வெள்ளி, 7 ஜனவரி, 2011

வசந்தி டீச்சர் சார்



முதற் காதலையும், முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதுபோல்தான் நம் ஆரம்பகால ஆசிரியை(யர்)களையும் மறக்க இயலாது. இந்த கேஜி டீச்சர்களைப் பார்த்தால் ஒரு வித அழகுடன் இந்த குழந்தைகள் எல்லாம் மிஸ்,மிஸ் என்று அழைப்பதாலேயே அவர்களுக்கு வயதாவதே இல்லையோ என்றுகூடத் தோன்றும். இந்த உலகத்தில் உள்ள அம்மா அப்பா உட்பட யாரையும் பேட்(bad) என்று ஒத்துக்கொள்ளக் கூடிய குழந்தைகள், தங்கள் மிஸ்ஸை மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஆசிர்வதிக்கப்பட்டவர்களைப் போன்றே எனக்குத் தோன்றும். அவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. இவர்களைப் போன்றே இவர்களது அழகான பெயர்களும் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று. ரோஸி,ஸ்டெல்லா, மைதிலி என்று.


எனக்கும் இப்படிப்பட்ட டீச்சர்கள் இரண்டு மூன்று பேர் உண்டு. அதில் ஒருவர் வசந்தி. இவர் எனது பள்ளி ஆசிரியை கிடையாது. எனது அத்தை பெண்ணும் அவரும் தோழிகள். ஒரே நர்சரியில் வேலை பார்த்தனர். அந்த பழக்கத்தின் காரணமாக அவரது வீட்டிற்கு செல்வேன்.அழகிய வட்டமுகத்தில் அந்த உதட்டில் நிரந்தரமாக தங்கி இருக்கும் சிரிப்புதான் அடையாளம். நீண்ட கருங்கூந்தலை தளர பின்னி இருப்பார். டிவி காம்பியர் போன்று சைகையுடன்தான் பேசுவார். கூல்,பந்தா போன்ற வார்த்தைகளை அந்த காலத்திலேயே அடிக்கடி உபயோகிப்பார். எங்களது பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். மாலையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பார். நானும் செல்வேன். பெரும்பாலானவர்க்கு கட்டணம் கிடையாது. எனக்கும்தான். வசந்தி, செத்த பாத்துக்கப்பா என்றே பெரும்பாலான தாய்மார்கள் விட்டு விட்டு செல்வார்கள். நான் அப்போது இரண்டாம் வகுப்பு. மற்ற பிள்ளைகள் எல்லாம் நர்சரி லெவல். டீச்சர் பிஸியான நேரத்தில் நானே ஆக்டிங் டீச்சராகும் அபாயமெல்லாம் நடக்கும்.

சுறுசுறுப்பாக சிரித்தபடியே இருக்கும் அவரது சுபாவம் அவருக்கு அழகு சேர்த்தது. புதிதாக திருமணமானவர். அவரது கணவர் ஒரு அரசு அலுவலர். மாலை வேலை முடிந்து அவர் வீட்டுக்குள் வரும் போது வீடு சந்தைக் கடை மாதிரி சத்தமாக இருக்கும். ஆனால் கோபமாகவே மாட்டார். அவரும் குழந்தைகளை நேசிப்பவர். அவர் பெயர் ராமலிங்கம். ஆனால் நாங்கள் அவரை "வசந்தி டீச்சர் சார்" என்றே அழைப்போம். அவர் வந்தவுடன் டீச்சர் மாலை தயாரிப்பிற்கு சென்று விடுவார். இவர் எங்களுடன் பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தைகளிடம் எப்போதுமே குட், திறமைசாலி, உன்னால் முடியும் என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துவார். டீச்சர் உள்ளிருந்தபடியே அவரிடம், 'குழந்தைகளை படிக்க விடுங்க' என்று சத்தம் போடுவார்.


அப்போதெல்லாம் நான் ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன். என் ஓவியத் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருந்த ஒரே ஆள், ஹி,ஹி நான்தான். எனது நம்பிக்கையைப் பார்த்து அவர்கள் இருவரும் எனக்கு ஊக்கம் தர ஆரம்பித்தார்கள். அவர்களது ஊக்குவிப்பால் சுவர், தரை என்று எல்லா இடங்களிலும் கிறுக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டு சுவர்கள் எல்லாம் என் கைவண்ணத்தில் மிளிர ஆரம்பித்தன. மனித உருவங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் வரைவேன். இயற்கை காட்சிகள் என்றால் இரண்டு மலை, நடுவே சூரியன் ஒரு அருவி, இரண்டு தென்னை மரங்கள், ஒரு குடிசை. எப்போதும் இதுதான். என் ஓவிய மனிதர்கள் எல்லாம் சிலுவையில் அறையப்பட்டவர்களை போல் கைகளை விரித்து, கால்கள் பின்னியபடி ஒரு வித சோகத்துடனே காட்சியளித்தார்கள். வேறுமாதிரி வரைய விருப்பம் இல்லாமல் இல்லை. வரல! வேறு மாதிரியாக முயற்சித்தால் ஒரு கை குண்டாகவும், மற்றொன்று போலியோ அட்டாக் ஆனது போலவும் கூடுதலாக இம்சித்தது. ஆனாலும் என் முயற்சியில் நான் மனம் தளரவே இல்லை!


இதற்கிடையில், எனது வேலைகளால் என் அம்மாவிற்கும், பாட்டிக்குமிடையே பனிப்போர் ஆரம்பித்தது. பாட்டி, நான் சுவர்களை பாழ்படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து சுவர்கள் சாரியாகத்தான் காட்சியளித்தன! ஆனாலும் பாட்டிக்கு தான் பார்த்து கட்டிய வீடு என்பதால் இந்த அங்காலாய்ப்பு. அம்மாவிற்கோ, நம்மை பேப்பர் கேட்டு தொந்தரவு செய்யாத வரை ஓகே என்பதாக இருந்தது. இந்த பஞ்சாயத்து சென்னையிலிருக்கும் அப்பா,தாத்தாவிடம் செல்லும் நிலை வர, உடனே, நான் நல்லெண்ண தூதுவராக மாறி இவர்களது பனிப்போரை நிறுத்தும் விதமாக சுவர்களில் வரைவதை நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு ஜனவரியில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட, அஜந்தா, எல்லோரா போன்று வரலாற்றில் பதிவாக வேண்டிய ஓவியங்கள் வெளி உலகிற்கு தெரியாமலேயே மறைந்து விட்டன. ஆனால் அதற்கு பதிலாக கைக்கு கிடைக்கும் கோடு போட்ட நோட்டிலிருந்து பேப்பர்களை கிழித்து கைவரிசையைக் காட்டத் தொடங்கினேன்! எனது கிழி திறமையின்மை காரணமாக நோட்டுக்கள் சகட்டு மேனிக்கு கிழிந்து என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன. இதன் காரணமாகக் கிட்டிய வசவுகளின் சோகத்தை டீச்சர்,சாருடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் கண்களின் ஓரம் கண்ணீர் அரும்பாமல் சாதாரணமாகவே கேட்டதில், எனது துக்கம் அதிகமாகியது. நான் வழக்கத்தை விட அமைதியாக படித்துக் கொண்டிருந்தேன்.


மறுநாள் மாலை நான் சென்றபோது டீச்சரும்,சாரும் செய்தித்தாள் சுற்றப்பட்ட ஒரு பார்சலை என்னிடம் கொடுத்தனர். உள்ளே கோடுகளற்ற வெள்ளைத்தாள்கள். மொத்தமாக அவ்வளவு பேப்பரை அதுவரை நான் பார்த்து இல்லை. வறுமையிலிருப்பவள், கையில் பணக் கட்டுக்களைப் பெற்றவள் போலாகிவிட்டேன். அதிரி புதிரியாக வரைய ஆரம்பித்தேன்.ஆனால் ஓவியக் காட்சிகளில் பெரிய மாற்றங்களில்லை. ஆனால் அந்தப் படங்களை தவறாமல் அவர்களிடம் காட்டத் தொடங்கினேன். சார் அந்தப் படங்களை வாங்கிப் பார்த்து பாராட்டியபடியே ஒரு ஃபைலில் போட்டு அவரிடமே வைத்துக் கொண்டார். பின்னர் வேலை மாற்றம் காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். செல்லும் முன்னர் எனக்கு பேப்பர்,கலர் பென்சில்கள் அன்பளித்தார். வழக்கம் போல் இரண்டு நாட்கள் சோகத்துடன் திரிந்தேன். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சரின் தோழியான என் அத்தை பெண், என்னிடம், நான் வசந்தியைப் பார்த்தேன். நீ வரைந்து கொடுத்த படங்கள் அடங்கிய ஃபலை வைத்திருக்கிறார்கள். உன்னை மிகவும் விசாரித்தார்கள் என்று கூறியபோது உண்மையில் அதிர்ந்து போனேன்.

நான் சென்னை வந்த பிறகு என் தந்தை வாங்கிக் கொடுத்த அழகான அட்டைகள் உடைய ஆர்ட் புத்தகங்களும், இப்போது, என் கணவர் வாங்கி வரும் தரமான பேப்பர், மற்றும் வண்ணங்களையும் விட, அன்று 'வசந்தி டீச்சர் சார்' வாங்கிக் கொடுத்த ஒரு குயர் வெள்ளைத் தாள்களும்,பென்சில்களும் மிகவும் விலை உயர்ந்ததாகவே காட்சியளிக்கிறது.

2 கருத்துகள்:

TAMILSUJATHA சொன்னது…

நான் சென்னை வந்த பிறகு என் தந்தை வாங்கிக் கொடுத்த அழகான //அட்டைகள் உடைய ஆர்ட் புத்தகங்களும், இப்போது, என் கணவர் வாங்கி வரும் தரமான பேப்பர், மற்றும் வண்ணங்களையும் விட, அன்று 'வசந்தி டீச்சர் சார்' வாங்கிக் கொடுத்த ஒரு குயர் வெள்ளைத் தாள்களும்,பென்சில்களும் மிகவும் விலை உயர்ந்ததாகவே காட்சியளிக்கிறது.//

முதல் அனுபவம், முதல் சந்தோஷம் எல்லாமே அற்புதமானவைதான்!

ரகுராமன் சொன்னது…

NICE அத்தாச்சி நல்ல சிறுகதை படித்த உணர்வு. வாழ்த்துக்கள்.