளிகளும் உண்டு. மெட்ரிக்குலேஷனில் தகுதியற்ற ஆசிரியர்களால் மோசமாக நடத்தப்படும் பள்ளிகளும் உண்டு. பெரும்பாலும் நகர் புறங்களில் சில புகழ் பெற்ற நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக காசு வாங்கிக் கொண்டாலும் சிபிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு இரண்டு பாடத்திட்டங்களையும் கொண்டு தரமாகவே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பணத்தை வாங்கிக் கொண்டு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துக் கொண்டு குறைந்த முதல் அதிக லாபம் என்று நூறு சதவீதம் லாப நோக்கோடு செயல்படுகின்றன.

சராசரியாக 15லிருந்து 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுமே நல்ல கல்விக்கு அடிப்படை. இங்கு ஒராசியர் பள்ளிகள், இருஆசிரியர் பள்ளிகள், ஆசிரியர் எப்போதாவது வந்துபோகும் பள்ளிகள் என்ற குறைகளே இன்னமும் களையப்படவில்லை.

நம் ஊரில் நிலவும் சில மாயைகள்

வெ‌ளிநாடுக‌ளி‌ல் பள்ளியிலிருந்தே விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கமுடியும்.

அங்கு தேர்வுமுறைகள் கிடையாது அல்லது எளிதானது.

ரேங்க் கிடையாது கிரேடுகள் தான்.

பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக விருப்பப்பட்ட கல்லூரிக்கு சென்று விடலாம் .

நான் கூட எனது இளமை பருவத்தில் அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் பிறக்காமல் இந்த பாவப்பட்ட ஊரில் பிறக்க நேர்ந்த கதிகேட்டை நினைந்து நொந்ததுண்டு!

உண்மையில் முதலாளித்துவ பிரிட்டன் அமெரிக்கா தொடங்கி கம்யூனிச பூமியான சீனா வரை
12 வருட வகுப்பு பள்ளிப்பாடத்தில் மொழிபாடம் தொடங்கி அறிவியல், கணிதம், சமூக அறிவியல், கலை, சிட்டிசன் சிப் எனப்படும் அடிப்படை மக்கள் உரிமைப்பாடம் வரை கட்டாயம் படிக்கவேண்டும்.
தேர்வு என்பது மூன்று அல்லது இரண்டு வருடாந்திர(டெர்ம்) தேர்வுகள் உண்டு. ஆனால் வார உள் தேர்வு (இன்டர்னல்) எழுத்துதிறன், வாசிப்பு பேச்சுதிறன், பகுத்து ஆராயும் திறன் (அனலெடிக்கல்), சிறிய ப்ராஜெக்ட்டுகள் அடிப்படையாக கொண்டு இவற்றுடன் எழுத்து தேர்வும் சேர்த்து மதிப்பெண்கள் அளிக்கப்படும். 60+40(100%)

ரேங்க் வரிசை கிடையாது. ஆனால் ABCD என்று கிரேடுகள் உண்டு. இதுவும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கொடுக்கப்படும். A (90-100), B (80-89), C (70-79)இதில் சில மாறுபாடுகள் இருந்தாலும் இதுதான் அடிப்படை. ஆனால் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க்குகள் மாறும். சில நாடுகளில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க் 45/100.

நமது நாட்டில் போன்று மருத்துவம் பொறியியல் மட்டுமன்றி மற்றவகை படிப்புகளுக்கும் அந்தந்த பல்கலைகழகங்களால் நடத்தப்படும் நுழைவு தேர்வை எழுதியே குறிப்பிட்ட பாடபிரிவில் சேர இயலும்.

அனைத்து நாடுகளிலும் (சீனா உட்பட) பள்ளிகள் தனியார் வசம் உண்டு. பள்ளி தொடங்க அங்கு வங்கி கடன்களும் உண்டு. ஆனால் அனுமதி பெறுவதில் சட்டங்கள் கண்டிப்பாகவும் முறையாகவும் இருக்கும். பள்ளிகளின் நிர்வாகக்குழு என்பது நம்மூர் மாதிரி மாமன் மச்சான் சகலைபாடி சபையாக இருக்காது. ஆசிரிய பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதி, பெற்றோர்சங்க நபர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ஆட்சிமன்ற நபர் அடங்கிய குழுதான் நிர்வாகம் செய்யும். கட்டணம் அரசின் வரைமுறைக்கு உட்பட்டுதான் தீர்மானமாகும். கட்டண உயர்வும் பள்ளிகளின் விண்ணப்பத்தில் உள்ள காரணங்கள், பள்ளிகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், இவற்றின் மீதான கல்விஅமைச்சக ஆய்வு இவற்றிற்கு பிறகே முடிவு செய்யப்படும்.

வோட்டுப் பொறுக்கும் அரசியல்,
பதவி,புகழ், பொருள் இதற்காக எதையும், யாரையும் விலையாக கொடுக்க தயங்காத மக்கள்
அடுத்தவனைவிட பத்து ரூபாய் கூடுதலாக சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று வழிகாட்டும் பெற்றோர்
என்ற இந்த சுயநலமிக்க சமுதாயத்தில்

தேய்ந்த துடைப்பத்துக்கு குஞ்சம் பட்டிலிருந்தால் என்ன? சணலில் இருந்தால் என்ன?

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஔவையார்

(நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன,மேடாக இருந்தால் என்ன, எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய்!)

செவ்வாய், 17 மே, 2011

தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி பலரும் பல விஷயங்களை சொல்லும் நிலையில், எனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.



தமிழ்நாடு: தமிழக முடிவுகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த முடிவுதான். இது ஜெயலலிதாவின் வெற்றி என்று சொல்ல இயலாது. ஒரு பொறுப்பான எதிர் கட்சியாக செயல்படாது தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்தித்துள்ளார். அவ்வப்போது அவர் சார்பாக சில அறிக்கைகள் வெளிவருவதுடன் சரி. வேறு சரியான மாற்றுகள் இல்லாததாலும், ஆளும் கட்சி மீதான மக்களின் அதீத வெறுப்பின் காரணமாகவுமே இந்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிர்கட்சி என்ற அந்தஸ்து பறிபோனது இதுவே முதல்முறை. உபயம்: விஜயகாந்த். நல்லவேளை பேரங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. பாமக டாக்டரின் சித்து வேலைகளுக்கு இடமில்லை. “மக்கள் எனக்கு ஒய்வளித்து உள்ளார்கள்”. சமீபத்தில் வந்த கருணாநிதியின் கருத்துக்களிலேயே இதுதான் உண்மையில் மனதின் அடியில் இருந்து வெளிப்பட்ட கருத்து என நினைக்கிறேன். கை மீறி போன குடும்ப உள்ளடிகளால் நொந்துபோன முதியவரின் ஆசுவாசம். குடும்பம் மட்டுமல்லாது நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று அடிமட்டம் வரை பரவியிருந்த எத்தெச்சதிகாரம், நிர்வாக சீர்கேடு, ஊழல் என்று சகிக்கமுடியாத அளவிற்கு போய்விட்டது. அரசின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. சரி செய்ய அவகாசம் வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கூற்று மறுக்க முடியாத ஒன்று. ஆனால் மக்கள், ஊடகங்கள், சொந்தக் கட்சிகாரர்கள் மட்டுமன்றி அமைச்சர்களும், அதிகாரிகளும்கூட நினைத்தவுடன் சந்திக்க இயலாத நிலையும் உடன் பிறவா சகோதரியின் பாசமும் தொடர்ந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

புதுவை: செல்வாக்கும், மக்கள் எளிதில் சந்திக்க கூடியவருமான ரெங்கசாமியை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் தனக்குதானே வைத்துக் கொண்ட ஆப்பு. ஆனால் காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் ஐக்கியமாகி விடுவதை பார்த்திருக்கிறோம்.



கேரளா: LDF ஐந்து வருடம் UDF ஐந்து வருடம் என்பதுதான் கேரளாவின் பதிவு(வழக்கம்) . ஆனால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கம்யூனிஸ்ட்டுகள் சமபலத்துடன் இருப்பது. வெறும் நான்கு ஸீட்களே வித்தியாசம். காரணம் அச்சுதானந்தன். சொந்தக்கட்சி என்று மட்டுமில்லாமல் எதிர்கட்சியிலும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்போதும் முதலமைச்சர் ஆவதற்கு தள்ளுமுள்ளுகள் நடைபெறும். முதலமைச்சர் வேட்பாளராக உம்மன்சாண்டி அறிவிக்கப்பட்டாலும், இந்த முறை வித்தியாசமாக நான் வரலை, நீ வரலை என்பதாக இருக்கிறதாம். ஏனெனில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்பதால்.



மேற்குவங்கம்: அதிர்ச்சி என்று ஊடகங்கள் வருணித்தாலும், கடந்த சில வருடங்களாகவே உள்ளாட்சி தேர்தல் தொடங்கி இடைத்தேர்தல் வரை சீட்டை மம்தாவிடம் பறிகொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் தோழர்கள்! காரணம் மம்தா தீதியின் அதிரடி அரசியல் மட்டுமல்ல.


1977ல் ஜோதிபாசு தலமையில் மார்க்ஸிஸ்ட் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு எந்த மாநிலமும் செய்யாத நிலசீர்திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் ஏழை விவாசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது. விவசாயம் முக்கிய தொழில். நிலங்கள் சிறிய அளவில் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி தனிமனித தேவைகளை நிறைவு செய்தாலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி பெருகவில்லை. 1948தொடங்கி 1962 வரையிலான சித்தரஞ்சன் தானியங்கி இன்ஜின் தொழிற்சாலை துர்காபூர் எஃகு தொழிற்சாலை தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகியவை தவிர்த்து ஒரு IT கம்பனியும், ஒரு பெட்ரோகெமிக்கல் கம்பெனி மட்டுமே இந்த 34 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவை.


மாநிலத்தின் செலவு அனைத்தும் அரசினுடையது. ஆனால் அதற்கேற்ற வருமானமில்லை. பொருளாதார ரீதியாக மத்திய அரசை சார்ந்து இருக்கவேண்டிய நிலை மற்றும் அண்டை நாட்டு அகதிகளின் வரவு என்ற பிரச்சனை வேறு.

அரசாங்கத்தை நிர்வகிக்க தொழில் வளர்ச்சி அவசியம் என்று கணக்கிட்டு சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தபோது அரசாங்கத்திடம் துண்டு நிலம்கூட இல்லை. அதையெல்லாம்தான் கொடுத்தாயிற்றே. ஆனால் நிலங்களை திரும்ப எடுப்பதில் சிக்கல். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் அரசு சரியான திட்டமும், வழியும் ஏற்படுத்தாமல் அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை.

மற்றபடி இந்த 34 ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றசாட்டு கிடையாது. இந்தியாவின் எந்த பகுதியில் மத கலவரம் ஏற்பட்டாலும் மிகவும் சென்சிடிவான (அருகில் பங்களாதேஷ்) இந்த பகுதியில் ஒரு கலவரமும் ஏற்பட்டது கிடையாது. மேல்மட்டத்திலும் அதற்கு அடுத்த அளவிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் நேர்மையானவர்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர்கள். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், பஞ்சாயத்து நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் இங்குள்ள வங்காளிகளின் கருத்து.

இதுவரை மம்தா பாணர்ஜி எந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி வென்றாரோ, அதே பிரச்சனைகளை அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இரயில்வே நிர்வாகத்தை சரியாக நடத்த இயலாதவர் ஒரு மாநிலத்தை எங்கனம் நிர்வகிப்பார் என்பதை அம்மாநில மக்களே உணர்ந்து சொல்லட்டும்.

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்


உலகமனைத்தையும் உங்க குடைக்குள் ஸாரி, ஒரே குடைக்குள் கொண்டுவர விரும்பும் ஐயா ஒபாமா, வணக்கமுங்க. நல்லா இருக்கீங்களா? இந்த மீடியாக்கள் வேற அநாவசியமா கேள்வி கேட்டு உங்க BPய ஏத்துறாங்கபோல. உடம்ப பாத்துக்கோங்க. உலகமே உங்கள நம்பித்தானே இருக்கு.

உங்கள பாராட்டவும் அதோட ஒரே ஒரு கோரிக்கையையும் வைக்கவும்தான் அனுப்ப இயலாத இந்த கடிதத்தை எழுதுறேன்.

ஒசாமா இறந்துட்டாரு. உங்கள அசுரன வீழ்த்துன கிருஷ்ண பரமாத்மாவா பார்க்கிறாங்க. நல்லது. ரொம்ப சந்தோஷம். எனக்கும் கொள்கைன்ற பேர்ல அப்பாவி மக்கள் கொல்லப்படுறதுல விருப்பம் இல்லைங்க. தீவிரவாத செயல்களால் கொல்லப்படுகிற பொதுமக்களை போன்றே தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கொல்லப்படுகிற பொதுமக்களின் நிலமையும் என்று நினைக்கிறவங்கள்ல நானும் ஒரு ஆள்.

பாகிஸ்தானில் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தமா புகுந்து தாக்குதல் நடத்துறது நியாயமா? உங்க நாட்டுல மத்தவங்க புகுந்து செஞ்சா ஒத்துக்குவீங்களான்னு? சத்தியமா நான் கேக்கலைங்க, சர்தாரி கேக்கிறாரு. எனக்கு புரியுது. ஐயா என்ன சொல்ல வர்றீங்கன்னா, பாக்.தீவிரவாதிகளை ஆதரிக்கிற நாடு அதனால அவங்க கிட்ட சொன்னா மேட்டர் லீக் ஆகி ஆளு எஸ்கேப்பாகிடுவார்ன்னு. அதுவும் சரிதாங்க.

அந்த காலத்துல ஆப்கானிஸ்தான்ல முஜாகைதின்களுக்கு எதிரா PPDAக்கு ஆதரவா சோவியத் தலையிட்டதால, அதை அழிக்க ஒரு ஆடு(ஒசாமா) வளத்தீங்க. வளர்த்த கிடா உங்க மார்பிலேயே பாயவும் ஆட்டை பிரியாணி போட்டுட்டீங்க. ( மக்கள் வரிப்பணத்துல ஒரு காஸ்ட்லி பிரியாணி!) நீங்க ரொம்ப படிச்சவரு. விவரமானவரு. எனக்கு அவ்வளவெல்லாம் விவரம் கிடையாது. உள்ளூரு மேட்டர விட்டுட்டு, ஊரான் வீட்டு பிரச்சனைல ஆதாயம் பாக்கலாம்னு நினைக்கிறவங்க நாட்டு பொருளாதாரத்துக்கெல்லாம் சங்குதான்னு உங்களுக்கு இன்னுமா தெரியாம இருக்குன்னு நான் கேக்க வரலங்க.

ஒசாமா இறந்த பிறகு நீங்க வேர்ல்ட் டிரேட் சென்டர்க்கு சென்று அஞ்சலி செலுத்தியதை பார்த்தபோது, பழிவாங்கிவிட்டு, அப்பா,அம்மா/நண்பன் சமாதியில் நிற்கும் எங்கள் சினிமா ஹீரோ போன்றே இருந்தது. சிலிர்த்துப் போச்சு.

ஆனால் மும்பை தாக்குதல்ல தொடர்புள்ள ‘டேவிட் ஹெட்லே’ உங்க ஊர்லதான் இருக்காரு. எங்காளுங்க கெஞ்சி கேட்டு விசாரண பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அதே போல் எங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோன போபால் அழிவு .( இரட்டை கோபுர தாக்குதல் மாதிரி இல்லை. பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு, கருவிலுள்ள குழந்தைகளையும் விடாது தொடர்கிறது) அதில் சம்பந்தப்பட்டவர் வாரன் ஆன்டர்சன். நீங்க சொல்ற மாதிரி, மற்ற செயல்களைப் போன்றே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும், அவர் பிளான்ட்ட கையால உடைக்கல. அதனால அவர ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு தெனாவட்டா பதில் சொல்றீங்களே, நியாயமா? என்று கேட்குமளவுக்கு எனக்கெல்லாம் விவரமில்லீங்க. மெத்தப் படிச்ச உங்களுக்கு தெரியாததா?“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
ஐயோவென்று போவான்னு” எங்க ஊர்ல ஒருத்தர் சொல்லியிருக்காரு.

பாருங்க, நான் சொல்ல வந்தத விட்டுட்டு என்னன்னவோ எழுதிகிட்டு இருக்கேன். என்னோட கோரிக்கை என்னன்னா

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒசாமா, ஒசாமான்னு சொல்லி ஒரு பிளாக் & ஒயிட் பாஸ்போர்ட் போட்டாவ மட்டுமே காமிக்கிறாங்க. அஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தா சொந்தக்காரனையே அடையாளம் தெரியமாட்டேங்குது. அவரு மட்டும் அப்படியே இருக்காரேன்னு ஒரு ஆச்சரியம். நேத்திக்கு நீங்க வெளியிட்ட ஒசாம போட்டாக்களிலும் முழுசா கம்பளி போர்த்திக்கிட்டு, முக்காவாசி திரும்பி முதுக காமிச்சுகிட்டு டிவி பார்க்கிறார். அது ஒசாமாவா இல்ல அவரோட சித்தப்பாவான்னு சந்தேகமா இருக்கு அதனால அவரு இறந்துபோன ஒரு போட்டவ காமிச்சுட்டீங்கன்னா உலகத்துல அதர்மம் அழிஞ்சு தர்மம் தல தூக்கிடுச்சுன்னு நாங்களும் எங்க புள்ளகுட்டிகளும் நிம்மதியா தூங்குவோம்.
செய்வீங்களா?

திங்கள், 2 மே, 2011


மின்கம்பியில் வந்தமரும்
சிறு பறவையின் உயிர் துடிப்பு
கரைகிறது நகரத்தின் இரைச்சல்களில்
கருங்காற்றின் வெப்பத்திலுருகும்
புவியை விழுங்கத் துடிக்கிறது
......மலைப் பாம்பை போன்று
சுற்றியிருக்கும் கடல்
அழுத்தங்களுக்கிடையே
மூச்சு திணறும் மரமொன்று
உதிர்க்கிறது தன் கடைசி இலையை
ஆம்/இல்லை என்ற
ஒற்றை நம்பிக்கையில்

வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ்செல்வன் M.A இன்ஜினியர்!

தலைப்பை பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்! சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.

இன்று ஆலமரம் போல் வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பிரபலமான நிகர்நிலைப் பல்கலைகழகம் அது. மற்றவைகளைப் போலவே கூரைக் கொட்டகையில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம்தான் நதிமூலம். அமோக வளம் கொழிக்கும் கல்வித்துறை என்பதால் விரைவிலேயே நல்ல ஏறுமுகம். அந்த நிறுவனம் தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தங்களை தொடங்கிய நேரம். அதில் ஒரு உத்தியோகஸ்தராக சேர்ந்தவர் இவர். எம்.ஏ தத்துவயியல் (அதாங்க பிலாஸஃபி) படித்தவர். அதன் அடையாளமாக முன்தலை பளபளவென்று ஷேவ் செய்தது போல் இருக்கும். பின்னால் உள்ள முடியை லாவகமாக சீவி முன்தலையில் படரவிட்டிருப்பார். அடர்ந்த கருப்புநிறம். முகத்தில் ஒன்றரை இன்ச் பவுடர் இன்றி அவரை பார்த்தவர்கள் மிக சிலரே.விரலில் அவரது இன்ஷியலைத் தாங்கிய செவ்வக மோதிரமும், கழுத்தில் செயினும், மினி பெல்பாட்டம் பேண்ட், பட்டையான கருப்பு பெல்ட், தங்க ஃப்ரேம் உள்ள கூலர் என்று கிராமம்+நகர டிபிக்கல் கலவையாக இருப்பார் . எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார். பக்கத்து வீடு என்றால் எங்கள் இருவர் வீட்டிற்கும் பொதுவான மெயின் வாசல் மற்றும் மொட்டைமாடி.


காலையில் மேக்கப் முடித்து கருப்பு என்ஃபீல்டில் தட,தடவென்று கிளம்பிவிடுவார். உத்தியோகம் சைட் இன்ஜினியர். இன்று போல் அந்நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் துறைவாரியாக பிரித்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் வசதிகள் இல்லாததால், குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த ஆட்களை (அதிலும் நிறுவனரின் சாதிக்காரர்களை) வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இவர் கல்லூரிக் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவரும் நிறுவனரின் இனத்தை சேர்ந்தவர். இவரை அலுவலகம் அனுப்பியது சூப்பரவைசராக. இவர் காட்டிக் கொண்டது இன்ஜினியராக! இவருக்கு கீழ் வேலைப்பார்த்தவர்கள் இவரை இன்ஜினியர் என்றே அழைத்தனர். கட்டுமாணப் பணிகளைப் பொறுத்தவரை இவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை ‘மேஸ்திரிய கேளுங்க. மேஸ்திரிக்கும் இவருக்கும் நல்ல புரிந்துணர்வு! தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வார்.


மேஸ்திரி வராத நாட்களில் குண்டக்க மண்டக்கவென்று ஏதாவது செய்துவிடுவார். மேஸ்திரி அதிகாலையில் வந்து வாசலில் நிற்பார். இன்னா சார், இப்பிடி பண்ணிட்டீங்க? இவர் வாய்ஸை குறைத்து என்ன? என்பார். நேத்து கொத்தனாராண்ட கப்போர்ட காமிச்சு ஜன்னல்னு சொல்லிருக்கீங்க. இல்லையே, அவன் தப்பா புரிஞ்சிருப்பான். இல்ல சார், படத்துல மேக்கால உள்ள ரூமில பீச்சாங்கைப் பக்கமுள்ள சதுக்கம் கப்போர்டு. நீங்க ஜன்னல்னு சொல்லிருக்கீங்க என்பார் தெளிவாக. சரி, சரி பார்த்து செய்ங்க. உங்களமாரி ஒரு வேலையா எனக்கு. ஆயிரம் டென்ஷன்.
எதுல வந்த?
பஸ்லதான் சார்.
இந்தா பத்து ரூபா. சைட்டுக்கு போ. நான் வரேன். அந்த சமயங்களில் நாம் கடந்தோம் என்றால், தலையை உதறிக் கொள்வார். சே! இந்தமாதிரி ஆட்களை வச்சுகிட்டு வேல வாங்கிறது இருக்கே, தலைவலி என்று நம்மிடம் அலுத்துக் கொள்வார். நாம மாடிபடிக்கு பின்னால் நின்று கவனித்ததை அறியாமல். கூடிய விரைவில் ஒரு சிவில் படித்த இளைஞனும் வேலைக்கு சேர்ந்த பிறகு மேஸ்திரியை விலக்கிவிட்டு அவனை சரிகட்டிக் கொண்டிருந்தார்.



அதுக்காக அவர் தத்துவத்திலே கரை கண்டவரோ என்று நம்பி.........ப்போய்

ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் பற்றிக் கேட்டால்,

அப்போ படித்தது மறந்திருச்சு. என்பார்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்?
சாய்ஸ்ல விட்டுட்டேன்.

கன்ஃபூசியஸ்?
நிமிர்ந்து கம்பீரமாக சொன்னார். அது சிலபஸ்லையே இல்ல.


எங்கள் வீட்டு சுவற்றில் குடும்பத்தினரின் போட்டோக்களை மாட்டும் வழக்கம் கிடையாது. ஹால் சுவரில் ஒருபுறம் ஆயில் பேஸ்டல் மகாபலிபுர ஒவியம் ஒன்றும், நுழைவாசலுக்கு எதிராக லெனின் ஒவியம் ஒன்றும் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த கண்களின் தீட்சண்யம் மாறாமல் வரையப்பட்ட அந்த ஒவியம் அழகாக இருக்கும். முதன்முதலில் வீட்டுக்குள் நுழைந்த அவர் அந்த ஒவியத்தைக் காட்டி கேட்ட கேள்வி, யாரு உங்க தாத்தாவா? நம்புங்க, லெனின் மேல சத்தியமாக அப்படித்தான் கேட்டார். யார் என்பதோடு நிறுத்தியிருந்தால் கூட ஒகே.
ஆணும், பெண்ணும் சேர்ந்து வந்தால், சிலர், யார் என்றுகூட கேட்காமல் ஹே! யாரு உங்க ஒய்ஃபா/ஹஸ்பெண்டா? என்று நாகரிகமில்லாமல் கேட்பார்களே, அதுபோல் இருந்தது. என் தந்தை டென்ஷனாகி விளக்கினார். ஆனால் அவரோ, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் சென்றுவிட்டார்.


வீட்டைப் பொறுத்தவரை அவரது உறவினர்கள் என்று யாரையும் பார்த்ததில்லை. மனைவியின் உறவினர்கள் மட்டுமே. ஒரு முறை அந்தம்மா அவர்கள் திருமணத்தை ஒரு விபத்து போலவே சித்தரித்தார். கணவரின் வகையறாக்களை, எல்லாம் நாட்டுபுறங்க. நாகரீகம் தெரியாது என்றார். ஏதோ அந்தம்மா ஆக்ஸ்போர்டில் படித்த மாதிரி. அவர் பத்தாவது கோட். கணவரின் ஊர் கிராமம். இவரது ஊர் சற்று பெரிய கிராமம். தந்தை சற்று வசதியானவர். அதைவிட அந்தம்மா முக்கியமாக குறிப்பிடுவது நிறத்தை. அவர்கள் குடும்பத்தில் எல்லொரும் வெள்ளை நிறம். அதில் மிகப் பெருமை. ஆகையால் நம்மவரும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் அவரைப் போல் இல்லாமல், மனைவி போன்று சிவந்தமேனியர்களாக இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி.


அலுவலகத்திலும் நிறுவனர் எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் முகம் மாறாமல் கேட்டுக் கொள்வார். பின்ன, வருமானம் அப்படி! குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களிலேயே இலவசமா இடம் வாங்கி கைக்காசை செலவழிக்காமல் பத்துலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் கட்டியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமாராகப் படித்த குழந்தைகளையும் அதிகம் செலவில்லாமல் பொறியியல் படிக்கவைத்து வேலையும் வாங்கினார். இப்படியாக வீட்டில், அலுவலகத்தில் காமெடியனாகவும் வெளியில் ஹீரோவாகவும் வலம் வந்து பங்களா, கார், பேங்க்பேலன்ஸ், என்று செட்டிலாகிவிட்ட இவர் சமுதாயத்தின் பார்வையில் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரே

எல்லோரும் அறிந்த விஷயம் என்றாலும், எழுத வேண்டும் என்ற உந்துதலில் எழுதியுள்ளேன்!



யார் அண்ணா ஹசாரே?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.



லோக்பால் பில்

லோக்பால் பில் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.



திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.

1.பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
2.விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
3.நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
4.சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
5.ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல், பொது நலனுக்கு ஊறு விளைவித்தல்.
“லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

கர்நாடகம்,மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,பஞ்சாப்,அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை. மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது.



ஜன் லோக்பால் பில்

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) பிரஷாந்த் பூஷன் (உச்ச நீதிமன்ற வக்கீல்) அரவிந்த் கேஜ்ரிவால் (RTI activist) அடங்கிய குழுவால் பரிந்துரைக்கபட்ட இந்த ஜன் லோக்பால் வரைவில்,

1.“லோக்பால்” மத்தியிலும், “லோக்ஆயுக்தா’ அனைத்து மாநிலங்களிலும் செயல்பட வேண்டும்.

2.அரசு மற்றும் அமைச்சர்களின் குறிக்கீடுகள் இன்றி உச்ச நீதிமன்றம் (அல்லது) தேர்தல் ஆனையம் போன்று தனித்த அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.

3.ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை, நிரூபணங்கள் எல்லாம் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புதல் வேண்டும்.

4. விசாரணையின் போது குற்றவாளியால். அரசுக்கு ஏற்படும் செலவுகளை குற்றவாளியிடமிருந்தே (குற்றம் நிரூபணம் ஆனதும்) பெறப்பட வேண்டும்.

5.பொது மக்களுக்கு: அரசு அலுவலகத்தில் பொது மனிதருக்கு செய்ய வேண்டிய பணி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படாவிடில், குறிப்பிட்ட அதிகாரிக்கு அபராதம் போடப்பட்டு, அந்த தொகை அந்த குறிப்பிட்ட மனிதருக்கு உரியதாகும்.

6.ஆகவே, பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடங்கி, ரேஷன் கார்டு உட்பட அனைத்து அரசு வேலைகள் குறித்த காலத்திற்குள் முடிக்கபடா,விடில் இங்கு புகார் செய்தால் ஒரு மாத கால அவகாசத்தில் நடவடிக்கை முடிக்கப்படும். இது தொடர்பான ஊழல் புகார்களையும் பதிவு செய்யலாம். இதுபோலவே பொதுவிஷயங்களும். இரண்டாண்டுகாலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டுவிடும்.

7.முக்கியமானது. இதன் குழு உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப் படமாட்டார்கள். இந்த அதிகாரம் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் திட்ட அதிகாரிகள் ஆகியோரை சார்ந்தது. ஆகவே அனைத்து வேலைகளும் வெளிப்படையானவை.

8.இந்த லோக்பால் குழு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டால் அந்த விசாரணையும் வெளிப்படையானது. குற்றம்சாட்டபட்டவர் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்குள் நீக்கப்பெற்று தண்டனை பெறுவார்.

9.ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ எல்லாம் இந்த லோக்பாலுடன் இணைக்கப்படும்.

10.இது சம்பந்தமான பொதுமக்களின் பாதுகாப்பு பொறுப்பை லோக்பாலே ஏற்றுக்கொள்ளும்.

கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நமக்கு நன்றாக இருந்தால், அரசுக்கு நன்றாக இருக்காது என்ற விதிப்படி அரசு இழுக்கிறது.

இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று இந்தியன் தாத்தா அப்பாயின்மென்ட் கேக்க, ஏப்ரல் 13 வரை பிஸி, பிறகு பார்க்கலாம் என்று பிரதமர் தாத்தா ஆணவத்தோடு சொல்ல உண்ணாவிரதத்தில் இறங்கிவிட்டார் அண்ணா ஹசாரே.

உஷாராக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேடையில் ஏறாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

வணங்குகிறேன் அவரை.

.

வியாழன், 24 மார்ச், 2011

அமெரிக்க நாட்டாமையும், அல்லக்கை 'யுஎன்'னும்


காட்சி: லிபிய மீதான போர் பற்றிய ஆலமரத்தடி ஸ்டைல் பஞ்சாயத்து கூடுகிறது. யுஎன் தலைமையில்.


பங்கேற்பாளர்கள்: தலைவர் அமெரிக்கா,பங்காளிகள் பிரிட்டன், பிரான்ஸ்.

பார்வையாளர்கள்: இந்தியா,அராப்லீக்ஸ் மற்றும் சிலர்.

***

யுஎன்: ஆங் எல்லாரும் வந்தாச்சா? அப்புறம்
அவன் வரல,எனக்கு சொல்லலன்னு பேசப்படாது.

அமெரிக்கா: எனக்கு நேரமில்ல, சட்டுபுட்னு பேசி முடிங்க.


கூட்டத்தில் ஒருவர்: ஐயா சீனா,பாக் வரலங்க.

யுஎன்: ஏன்? என்னாச்சு?


கூட்டத்தில் ஒருவர்: அது வந்து அவுங்க இரண்டுபேரும் இந்திய
எல்லைய ஒட்டி பாலம் கட்டிகிட்டு இருக்காங்க.


யுஎன்: ஏம்பா இந்தியா, இதுக்கு நீ ஒன்னும்
சொல்லலையா?


இந்தியா: வழக்கம் போல எல்லாத்துக்கும் மாதிரியேஇதுக்கும்
கவலை தெரிவிச்சுட்டேன்.


அமெரிக்கா: சபாஷ்! எனக்கு உங்கிட்ட பிடிச்சதே
இந்த அப்ரோச்தான்!

யுஎன்: சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம சுத்துபட்டு
ஊர்கள்ல உள்ள தலகட்டுக்கெல்லாம் ஐயாதான்
தலைவரு. அவரு இப்போ லிபிய
தலைவரு சரியில்லன்னு தன் பங்காளிகளோட
சேர்ந்து சண்டைய ஆரம்பிச்சுட்டாரு. அப்போ
உங்ககிட்ட கேக்க நேரமில்லை. ஆனா இப்போ
ஏதோ சரியில்லன்னு முனுமுனுப்பு வருதுன்னு
பேச்சு. அதனால உங்க எல்லாரையும் மதிச்சு
கூப்பிட்டிருக்காரு. நீங்க எல்லாரும் அவர்
பெருந்தன்மைய நெனெச்சு இதுக்கு ஆதரவளிக்கனும்.

இந்தியா & அரபு: அதெப்படிங்க சரியாகும்? அது அவுங்க
உள்ளூரு மேட்டரு, நாம தலையிடுறது சரியாப்படலைங்க.


அமெரிக்கா: அப்பு, சரி, தவறு எல்லாம் எனக்கு தெரியும்!
அந்தாளு சொந்த மக்களையே கொல்றாரு. பார்த்துகிட்டு
இருக்க முடியுமா?

கூட்டத்தில் ஒருவர்: அதனால நீங்களே கொல்றேங்கறீங்களா?

அமெரிக்கா: சண்டைன்னா அப்படித்தான். எங்களுக்கு
நல்லதுன்னா, நாலு இல்ல நாலு லட்சம் பேரக்கூட
கொல்லலாம். தப்பில்ல!
(பின்னனி இசை. டொட்ட டொட்ட டொய்)

கூட்டத்தில் ஒருவர்:ஆனா இதுக்கு முன்னாடி இதே மாதிரி
வேற இரண்டு, மூனு ஊர்ல நடந்தப்ப நீங்க
பேசாமத்தானே இருந்தீங்க. ஏன் இலங்கை
கூட கூட்டம், கூட்டமா கொன்னாரே?

அமெரிக்கா: அபத்தமா பேசாதீங்க. அவுங்க எல்லாம் ஊருக்குள்ள
எப்படி இருக்காங்கன்றத விட என்கிட்ட எப்படி
இருந்தாங்கன்றதுதான் முக்கியம். ஆனா இந்தாளு
என்னைய மதிக்கறது கிடையாது. அதனால இங்க
என்னோட தலையீடு அவசியம். அதோட
இப்போவிட்டா பின்னாடி இந்தமாதிரி சந்தர்ப்பம்
கிடைக்காது! எங்களுக்கு தலையாட்ற ஒரு ஆளை
ஏற்பாடு பண்ணிட்டு நாங்க ஒதுங்கிக்குவோம்.
இதே மாதிரி இன்னும் இரண்டு மூனு பேர் திரியிறாங்க.
அங்கேயும் சந்தர்ப்பத்த எதிர்பார்த்துக்கிட்டுதான்
இருக்கோம்! என்ன சொல்றீங்க?

இந்தியா: எங்களுக்கு விருப்பமில்ல, ஊர்ல எலக்சன் டைம் வேற.
ஏற்கனவே அடி மேல அடி வாங்கி
ஆடிப்போயிருக்கோம்.

அமெரிக்கா: என்னப்பா இந்தியா? வாய்ஸ் கூடுது! உன்னை
நல்லவன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

இந்தியா: ஐயா என் விசுவாசத்த சந்தேகப்படாதீங்க!
அணுஆயுத ஒப்பந்தத்துல இருந்து, உங்க ஊரு
காலாவதியான மருந்து,விதை, உரம்னு இறக்குமதி
செஞ்சு எங்க மக்கள அடகு வச்சி தலைமுறையா
விசுவாசத்த காப்பாத்திகிட்டு வர்றோம்.
இப்போ எங்க நிலமையையும் நீங்க நினைக்கனும்.

ரஷ்யா: (இடையில் புகுந்து) இது எங்களுக்கு புடிக்கல.
உங்களுக்கே தெரியும்! ஒரு காலத்துல உங்களுக்கு
சமமான பலத்துடன் நாட்டாமையா இருந்தவுங்க
நாங்க. எங்க நேரம் இப்படி இருக்கோம்.

அமெரிக்கா: அதுக்கு?


ரஷ்யா: இல்ல, சும்மா சொன்னேன்.


அரபு: எங்களுக்கு விருப்பமில்லைங்க.
நாங்க ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்.
இத நாங்களே பாத்துக்கிறலாம்னு நினைக்கிறோம்.

அமெரிக்கா: (அதட்டும் தொனியில்) ஏம்ப்பா அரபு,பழசெல்லாம்
மறந்துபோச்சா.இராக் ஞாபகம் இருக்குல்ல?

அரபு: அவனவன் ஊர்ல பத்து பதினைந்து பிசினஸ்
பண்றவனெல்லாம் சந்தோஷமா இருக்கான்! ஆனா ஒரே
ஒரு எண்ணைய் பிசினஸ வச்சிக்கிட்டு உங்க கிட்ட நாங்க
படுறபாடு இருக்கே கொடுமை!

அமெரிக்கா: அதுக்குதான் சொல்றேன் நான் சொல்றத கேட்டா
பாதி எண்ணையாவது கிடைக்கும். இல்லேன்னா
மொத்தமா வழிச்சுட்டு போய்டுவேன்.

பிரிட்டன்: அண்ணே! ரொம்ப கேள்வி கேக்கிறாய்ங்க.
பழைய மாதிரி ஆளுக்கு கொஞ்சமா ஊர்கள பிரிச்சு
எடுத்துகிட்டு நம்ம இஷ்டத்துக்கு நடப்போம்.

அமெரிக்கா: இருப்பா! பேசிகிட்டு இருக்கேன்ல. சபைல
இதெல்லாம் பேசக்கூடாது. இப்பவே அப்படித்தான்
நடக்குது.

கூட்டம்: இப்ப என்னதாங்க சொல்றீங்க?


யுஎன்: க்கும் (கனைத்துக் கொண்டே)
ஐயா என்ன சொல்றாருன்னா,
நீங்க எல்லாரும் இதுக்கு சம்மதிச்சு அவருக்கு
ஆதரவா கையெழுத்து போடணும்.
மத்தத ஐயாமாருங்க பாத்துக்கிடுவாங்க!

கூட்டம்: இல்லைன்னா?

அமெரிக்கா: (கோவத்துடன்) இல்லேன்னா நானே போட்டுக்கிருவேன்
உங்க கையெழுத்த. கேக்கறாம் பாரு கேணத்தனமா.

யுஎன்: தலைவரே கோபப்படாதீங்க! யாரு என்ன சொன்னாலும்
கடைசில நீங்க சொல்றதுதான். நீங்க போங்க,
நான் பார்த்துக்கிறேன்.


அமெரிக்கா: சொல்லி வை. நல்லதனமா நடந்துகிட்டா எல்லாருக்கும்
நல்லது. நான் வர்றேன்.
(துண்டை உதறி தோளில் போட்டபடி செல்கிறார்).

யுஎன்: தலைவர கோபப்படுத்தி பார்க்காதீங்க. அவர்கிட்ட
வீட்டோ பவர் இருக்குங்கிறத மறந்துடாதீங்க!

ஒருவர் (குறிக்கிட்டு):வீட்டோ பவர்ன்னா?

யுஎன்: ம், உங்கள மாதிரி வீணாப்போனவங்கள நம்பாம
அவரே அதிகாரத்த எடுத்துக்குவார்.
அவர் நினைச்சத சாதிச்சுடுவார்.


மற்றவர்: அப்புறம் எதுக்கு எங்கள கூப்பிட்டீங்க?


யுஎன்: அவர் முறையா நடந்துக்கனும்னு நினைக்கிறார்!
அதோட சண்டை முடிஞ்ச பிறகு நீங்கல்லாம் அந்த
இடத்த சுத்தம்பன்றது, அவுங்களுக்கு சாப்பாடு,
மருந்துன்னு புணர்வாழ்வுக்கு தேவையான நல்ல
விஷயங்களுக்கான செலவ உங்கள பாத்துக்க
சொல்லியிருக்காரு. அவர சர்வாதிகாரின்னு
நினைக்காதீங்க. நீங்க ஒன்னும் சும்மா செய்ய
வேண்டாம்! அதுக்கு, உங்களுக்கு நாங்க கொறஞ்ச
வட்டிக்கு கடன் கொடுக்கனும்னு ஐயா சொல்லி
இருக்காரு. அவர் மனிதாபிமானத்த புரிஞ்சுக்கங்க.


அரபு: நாங்க ஏற்கனவே தலைவர் வீட்டு செலவுல
நிறைய ஏத்துகிட்டுதான் இருக்கோம். ஊருக்கே தெரியும்.

இந்தியா: இரண்டாவது விஷயம் சொன்னீங்களே,
வாஸ்தவமான பேச்சு! ஐயாமார்கள் சாப்பிட்ட
எச்சில் இலைய எடுக்கமாட்டோம்னு
என்னைக்காவது நாங்க சொல்லியிருக்கோமா?
அது எங்க கடமை.எங்க நிலைமையை நீங்களும்
புரிஞ்சுக்கனும். ஐயாகிட்ட எடுத்து சொல்லனும்.


தூரத்திலிருந்து பார்க்கும் கியூபா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகள்:

இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம். அந்த அல்லக்கையை அவங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டா பாதி பிரச்சனை சரியாயிடும்.


யுஎன்: கூட்டம் கலையலாம். தலைவரோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு
சொல்லியனுப்புறேன்.


கூட்டம்: அப்படியே ஆகட்டுங்க!
(இடுப்பில் துண்டைக் கட்டியபடி
ஒரு விதக் கவலையுடன் கலைகிறது).

வெள்ளி, 11 மார்ச், 2011

பெண்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? சீரியல், சினிமாவோடு அவர்கள் ரசனை முடிந்தது. ஆண்களால் மட்டுமே அரசியலை தெளிவாக விமர்சிக்க முடியும். உண்மைதான், அரசியல் ஒரு விமர்சனத்திற்குரிய கருவாக மட்டுமே இருக்கும் பட்சத்தில்.

பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் வீட்டு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். விலைவாசி, கல்வி, வேலை,குடிநீர் பிரச்சனைகளுக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் ஆண்களுக்குமே சம்பந்தம் இல்லையென்றால்!

பிடிக்கும், பிடிக்காது என்று சொல்வதற்கு அரசியல் ஒரு பாடமல்ல. செய்திகளில் பார்த்தும், கேட்டும் விட்டு கட்சி, ஊழல் என்று விமர்சன பரிமாற்றத்திற்கு அது பொழுதுபோக்கும் இல்லை. நாட்டின் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு தொடங்கி கல்வி,வேலை, தனி மனித சுயமரியாதை வரை கலந்துள்ள இந்த அரசியல் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் சரிபாதியான பெண்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கை வளமாக இருக்கும் என்று நினைத்தோமேயானால், நம்மைவிட அறிவீலிகள் இருக்க முடியாது. உலகில் ஆண்,பெண் வேலைகள் என்று எதுவுமில்லை. பெண்களின் குழந்தை பேறு என்ற இயற்கையான செயலும், ஆண்களின் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புனிதமான செயலையும் தவிர்த்து.

முதல் உலகப் போரின் போது நிகழ்ந்த முக்கிய மாற்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமன்று. அதைவிட முக்கியமானது, ஐரோப்பா முழுவதும் ஆண்கள் எல்லோரும் போருக்கு சென்றுவிட, நாட்டின் நிர்வாகம் முழுமையையும் பெண்கள் ஏற்றனர். இயந்திரவியல், கப்பல் கட்டுமானம், உணவு மற்றும் உடை உற்பத்தி என்று அனைத்தையும். ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை. அப்போதே நிரூபிக்கப்பட்டு விட்டது பெண்களால் அனைத்தையும் செய்ய இயலும் என்று. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்களின் வெற்றிக்கு அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

“நான் பெண் என்பதால் என் வெற்றிக்கு அசாத்திய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் நான் தோற்றால், இவளால் முடியாது என்று கூறமாட்டார்கள். பெண்களால் முடியாது என்றே கூறுவார்கள்”.- எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான கிளாரா பூத் லூஸ் கூறியது இது.
உண்மைதான். ஒரு ஆணின் தோல்வி அவனது தனிபட்ட தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் தோல்வி ஒட்டு மொத்த பெண் குலத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலிலும் இதுவே. ஒரு ஆணின் தவறு தனிப்பட்ட தவறு. பெண்ணின் தவறு என்றால், "பொம்பளைங்க கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படித்தான்". இன்று அரசியலில் பிரபலமாக இருக்கும் சில பெண்கள், ஆண்களின் கைபாவையாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு வந்த ஆண்கள் தவறாக இருந்தால், “ஆண்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான்” என்று யாரும் சொல்வது இல்லை. பத்தில் நாலு பழுது. நூறில் தொண்ணூற்றி எட்டு பழுது. எது மோசமானது?

மேலாண்மை பாடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாக குறிப்பிடுவார்கள் மல்டி டாஸ்க்கிங் (multi tasking force). ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை திட்டமிட்டு முடிப்பது. அதற்கு அதிக திறமை வேண்டும். பெண்கள் ஆண்டுகளாக அதை தினசரி வாழ்வில் அநாயசமாக செய்பவர்கள். காலையில் சமையல் (அதுமட்டுமே ஒரு MTF) தொடங்கி மற்றவர்களின் தேவையை கவனித்து தனது வேலையும் செய்து வேலைக்கும் போவது, அதுவும் வருடம் முழுவதும் என்றால் அசாத்திய உடல் வலிமையும், மன வலிமையும் இன்றி சாத்தியமே இல்லை. ஆணோ, பெண்ணோ எந்த வெற்றிக்கும் தேவை பயிற்சியும், சிந்தனை திறனுமே! சிந்திப்பதற்கு நேரமே இல்லாமல் ஒரு வீட்டின் தினசரி அனைத்து வேலை பளுக்களையும் ஒருவர் மீது திணித்து விட்டு திறமைகளை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தனது தினசரி வேலைகளுக்கு கூட உதவி தேவைப்படுகிற ஒருவர், ஒரே ஒரு விஷயத்தில் சாதித்ததாக கூறினால் அது எந்த விதமான வெற்றி? கயிறுகளால் பிணைக்கப்பட்ட ஒருவருக்கும், சுதந்திரமான ஒருவருக்கும் ஒட்டப்பந்தயம் வைத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மடத்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும்.

விலை ஏற்றமா? வீட்டு செலவை சமன் செய்வது பெண்கள். குடிநீர் பிரச்சனை. சமாளிப்பது பெரும்பாலும் பெண்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்தால் இருப்பதை வைத்து சிறப்பாக உபசரிக்கும் சமயோசித புத்தி அவர்களுடையது. இத்தனை திறமை உள்ளவர்கள் அறிவை விசாலப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தால் சாதிக்கமாட்டார்களா? இது எல்லாவற்றையும் விட குடும்பத்தில் தன் நலனை விட மற்றவர் நலன் கருதுதலும், இயல்பான கருணை உள்ளம் கொண்டவர்களும் அதிகம் பெண்களே. எங்கு அறிவு விசாலமடைகிறதோ, அங்கு சிந்தனை மேம்படும். எங்கு சிந்தனை மேம்படுகிறதோ, அங்கு செயல் வெற்றியடையும்.

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய தினசரி வேலைகளை நீங்களே செய்யுங்கள். அது உங்களை உற்சாகமாக வைக்கும். வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அது குடும்பத்தின் சக உறுப்பினர்களிடம் உங்கள் மதிப்பை கூட்டும். குடும்பத்தின் மகிழ்ச்சி கூடும் .

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களின் தந்தை, சகோதரன், கணவர், மாமனார், மகன் என்று யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்தி வேலையை பகிர செய்யுங்கள். பேசுவதில் வல்லவர்கள் நாம். வீட்டு வேலை செய்யும் ஆண்களை மரியாதை, பாசம் என்று குழப்பிக் கொண்டு தடை செய்யாதீர்கள். உங்கள் பாசம் அவர்களை திறனுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் ஆக்க பயன்பட வேண்டுமேயன்றி, மங்குனிபாண்டியர்களாக மாற்றுவதாக இருக்க கூடாது. நமது அழகு, நம் அறிவிலும் ஆரோக்கியத்திலும் மட்டுமே உள்ளது.

நாம் அனைவருமே நமது சக மனிதர்களை மதிக்க தவறினால், நமது மதிப்பை சுலபமாக இழந்துவிடுவோம். பெண் விடுதலை என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல . அது பொருளாதார சீர்கேடு, சாதி மத பூசல், ஆதிக்க வர்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான நாட்டு மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கான அடிப்படை.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தோழர் முருகாப்பா!


எனது பன்ணிரெண்டாம் வயதில் எங்கள் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதுவரை கோடைவிடுமுறைக்கு சென்னைக்கு வந்து சென்ற நான் முழுவதுமாக அங்கு வாசம் செய்யவேண்டும் என்றதும் ஏக குஷியாகி விட்டேன். முதலாவது என் தந்தையோடு சேர்ந்து இருக்க போகிறேன். இரண்டாவது என் அம்மா கொஞ்சம் நல்ல சமையல் செய்யக்கூடும் என்பதுமாக இரண்டு காரணங்கள்! ஆரம்பத்தில் நாங்கள் கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம். அது ரோட்டை ஒட்டிய ஒரு முட்டு தெரு. அண்டை வீடு சென்னை கலாச்சாரத்தின் பகுதியான லைன் வீடுகள். ஒரே காம்பவுண்டுக்குள் எதிரெதிராக ஒன்பது குடித்தனங்கள். இந்த லைன் வீடுகளில் தளம் போட்ட வீடுகள் நான்கு ஒரு புறமும், ஓட்டு வீடுகள் ஐந்து எதிராகவும் இருந்தன. சிறிய பொதுவான வாசல். நடுவில் சிமென்ட் நடை பாதை. ஓர் ஓரத்தில் கிணறு, கட் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில் இணைப்புடன் கூடிய அடி குழாய், இரு குளியல் மற்றும் கழிப்பறைகள். வந்ததிலிருந்தே அந்த காம்பவுண்ட் என்னை வெகுவாக ஈர்த்தது.



எங்கள் வீட்டு மாடியில் இருந்து அனைத்தையும் கவனிக்க முடியும். இந்த தளம் போட்ட வீடுகளின் வாடகை சிறிது கூடுதல். அதில் ஒரு ஓட்டு வீட்டில் அந்த வீடுகளின் உரிமையாளரான நடுத்தர வயது பெண்மணி தனது மூன்று குழந்தைகளுடன் குடியிருந்தார். அவர் கணவர் துபாயில் ஈட்டிய திரவியத்தில் கட்டிய அந்த காம்பவுண்டுடன் இந்த குடும்பத்துடனான தனது கடமை முடிந்தது என்று முடிவு செய்து, வேறு குடும்பத்திற்கு கடமை ஆற்ற சென்று விட்டதாக பேசிக் கொண்டார்கள். சில நாட்களிலேயே நான் அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். காலை, மாலை இரு நேரமும் பரபரப்புடனே இருந்தது அந்த காம்பவுண்ட்.


காலையில் அனைவர் வீட்டு ரேடியோக்களும் ஒரே நேரத்தில் ஆன் செய்யப்பட்டு காக்டெய்லாக கலந்து அடிக்கும். அந்தரங்க விஷயங்கள் நீங்கலாக பல் தேய்ப்பது தொடங்கி அனைத்தும் அந்த ஓபன் ஸ்பேஸில்தான். தண்ணீர் பிடிப்பது, சர்க்கரை, காபி பொடி கடன் வாங்குவது, குழந்தைகளால் ஏற்படும் பஞ்சாயத்துக்கள் என சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தைப்போல், கதம்ப மாலையாக கமகமத்தது அந்த காம்பவுண்ட்.




இதில் மத்தியில் உள்ள தளவீட்டில் இருந்தவர்தான் நம் முருகாப்பா. ஆரம்பத்தில் நான் அவரது பெயரை முருகாப்பா என்றும், அவரது மனைவி பெயர் முருகாம்மா என்றும் நினைத்து, அந்த தம்பதியரின் பெயர் பொருத்தத்தை நினைந்து வியந்தேன். நண்டு, சிண்டுகள் எல்லாம் அவர்களை அப்படித்தான் அழைத்தனர். பின்னர்தான் அவரது பெயர் வீராசாமி என்றும் அங்கு மூத்த குழந்தையின் பெயருடன் சேர்த்து அப்பா அம்மா என்று அழைப்பார்கள் என்றும் தெரியவந்தது. ஆயினும் என் வியப்பு மாறாதவாறு அவரது மனைவி பெயர் வீரலட்சுமியாகவே இருந்தது.



பல்லவன் போக்குவரத்து கழத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மாநிறத்தில், சராசரி உயரத்தில், சுருட்டை முடியுடன் தடித்த கருப்பு ஃபிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருப்பார். இரண்டே வித காஸ்டியூம்களில் மட்டுமே காட்சியளிப்பார். கைலி, கை வைத்த பனியன் மற்றும் காக்கி பேன்ட், சட்டை. அவர் வீட்டு ஹேங்கரில் கூடுதலாக சிவப்பு மற்றும் மங்கிய வெள்ளைசட்டை. ஒரு மகனும், இரு மகள்களும். மகன் பத்தாவது வகுப்பை மூன்றாம் முறையாவது பாஸ் பண்ணிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் இருந்தான். மூத்த மகள் எட்டாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவரது நம்பிக்கை நட்சத்திரமான மூன்றாவது மகள் அவரது நம்பிக்கையை சிதைக்காதவாறு ஒழுங்காக ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவருமே எனது நண்பர்களானார்கள். சில நாட்களிலேயே அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியவந்தது. அவரிடம் யார் கையை காட்டி டாடா சொன்னாலும் பதிலுக்கு கையை காட்டமாட்டார். ஏனென்று வினவிய போது அது காங்கிரஸ் சின்னத்தை காட்டுவதாக ஆகிவிடும் என்றும் உண்மையான கம்யூனிஸ்ட் அவ்வாறு செய்யமாட்டான் என்ற அவரது விளக்கத்தில் கம்யூனிஸ்ட் அபிமானியான என் அப்பா ஆடிப்போனார். அவரது மகனுக்கு லெனின் குமார் என்றோ மார்க்ஸ் குமார் என்றோ பெயர் வைத்து மார்க்ஸப்பா அல்லது லெனினப்பா ஆகவேண்டிய அவரது கனவு அவர் மனைவி பெயருக்கேற்றவாறு கோவில்பட்டி வீரலட்சுமியாக இருந்த காரணத்தால் முத்தமிழ் கடவுளின் பெயர் வைக்கப்பட்டு கலைந்துவிட்டதாக அவ்வப்போது வருத்தப்படுவார். முருகனைப் பார்க்கும் போதும், அவனது அம்மா அவனை நாயே, சனியனே என்றழைக்கும் போதும் எனக்கென்னவோ மார்க்ஸ், லெனின் பெயர்களுக்கு ஏற்படவிருந்த களங்கம் தவிர்க்கப்பட்ட மகிழ்ச்சியே மேலோங்கி இருந்தது.



அவருக்கு காலையில் தெருமுனைக்கு போய் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. இதன் முக்கிய காரணம் குறிப்பாக செவ்வாய், வெள்ளிகளில் அவரது மனைவி காலையில் குளித்து சாம்பிராணி போட்டு வாசல் கதவு தொடங்கி ஜன்னல் வரை மஞ்சள் குங்குமம் தடவி முடிப்பதற்குள் விடிந்துவிடும். மேலும் இந்த சமயங்களில் டீ கேட்பது வேறு சில விளைவுகளை ஏற்படுத்தியது. இவற்றை தவிர்க்கவும், அவரது வேலை நேர மாறுபாட்டாலும்,அவர் டீ கடைக்கு சென்றுவிடுவார். அங்குதான் அரசியல் நிலவரங்களையும் அவரால் பகிர்ந்து கொள்ள முடிந்ததாலும் இருக்கலாம். யாராவது அவரிடம் அண்ணே கம்யூனிசம்னா என்ன? என்று கேட்டால், அது ஒன்னுமில்லப்பா "இருக்கிறவன்ட்ட இருந்து புடுங்கி இல்லாதவன்கிட்ட கொடுக்கிறது" என்ற அவரது ராபின்ஹுட் பதிலால் அரண்டவர்கள் அனேகம் பேர். அந்த காம்பவுண்டில் அவருக்கு மட்டுமே காசு கொடுத்து செய்திதாள் வாங்கி படிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு முறை ஒருவர் அவரிடம், கம்யூனிஸ்டுங்கிறீங்க தீக்கதிர் வாங்கிப் படிக்கலாமே என்று கேட்க , அதென்னவோ தினத்தந்தி படிச்சுட்டு டீ குடித்தால்தான் வெளிய போகிறது என்றார். அவர் கலாய்க்கிறாரா? சீரியஸாக சொல்கிறாரா? என்று கேட்டவர் குழம்பிவிட்டார்! அந்த ஏரியாவில் ஏதேனும் கட்சி சார்பாக தட்டிகள் வைக்கும் போது களத்தில் ஆஜராகி உதவி செய்வார். அதில் "அமெரிக்காவின் ரீகனே! எச்சரிக்கிறோம்" என்கிற ரீதியில் உள்ள வாசகத்தை பார்த்து தோழர்," ரீகனை எச்சரித்து தமிழ்ல போஸ்டர் போடுறீங்களே? ரீகனுக்கு தமிழ் தெரியுமா? என்று பீதியைக் கிளப்புவார். இவர் மீது ஏற்பட்ட இனப்பற்றின் காரணமாக என் அப்பா அவரை முழு கம்யூனிஸ்ட் ஆக்கிவிடும் முகாந்திரமாக அவருக்கு "குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்", "இயக்கவியல் பொருள்முதல் வாதம்","தாய்" என்று புத்தகங்களைக் கொடுத்து படிக்க சொன்னார். எந்த நூலாக இருந்தாலும் நல்லாருக்கு ஆனா புரியல! என்று நமது சி.எம். மாதிரி குழப்பமான ஸ்டேட்மென்டோடு இரண்டே நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடுவார். மூலதனத்தை கொடுத்தாலும் மூன்றே நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவார் என்று பின்னர் எங்கள் வீட்டு தோழருக்கு புரிந்தது. அது அவரது தவறும் இல்லை. முதலிரண்டு புத்தகங்களில் நான்காவது பக்கத்திற்கு கொட்டாவி விட்டவர்களே அதிகம். (கனமான, சிக்கலான மொழிபெயர்ப்பு) விடிய, விடிய கம்யூனிச புராணம் கேட்டாலும் ஷபானா ஆஸ்மியோட அப்பா சஃப்தர் ஹஷ்மி என்கிற ரீதியில்தான் புரிந்து கொள்வார். எதையும் முழுதாகவும் அவரால் கேட்க முடியாது. ஆனால் சமதர்ம சமுதாயம் என்ற ஒற்றை வரியில் ஈர்க்கப்பட்ட தீவிர அபிமானி. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும், குடும்ப சண்டை என்றாலும் எல்லாவற்றிற்கும், 'புரட்சி வரணும் தோழர்' என்பார். ஏதோ பக்கத்து வீட்டு பரமசிவம் வரணும் என்பது மாதிரி! தவணை முறையில் வாங்கிய டிவியும், க்ரைண்டரும் மட்டுமே அவரது சொத்துக்கள். அந்தம்மா காசுக்கு மாவரைத்துக் கொடுப்பார்.



அந்த காம்பவுண்டில் வீட்டுக்காரம்மாவிடமும், இவரிடமும் மட்டுமே இந்த இரண்டு சாதனங்களும் இருந்தன. இவர் டிவி வாங்கியதன் காரணம் மிக சுவாரஸ்யமானது. வீட்டுக்காரம்மா காசு வாங்கிக் கொண்டுதான் யாரையும் டிவி பார்க்க அனுமதிப்பார். வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் என்றால் இருபத்திஐந்து காசும், சினிமா என்றால் ஐம்பது காசும். நல்லவேளையாக அப்போதெல்லாம் ஒரு ஒளிபரப்பு மட்டுமே. இன்று போல் என்றால் அந்த அந்தம்மா கலெக்ஷனைப்போட்டு சொந்தமாக ஒரு சானலே தொடங்கி இருக்கும்! இதனை எதிர்க்கும் விதமாக தவணை முறையில் கண்ணிமைகளை துல்லியமாய் காட்டும் (இதுதான் அந்த டிவியின் விளம்பர வாசகம் ) சாலிடேர் பி/வொயிட் டிவி வாங்கி அனைவருக்கும் இலவசம் என்று அறிவித்தார். இது சம்பந்தமாக மனைவியுடன் நடந்த சண்டையில் முதல் முறையாக வெற்றியும் பெற்றார்!



இதன் காரணமாக அந்த பூர்ஷ்வா பெண்மணிக்கும் (அப்படித்தான் அழைப்பார்) இவருக்கும் மறைமுக யுத்தம் தொடங்க ஆரம்பித்தது. காலையில் குளியலறைக்கு அவர் வரும் நேரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்வதில் ஆரம்பித்து 'சைக்கிள ஏன் இங்க வக்கிறீங்க?' உங்க பையன் சத்தம் போடுகிறான் என்று மொன்னையான காரணங்களைக் காட்டி சண்டை போட ஆரம்பித்தார். தோழர் எதையும் சட்டை செய்யமாட்டார். வீட்டை காலி செய்யமுடியாது என்றும் அறிவித்து விட்டார். ஆனாலும் சண்டை வந்து கொண்டுதான் இருந்தது. இதை ஒரு ஆதிக்க சக்தியை எதிர் கொண்டு பெற்ற வெற்றியாகவே நினைத்தார். மற்ற மாத சம்பளகாரர்களைப் போல் குருவி சேர்ப்பது போன்று சேர்த்து புறநகர் பகுதியில் சொந்தவீடு கட்டுவது அல்லது சீட்டுப் போட்டு மகள்களுக்கு நகை, பாத்திரம் வாங்குவது என்பது மாதிரியான எந்த கனவுகளும் அவருக்கு இல்லை. மகள்களுக்கு வரதட்சணை கொடுக்காமலும், மகனுக்கு வரதட்சணை வாங்காமலும் திருமணம் என்பதே அவரது தீர்மானமாக இருந்தது. முருகாம்மாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாததுடன் இந்த துப்புக்கெட்ட மனுசன வச்சிகிட்டு என்ன செய்ய போறனோ தெரியலையே? என்று போவோர் வருவோரிடம் புலம்பியபடி இருந்தார்.



நாங்கள் அங்கிருந்து மேற்கு மாம்பலம் பகுதிக்கு மாறிவிட்டோம். எப்போதேனும் அங்கு சென்று பார்த்தோம். நாளடைவில் அதுவும் விட்டுப் போனது. திடீரென்று ஒரு நாள் முருகனும், அவன் அம்மாவும் வீட்டிற்கு விஜயம் செய்து மூத்த பெண்ணின் திருமண அழைப்பிதழை நீட்டி கல்யாணத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதில் "வட்ட செயலாளர் அண்ணன் ------அவர்கள் தலைமையில்" என்று அச்சிடப்பட்டு இருந்தது. முருகாப்பாவைப் பற்றி விசாரித்தபோது, முருகாம்மா ஒரு அலட்சிய பாவணையில், '"அந்த மனுசனுக்கு இந்த கண்ணாலத்துல இஷ்டமில்லை". "அவரு கொண்டு வந்த ரெண்டு வரனும் அவருமாரியே வெட்டிஞாயம் பேசிக்கிட்டு இருக்கிறவங்க"(அது சிஐடியூ தோழர்கள்) நம்ம சாதியும் கிடையாது. இப்ப வீட்ல முருகன்தான் பொறுப்பா இருந்து காரியம் பாக்கிறான். எங்க ஏரியா வட்ட செயலாளர்கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கான்(அடியாளாக). பொறுப்பா இருக்கான்ட்டு இவனாண்ட ரொம்பப் பிரியம். கூட வேல செய்ற பையன்தான் மாப்பிள்ளை. நம்ம ஜனம், நல்ல சம்பாத்யம் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.



திருமணத்தின் போது ஒரு பார்வையாளாராக கடைசி வரிசையில் சுரத்தின்றி அமர்ந்திருந்தார் நம் தோழர். எங்களைக் கண்டதும் முகம் மலர நலம் விசாரித்தார். அவஸ்த்தையான சில மௌன நொடிகள் கழிந்து அவராகவே "பிள்ளைகள் தலை எடுத்துவிட்டார்கள். அவரவர் தீர்மானங்கள் அவரவர்க்கு. நாம் பார்வையாளராக மாறியாச்சு என அதிரடியாக சிரித்தார்.



“வாழ்க்கை ஒரு சூதாட்டம். விளையாடத் தெரியாதவர்களும், விரும்பாதவர்களும் இங்கு பங்காளர்கள் அல்ல பார்வையாளர்களே”.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

இரு வேறு உலகம்




நேற்றிரவு மகள் கை பிடித்து
என் கதை உலகிற்கு அழைத்து சென்றேன்.
அங்கு காகம் பாட்டியையும்
நரி காகத்தையும் ஏமாற்றியது
சிங்கம் பசுவை வஞ்சித்தது
புலி மானை காயப்படுத்தியது
ஒநாயும் கொக்கும்
பழி தீர்த்துக் கொண்டன.

பின் எனை அழைத்துசென்றாள்
அவளின் கதை உலகிற்கு
அங்கு காகமும் நரியும் கேக்கை
பகிர்ந்து கொண்டன!
எலியும், சிங்கமும்
ஹைட்& ஸீக் விளையாடின.
புலியும் மானும்
பார்ட்டி கொண்டாடின!
ஒநாயும்,கொக்கும்
ஒருவருக்கொருவர் உதவினர்
காயங்களற்ற அவ்வுலகில்
அவளை விட்டு
நான் மட்டும் வெளியேறினேன்!

வெள்ளி, 7 ஜனவரி, 2011

வசந்தி டீச்சர் சார்



முதற் காதலையும், முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதுபோல்தான் நம் ஆரம்பகால ஆசிரியை(யர்)களையும் மறக்க இயலாது. இந்த கேஜி டீச்சர்களைப் பார்த்தால் ஒரு வித அழகுடன் இந்த குழந்தைகள் எல்லாம் மிஸ்,மிஸ் என்று அழைப்பதாலேயே அவர்களுக்கு வயதாவதே இல்லையோ என்றுகூடத் தோன்றும். இந்த உலகத்தில் உள்ள அம்மா அப்பா உட்பட யாரையும் பேட்(bad) என்று ஒத்துக்கொள்ளக் கூடிய குழந்தைகள், தங்கள் மிஸ்ஸை மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஆசிர்வதிக்கப்பட்டவர்களைப் போன்றே எனக்குத் தோன்றும். அவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. இவர்களைப் போன்றே இவர்களது அழகான பெயர்களும் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று. ரோஸி,ஸ்டெல்லா, மைதிலி என்று.


எனக்கும் இப்படிப்பட்ட டீச்சர்கள் இரண்டு மூன்று பேர் உண்டு. அதில் ஒருவர் வசந்தி. இவர் எனது பள்ளி ஆசிரியை கிடையாது. எனது அத்தை பெண்ணும் அவரும் தோழிகள். ஒரே நர்சரியில் வேலை பார்த்தனர். அந்த பழக்கத்தின் காரணமாக அவரது வீட்டிற்கு செல்வேன்.அழகிய வட்டமுகத்தில் அந்த உதட்டில் நிரந்தரமாக தங்கி இருக்கும் சிரிப்புதான் அடையாளம். நீண்ட கருங்கூந்தலை தளர பின்னி இருப்பார். டிவி காம்பியர் போன்று சைகையுடன்தான் பேசுவார். கூல்,பந்தா போன்ற வார்த்தைகளை அந்த காலத்திலேயே அடிக்கடி உபயோகிப்பார். எங்களது பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். மாலையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பார். நானும் செல்வேன். பெரும்பாலானவர்க்கு கட்டணம் கிடையாது. எனக்கும்தான். வசந்தி, செத்த பாத்துக்கப்பா என்றே பெரும்பாலான தாய்மார்கள் விட்டு விட்டு செல்வார்கள். நான் அப்போது இரண்டாம் வகுப்பு. மற்ற பிள்ளைகள் எல்லாம் நர்சரி லெவல். டீச்சர் பிஸியான நேரத்தில் நானே ஆக்டிங் டீச்சராகும் அபாயமெல்லாம் நடக்கும்.

சுறுசுறுப்பாக சிரித்தபடியே இருக்கும் அவரது சுபாவம் அவருக்கு அழகு சேர்த்தது. புதிதாக திருமணமானவர். அவரது கணவர் ஒரு அரசு அலுவலர். மாலை வேலை முடிந்து அவர் வீட்டுக்குள் வரும் போது வீடு சந்தைக் கடை மாதிரி சத்தமாக இருக்கும். ஆனால் கோபமாகவே மாட்டார். அவரும் குழந்தைகளை நேசிப்பவர். அவர் பெயர் ராமலிங்கம். ஆனால் நாங்கள் அவரை "வசந்தி டீச்சர் சார்" என்றே அழைப்போம். அவர் வந்தவுடன் டீச்சர் மாலை தயாரிப்பிற்கு சென்று விடுவார். இவர் எங்களுடன் பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தைகளிடம் எப்போதுமே குட், திறமைசாலி, உன்னால் முடியும் என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துவார். டீச்சர் உள்ளிருந்தபடியே அவரிடம், 'குழந்தைகளை படிக்க விடுங்க' என்று சத்தம் போடுவார்.


அப்போதெல்லாம் நான் ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன். என் ஓவியத் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருந்த ஒரே ஆள், ஹி,ஹி நான்தான். எனது நம்பிக்கையைப் பார்த்து அவர்கள் இருவரும் எனக்கு ஊக்கம் தர ஆரம்பித்தார்கள். அவர்களது ஊக்குவிப்பால் சுவர், தரை என்று எல்லா இடங்களிலும் கிறுக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டு சுவர்கள் எல்லாம் என் கைவண்ணத்தில் மிளிர ஆரம்பித்தன. மனித உருவங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் வரைவேன். இயற்கை காட்சிகள் என்றால் இரண்டு மலை, நடுவே சூரியன் ஒரு அருவி, இரண்டு தென்னை மரங்கள், ஒரு குடிசை. எப்போதும் இதுதான். என் ஓவிய மனிதர்கள் எல்லாம் சிலுவையில் அறையப்பட்டவர்களை போல் கைகளை விரித்து, கால்கள் பின்னியபடி ஒரு வித சோகத்துடனே காட்சியளித்தார்கள். வேறுமாதிரி வரைய விருப்பம் இல்லாமல் இல்லை. வரல! வேறு மாதிரியாக முயற்சித்தால் ஒரு கை குண்டாகவும், மற்றொன்று போலியோ அட்டாக் ஆனது போலவும் கூடுதலாக இம்சித்தது. ஆனாலும் என் முயற்சியில் நான் மனம் தளரவே இல்லை!


இதற்கிடையில், எனது வேலைகளால் என் அம்மாவிற்கும், பாட்டிக்குமிடையே பனிப்போர் ஆரம்பித்தது. பாட்டி, நான் சுவர்களை பாழ்படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து சுவர்கள் சாரியாகத்தான் காட்சியளித்தன! ஆனாலும் பாட்டிக்கு தான் பார்த்து கட்டிய வீடு என்பதால் இந்த அங்காலாய்ப்பு. அம்மாவிற்கோ, நம்மை பேப்பர் கேட்டு தொந்தரவு செய்யாத வரை ஓகே என்பதாக இருந்தது. இந்த பஞ்சாயத்து சென்னையிலிருக்கும் அப்பா,தாத்தாவிடம் செல்லும் நிலை வர, உடனே, நான் நல்லெண்ண தூதுவராக மாறி இவர்களது பனிப்போரை நிறுத்தும் விதமாக சுவர்களில் வரைவதை நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு ஜனவரியில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட, அஜந்தா, எல்லோரா போன்று வரலாற்றில் பதிவாக வேண்டிய ஓவியங்கள் வெளி உலகிற்கு தெரியாமலேயே மறைந்து விட்டன. ஆனால் அதற்கு பதிலாக கைக்கு கிடைக்கும் கோடு போட்ட நோட்டிலிருந்து பேப்பர்களை கிழித்து கைவரிசையைக் காட்டத் தொடங்கினேன்! எனது கிழி திறமையின்மை காரணமாக நோட்டுக்கள் சகட்டு மேனிக்கு கிழிந்து என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன. இதன் காரணமாகக் கிட்டிய வசவுகளின் சோகத்தை டீச்சர்,சாருடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் கண்களின் ஓரம் கண்ணீர் அரும்பாமல் சாதாரணமாகவே கேட்டதில், எனது துக்கம் அதிகமாகியது. நான் வழக்கத்தை விட அமைதியாக படித்துக் கொண்டிருந்தேன்.


மறுநாள் மாலை நான் சென்றபோது டீச்சரும்,சாரும் செய்தித்தாள் சுற்றப்பட்ட ஒரு பார்சலை என்னிடம் கொடுத்தனர். உள்ளே கோடுகளற்ற வெள்ளைத்தாள்கள். மொத்தமாக அவ்வளவு பேப்பரை அதுவரை நான் பார்த்து இல்லை. வறுமையிலிருப்பவள், கையில் பணக் கட்டுக்களைப் பெற்றவள் போலாகிவிட்டேன். அதிரி புதிரியாக வரைய ஆரம்பித்தேன்.ஆனால் ஓவியக் காட்சிகளில் பெரிய மாற்றங்களில்லை. ஆனால் அந்தப் படங்களை தவறாமல் அவர்களிடம் காட்டத் தொடங்கினேன். சார் அந்தப் படங்களை வாங்கிப் பார்த்து பாராட்டியபடியே ஒரு ஃபைலில் போட்டு அவரிடமே வைத்துக் கொண்டார். பின்னர் வேலை மாற்றம் காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். செல்லும் முன்னர் எனக்கு பேப்பர்,கலர் பென்சில்கள் அன்பளித்தார். வழக்கம் போல் இரண்டு நாட்கள் சோகத்துடன் திரிந்தேன். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சரின் தோழியான என் அத்தை பெண், என்னிடம், நான் வசந்தியைப் பார்த்தேன். நீ வரைந்து கொடுத்த படங்கள் அடங்கிய ஃபலை வைத்திருக்கிறார்கள். உன்னை மிகவும் விசாரித்தார்கள் என்று கூறியபோது உண்மையில் அதிர்ந்து போனேன்.

நான் சென்னை வந்த பிறகு என் தந்தை வாங்கிக் கொடுத்த அழகான அட்டைகள் உடைய ஆர்ட் புத்தகங்களும், இப்போது, என் கணவர் வாங்கி வரும் தரமான பேப்பர், மற்றும் வண்ணங்களையும் விட, அன்று 'வசந்தி டீச்சர் சார்' வாங்கிக் கொடுத்த ஒரு குயர் வெள்ளைத் தாள்களும்,பென்சில்களும் மிகவும் விலை உயர்ந்ததாகவே காட்சியளிக்கிறது.

புதன், 29 டிசம்பர், 2010

பூக்களும் மெழுகுவர்த்திகளும்


வேட்டையாடப்பட்ட பூக்களை மறந்துவிடுங்கள்
வேட்டையாடப்படப் போகும் பூக்களுக்கான
மெழுகுவர்த்திகளுடன்
நாம் தயாராக இருப்போம்
நம் பூக்களுக்கான வேலிகளை
வேட்டைக்காரர்களிடமே விட்டுவிடுவோம்
வேட்டை முடிந்ததும்
தீர்ப்பும் அவர்களிடமே!
பூக்கள் உதிரும் தருணம்
அவர்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாம் ஏற்றிவைப்போம்
என் வீட்டுப் பூக்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாளை வேறு யாரேனும் ஏற்றக்கூடும்.
நம்மிடம் பூக்கள் ஏராளம்
மெழுகுவர்த்திகளை சேகரிக்கத் தொடங்குவோம்

(இக்கவிதை வன்முறையில் இறந்த நீதி கிடைக்காமல் போன அனைத்து குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்.)

செவ்வாய், 28 டிசம்பர், 2010

அர்த்தம்



பள்ளி செல்லும் அவசரத்திலும்
பறவைக்கு வீசும் பிடி அரிசியில்
செடிக்கு ஊற்றும் கோப்பை நீரில்
வாட்ச்மேன் அங்கிளுக்கு உதிர்க்கும்
வணக்கத்தில்
வாழ்தலின் காரணத்தை விளக்கிச்
.........செல்கிறாள் மகள்!

செவ்வாய், 7 டிசம்பர், 2010

கடலை கோபால்





கடலேக்கா………! கட்டை குரலில் சத்தமாக கூவியபடி வலம் வரும் கோபாலை மாலை ஐந்து மணி அளவில் தவறாமல் காணலாம். இடது பக்க இடுப்பில் கடலைக் கூடையை வைத்தபடி வலது கையை லாவகமாக வீசியபடி வரும் கோபாலைக் கண்டவுடன் தெருவே களைகட்டி விடும். கருப்பாக, உயரமாக ஆரஞ்சு, சிகப்பு, ரோஸ் என்று ஆளை அடிக்க வரும் கலரில் சேலையும், தலையில் கனகாம்பரமும்,சேலைக்கு மேட்ச்சான வளையல்களும், காலில் கொலுசுமாக வளையவரும் கோபால்.ஆம்!மூன்றாம்பாலினத்தவர்.

போகிறபோக்கில் எல்லோரையும் குசலம் விசாரிக்காமல் போவதே கிடையாது. என்னத்தே! மாமா எப்படி இருக்கு? ஏ கமலா உடம்பு முடியலைன்னு சொன்னியே இப்ப தேவலையா? என் அம்மாவிடம் கூடுதல் ஒட்டுதல். ஏங்க்கா, அத்தான் லெட்டர், கிட்டர் போட்டாரா? (என் அப்பா அப்போது சென்னைவாசி.) என்று எல்லோரையும் உறவு முறை சொல்லித்தான் அழைக்கும்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு டியுஷன் சென்டர். டியுஷன் சென்டர் என்பதைவிட மினி ஸ்கூல் என்று கூறலாம். இள வயது ஸ்கூல் வாத்தியார் நடத்திக்கொண்டு இருந்தார். அவரது வீடு வேறு தெருவில் இருந்தது. மாலை மாணவர்கள் வரும் வரை வீட்டு வாசலில் அமர்ந்து இளவட்டங்களுடன் அரட்டையில் இருப்பார். கோபாலிடம் கடலை வாங்குவதோடு கடலையும் போடுவார். அந்த இளைஞர்களும்தான். என்ன கோபாலி! அப்படித்தான் அழைப்பார். நேத்து ஆளக் காணோம்? பொண்ணு பார்க்க வந்திருந்தாங்களா? ஆமா சீமைல இருந்து ஆள் வந்தான். ஏன்? என்று பதிலளிக்கும். கோபாலி டார்லிங்! நைட் ஷோ சினிமாக்கு போகலாமா?. புள்ளைகளுக்கு பாடஞ்சொல்லி தர்ற வாத்தி மாதிரி பேசுங்க, நல்லா வந்துரும் வாயில ஆமா. ஆல்பர்ட்டு படிச்சு உருப்படற வழிய பாரு. இவரு கூட சேந்து வீணாபோயிடாத. கடலேக்கா………! கையை வீசியபடி அலட்சியமாக போகும். சில நேரங்களில் வாசலில் நிற்கும் என் கையில் நான்கு கடலைகளை திணித்து விட்டு போகும். என் அம்மா பார்த்தால், சரிதான்! நீ பண்ற இந்த நாலணா,எட்டணா வியாபரத்துல சும்மா கொடுத்துட்டு போ வியாபரம் விளங்கிரும் என்று திட்டுவார். சின்னபுள்ளைக்கு ரெண்டு கடலை கொடுக்கிறதுலதான் நட்டமாயிடபோது. போக்கா! என்றபடி போகும்.

பகல் நேரங்களில் ஹோட்டல்களுக்கு தண்ணீர், இலைக்கட்டு எடுத்து கொடுக்கும். திருவிழாக் காலங்களில் வைகை ஆற்றில் கூட்டத்திற்குள் கடலை விற்கும். திடீரென்று இரண்டு நாள் ஆள் காணாமல் போய்விடும். பின்னர் லுங்கியும்,சட்டையும் அணிந்தபடி வரும். அம்மா, அதனிடம் என்ன கோபால் ஆளக் காணோம்? உடம்பு சரியில்லையா? உடம்புக்கு என்ன நல்லாத்தான் இருக்கு. மாசக் கடேசில்ல,வழக்கம் போல கேசு கிடைக்காத மகராசன் என்ன கூட்டிக்கிட்டு போயிட்டாரு. போலீஸ் டேஷனுக்கு போயிருந்தேன். கூப்பிட்டா எதுக்கு போற? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? நல்லா சொன்ன போ! நா சொன்னவுடனே விட்ருவாங்க பாரு. ஆனா ஏட்டு நல்ல மனுசன். என்ன பத்தி தெரியும். புரோட்டா, டீ வாங்கி கொடுப்பாரு. சில நேரம் சினிமாக்கு கூட காசு கொடுப்பாரு. அம்மாவிற்கு கோபம் வரும். கேஸ் வேணுன்னா ரோட்ல போற யாரையாவது புடிக்க வேண்டியதுதானே? நீ என்ன தொக்கா? விடுக்கா, நீ எதுக்கு கோவப்படற? நான் அவருக்கு உதவி செய்றதா நினச்சுதான் போறேன்! இதுக்கு பேரு உதவி இல்ல,தப்பே செய்யாம குற்றவாளி நீ. ஏன் யோசிக்கமாட்டேங்கிற? என்று இருவரும் பேசுவது புரியாமல் வேடிக்கை பார்ப்பேன்.

கோபால் இப்படி இரு வேறு தோற்றத்தில் வருவது எனக்கு அந்த வயதில் வியப்பையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அம்மாவிடம், ஏம்மா கோபால் இப்படி இருக்கிறது? அடி! கோபால் உனக்கு தம்பியா? மரியாதையாக பேசு. சரி, இருக்கிறார். சொல்லுங்க என்றேன். இத்தனை நாளும் நீயாக இருந்த நீ, நீ அல்ல வேறு என்று உனக்கு தோன்றினால் எப்படி இருக்கும்? என்று ல.சா.ரா ரீதியில் ஆரம்பித்தவர்,(அம்மா தமிழில் அதிகம் படிப்பவர்) என் முகபாவத்தை பார்த்ததும் நிறுத்திக் கொண்டார். கொஞ்சநாள் போகட்டும் விளக்குகிறேன். எல்லோரையும் போல் ஆனால் ஒரு மாறுதலுக்கு உட்பட்ட மனிதர். என்றார். ஆனாலும் எனக்கு பிடிபடவில்லை.


ஓரு நாள் லூங்கி, சட்டையில் வந்த அவரிடம், நீங்க ஏன் இப்பல்லாம் சேலை கட்டலை? என்றேன். கேள்வியின் அர்த்தமும், வீரியமும் தெரியாமல். பதில் சொல்லாமல் என் கைகளைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கண்களின் ஓரம் கண்ணீருடன் சிரித்தார்.

பதிவு செய்ய முடியாத ஊமையின் வலியைப் போன்ற அந்த கண்ணீரின் காரணம் என்னவாக இருக்கும்? தான் நினைத்தபடி வாழ முடியாமல் கோபாலைத் தடுத்தது எது? சமூகத்தின் பார்வை கோபாலுக்கு எந்த விதமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும்? குற்றவாளிகள், சமூகத்தை ஏமாற்றி தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் மனிதர்களையும் விட கோபால் எந்த விதத்தில் குறைந்தவர்? சமுத்திரத்தின் "வாடாமல்லி", நடராசனின் "மதி என்ற மனிதனின் மரணம் குறித்து" படிக்கும் போது இன்றும் கண் முன் இரத்த சாட்சியாய் நிற்கிறார் கோபால்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

டெய்சி அக்காவும் முருகா போலீஸும்


ஒரு ஞாயிறு அதிகாலை எங்கள் வீட்டின் எதிர் வீட்டுக்கு குடி வந்தது அந்த குடும்பம். அம்மா,அப்பா, ஒரு பையன், ஒரு பெண் என்று அளவான குடும்பம். அந்த சிறிய ஊருக்கு சற்று பொருந்தாத நடை,உடை அமைப்புடன் இருந்தார்கள் அவர்கள். பேங்க் உத்தியோகம் காரணமாக மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டு வாசலில் சிறுமிக்கே உரிய ஆவலுடன் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் பெயர் ஏஞ்சலா டெய்சி. பெயரைப் போலவே ஆளும் தேவதைதான். கதாசிரியர்கள் கதைகளில் வர்ணனை செய்யும் அழகின் இலக்கணங்களுடன் இருந்தார். நான் நிற்பதை பார்த்து டெய்சியின் அண்ணன் என்னை உள்ளே அழைத்தார்.வெட்கத்துடன் தயங்கி நின்றேன். எட்டிப் பார்த்த டெய்சி அக்கா என் கையைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று கைகளில் ஆரஞ்சு மிட்டாய்களை திணித்தது. ஓட்டமாய் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். முன்னே பின்னே தெரியாதவங்களிடம் எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று முதுகில் இரண்டு போட்டார்.

அவர்களது தோற்றத்தைப் பார்த்து யாவரும் நெருங்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களோ யாரைப் பார்த்தாலும் மானாவாரியாக சிரித்து வைத்தனர். டெய்சி அக்காவின் சிரிப்பு அந்த கால கே.ஆர்.விஜயாவை நினைவுபடுத்தியது. இப்போது உள்ள அக்கபோர்கள் அப்போது இல்லாததால் இரண்டாவது நாளே டெய்சி அக்கா எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து விட்டது. அக்கா நான் படிக்கும் பள்ளியில் சேர்ந்தது எனக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது.(அக்கா கல்லூரியில் படிக்கும் பெண் என்றே நினைத்திருந்தேன்). அடுத்து வந்த நாட்களில் அக்காவுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்வது இயல்பானது. பள்ளிக்கு போகும் போது அக்கா என் கையைப் பிடித்தபடி ஏதாவது கதைகள் அல்லது அவர்கள் ஊரைப்பற்றி பேசிக்கொண்டு வரும். அக்காவின் கதை சொல்லும் திறமைக்கு நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்க்ரீன் ப்ளே ரைட்டர் ஆகி இருக்கலாம். காட்சிகளை கண்முன் நிறுத்திவிடும். நான் ஒரு இனம் புரியாத பெருமிதத்துடன் நடந்து வருவேன். அக்காவின் கலகலப்பான சுபாவத்தால் விரைவிலேயே எல்லோரிடமும் நெருக்கமாகி விட்டனர் அவர்கள். அதன் பலனாக அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான பலகாராங்களை செய்து அக்கம் பக்கத்தினரை சோதித்து கொண்டிருந்தார்கள். பிரியாணி தொடங்கி கேக் வரை எங்கள் ஊருக்கு அரிதான அயிட்டங்களை சர்வசாதாரணமாக போட்டு தாக்கினர்! மனிதர்கள் மட்டுமின்றி தெருவில் போகும் மாடு, நாய்களுக்கும் கஞ்சி, தண்ணி எல்லாம் உண்டு. காக்கை குருவியையும் விடுவதில்லை.

ஞாயிற்றுகிழமை பெரும்பாலும் அக்காவுடன்தான். தினமும் அக்கா அதிகாலையில் பெட்ரூம் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கிண்ணத்தில் பாலை வைத்து இங்க் பில்லர் மூலம் அணில்களுக்கு பாலூட்டும். புசு,புசுஅணில்கள் அக்காவின் மடி மீதும் தோள் மீதும் ஓடியாடும். ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறைகளிலும் அந்தக் காட்சியைக் காண ஓடிவிடுவேன். எத்தனை வயதானாலும் மறக்க முடியாத அழகான காட்சி அது. பின்னர் சர்ச். பிற்பகலில் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவோம்.

அந்த நாட்களில் எங்கள் ஊரில் முருகா என்று ஒரு பிச்சைகாரான் இருந்தான். சிவப்பேறிய கண்களும்,ஒட்டிய வயிறும், சடைப்பிடித்து தொங்கும் செம்பட்டை முடியும்,தாடியுமாக பயப்படுத்தும் தோற்றத்துடன் இருப்பான். பிள்ளைகள் மட்டுமன்றி, பெண்களே அவனைப் பார்த்து பயப்படுவார்கள். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் போதும் அசிங்கமாக திட்ட ஆரம்பித்துவிடுவான். வேறு எதுவும் பேசவராது! போலீஸிடம் அடிவாங்கி மன நிலை பிழன்றவன் என்று ஒரு சாரரும், போலீஸீல் வேலை பார்த்து பைத்தியமாகி வேலை இழந்தவன் என்று மற்றவர்களும் ஊகங்களை கருத்துக்களாக சொல்லினர். அடர் நீலம் அல்லது காக்கி வண்ணத்தில் ஒரு அரை டிராயர் அணிந்திருப்பான். கையில் ஒரு அலுமினிய சட்டி. அவன் பிச்சை எடுக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கேட்பது எல்லாம் கிடையாது. இவனைப் பார்த்தால்தான் தெருவே காலியாகிவிடுமே! ஆங்காங்கே வாசலுக்கு முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பான். யாராவது ஏதாவது கொடுத்தால் உண்பான் அவ்வளவே! அடம்பிடிக்கும் குழந்தைகள் அனைத்தும் அவன் பேரைக் கேட்டால் அடங்கி விடும். நான் எப்போதும் மறைந்திருந்தே அவனைப் பார்ப்பேன். பெரிய பையன்கள் மறைந்திருந்து முருகா போலீஸ் என்று கத்தி அவனை டென்ஷன் ஆக்குவார்கள். இவனும் குரல் வரும் திசையைப் பார்த்து கல்லெறிந்து கத்துவான்.

டெய்சி அக்கா வீடு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டைத் தவிர அந்த தெருவில் உள்ள வேறு யார் வீட்டின் முன்பும் அவன் உட்காருவதில்லை. காரணம் அவர்கள் சாதம்,குழம்பு,காயோடு சேர்த்து கொடுத்து விடுவார்கள். ஒரு நாள் அக்கா அவனிடம் ஏதோ பேசியதை தொலைவிலிருந்து பார்த்தேன்.மறுநாள் அக்காவிடம், அவங்கூட பேசாதே புடுச்சுட்டு போய்டுவான், என்றேன். சே!அவன் பாவம், நல்லவன். உனக்கு பிடிக்காததை செய்தாலோ, சொன்னாலோ உனக்கு கோபம் வருமில்லையா? அது போல்தான் அவனும் என்றது. அவன் பேசுவது புரியாவிட்டாலும் அவர்கள் வீட்டில் அவனோடு உரையாடுவார்கள். ஒரு முறை டெய்சி அக்கா அவர் அண்ணனிடம் சொல்லி, அவனைக் கூட்டிப் போய், தலையை மொட்டை அடித்து தாடி எல்லாம் மழித்துவிட்டனர். எப்போதும் கோபமாக இருக்கும் முருகா, அக்காவைக் கண்டால் யேசுவின் கைகளில் இருக்கும் ஆடு போல் ஆகிவிடும். அவர்கள் சொல்லும் சின்ன,சின்ன வேலைகளை அமைதியாக செய்யும். கிறிஸ்மஸ் அன்று புது லுங்கியும்,சட்டையும் வாங்கிக் கொடுத்தனர்.

பின் ஒரு மழைக்கால மாலைப் பொழுதில் அவர்கள் வீட்டை காலி செய்து எல்லோரிடமும் விடை பெற்று ரயிலடிக்கு சென்ற போது பெட்டி படுக்கைகளை தூக்கிகொண்டு முருகாவும் கூடவே சென்றது. ரயில் புறப்படும் வரை அதற்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ரயிலில் ஏறி அது புறப்பட ஆரம்பித்தும் கத்தி அழுது கொண்டே ரயிலுடன் ஓட ஆரம்பித்து. அக்காவின் கண்களிலும் கண்ணீர். அந்தக் காட்சி திரைப் படத்தில் வரும் சோகமான க்ளைமாக்ஸை போன்று இருந்தது. அன்றிலிருந்து கதைகளில் இறக்கைகளும், நட்சத்திரமும் கொண்ட தேவதைகளைப் பற்றி படிக்கும் போது அந்த தேவதைகள், டெய்சி அக்காவின் சாயலுடனே காட்சியளித்தனர்.

திங்கள், 15 நவம்பர், 2010

ஜம்ப்பிங் தாத்தா!





எனது பால்யகாலத்து நண்பர்களுள் ஒருவர். அப்போது அவரது வயது எண்பது! அந்த தெருவில் இருந்த பெரியவர்களுக்கு அவர் "தோட்டத்து தாத்தா", சில இளைஞர்களுக்கு "எஸ்.வி", (சைடு வீங்கி)அவரது தாடைக்கும்,காதுக்கும் இடையில் சுமாரான அளவில் இருந்த ஒரு வீக்கமே இந்த நாமகரணத்திற்கு காரணம். குழந்தைகளுக்கு காந்தி தாத்தா! ஆம்! தோற்றத்தில் தொண்ணூறூ சதவிகிதம் வரலாறு புத்தகத்தில் காணப்படும் காந்திஜியை ஒத்து இருப்பார். அந்த உருவ ஒற்றுமை அதுவாக அமைந்ததா? அல்லது அமைத்துக் கொண்டாரா? தெரியாது. மொட்டை தலை,வட்டகண்ணாடி, பெரிய காதுகள். மேல் சட்டை அணிய மாட்டார்.கதர் துண்டு, ஒருமாதிரியாக சுற்றப்பட்ட கதர்வேட்டி, காலில் கட்டை செருப்பு. காந்திஜியே டென்ஷன் ஆகிற அளவுக்கு தீவிர காந்தியவாதி!


வைகை ஆற்றின் கரை ஓரமாக அமைந்திருந்த அந்த தெருக்கோடியில் உள்ள லைன் வீட்டின் கடைசியாக இருந்த எட்டுக்கு பத்து அளவுள்ள அறைதான் அவரது வீடு. அதை அடுத்து ஆற்றின் கரை வரையிலும் நீண்ட சற்றே பெரிய தோட்டம் அவருடையது. வீடுகள் மருமகனுடையது. அந்த தோட்டம்தான் அவரது வாழ்க்கை. மகள், மருமகன், பேரன், கொள்ளு பேரன்,பேத்திகள் எல்லோரும் நாலு தெருக்கள் தள்ளி இருந்தார்கள். ஆனாலும் தாத்தா தனிக் குடித்தனம்தான். பிரச்சினை எதுவும் கிடையாது. சுயமரியாதை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை அவ்வளவுதான்.

அதிகாலை எழுந்து தோட்டத்தை சுத்தம் செய்து, தண்ணீர் பாய்ச்சுதல் இவரது தலையாயக் கடமை. இவர் தண்ணீர் பாய்ச்சும் விதமே அலாதி! கிணற்றில், விவசாயிகளைப் போன்று ஏற்றம் அமைத்து தலைப்பாத்தி, கிளைப்பாத்தி என்று கனகச்சிதமாக கால்வாய்கள் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடி செடி,கொடி,மரம் அனைத்திற்கும் நீர் பாய்ச்சிவிடுவார்.பின்னர் நீரிறைத்து குளித்து சூரிய நமஸ்காரம் செய்து உணவு அருந்த செல்வார். சமையலும் செல்ஃப் குக்கிங்தான்! உதவிக்கு ஒரு ஆள் கூட வைத்துக்கொள்ள மாட்டார். மதிய ஓய்வுக்கு பிறகு மாலை தோட்டத்திலேயே நடை பயிற்சி.இரவு உறக்கம். இதுதான் இவரது தினசரி அட்டைவணை.


யாரிடமும் அதிகம் பேசிப் பார்த்தது இல்லை. செடிகளிடம் பேசி பார்த்திருக்கிறேன். வாரம் ஒரு முறை வெளியே வருவார். நான் என் நண்பர்களுடன் அவரது தோட்டத்திற்கு விளையாட போவது உண்டு. எனது நண்பர்கள் அவர் மதியம் ஓய்வெடுக்க செல்லும் போது மட்டுமே விளையாடுவார்கள். கேட்டால் தாத்தா ஏதாவது சொல்வார் என்பார்கள். அவர் யாரையும் கடிந்து கொண்டதாக தெரியவில்லை. அந்த தோட்டம் என் பிரியத்திற்கு உரிய இடமானது.அதனால் அடிக்கடி மற்ற நேரங்களிலும் தோட்டத்திற்கு தனியே செல்ல ஆரம்பித்தேன். நான் தனியே விளையாடுவதைப் பார்த்து கூப்பிட்டு பேச ஆரம்பித்தார். விரைவிலேயே நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம். பள்ளி விடுமுறை நாட்களில் (அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்) காலை பத்து மணிக்கெல்லாம் அவரைப் பார்க்க ஓடிவிடுவேன். வாங்க,வாங்க என்று வரவேற்பார். சிறுமியான என்னை வாங்க,போங்க என்றுதான் அழைப்பார். அந்த நேரம் அவர் பெரும்பாலும் சமைத்துக் கொண்டு இருப்பார். சிறிய பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு கைப்பிடி அரிசி போடுவார். பின்னர் பருப்பைப் போட்டு வெந்ததும் தோட்டத்தில் பறித்து வந்த காய்கறிகளை கீரை உட்பட நறுக்கிப் போட்டு அரைவேக்காடாக எடுத்து விடுவார். அதான் லஞ்ச்.


அந்த சிறிய அறை அத்தனை சுத்தமாக இருக்கும். ஒரு மரமேஜை, நாற்காலி,அலமாரியில் புத்தகங்கள்,எழுது பொருள்கள், ஒரு சிறிய டிரான்சிஸ்டர். அதை ஒட்டி படுப்பதற்கு ஒரு பெஞ்ச். பெஞ்சை ஒட்டிய ஜன்னல் பகுதியில் பெட்டிக்கடையில் இருப்பது போன்று நாலைந்து பாட்டில்களில் கடலைமிட்டாய்,பொரிகடலை,தேன்மிட்டாய் வகையறாக்கள். மறுபுறத்தில் சிறிய மேஜையின் மேல் மண்ணெண்ணை ஸ்டவ்வும்,கொஞ்சம் பாத்திரங்களும். சமைத்து கொண்டு இருக்கும் போதே அந்தகால வரலாற்றைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் காந்தியைப் பற்றிதான். பின்னர், அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எனது மன தைரியம் அல்லது பெருந்தன்மையைப் பாராட்டும் விதமாக கடலைமிட்டாயோ, தேன் மிட்டாயோ கொடுத்து அனுப்புவார். நம்புங்கள், நான் அந்த கடலை மிட்டாய்க்காக செல்லவில்லை. அவரது நட்பை நான் விரும்பினேன். அப்போது புரியவில்லை. பின்னர் யோசிக்கும் போதுதான் தோன்றியது. வாரம் ஒரு முறை அவர்கள் வீட்டிற்கு செல்வார். அவரது கொள்ளு பேரன், பெயர்த்திகள் அவருடன் நேரம் செலவழித்து இல்லை.அவர்கள் வெளியில் விளையாடப் போய் விடுவார்கள். நான் தாத்தாவின் அன்பைப் பெற்றது இல்லை. அப்பா வழி தாத்தா நான் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். அம்மா வழி தாத்தாவிடமோ, டாமைக் கண்ட ஜெர்ரியைப் போல் நாலடி தள்ளியே இருப்பேன். அவரும் நட்பு பாராட்டியதில்லை.இதன் காரணமாகத்தான் எங்கள் இருவரிடையே நேசம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சில வேளைகளில் பகலுணவுக்கு பின் செல்வேன். அந்த நேரத்தில் தாத்தா தோட்டத்து கெஸ்ட் ஹவுஸில் இருப்பார். அது தென்னை ஒலையால் வேயப்பட்ட சிறு குடில் தோட்டத்தின் கோடியில் இருந்தது. அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் ஏதாவது ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருப்பார். தூக்கமும் அதில்தான். அருகில் ஒரு மரபெஞ்ச் ஒரு சிறிய மேஜையில் குடிநீர் மண்பானை, கைவிசிறி மற்றும் டிரான்சிஸ்டர். அங்கு அமர்ந்து கையோடு கொண்டு செல்லும் சொப்பு (விளையாட்டு பாத்திரங்கள்) வைத்து விளையாடுவேன். அவரும் நான் கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதைப் போல் பாவணை செய்வார். சில நேரங்களில் ஏதாவது எழுதுவார். அவர் வெண்பாக்கள் எழுதியிருந்ததும் இரண்டு கவிதை தொகுப்பில் சில பாக்கள் இடம்பெற்றதும் தமிழ் புலமை உடையவர் என்பது எல்லாம் நான் வளர்ந்த ‌பிறகுஅறிந்தது.

அவருடன் பழகிய சில காலங்கள் இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. நாடு விட்டு நாடு வந்தும் வாழ்க்கை முறைகள் மாறிய போதும் நான் இன்றும் இயற்கையின் காதலியாய் இருப்பதற்கு அவர் மிக முக்கிய காரணம். முதுமையிலும் ஆரோக்கியமாகவும்,கம்பீரமாகவும் யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்த அவர் என்னுடைய ஹீரோக்களில் ஒருவர்.

என்ன, தாத்தாவுக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிறீர்களா? அது, தாத்தா தனது தொண்ணூற்றி ஏழாவது வயதில் ஒரு மாலையில் மகள் வீட்டு மாடியில் இருக்கும் போது அந்த பக்கம் போன உருவத்தை திருடன் என எண்ணி துரத்தி ஓடிய போது மொட்டைமாடி குட்டை சுவர் தடுக்கி மேலே இருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட்டார். அது வரை பல பெயர்கள் கொண்டிருந்த அவர் அன்று முதல் ஜம்ப்பிங் தாத்தா என்ற ஒரே பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

சனி, 13 நவம்பர், 2010

மனிதர்கள்

என் வாழ்வில் நான் சந்தித்த,பழகிய வியக்க வைத்த மனிதர்களைப் பற்றிய அறிமுகம். இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல என்றாலும் வாழ்க்கையில் எனக்கு வியப்பும், சுவாரஸ்யமும் சில பாடங்களையும் தந்தவர்கள். நீங்களும் படித்துப் பாருங்களேன்!




குமுதா

எல்லோருக்கும் சிறுவயதில் ஏற்படும் முதல் ஞாபகங்கள் பெற்றோரை சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எனக்கு என் உறவினரான இவரது ஞாபங்கள்தான்.

அப்போது நாங்கள் என் அம்மா வழி பாட்டியின் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்தோம்(வாடகை இல்லாமல்தான்). என் உறவினராக எனக்கு அறிமுகமான இவர் சில நாட்களிலேயே எனது அம்மாவிற்கும் மேல் ஆகிவிட்டார். என் மீது பிரியம் அதிகம். அந்நாட்களில் என் அம்மா எங்களிடம் அதிக கவனத்துடன் இருந்ததில்லை. (அதற்கு அவரது உடல் நிலையும் ஒரு காரணம்) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவரது பிஸி ஷெட்யுலுக்கு நடுவிலும் என்னைக் கவனித்து கொண்டார். இதற்காக பிரதி உபகாரம் எதுவும் பெற்றதில்லை.

மெலிந்த கருத்த தேகத்துடன் சற்று உயரமான,அலங்காரங்கள் ஏதுமின்றி வளைய வரும் இவர் எனக்கு அழகானவர்.அன்பும்,சுறுசுறுப்பும்தான் இவரது அடையாளம். கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் யாருடைய உதவியுமின்றி வாழ்ந்து கொண்டு இருந்தார். சத்துணவு கூடத்தில் ஆயாவாக இருந்த இவர், உறவினர் மற்றும் அண்டை வீடுகளில் காலை,மாலை நேரங்களில் வீட்டு வேலைகளையும் பார்த்து வந்தார்.

இவரிடம் என்னை கவர்ந்த விஷயம் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.யாராவது ஏதாவது கேட்டால், அத விடுங்க, என்னைக்கு இல்ல, இன்னைக்கு பேச என்பார். அல்லது வாழனும்னா எல்லாத்தையும் பாத்துதான் ஆகணும் என்று முடித்துவிடுவார். அழுதோ,புலம்பியோ பார்த்ததில்லை நான். அவரது இளம் வயதில் நல்ல வசதியாக வாழ்ந்தவர் என்று மற்றவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். அதைப்பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை.

மழை, வெயில் எல்லாம் ஒன்றுதான் அவருக்கு. தீபாவளி, பொங்கலன்று வேலை கூடுதலாக இருக்கும்.ஆனால், அன்று அரிதாக கூடுதலாக கிடைக்கும் பலகாரங்களைக்கூட தனக்கு, தன் பிள்ளைகளுக்கு என்று இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.

அவரது ஓய்வு நேரம் என்றால் மதியம் மூன்றிலிருந்து நான்கும் இரவு பத்து முதல் அதிகாலை ஐந்துவரையும்தான், இதில் மதியம் பாட்டி வீட்டு முன் வராண்டாவில் சற்று கண்ணசரும் நேரம் மற்ற பெண்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்.இவரையும் விடுவதில்லை.ஏ குமுதா! உனக்கு விஷயம் தெரியுமா என்று எழுப்புவார்கள். இவரும் கூலாக ஆங்! என்று சவுண்டைக் கொடுத்து விட்டு அடுத்த விநாடி தூக்கத்தைத் தொடருவார். உங்கள மாதிரியா நான்? என்று கோபப்பட மாட்டார். பெண்கள் புதிதாக நகையையோ,புடவையையோக் காட்டி எப்படி இருக்கிறது என்றால் சந்தோஷமாக நல்லாருக்கு என்பார். பொறாமை,ஏக்கம் எதுவுமே அந்த கண்களில் நான் பார்த்தது இல்லை.

சத்துணவுக்கூடத்தில் வேலை பார்க்கும் டீச்சரும், மேற்பார்வையாளரும் கூடத்திற்கு வரும் அரிசி,எண்ணைய் போன்றவற்றில் தங்கள் வீடுகளுக்கும் கொஞ்சம் எடுத்து செல்வார்கள்.ஆயாக்களின் வாயை அடைக்கும் விதமாக அவர்களுக்கும் சிறிது ஈயப்படும். அதையும் தொடமாட்டார். மற்றவர்களைப் பற்றி போட்டும் கொடுக்கமாட்டார். உறவினர்கள் கேட்டால், அப்போது மட்டும்,என்ன பாவம் பண்ணினேனோ? நாயா அலையறேன், இதுல பச்சபுள்ளைக பாவத்தவேற சேத்துகணுமா? அரை வயித்து கஞ்சினாலும், மனுசனுக்கு மானம் முக்கியம் என்று பதில் வரும். யாருடனும் சண்டை போட்டு பார்த்ததில்லை. யாராவது திட்டினாலும், போ கழுத! உனக்கு வேற வேல இல்ல என்று இளையவர்களுக்கும், விடுங்க,தப்புனா மன்னிச்சுருங்க என்று பெரியவர்களுக்குமாக ஒரே பொதுவான பதிலாக வைத்திருப்பார்.

பொறாமை,கோபம்,சுயகழிவிரக்கம், எதுவுமின்றி வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த இவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தவிப்பு


காற்றினுள் துழாவுகின்றது என் கைகள்

பின்னிரவின் மௌனங்களின் ஊடாக

சலசலக்கிறது காற்று அமைதியைக் கிழித்தபடி

யாருமறியா இரவில் யாக்கையற்ற மனது

அலைகிறது வெப்பப் பெருவெளியில்

குருதியின் ஊடாக வழிந்தோடும்

மரணத்தின் இரைச்சல்கள் துரத்தும் போதும்

களைத்த கைகளின்

தேடல் முடிவற்று நீள்கிறது...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சரியா? தவறா?

திரு. இம்ரான்கான் என்பவர் வெளியிட்ட பதிவு இது. அப்படியே வெளியிட்டு உள்ளேன்.முடிவில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளேன். கருத்துக்களை வரவேற்கிறேன்.

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!




நல்லவர்களை, நேர்மையாளர்ளை மதிக்கும் பண்பு எப்போது வரும் இந்த மக்களுக்கு!
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது. சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்… டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.

இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.
ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.

அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.
அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).
பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்…

-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.

அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.

தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.

அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!

திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?


எனது கருத்து.

நேர்மை என்பது தன்னை சார்ந்த மனிதர்கள் மீதான குறைந்தபட்ச அக்கறை கூட கூடாது என்பதா? பின் தங்கிய ஊர்களில் பிறந்து பெரிய அளவில் வந்தால் ஒன்று தான்/தன் குடும்பம் என்ற அளவில் மட்டும் வாழ்வது அல்லது நேர்மை என்று அடிப்படை வசதிகள் பெற்று தரக்கூட உதவாமல் இருப்பது ஏன்? அரசியல் சார்பற்று சமூக அக்கறையுடன் செய்யலாமே? சமூகம் என்பது அந்த மக்களையும் உள்ளடக்கியது தானே?

திரு. அப்துல்கலாம் அவர்களின் நேர்மை மற்றும் நற்பண்புகள் அனைவரும் அறிந்ததே.
அவர் மிகச்சிறந்த மனிதர். முதல் குடிமகன் என்பது 5 வருட காலம் மட்டுமே. ஆனால் அறிவியலாளர்,பேராசிரியர் மற்றும் இளையதலைமுறைக்கு முன் மாதிரியான அவரது வீடும், சுற்றுப்புறமும் இவ்வாறு இருப்பது சுகாதார விழிப்புணர்வு குறைவாக இருக்கும் நம் நாட்டிற்கு நல்லதல்ல. அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வும், பொறுப்பும் ஏற்படுத்த வேண்டிய கடமை கலாம் என்ற தனிப்பட்ட மனிதருக்கு உண்டுதானே?

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

புத்தருடன் ஒரு நேர்காணல்!

சமீபத்தில் ஒரு புத்தர் கோவிலுக்கு சென்ற போது தோன்றிய கேள்விகள்.

நான்: வணக்கம். நலமா ?

புத்தர் : புன்னகைத்தார்.(சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை போலும்.)

நான்: நீர் சத்தியம் தவறாதவர் என்கிறார்களே! யசோதையை
மணம்செய்யும் போது பிரியாமல் இருப்பேன் என்று சத்தியம்
செய்திருப்பீர் அல்லவா? பின் நள்ளிரவில் அவரை நீங்கிய நீர் சத்தியம் தவறியவர்தானே?

புத்தர்: புன்னகைத்தார். ( யாராகினும் எல்லா நேரங்களிலும்
சத்தியத்தைக் கடைப்பிடிப்பது சிரமம் என்கிறாரோ?)

நான்: மேலும் மனைவியின் கருத்தைக் கூடக் கேட்காததன் காரணம்?நான்
என்ற எண்ணமா? அல்லது ஆண் என்ற எண்ணமா?

புத்தர்: புன்னகை. (இரண்டும் போலும்.)

நான்: சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே! என்ற கூற்றின்படியும்
தாங்கள் கடமை தவறியவர்தானே?

புத்தர்: புன்னகை. (நான் இல்லையென்றாலும் என் மகனை அவன் தாய் சான்றோன் ஆக்கியிருப்பாள் என்கிறாரோ? போகட்டும்.)

நான் : தனக்காக மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்காகவும் போராடுகிற சாமான்யனைக் காட்டிலும் தாங்கள் மரத்தடியில் அமர்ந்துப் பெற்ற
ஞானம் எந்த வகையில் உயர்ந்தது?

புத்தர்: புன்னகை. (இது எளிது என்கிறாரோ?)

நான்: கடைசியாக ஒரு கேள்வி?
உலகில் எல்லா மதங்களும் அன்பையே வலியுறுத்துகிறது.
இருந்தபோதிலும், ஆதிகாலந்தொட்டே, இவ்வுலகில் மதச்சண்டையும்,
இனச்சண்டையும் இருந்துவருகிறபோது, புதிதாக ஒரு மதத்தை
தோற்றுவிப்பதால் , ஒரு புதிய சண்டை உருவாகக்கூடிய வாய்ப்பு
உள்ளது என்று முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய தாங்கள்
ஒரு முறையாவது சிந்தித்ததுண்டா?

புத்தர் இப்போது புன்னகைக்கவில்லை. அழுகிறாரோ? குற்றவுணர்வாக
இருக்கும்.

புத்தம் சரணம் கச்சாமி!

விடைபெற்றேன்.