புதன், 30 நவம்பர், 2011

அன்னிய நேரடி முதலீடு (FDI)

"ஊரான், ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

கடிதாசு போட்டானாம் வெள்ளக்காரன்!"

என்ற நாட்டார் பாடல் இந்த அன்னிய முதலீடு பற்றி அந்த காலத்திலேயே தெளிவாக சொல்கிறது.அன்னிய முதலீடு இங்கு சில்லறை வணிகர்கள் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சில்லறை வணிகர்கள் மட்டும்தான் இந்த நாட்டின் பிரஜைகளா ? சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு கம்பனிகளின் வரவு நுகர்வோருக்கு பெரிய நன்மையை கொடுக்கும். வணிகர் சங்கங்கள் இந்த கொள்கைக்குக் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் நுகர்வோர் அமைப்புகள் கொள்கைக்கு ஆதரவாக போராட வேண்டும். மிகவும் வரவேற்கவேண்டிய விஷயம். துபாய், சிங்கப்பூர், மலேசியா செல்லும்போதெல்லாம், நம் நாட்டிலும் பெரிய சூப்பர் மார்கெட்கள் எப்பொழுது வரும் என ஏங்கியதுண்டு. நம் நாட்டில் சிறிய வியாபாரிகளுக்கு நாணயம் நேர்மை துளியளவும் கிடையாது என்றெல்லாம் பேசப்படுகிறது.1. அதிக அளவில் நேரடியாக கொள்முதல் செய்வதால் குறைந்த விலைக்கு பொருள்கள் கிடைக்கும். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக (விவசாயிகள் உட்பட) பெறப்படுவதால் இடைத் தரகர்கள் ஒழிந்து உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பயனடைவார்கள்.2. நுகர்வோர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரமான ஊள்ளூர் மற்றும் வெளியூர் பொருள்களை தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் நுகர்வோர் கலச்சாராம் கொடிகட்டிப் பறக்கும்.3. ஊள்ளூர் வணிகர்கள் செய்யும் ஏமாற்று, கலப்படம் என எதுவும் கிடையாது.4. மேலும் சீனா உட்பட பெரும்பாலும் எல்லா நாடுகளும் அன்னிய முதலீட்டைஐ

அனுமதிக்கின்றன. இவற்றை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.அதிக அளவு நேரடி கொள்முதல் என்பது மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே சாத்தியம் சிறு உற்பத்தியாளர்களிடம் சாத்தியமில்லை. இந்த அரசிற்கு விவசாய நாடான இந்தியாவின் வேளாண்மை, விவசாயிகள் குறித்த அறிவு இல்லை அல்லது அக்கறை இல்லை.

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளே அதிகம். சராசரியாக அவர்கள் வைத்திருப்பது 5 ஏக்கர் தொடங்கி அதற்கும் கீழே. இவர்கள் தங்களின் நேரடி உபயோகம் மற்றும் சிறிய அளவு விற்பனைக்கு மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். இவை அந்த அந்த சுற்றுபுறங்களிலேயே முடிந்து விடும். மேலும் விதைப்பு, கால்நடை பராமரிப்பு போக இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களில் 40% மட்டுமே விற்பனைக்காக நகர்புற சந்தைக்கு வருகிறது.

வெளிநாடுகளில் ஒரு விவசாயி சராசரியாக 300 லிருந்து 1000 ஏக்கர் வரை வைத்திருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எனவே வால்மார்ட் போன்ற நிறுவனம் அங்கே செய்வது போன்று இங்கு செய்ய இயலாது. ரிலையன்ஸ் மோர் எல்லாவற்றின் நிலையும் இதுவே.

இதை சமாளிக்க சிறு நிலங்களை சேர்த்து பெரும்பண்ணையாக்க இவர்கள் முயற்சித்தால் சிறு விவசாயிகள் பண்ணைக்கூலிகளாக மாறும் அபாயம் ஏற்படும். விவசாயிகள் வேலை இழப்பதுடன் பாரம்பரிய விவசாயம் முற்றிலுமாக அழிந்து போய்விடும். இவ்வாறு செய்யமாட்டார்கள் என்றால் அவர்களது பொருள்களை குறைந்த விலைக்கு தர அவர்களால் முடியாது. இதுக்கு பெரிய பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை நம்மூர் கீரைகாரம்மாவே சொல்வாங்க!2. இது மேலோட்டமாகப் பார்க்க சரியாகத் தெரிந்தாலும், உண்மையில் இதுவும் ஒரு ஏமாற்று வேலையே! இவர்கள் ஒரே மாதிரியான தயாரிப்புகளை வேறு வேறு பெயர்களில் விற்பார்கள். உதாரணத்திற்கு பருப்பு வகைகளில் A B C D என்று நான்கு பிராண்டுகள் மார்கெட்டில் இருக்கும். ஐந்தாவதாக இவர்களது பிராண்ட் ஐ கொண்டுவருவார்கள். உண்மையென்னன்னா மேலே உள்ள நாலுபேரிடமும் எக்ஸ்போர்ட் க்வாலிட்டி என்று சொல்லப்படுகிற வகைகளை கொள்முதல் செய்து பேக் செய்து சற்று கூடுதல் விலையுடன் விற்கப்படும். பின்னர் படிப்படியாக நுகர்வோரை உளவுரீதியாக தங்களது பொருள் உயர்ந்தது என்ற நிலைக்கு கொண்டு வந்ததும் விலையைக் கூட் டுவார்கள். இதுக்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை! ஆரம்பத்தில் டிமாண்டை அதிகரிக்க செய்து பின்னர் சப்ளை செய்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மேலேக் கூறப்படும் மற்ற பிராண்டுகள் தெருமுனை அண்ணாச்சி கடைல மட்டுமே கிடைக்கும். அங்கும் என்னண்ணே ‘அந்த’ பிராண்ட் பருப்பு இல்லையா என்று கேட்க, அவரும் அதை வாங்கி வைப்பார். இப்படி கைமாறி MRP கூடி ஒரு நல்ல கணிசமான விலையில் வந்து நிற்கும்.

அடுத்ததாக பக்கத்து கடைகளில் மாதாந்திர சாமான் வாங்கும் போது நமது தேவைக்கு மட்டுமே வாங்குவோம். இது போன்ற சூப்பர் மார்கெட்டில் காட்சி(display) சலுகை, இலவசம் என்று நமது பட்ஜட் கணிசமாகக் கூடும். மாத செலவு இரண்டாயிரம் ஆகுமிடத்தில் கூடுதலாக 500லிருந்து 1000வரை கூடும். நகர் புறத்தில் பணமிருப்பவனுக்கு பிரச்சினையில்லை. ஆனால் வருமானம் குறைந்த பகுதிகளில் இந்த நுகர்வோர் கலாச்சாரம் மறைமுக சமுதாய அழுத்தத்தை (social pressure)ஏற்படுத்தும். அதனால என்ன என்கிறீர்களா? ஒன்றுமில்லை! ஊழல், லஞ்சம், ஏமாற்று, கொள்ளை என்ற சமுதாய சீரழிவுகளுக்கு இதுதான் முதல்படி. சும்மா அண்ணா தாத்தாவிற்கு பின்னாடி விளக்கு புடிச்சுகிட்டு நின்னா மட்டும் போதாது.

3. ஏமாற்று, கலப்படம்இதுவும் சேம் பிளட். இடம் வேற. அண்ணாச்சியும், அப்புச்சியும் எடை குறைப்பு செய்வாங்க. தரமற்ற பொருளைக் கொடுப்பாங்க. சரிதான். அதுக்காக ரிலையன்ஸிலும், மோரிலும் அம்பானிகளும், பிர்லாக்களும் ‘இந்திய மக்கள் நல்லா இருக்கனும்ன்னு’ அவுங்களே உட்கார்ந்து இரவு பகலா தரம், எடையெல்லாம் பார்த்து பண்ணுவாங்க நினைக்கிற அளவுக்கு நாம முட்டாள் கிடையாதுன்னு அவுங்களுக்கு தெரியாம இருக்கலாம். நமக்கு தெரியும்ல்ல.

500 கிராம் பேக்கிங்ல விலையென்னவோ 500கிராமுக்குதான் இருக்கும் ஆனா எடை 450 கிராம்தான் இருக்கும் (net wight 500g after packing இதான் அந்த உள்குத்து ). பருப்பு, எண்ணெய்னு இல்ல சோப்பு கூட அப்படித்தான். தரத்திலும் பத்து பாக்கெட்டுக்கு மூன்று பாக்கெட் மோசமாக இருக்கும்.என்ன அண்ணாச்சி கிட்ட நேரடியா சண்டை போடலாம். “என்னங்க இவ்வளவு நாளா உங்ககிட்ட வாங்கி கிட்டு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!” கடைக்காரரும் டென்ஷன் ஆவார் கஸ்டமர் போய்டக் கூடாதுன்னு. சூப்பர் மார்கெட்ல நாம கேட்கமாட்டோம். அப்படியே கொஞ்சம் சொரணை வந்து போய் கேட்டாலும், ஒவ்வொருத்தனும் இன்னொருத்தன கைநீட்டுவான். கடைசியா மேனேஜர்ன்னு ஒருத்தர் டையும், சிரிப்புமா வந்து ஹெட்ஆபீஸ் பாம்பேல இருக்கு. நாங்க இன்ஃபார்ம் பன்றோம்! நீங்களும் ஒரு மெயில் அனுப்பிடுங்க என்று கூறிவிட்டு அதோடு மறந்து விடுவார். இந்த ஆட்களை டென்ஷனாக்க கனவிலும் நினைக்க முடியாது. காறி துப்பினாலும். துடைச்சுகிட்டு சிரிச்சுக்கிட்டே போறளவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டிருக்கும்! இதுக்கு பேர்தான் சர்வைவல். மறைமுகமாக அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் நாளடைவில் தரம், கண்காணிப்பு எல்லாவற்றையும் கண்துடைப்பாகவே மாற்றிவிடுவார்கள்.

4. சீனா உட்பட பெரும்பாலும் எல்லா நாடுகளும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கின்றன.

உண்மை. ஆனால் அதே சமயம் அமெரிக்காவும் சீனாவும் தான் அன்னிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் முதலிரண்டு நாடுகள்.எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே. அதுவும் அன்னிய முதலீடு என்னும்போது ஐயத்திற்கு சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே.

அதிலும் அன்னிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டை திரும்பப் பெறுவதில் நீண்டகால நடைமுறைக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவுகளுக்கு மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்பிற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப்போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக முதலீட்டின் அளவு அதிகரிப்பதை தமது சாதனையாக முன்னிறுத்துகின்றது.தற்போது அன்னிய முதலீட்டிற்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கிடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அனுமதி பெறும் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டிருக்கின்றன. அளவுக்கு அதிகமான வரிசலுகைகளும். நேற்று அளிக்கப்பட்ட ஒப்புதலின்படி இனி ரூ.1200 கோடிக்கு மேல் அன்னிய முதலீடு செய்யப்படும் திட்டங்கள் மட்டும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி ரூ.1200 கோடிக்குள் உள்ள திட்டங்கள் நிதியமைச்சரால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும். இனி அடிக்கடி நிதியமைச்சக ஊழல் விவாதங்களை பார்லிமெண்டில் கேட்டு நமது கருத்துக்களை சீரியஸாகவோ இல்லை காமெடியாகவோ பதிவு செய்யலாம். மேலும் ஒரு நாட்டு மக்களின் நலனையும், நாட்டின் வருவாயையும் கணக்கில் வைக்க வேண்டிய மிக முக்கியமான மின் உற்பத்தி, மருந்துப்பொருட்கள் தயாரிப்பு, சுற்றுலாத்துறை போன்ற மிக முக்கியமான துறைகளில் நூறு சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால் , நமது நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு தேவையான வருமானம் வெளிநாடுகளுக்கு செல்லவும் தனி மனிதர்களின் கருப்புபணம் அதிகமாவதற்கும் இது எளிதாக வழிவகுக்கும்!

சீனா உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 27% பெற்றிருந்தாலும் இந்தியா அளவிற்கு படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ளவில்லை. சீனா அன்னிய முதலீட்டில் கிடைக்கும் லாபத்தில் தங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. சீனாவின் கணக்குப்படி சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் சதவீதம் 1981 ஆம் ஆண்டு 53%. அது 2005-ஆம் ஆண்டு வெறும் 2.5 சதவீதம்தான். சீனா வாங்கி வைத்திருக்கும் அமெரிக்காவின் கருவூல கடன் பத்திரங்கள்களின் (Treasury Bills) மதிப்பு கிட்டத்தட்ட $1 Trillion. இதன் மூலம் அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சு வார்த்தைகளின்போது அமெரிக்காவின்மீது சீனாவால் கடுமையான் அழுத்தம் கொடுக்க முடியும். அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. அமெரிக்கா அதன் உள்விவகாரங்களிலோ, திபெத் விஷயத்திலோ மூக்கை நுழைத்தால் ‘வெளியே போ’ என்று முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடும்.


இங்கோ வணிகம், அரசியல் நல்லுறவு, நாட்டின் உள்விவகாரம் இவற்றை பிரித்துப் பார்க்கும் அறிவு கூட இல்லை. ஏற்கனவே பேட்ண்ட் ரைட், அணு சக்தி ஒப்பந்தம், காலாவதியான அல்லது ஆபத்தான மருந்து மற்றும் ஊரங்கள் இறக்குமதி என்று நம்மை அடகு வைத்துவிட்டார்கள். இப்போது இந்த முடிவால் மொத்தமாக விற்றுவிடுவார்கள்.


1600 ல் வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து நமது கோவணம் வரை உருவியதை அவர்கள் மறக்கலாம். நாம்?!


( நன்றி cpi(m) agrarian crisis, Dr. குருமூர்த்தி, எகனாமிக் & பொலிட்டிக்கல் நியூஸஸ்)
.

புதன், 23 நவம்பர், 2011

சௌந்தரவல்லி

பெயருக்கேற்றவாறே ஆளும் அறிவும், ஆளுமையுமாக சௌந்திரமானவர். எனது எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு காலங்களின் வரலாற்று ஆசிரியை.

அந்நாளில் சூளைமேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறிலிருந்து எட்டு வகுப்புகள் வரை மரத்தடியில்தான். ஒன்பதாம் வகுப்புக்கு பில்டிங்குகளுக்கு ப்ரமோஷன் கிட்டும்! அந்த மரத்தடி வகுப்புகள் எனக்கு மிகப் பிடித்தவை! காற்றோட்டமும், பறவைகளின் சங்கீதமுமாக ரம்யமாக இருக்கும். ஆனால் மதிய உணவுக்கு பிறகு உறக்கம் வராமல் ஆசிரியரையும், கரும்பலகையையும் விடாது நோக்குவது சவாலான விஷயம்! மதிய உணவுக்கு பிறகு முதல் பிரியடீற்கு பெரும்பாலும் வரும் சந்தானலக்ஷ்மி டீச்சர் எங்களை வரிசையாக எழுந்து புத்தகத்தை பத்தி, பத்தியாக வாசிக்க சொல்லிவிட்டு, ஒரு கை உடைந்த நாற்காலியில் சம்மணம் போட்டு அமர்ந்து இடது கையை மேசை மேல் வைத்து தலையைத் தாங்கி, புத்தகத்தை விரித்து வைத்த படியே உறங்குவார்! தூரத்திலிருக்கும் ஹெட்மிஸ்டர்ஸ் அறையிலிருந்து இங்கு பார்த்தால் வகுப்பு முறையாக நடப்பது தெரியும்! பள்ளியில் எப்போதும் காலை வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் இவைகள்தான். காலையின் கடைசி மற்றும் மதிய உணவுக்கு பிறகே தமிழ், வரலாறு, புவியியல் வகுப்புகள்! ஒரு வேளை இந்த பாடங்களுக்கு மாணவர்கள் சோர்ந்திருந்தாலோ அல்லது உறங்கிவிட்டாலோ நாட்டிற்கு பெரிய நட்டமில்லை என்று அரசும், ஆசிரியப் பெருந்தகைகளும் முடிவு செய்திருக்கக்கூடும்!
காலை ப்ரேயரின் போது எப்படி இருப்பாரோ அதே எனர்ஜியுடன் மாலை வரை இருப்பார் சௌந்திரவல்லி டீச்சர். சாராசரி உயரம், மஞ்சள் பூசிய முகம் , கோடாலி முடிச்சுடன் கூடிய தளர்வான கூந்தல், அகலமான கண்ணாடி. சற்றே தடிமனான உடல்வாகு. எப்போதும் கையை வீசி வேகமாக நடப்பார். ஒரு அடர்ந்த கரும்பச்சை டிவிஸ்50யில் தான் பள்ளிக்கு வருவார்.

சைலன்ஸ்! என்று சப்தமிட்டபடி வரும் ஆசிரியர்களுக்கு மத்தியில் குட்மார்னிங்/குட்ஆஃப்டர்னூன், இன்றைக்கு என்ன நியூஸ்ப்பா?! என்றபடிதான் வருவார். கடைசி வரிசை மாணவர்கள் வரை யாராக இருந்தாலும் பெயர் சொல்லிதான் அழைப்பார். மையமாக கையை நீட்டி, ‘நீ சொல்லு’ என்கிற வழக்கம் கிடையாது. எருமை, சனி, தடிமாடு, சோறுதானே சாப்பிடுற? போன்ற ஆசிரியர்களின் ஆதர்ச வார்த்தைகள் எதுவும் அவர் வாயிலிருந்து கேட்டது கிடையாது. இவை அனைத்தையும் விட அரசு பள்ளிகளில் இல்லாத வழக்கம் ஒன்றை கொண்டிருந்தார். அது! வாங்க, சொல்லுங்க! என்ற விளி. அன்னைமேரியை கண்டிக்கும் போது கூட, உங்களால மொத்த க்ளாஸும் டிஸ்டர்ப் ஆகுது. புரிஞ்சுக்கங்க மேரி! என்று மாணவர்களை மரியாதையாக அழைக்கும் பண்பு. இதன் காரணமாக ஹெட்மிஸ்டர் சுசீலாவிலிருந்து, பி.டி சந்திரா வரை ஆசிரிய குலங்கள் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் அது, இது, சனியன் என்று சகட்டுமேனிக்கு விளிக்கும் அன்னைமேரி கூட ‘ஹிஸ்டரி டீச்சர்’ சொன்னாங்க என்றுதான் கூறுவாள்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பதை நம்புபவர். பாடங்களோடு அன்றைய முக்கிய செய்திகளையும் பகிர்ந்து கொள்வார். தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். தமிழ் செய்தித்தாள் படிக்கும் போது ஆங்கில செய்தித்தாள்களையும் படித்தால் ஆங்கிலம் கற்க எளிதாக இருக்கும் என்று குறிப்பிடுவார்.

முதல் ராங்க் எடுக்கும் சாந்தியும், பாடங்களை வெறுக்கும் அன்னைமேரியும் “இவுங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா ஏதாவது சம்பளம் தர்றாங்களா? ‘வந்தமா, பாடம் நடத்தினோமான்னு இல்லாம’ எதுக்கு தேவையில்லாம படுத்துறாங்க? என்று ஒருசேர அலுத்துக் கொள்வார்கள்! இவரது வகுப்பு என்றால் இரண்டு கப் பூஸ்ட் எக்ஸ்ட்ராவாக குடித்த எஃபக்டில் திரிவோம் நான், ஸரீனா, வெங்கட்ரமணி மூவரும். சித்ரஹார், ஒலியும்ஒளியும், சனிக்கிழமை ஹிந்திப்படங்கள், கிசுகிசுக்கள் தாண்டி புத்தகங்கள், ஒவியம் கிரிக்கெட், அரசியல் இவைகள் இணைத்திருந்தது எங்களை. ஸரீனா அற்புதமாக வரைவாள். விளையாட்டிலும் கெட்டி.

“கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்”, “1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது” என்று செய்தி வாசிக்கும் வேலையை செய்யமாட்டார் டீச்சர்.
கொலம்பஸ் கண்டுபிடிப்பு மட்டுமன்றி அதன் பின் இருந்த பழங்குடி மக்கள் மீதான வன்முறை, அடிமைகளாக பிடிக்கப்பட்ட மக்கள் என்று விரியும் அந்த வரலாறு. அன்றைய கால கட்டத்தில் (அப்போது மட்டுமல்ல எப்போதுமே) ஆசிரியர்கள் பேச விரும்பாத விஷயங்களை பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரையிலான அனைத்து விஷயங்களையும் தொட்டு வைப்பார் கருத்து திணிப்புகள் இன்றி. எந்த நாடாக இருந்தாலும் எந்தத் துறையாக இருந்தாலும் தனி நபர் துதி என்பது ஆபத்தான, அசிங்கமான விஷயம் என்று வலியுறுத்துவார்.

இந்த விஷயத்தில் ராஜீவ் காந்திக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது அதி தீவிர ரசிகையான வெங்கட்ரமணியின் அழுத்தமான நம்பிக்கை. ‘அவர் பேச்சை கேட்டிருக்கியா? வரிக்கு வரி இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தே இருக்கும்’. அவர் மாதிரி ஒருத்தர் இந்தியாவிற்கு கிடைத்தது நாம செஞ்ச புண்ணியம் என்பாள். அனுதினமும் நடந்து கொண்டிருந்த இந்திய முன்னேற்றத்தில் சிறிய தடை ஏற்பட்டாலும், ராஜீவ் ஏதேனும் தவறான முடிவுக்கு வந்து விடுவாரோ என்ற பதட்டத்துடன் இருப்பதுபோல் தோன்றும்.
அந்த சமயங்களில், 'இந்தியாவின் முன்னேற்றம் ஒரு மலை உச்சியில் இருக்கும் ஜோதி போலவும், ராஜீவ் காந்தி தனியொரு ஆளாக மொத்த இந்தியாவையும் ஒரு கயிற்றில் கட்டி அந்த ஜோதியை நோக்கி அழைத்து செல்வது போலவும் கற்பனை செய்து பார்ப்பேன். சிரித்தால் கோபமாகி விடுவாள். தற்போதைய இந்தியாவிற்கு தேவை ராஜீவ்தான் என்பாள். ஸரீனா இடையில் புகுந்து ராஜீவ் காந்திக்கு அனுபவம் போதாது, கலைஞர் கூட இருந்தால் இந்தியா எங்கோ சென்றுவிடும் என்பாள். நானோ, என்னை மிகவும் கவர்ந்த, நாட்டில் ரேஷன் அமலில் இருந்த காலத்தில் இரண்டு ஓட்ஸ் ரொட்டிகளை தனக்கு கூடுதலாக தந்த உதவியாளரை கடிந்து கொண்ட தோழர் லெனின் கதையை 108வது முறையாக கூறுவேன்! ஸரீனா என்னை விநோதமாக பார்த்து, இறந்து போன ரஷ்யாவின் லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கடிப்பாள். நான் தலைமையைப் பற்றி பேசுகிறேன் என்றும், நாங்கள் இந்திய முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறோம் என்றும் அவரவர்க்கு தெரிந்ததை தொண்டை நரம்பு புடைக்க அரசியல் என்று கத்திக் கொண்டு இருப்போம். மேரி அல்லது வசந்தி இடையில் புகுந்து “இப்ப நிறுத்துலேன்னா மென்னிய திருகிடுவேன். டீச்சர் இம்சை போதாதுன்னு இதுங்க வேற” என்பார்கள். உருவத்தில் அவர்களைவிட சிறியவர்களாக இருந்ததாலும், மென்னியை பலி கொடுக்கும் அளவிற்கு எங்கள் தேசப்பற்று வளர்ச்சி அடையாததாலும் எங்கள் சபை உடனடியாக கலைந்துவிடும்.

பாடங்கள் மட்டுமல்லாது எங்களது குடிநீர், கழிப்பறை தேவைகளுக்காகவும் பேசிவந்தார் டீச்சர். எங்களது குடிநீர் பிரச்சனை கோமல் சுவாமிநாதனுடைய நாடகத்தைப் போன்றே துயரமிக்கது. பள்ளியில், கட்டி உடைச்சாங்களா இல்ல உடைச்சு கட்னாங்களா என்று சந்தேகம் வரும்படியான டேங்க் ஒன்று உண்டு. அதில் மரக்கட்டையால் அடைக்கப்பட்டு இரு இரும்பு குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதாவது தண்ணீர் வந்தால் வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் அதன் மேல் துணியை வேறு கட்டி வைத்திருப்பார்கள்! ஆகவே தண்ணீர் கொண்டு வந்தேயாக வேண்டும். அதிக புத்கங்களின் சுமை காரணமாக சிறிய தண்ணீர் பாட்டில்களே கொண்டு வருவோம். அதை இயேசுவின் திராட்சை ரசமாக பாவித்து சொட்டு சொட்டாகக் குடித்தாலும் பெரும்பாலும் மதிய உணவிற்கு முன்பே தீர்ந்துவிடும். அப்படியே மீந்தாலும் "மரந்தடுக்கி விழுந்தவன மாடேறி மிதிச்ச கதையா" சில ‘தில்’ சொர்ணாக்காக்கள் பிடுங்கி விடுவார்கள். இதற்காக தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கட்டி தோற்ற அவர் ஒரு நூதன ஏற்பாட்டை செய்தார். சில ஆசிரியைகளை உடன் அழைத்துக் கொண்டு, பள்ளியை ஒட்டி இடப்புறமிருந்த SBIஊழியர்கள் குடியிருப்புக்கும் மற்றும் சில வீடுகளுக்கும் சென்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டார். ஆசிரியர்களே நேரில் வந்து கேட்டதால் தட்டமுடியாமல் மதிய வேளைகளில் வாசலில் குடமும், இரண்டு ப்ளாஸ்டிக் டம்பளர்களையும் வைத்து உதவினார்கள். மேலும் ஆசிரியர்கள், வசதியுள்ள மாணவிகளிடமும் நாப்கின்களை சேகரித்து, ஸ்போர்ட்ஸ் ரூமில் வைத்து, எதிர்பாராமல் ஏற்படும் மாதந்திர தொந்தரவுகளுக்காக மாணவிகளுக்கு உதவிய ஒரே ஒரு ஆசிரியர் இவர்தான். இப்படியாக வகுப்பறையோடு நின்றுவிடாமல் வரலாறுகளை வெளியிலும் தேட தூண்டிய, தனது தொழிலையும் மாணவர்களையும் ஆத்மார்த்தமாக நேசித்த சௌந்தரவல்லி டீச்சரை நாங்கள் மிகவும் நேசித்தோம்.

வெள்ளி, 27 மே, 2011

சமச்சீர் கல்வி என்னும் மாயை

சமச்சீர் கல்வி கடந்த பத்து நாட்களாக எல்லோரிடமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் என் பங்கிற்கு நானும். எதிர்ப்பு அல்லது ஆதரவு என்ற இரு நிலைப்பாடுகளையே பார்ப்பதனால் எழுதத் தோன்றியது.

முதலாவது திமுக அரசு ஆட்சிமுடியும் தருவாயில் அவசரமாக காசு பார்க்க நினைத்ததன் விளைவுதான் இந்த திட்டம்.தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும், எந்த திட்டமானாலும், அதில் காசு, கமிஷன், லஞ்சம், வேண்டியவர்களுக்கு ஆர்டர், மறைமுகப் பலன் இவையெல்லாம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.கழக கண்மணிகள் இந்த ஏப்ரல், மே மாதங்களில் அச்சகங்களை ஆரம்பித்து பின் மூடிவிடுவர். ஆசிரியர்கள் குழு அமைத்தலில் தொடங்கி புத்தகங்களை அச்சடிக்க ஆர்டர்கள் கொடுப்பதில், அச்சிட்ட புத்தகங்களை விநியோகிக்க, விற்க என எல்லா நிலையிலும் காசு பார்த்துவிடுவர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஊழல் அவர்களிடையே (அதிமுக,திமுக) பிரசித்திப் பெற்றது.அதேபோல் ஒருகழகத்தால் ஆரம்பிக்கப்படும் திட்டத்தை இன்னொரு கழகம் அப்படியே செயல்படுத்த இயலாது. பின் அடுத்த தேர்தலுக்கு எதை சொல்லி ஓட்டு கேட்பதாம்?
இதில் கலைஞர் குடும்பசரிதப் புகழ், கண்களை உறுத்தும் எழுத்துப்பிழைகள் வேறு. தவறான ஒன்றை கொடுப்பதற்கு பதில் கொடுக்காமலே இருந்து விடலாம்.
ராஜசேகர ரெட்டி தொடங்கிய விவசாயிகளின் காப்பீடு திட்டம் தான் தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுதிட்டம். ஆனால் ரா.ரெட்டி அவர் பெயரை அந்த திட்டத்திற்கு சூட்டவில்லை. கருணாநிதி எந்த திட்டத்தையும் மக்கள் நலனுக்காக மண்டையை உடைத்து கண்டுபிடிக்கவில்லை. ஓட்டுக்காக அவர் ஆரம்பிப்பார், நோட்டுக்காக குடும்பத்தினர் செயலாக்குவார்கள். கழகங்களின் ஊழல்களும் அநாகரீக அரசியலும் எழுதி முடிக்க முடியா காவியங்கள்.

நாம் விஷயத்திற்கு வருவோம்.

முதலில் மெட்ரிக்குலேஷன் எனும் படிப்பு முறையை ஒரு பாடத்திட்டமாக மாற்றிய புண்ணியவான்கள் யாரோ தெரியாது!12 வருட பள்ளி படிப்பு (அதாவது 5 வயது முதல் 16 வயது வரை) படித்தப் பின்னரே கல்லூரி படிப்புக்கு தகுதியானவர்கள் என்று அளிக்கப்படும் சான்றிதழ்தான் மெட்ரிக்குலேட். இது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். நமது நாட்டில் பத்து வருட பள்ளிபடிப்பு (6 வயது முதல் 15வரையிலான) முடிந்தவுடன், பியூசி (pre University degree) இரண்டு வருடம் படித்த பிறகே இளங்கலை படிப்புக்கு தகுதி பெறுவர். அதாவது மேற்கத்திய நாடுகளில் 12+3(4or5).
இந்தியாவில் 10+2+3(4 or 5) (இந்த 4,5 என்பது பொறியியல் &மருத்துவம்) பின்னர் பியூசி +1,+2 என்று மாற்றம் செய்யப்பட்டு பள்ளிகளிலேயே படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. உண்மையில்
மற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் பொதுவான அதாவது (நேஷனல்) தேசிய பாடத்திட்டம் என்று மட்டுமே இருக்கும். உலக அளவில் நம்முடையது இந்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ). நம்மளவில் மத்திய பாடத்திட்டம், மாநில பாடத்திட்டம் என்றுதான் உள்ளது. காரணம் மற்ற நாடுகளில் இல்லாத பண்மொழி கலாச்சாரம்.

சிபிஎஸ்இ (மத்திய கல்வி) மற்றும் எஸ்பிஇ (மாநிலக்கல்வி) இரண்டையும் கலந்த ஒரு ஜல்லியடி பாடத்திட்டம்தான் மெட்ரிக்குலேஷன் என்பது. மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டங்கள் உயர்ந்தது என்ற மாயையை உருவாக்கி காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே. தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி தரத்தின் பிரச்சனை பாடங்களில் அல்ல. படிப்பிக்கும் முறைகளில்தான். பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் புவியியல் இவற்றின் பாடத்திட்டங்கள் சமமாகத்தான் இருக்கின்றன. படிக்கும் முறையிலும் எழுதும் முறையிலும்தான் வித்தியாசப்படுகின்றன. மெட்ரிக்குலேஷனைப் பொறுத்தவரையில் பாடங்களில் எழுதும் தன்மை அதிகம். ஒரு பாடம் நடத்தப்பட்டால் கேள்வி பதில்களை க்ளாஸ் வொர்க் எனப்படும் பள்ளி நோட்டில் ஒரு முறையும், வீட்டுப்பாட நோட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுத வேண்டும். அதைத் தவிர வொர்க்புக் எனும் பயிற்சி புத்தகம். ஒரு ஆங்கில இலக்கணத்திற்கு மூன்று புத்தகங்கள் வெவ்வேறு பெயர்களில். இங்கு அறிவியல் லேப்கள், கம்ப்யூட்டர் லேப்கள் இருக்கிற மாதிரி, ஆனா இருக்காது. எனக்கு தெரிந்து மெட்ரிக்குலேஷன் மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலங்கள் கிடையாது. அல்லது நூலகம் என்ற பெயரில் பள்ளிகளில் இரண்டு அலமாரிகளில் சிறுவர் புத்தங்கள் அடுக்கிவைக்கப்பட்டு, குழந்தைகள் கண்களில் படாத வண்ணம் பராமரிப்பார்கள். அரசுப் பள்ளிகளிலாவது விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நேரம் ஒதுக்குவார்கள். இந்த தனியார் பள்ளிகளில் அதுவும் கிடையாது இடமிருந்தால்தானே அதைப் பற்றி யோசிக்க? ஆனால் லைப்ரெரி,லேப் மற்றும் ஸ்போர்ட்ஸ் மெயின்டனன்ஸ் ஃபீஸ் கண்டிப்பாக உண்டு.லைப்ரெரி,லேப் ஃபீஸ் வாங்குகிறீர்களே, அவற்றை குழந்தைகள் கண்ணில் கூட காட்டமாட்டேன் என்கிறீர்களே என்று எந்தப் பெற்றோரும் கேட்பதில்லை. ஏனெனில் நமது எண்ணமெல்லாம் அர்ஜுனன் காண்டிபக்குறியாக தொண்ணூற்றி ஐந்து சதவிகித மார்க்கை நோக்கி நிலைகொண்டு விட்டதே! அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியப் பெருந்தகைகளைக் காட்டிலும் கைடு, நோட்ஸ் என்று அழைக்கப்படும் சாதனங்களின் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருப்பார்கள். மெட்ரிக்குலேஷனில் அந்தத் தொல்லை இல்லை. ஏனெனில் பள்ளிகளே அந்த நோட்ஸ்களை வாங்கி வைத்துவிடும் ஆசிரியர்கள் அந்த நோட்ஸை போர்டில் எழுதிப் போட்டு விடுவார்கள். இரண்டிலும் மாணவர்களின் புரிதல்கள் பிரச்சனை இல்லை. அவரவர் மனப்பாடத்திறனுக்கு ஏற்றபடி தேர்வுத் தாளில் கக்க வேண்டும்.


மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ எதுவாக இருந்தாலும், நல்ல முறையில் கற்பிக்கும் பள்ளிகளில் (இவைகளின் கட்டணம் மிக அதிகம்). வீட்டுப் பாடங்கள் என்பது படிப்பதும் அது சம்பந்தமான செயல்தயாரிப்புகளும்தான். உதாரணமாக மேல்தகவல்கள் சேகரிப்பு, சார்ட் தயாரிப்பது, படங்கள் வரைவது, அடுத்தநாள் பள்ளியில் அதைப்பற்றி விவாதிப்பது என்று இருக்கும். சோதனை செய்முறைகளை செயல்வடிவில் காண்பிப்பார்கள். கம்ப்யூட்டர், லைப்ரெரி, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் செயல்படுத்துவார்கள். ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அப்டேட் செய்யப்படுவார்கள். குழந்தைகளுக்கு மருத்துவ சோதனைகளும் செய்யப்படும். இதுபோல் நடத்தும் போது செலவு அதிகம் என்பது அவர்களது வாதம்.

இது மாணவர்களை ஒப்பீட்டு பார்த்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல பள்ளியில் (நல்ல என்பது படிப்பிக்கும் முறையில்) ஸ்டேட்போர்டில் படிக்கும் ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவுத் திறன் மோசமாக நடத்தப்படும் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவனின் அறிவுத்திறனை விட நன்றாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளும், மோசமான மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் தரத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எழுத்து பிழையின்றி எழுத (தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும்) இவர்களுக்கு இயலாது.

அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சிறப்பாக செயல் படுத்தப்படும் பள்ளிகளும் உண்டு. மெட்ரிக்குலேஷனில் தகுதியற்ற ஆசிரியர்களால் மோசமாக நடத்தப்படும் பள்ளிகளும் உண்டு. பெரும்பாலும் நகர் புறங்களில் சில புகழ் பெற்ற நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக காசு வாங்கிக் கொண்டாலும் சிபிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு இரண்டு பாடத்திட்டங்களையும் கொண்டு தரமாகவே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பணத்தை வாங்கிக் கொண்டு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் தகுதியற்ற ஆசிரியர்களை வைத்துக் கொண்டு குறைந்த முதல் அதிக லாபம் என்று நூறு சதவீதம் லாப நோக்கோடு செயல்படுகின்றன.

சராசரியாக 15லிருந்து 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுமே நல்ல கல்விக்கு அடிப்படை. இங்கு ஒராசியர் பள்ளிகள், இருஆசிரியர் பள்ளிகள், ஆசிரியர் எப்போதாவது வந்துபோகும் பள்ளிகள் என்ற குறைகளே இன்னமும் களையப்படவில்லை.

நம் ஊரில் நிலவும் சில மாயைகள்

வெ‌ளிநாடுக‌ளி‌ல் பள்ளியிலிருந்தே விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கமுடியும்.

அங்கு தேர்வுமுறைகள் கிடையாது அல்லது எளிதானது.

ரேங்க் கிடையாது கிரேடுகள் தான்.

பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக விருப்பப்பட்ட கல்லூரிக்கு சென்று விடலாம் .

நான் கூட எனது இளமை பருவத்தில் அப்படிப்பட்ட புண்ணிய தலங்களில் பிறக்காமல் இந்த பாவப்பட்ட ஊரில் பிறக்க நேர்ந்த கதிகேட்டை நினைந்து நொந்ததுண்டு!

உண்மையில் முதலாளித்துவ பிரிட்டன் அமெரிக்கா தொடங்கி கம்யூனிச பூமியான சீனா வரை
12 வருட வகுப்பு பள்ளிப்பாடத்தில் மொழிபாடம் தொடங்கி அறிவியல், கணிதம், சமூக அறிவியல், கலை, சிட்டிசன் சிப் எனப்படும் அடிப்படை மக்கள் உரிமைப்பாடம் வரை கட்டாயம் படிக்கவேண்டும்.
தேர்வு என்பது மூன்று அல்லது இரண்டு வருடாந்திர(டெர்ம்) தேர்வுகள் உண்டு. ஆனால் வார உள் தேர்வு (இன்டர்னல்) எழுத்துதிறன், வாசிப்பு பேச்சுதிறன், பகுத்து ஆராயும் திறன் (அனலெடிக்கல்), சிறிய ப்ராஜெக்ட்டுகள் அடிப்படையாக கொண்டு இவற்றுடன் எழுத்து தேர்வும் சேர்த்து மதிப்பெண்கள் அளிக்கப்படும். 60+40(100%)

ரேங்க் வரிசை கிடையாது. ஆனால் ABCD என்று கிரேடுகள் உண்டு. இதுவும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கொடுக்கப்படும். A (90-100), B (80-89), C (70-79)இதில் சில மாறுபாடுகள் இருந்தாலும் இதுதான் அடிப்படை. ஆனால் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க்குகள் மாறும். சில நாடுகளில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மார்க் 45/100.

நமது நாட்டில் போன்று மருத்துவம் பொறியியல் மட்டுமன்றி மற்றவகை படிப்புகளுக்கும் அந்தந்த பல்கலைகழகங்களால் நடத்தப்படும் நுழைவு தேர்வை எழுதியே குறிப்பிட்ட பாடபிரிவில் சேர இயலும்.

அனைத்து நாடுகளிலும் (சீனா உட்பட) பள்ளிகள் தனியார் வசம் உண்டு. பள்ளி தொடங்க அங்கு வங்கி கடன்களும் உண்டு. ஆனால் அனுமதி பெறுவதில் சட்டங்கள் கண்டிப்பாகவும் முறையாகவும் இருக்கும். பள்ளிகளின் நிர்வாகக்குழு என்பது நம்மூர் மாதிரி மாமன் மச்சான் சகலைபாடி சபையாக இருக்காது. ஆசிரிய பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதி, பெற்றோர்சங்க நபர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ஆட்சிமன்ற நபர் அடங்கிய குழுதான் நிர்வாகம் செய்யும். கட்டணம் அரசின் வரைமுறைக்கு உட்பட்டுதான் தீர்மானமாகும். கட்டண உயர்வும் பள்ளிகளின் விண்ணப்பத்தில் உள்ள காரணங்கள், பள்ளிகளின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், இவற்றின் மீதான கல்விஅமைச்சக ஆய்வு இவற்றிற்கு பிறகே முடிவு செய்யப்படும்.

வோட்டுப் பொறுக்கும் அரசியல்,
பதவி,புகழ், பொருள் இதற்காக எதையும், யாரையும் விலையாக கொடுக்க தயங்காத மக்கள்
அடுத்தவனைவிட பத்து ரூபாய் கூடுதலாக சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று வழிகாட்டும் பெற்றோர்
என்ற இந்த சுயநலமிக்க சமுதாயத்தில்

தேய்ந்த துடைப்பத்துக்கு குஞ்சம் பட்டிலிருந்தால் என்ன? சணலில் இருந்தால் என்ன?

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஔவையார்

(நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன,மேடாக இருந்தால் என்ன, எந்த இடத்தில் ஆள்பவர் நல்லவராக உள்ளனரோ அங்கு நிலமே நீ நல்லமுறையில் விளங்குவாய்!)

செவ்வாய், 17 மே, 2011

தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஒட்டி பலரும் பல விஷயங்களை சொல்லும் நிலையில், எனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.தமிழ்நாடு: தமிழக முடிவுகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த முடிவுதான். இது ஜெயலலிதாவின் வெற்றி என்று சொல்ல இயலாது. ஒரு பொறுப்பான எதிர் கட்சியாக செயல்படாது தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்தித்துள்ளார். அவ்வப்போது அவர் சார்பாக சில அறிக்கைகள் வெளிவருவதுடன் சரி. வேறு சரியான மாற்றுகள் இல்லாததாலும், ஆளும் கட்சி மீதான மக்களின் அதீத வெறுப்பின் காரணமாகவுமே இந்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. திமுகவிற்கு எதிர்கட்சி என்ற அந்தஸ்து பறிபோனது இதுவே முதல்முறை. உபயம்: விஜயகாந்த். நல்லவேளை பேரங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. பாமக டாக்டரின் சித்து வேலைகளுக்கு இடமில்லை. “மக்கள் எனக்கு ஒய்வளித்து உள்ளார்கள்”. சமீபத்தில் வந்த கருணாநிதியின் கருத்துக்களிலேயே இதுதான் உண்மையில் மனதின் அடியில் இருந்து வெளிப்பட்ட கருத்து என நினைக்கிறேன். கை மீறி போன குடும்ப உள்ளடிகளால் நொந்துபோன முதியவரின் ஆசுவாசம். குடும்பம் மட்டுமல்லாது நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று அடிமட்டம் வரை பரவியிருந்த எத்தெச்சதிகாரம், நிர்வாக சீர்கேடு, ஊழல் என்று சகிக்கமுடியாத அளவிற்கு போய்விட்டது. அரசின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. சரி செய்ய அவகாசம் வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கூற்று மறுக்க முடியாத ஒன்று. ஆனால் மக்கள், ஊடகங்கள், சொந்தக் கட்சிகாரர்கள் மட்டுமன்றி அமைச்சர்களும், அதிகாரிகளும்கூட நினைத்தவுடன் சந்திக்க இயலாத நிலையும் உடன் பிறவா சகோதரியின் பாசமும் தொடர்ந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

புதுவை: செல்வாக்கும், மக்கள் எளிதில் சந்திக்க கூடியவருமான ரெங்கசாமியை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் தனக்குதானே வைத்துக் கொண்ட ஆப்பு. ஆனால் காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் ஐக்கியமாகி விடுவதை பார்த்திருக்கிறோம்.கேரளா: LDF ஐந்து வருடம் UDF ஐந்து வருடம் என்பதுதான் கேரளாவின் பதிவு(வழக்கம்) . ஆனால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கம்யூனிஸ்ட்டுகள் சமபலத்துடன் இருப்பது. வெறும் நான்கு ஸீட்களே வித்தியாசம். காரணம் அச்சுதானந்தன். சொந்தக்கட்சி என்று மட்டுமில்லாமல் எதிர்கட்சியிலும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்போதும் முதலமைச்சர் ஆவதற்கு தள்ளுமுள்ளுகள் நடைபெறும். முதலமைச்சர் வேட்பாளராக உம்மன்சாண்டி அறிவிக்கப்பட்டாலும், இந்த முறை வித்தியாசமாக நான் வரலை, நீ வரலை என்பதாக இருக்கிறதாம். ஏனெனில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்பதால்.மேற்குவங்கம்: அதிர்ச்சி என்று ஊடகங்கள் வருணித்தாலும், கடந்த சில வருடங்களாகவே உள்ளாட்சி தேர்தல் தொடங்கி இடைத்தேர்தல் வரை சீட்டை மம்தாவிடம் பறிகொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் தோழர்கள்! காரணம் மம்தா தீதியின் அதிரடி அரசியல் மட்டுமல்ல.


1977ல் ஜோதிபாசு தலமையில் மார்க்ஸிஸ்ட் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு எந்த மாநிலமும் செய்யாத நிலசீர்திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் ஏழை விவாசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது. விவசாயம் முக்கிய தொழில். நிலங்கள் சிறிய அளவில் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி தனிமனித தேவைகளை நிறைவு செய்தாலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி பெருகவில்லை. 1948தொடங்கி 1962 வரையிலான சித்தரஞ்சன் தானியங்கி இன்ஜின் தொழிற்சாலை துர்காபூர் எஃகு தொழிற்சாலை தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகியவை தவிர்த்து ஒரு IT கம்பனியும், ஒரு பெட்ரோகெமிக்கல் கம்பெனி மட்டுமே இந்த 34 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டவை.


மாநிலத்தின் செலவு அனைத்தும் அரசினுடையது. ஆனால் அதற்கேற்ற வருமானமில்லை. பொருளாதார ரீதியாக மத்திய அரசை சார்ந்து இருக்கவேண்டிய நிலை மற்றும் அண்டை நாட்டு அகதிகளின் வரவு என்ற பிரச்சனை வேறு.

அரசாங்கத்தை நிர்வகிக்க தொழில் வளர்ச்சி அவசியம் என்று கணக்கிட்டு சில தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தபோது அரசாங்கத்திடம் துண்டு நிலம்கூட இல்லை. அதையெல்லாம்தான் கொடுத்தாயிற்றே. ஆனால் நிலங்களை திரும்ப எடுப்பதில் சிக்கல். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரையில் அரசு சரியான திட்டமும், வழியும் ஏற்படுத்தாமல் அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை.

மற்றபடி இந்த 34 ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றசாட்டு கிடையாது. இந்தியாவின் எந்த பகுதியில் மத கலவரம் ஏற்பட்டாலும் மிகவும் சென்சிடிவான (அருகில் பங்களாதேஷ்) இந்த பகுதியில் ஒரு கலவரமும் ஏற்பட்டது கிடையாது. மேல்மட்டத்திலும் அதற்கு அடுத்த அளவிலும் உள்ள கட்சியின் தலைவர்கள் நேர்மையானவர்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர்கள். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், பஞ்சாயத்து நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் இங்குள்ள வங்காளிகளின் கருத்து.

இதுவரை மம்தா பாணர்ஜி எந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி வென்றாரோ, அதே பிரச்சனைகளை அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இரயில்வே நிர்வாகத்தை சரியாக நடத்த இயலாதவர் ஒரு மாநிலத்தை எங்கனம் நிர்வகிப்பார் என்பதை அம்மாநில மக்களே உணர்ந்து சொல்லட்டும்.

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்


உலகமனைத்தையும் உங்க குடைக்குள் ஸாரி, ஒரே குடைக்குள் கொண்டுவர விரும்பும் ஐயா ஒபாமா, வணக்கமுங்க. நல்லா இருக்கீங்களா? இந்த மீடியாக்கள் வேற அநாவசியமா கேள்வி கேட்டு உங்க BPய ஏத்துறாங்கபோல. உடம்ப பாத்துக்கோங்க. உலகமே உங்கள நம்பித்தானே இருக்கு.

உங்கள பாராட்டவும் அதோட ஒரே ஒரு கோரிக்கையையும் வைக்கவும்தான் அனுப்ப இயலாத இந்த கடிதத்தை எழுதுறேன்.

ஒசாமா இறந்துட்டாரு. உங்கள அசுரன வீழ்த்துன கிருஷ்ண பரமாத்மாவா பார்க்கிறாங்க. நல்லது. ரொம்ப சந்தோஷம். எனக்கும் கொள்கைன்ற பேர்ல அப்பாவி மக்கள் கொல்லப்படுறதுல விருப்பம் இல்லைங்க. தீவிரவாத செயல்களால் கொல்லப்படுகிற பொதுமக்களை போன்றே தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கொல்லப்படுகிற பொதுமக்களின் நிலமையும் என்று நினைக்கிறவங்கள்ல நானும் ஒரு ஆள்.

பாகிஸ்தானில் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தமா புகுந்து தாக்குதல் நடத்துறது நியாயமா? உங்க நாட்டுல மத்தவங்க புகுந்து செஞ்சா ஒத்துக்குவீங்களான்னு? சத்தியமா நான் கேக்கலைங்க, சர்தாரி கேக்கிறாரு. எனக்கு புரியுது. ஐயா என்ன சொல்ல வர்றீங்கன்னா, பாக்.தீவிரவாதிகளை ஆதரிக்கிற நாடு அதனால அவங்க கிட்ட சொன்னா மேட்டர் லீக் ஆகி ஆளு எஸ்கேப்பாகிடுவார்ன்னு. அதுவும் சரிதாங்க.

அந்த காலத்துல ஆப்கானிஸ்தான்ல முஜாகைதின்களுக்கு எதிரா PPDAக்கு ஆதரவா சோவியத் தலையிட்டதால, அதை அழிக்க ஒரு ஆடு(ஒசாமா) வளத்தீங்க. வளர்த்த கிடா உங்க மார்பிலேயே பாயவும் ஆட்டை பிரியாணி போட்டுட்டீங்க. ( மக்கள் வரிப்பணத்துல ஒரு காஸ்ட்லி பிரியாணி!) நீங்க ரொம்ப படிச்சவரு. விவரமானவரு. எனக்கு அவ்வளவெல்லாம் விவரம் கிடையாது. உள்ளூரு மேட்டர விட்டுட்டு, ஊரான் வீட்டு பிரச்சனைல ஆதாயம் பாக்கலாம்னு நினைக்கிறவங்க நாட்டு பொருளாதாரத்துக்கெல்லாம் சங்குதான்னு உங்களுக்கு இன்னுமா தெரியாம இருக்குன்னு நான் கேக்க வரலங்க.

ஒசாமா இறந்த பிறகு நீங்க வேர்ல்ட் டிரேட் சென்டர்க்கு சென்று அஞ்சலி செலுத்தியதை பார்த்தபோது, பழிவாங்கிவிட்டு, அப்பா,அம்மா/நண்பன் சமாதியில் நிற்கும் எங்கள் சினிமா ஹீரோ போன்றே இருந்தது. சிலிர்த்துப் போச்சு.

ஆனால் மும்பை தாக்குதல்ல தொடர்புள்ள ‘டேவிட் ஹெட்லே’ உங்க ஊர்லதான் இருக்காரு. எங்காளுங்க கெஞ்சி கேட்டு விசாரண பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அதே போல் எங்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துபோன போபால் அழிவு .( இரட்டை கோபுர தாக்குதல் மாதிரி இல்லை. பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு, கருவிலுள்ள குழந்தைகளையும் விடாது தொடர்கிறது) அதில் சம்பந்தப்பட்டவர் வாரன் ஆன்டர்சன். நீங்க சொல்ற மாதிரி, மற்ற செயல்களைப் போன்றே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும், அவர் பிளான்ட்ட கையால உடைக்கல. அதனால அவர ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு தெனாவட்டா பதில் சொல்றீங்களே, நியாயமா? என்று கேட்குமளவுக்கு எனக்கெல்லாம் விவரமில்லீங்க. மெத்தப் படிச்ச உங்களுக்கு தெரியாததா?“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
ஐயோவென்று போவான்னு” எங்க ஊர்ல ஒருத்தர் சொல்லியிருக்காரு.

பாருங்க, நான் சொல்ல வந்தத விட்டுட்டு என்னன்னவோ எழுதிகிட்டு இருக்கேன். என்னோட கோரிக்கை என்னன்னா

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒசாமா, ஒசாமான்னு சொல்லி ஒரு பிளாக் & ஒயிட் பாஸ்போர்ட் போட்டாவ மட்டுமே காமிக்கிறாங்க. அஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தா சொந்தக்காரனையே அடையாளம் தெரியமாட்டேங்குது. அவரு மட்டும் அப்படியே இருக்காரேன்னு ஒரு ஆச்சரியம். நேத்திக்கு நீங்க வெளியிட்ட ஒசாம போட்டாக்களிலும் முழுசா கம்பளி போர்த்திக்கிட்டு, முக்காவாசி திரும்பி முதுக காமிச்சுகிட்டு டிவி பார்க்கிறார். அது ஒசாமாவா இல்ல அவரோட சித்தப்பாவான்னு சந்தேகமா இருக்கு அதனால அவரு இறந்துபோன ஒரு போட்டவ காமிச்சுட்டீங்கன்னா உலகத்துல அதர்மம் அழிஞ்சு தர்மம் தல தூக்கிடுச்சுன்னு நாங்களும் எங்க புள்ளகுட்டிகளும் நிம்மதியா தூங்குவோம்.
செய்வீங்களா?

திங்கள், 2 மே, 2011


மின்கம்பியில் வந்தமரும்
சிறு பறவையின் உயிர் துடிப்பு
கரைகிறது நகரத்தின் இரைச்சல்களில்
கருங்காற்றின் வெப்பத்திலுருகும்
புவியை விழுங்கத் துடிக்கிறது
......மலைப் பாம்பை போன்று
சுற்றியிருக்கும் கடல்
அழுத்தங்களுக்கிடையே
மூச்சு திணறும் மரமொன்று
உதிர்க்கிறது தன் கடைசி இலையை
ஆம்/இல்லை என்ற
ஒற்றை நம்பிக்கையில்

வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ்செல்வன் M.A இன்ஜினியர்!

தலைப்பை பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்! சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.

இன்று ஆலமரம் போல் வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பிரபலமான நிகர்நிலைப் பல்கலைகழகம் அது. மற்றவைகளைப் போலவே கூரைக் கொட்டகையில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம்தான் நதிமூலம். அமோக வளம் கொழிக்கும் கல்வித்துறை என்பதால் விரைவிலேயே நல்ல ஏறுமுகம். அந்த நிறுவனம் தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தங்களை தொடங்கிய நேரம். அதில் ஒரு உத்தியோகஸ்தராக சேர்ந்தவர் இவர். எம்.ஏ தத்துவயியல் (அதாங்க பிலாஸஃபி) படித்தவர். அதன் அடையாளமாக முன்தலை பளபளவென்று ஷேவ் செய்தது போல் இருக்கும். பின்னால் உள்ள முடியை லாவகமாக சீவி முன்தலையில் படரவிட்டிருப்பார். அடர்ந்த கருப்புநிறம். முகத்தில் ஒன்றரை இன்ச் பவுடர் இன்றி அவரை பார்த்தவர்கள் மிக சிலரே.விரலில் அவரது இன்ஷியலைத் தாங்கிய செவ்வக மோதிரமும், கழுத்தில் செயினும், மினி பெல்பாட்டம் பேண்ட், பட்டையான கருப்பு பெல்ட், தங்க ஃப்ரேம் உள்ள கூலர் என்று கிராமம்+நகர டிபிக்கல் கலவையாக இருப்பார் . எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார். பக்கத்து வீடு என்றால் எங்கள் இருவர் வீட்டிற்கும் பொதுவான மெயின் வாசல் மற்றும் மொட்டைமாடி.


காலையில் மேக்கப் முடித்து கருப்பு என்ஃபீல்டில் தட,தடவென்று கிளம்பிவிடுவார். உத்தியோகம் சைட் இன்ஜினியர். இன்று போல் அந்நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் துறைவாரியாக பிரித்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் வசதிகள் இல்லாததால், குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த ஆட்களை (அதிலும் நிறுவனரின் சாதிக்காரர்களை) வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இவர் கல்லூரிக் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவரும் நிறுவனரின் இனத்தை சேர்ந்தவர். இவரை அலுவலகம் அனுப்பியது சூப்பரவைசராக. இவர் காட்டிக் கொண்டது இன்ஜினியராக! இவருக்கு கீழ் வேலைப்பார்த்தவர்கள் இவரை இன்ஜினியர் என்றே அழைத்தனர். கட்டுமாணப் பணிகளைப் பொறுத்தவரை இவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை ‘மேஸ்திரிய கேளுங்க. மேஸ்திரிக்கும் இவருக்கும் நல்ல புரிந்துணர்வு! தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வார்.


மேஸ்திரி வராத நாட்களில் குண்டக்க மண்டக்கவென்று ஏதாவது செய்துவிடுவார். மேஸ்திரி அதிகாலையில் வந்து வாசலில் நிற்பார். இன்னா சார், இப்பிடி பண்ணிட்டீங்க? இவர் வாய்ஸை குறைத்து என்ன? என்பார். நேத்து கொத்தனாராண்ட கப்போர்ட காமிச்சு ஜன்னல்னு சொல்லிருக்கீங்க. இல்லையே, அவன் தப்பா புரிஞ்சிருப்பான். இல்ல சார், படத்துல மேக்கால உள்ள ரூமில பீச்சாங்கைப் பக்கமுள்ள சதுக்கம் கப்போர்டு. நீங்க ஜன்னல்னு சொல்லிருக்கீங்க என்பார் தெளிவாக. சரி, சரி பார்த்து செய்ங்க. உங்களமாரி ஒரு வேலையா எனக்கு. ஆயிரம் டென்ஷன்.
எதுல வந்த?
பஸ்லதான் சார்.
இந்தா பத்து ரூபா. சைட்டுக்கு போ. நான் வரேன். அந்த சமயங்களில் நாம் கடந்தோம் என்றால், தலையை உதறிக் கொள்வார். சே! இந்தமாதிரி ஆட்களை வச்சுகிட்டு வேல வாங்கிறது இருக்கே, தலைவலி என்று நம்மிடம் அலுத்துக் கொள்வார். நாம மாடிபடிக்கு பின்னால் நின்று கவனித்ததை அறியாமல். கூடிய விரைவில் ஒரு சிவில் படித்த இளைஞனும் வேலைக்கு சேர்ந்த பிறகு மேஸ்திரியை விலக்கிவிட்டு அவனை சரிகட்டிக் கொண்டிருந்தார்.அதுக்காக அவர் தத்துவத்திலே கரை கண்டவரோ என்று நம்பி.........ப்போய்

ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் பற்றிக் கேட்டால்,

அப்போ படித்தது மறந்திருச்சு. என்பார்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்?
சாய்ஸ்ல விட்டுட்டேன்.

கன்ஃபூசியஸ்?
நிமிர்ந்து கம்பீரமாக சொன்னார். அது சிலபஸ்லையே இல்ல.


எங்கள் வீட்டு சுவற்றில் குடும்பத்தினரின் போட்டோக்களை மாட்டும் வழக்கம் கிடையாது. ஹால் சுவரில் ஒருபுறம் ஆயில் பேஸ்டல் மகாபலிபுர ஒவியம் ஒன்றும், நுழைவாசலுக்கு எதிராக லெனின் ஒவியம் ஒன்றும் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த கண்களின் தீட்சண்யம் மாறாமல் வரையப்பட்ட அந்த ஒவியம் அழகாக இருக்கும். முதன்முதலில் வீட்டுக்குள் நுழைந்த அவர் அந்த ஒவியத்தைக் காட்டி கேட்ட கேள்வி, யாரு உங்க தாத்தாவா? நம்புங்க, லெனின் மேல சத்தியமாக அப்படித்தான் கேட்டார். யார் என்பதோடு நிறுத்தியிருந்தால் கூட ஒகே.
ஆணும், பெண்ணும் சேர்ந்து வந்தால், சிலர், யார் என்றுகூட கேட்காமல் ஹே! யாரு உங்க ஒய்ஃபா/ஹஸ்பெண்டா? என்று நாகரிகமில்லாமல் கேட்பார்களே, அதுபோல் இருந்தது. என் தந்தை டென்ஷனாகி விளக்கினார். ஆனால் அவரோ, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் சென்றுவிட்டார்.


வீட்டைப் பொறுத்தவரை அவரது உறவினர்கள் என்று யாரையும் பார்த்ததில்லை. மனைவியின் உறவினர்கள் மட்டுமே. ஒரு முறை அந்தம்மா அவர்கள் திருமணத்தை ஒரு விபத்து போலவே சித்தரித்தார். கணவரின் வகையறாக்களை, எல்லாம் நாட்டுபுறங்க. நாகரீகம் தெரியாது என்றார். ஏதோ அந்தம்மா ஆக்ஸ்போர்டில் படித்த மாதிரி. அவர் பத்தாவது கோட். கணவரின் ஊர் கிராமம். இவரது ஊர் சற்று பெரிய கிராமம். தந்தை சற்று வசதியானவர். அதைவிட அந்தம்மா முக்கியமாக குறிப்பிடுவது நிறத்தை. அவர்கள் குடும்பத்தில் எல்லொரும் வெள்ளை நிறம். அதில் மிகப் பெருமை. ஆகையால் நம்மவரும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் அவரைப் போல் இல்லாமல், மனைவி போன்று சிவந்தமேனியர்களாக இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி.


அலுவலகத்திலும் நிறுவனர் எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் முகம் மாறாமல் கேட்டுக் கொள்வார். பின்ன, வருமானம் அப்படி! குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களிலேயே இலவசமா இடம் வாங்கி கைக்காசை செலவழிக்காமல் பத்துலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் கட்டியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமாராகப் படித்த குழந்தைகளையும் அதிகம் செலவில்லாமல் பொறியியல் படிக்கவைத்து வேலையும் வாங்கினார். இப்படியாக வீட்டில், அலுவலகத்தில் காமெடியனாகவும் வெளியில் ஹீரோவாகவும் வலம் வந்து பங்களா, கார், பேங்க்பேலன்ஸ், என்று செட்டிலாகிவிட்ட இவர் சமுதாயத்தின் பார்வையில் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரே

எல்லோரும் அறிந்த விஷயம் என்றாலும், எழுத வேண்டும் என்ற உந்துதலில் எழுதியுள்ளேன்!யார் அண்ணா ஹசாரே?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.லோக்பால் பில்

லோக்பால் பில் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.

எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.

42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது

மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.

1.பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
2.விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
3.நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
4.சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
5.ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல், பொது நலனுக்கு ஊறு விளைவித்தல்.
“லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

கர்நாடகம்,மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,பஞ்சாப்,அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை. மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது.ஜன் லோக்பால் பில்

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி) பிரஷாந்த் பூஷன் (உச்ச நீதிமன்ற வக்கீல்) அரவிந்த் கேஜ்ரிவால் (RTI activist) அடங்கிய குழுவால் பரிந்துரைக்கபட்ட இந்த ஜன் லோக்பால் வரைவில்,

1.“லோக்பால்” மத்தியிலும், “லோக்ஆயுக்தா’ அனைத்து மாநிலங்களிலும் செயல்பட வேண்டும்.

2.அரசு மற்றும் அமைச்சர்களின் குறிக்கீடுகள் இன்றி உச்ச நீதிமன்றம் (அல்லது) தேர்தல் ஆனையம் போன்று தனித்த அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.

3.ஊழல்குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை, நிரூபணங்கள் எல்லாம் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புதல் வேண்டும்.

4. விசாரணையின் போது குற்றவாளியால். அரசுக்கு ஏற்படும் செலவுகளை குற்றவாளியிடமிருந்தே (குற்றம் நிரூபணம் ஆனதும்) பெறப்பட வேண்டும்.

5.பொது மக்களுக்கு: அரசு அலுவலகத்தில் பொது மனிதருக்கு செய்ய வேண்டிய பணி குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படாவிடில், குறிப்பிட்ட அதிகாரிக்கு அபராதம் போடப்பட்டு, அந்த தொகை அந்த குறிப்பிட்ட மனிதருக்கு உரியதாகும்.

6.ஆகவே, பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட் தொடங்கி, ரேஷன் கார்டு உட்பட அனைத்து அரசு வேலைகள் குறித்த காலத்திற்குள் முடிக்கபடா,விடில் இங்கு புகார் செய்தால் ஒரு மாத கால அவகாசத்தில் நடவடிக்கை முடிக்கப்படும். இது தொடர்பான ஊழல் புகார்களையும் பதிவு செய்யலாம். இதுபோலவே பொதுவிஷயங்களும். இரண்டாண்டுகாலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டுவிடும்.

7.முக்கியமானது. இதன் குழு உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப் படமாட்டார்கள். இந்த அதிகாரம் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் திட்ட அதிகாரிகள் ஆகியோரை சார்ந்தது. ஆகவே அனைத்து வேலைகளும் வெளிப்படையானவை.

8.இந்த லோக்பால் குழு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டால் அந்த விசாரணையும் வெளிப்படையானது. குற்றம்சாட்டபட்டவர் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்குள் நீக்கப்பெற்று தண்டனை பெறுவார்.

9.ஏற்கனவே இருக்கும் ஊழல் தடுப்பு பிரிவு, சிபிஐ எல்லாம் இந்த லோக்பாலுடன் இணைக்கப்படும்.

10.இது சம்பந்தமான பொதுமக்களின் பாதுகாப்பு பொறுப்பை லோக்பாலே ஏற்றுக்கொள்ளும்.

கேட்பதற்கே நன்றாக இருக்கிறது. நமக்கு நன்றாக இருந்தால், அரசுக்கு நன்றாக இருக்காது என்ற விதிப்படி அரசு இழுக்கிறது.

இது சம்பந்தமாக பேச வேண்டும் என்று இந்தியன் தாத்தா அப்பாயின்மென்ட் கேக்க, ஏப்ரல் 13 வரை பிஸி, பிறகு பார்க்கலாம் என்று பிரதமர் தாத்தா ஆணவத்தோடு சொல்ல உண்ணாவிரதத்தில் இறங்கிவிட்டார் அண்ணா ஹசாரே.

உஷாராக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் மேடையில் ஏறாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

வணங்குகிறேன் அவரை.

.

வியாழன், 24 மார்ச், 2011

அமெரிக்க நாட்டாமையும், அல்லக்கை 'யுஎன்'னும்


காட்சி: லிபிய மீதான போர் பற்றிய ஆலமரத்தடி ஸ்டைல் பஞ்சாயத்து கூடுகிறது. யுஎன் தலைமையில்.


பங்கேற்பாளர்கள்: தலைவர் அமெரிக்கா,பங்காளிகள் பிரிட்டன், பிரான்ஸ்.

பார்வையாளர்கள்: இந்தியா,அராப்லீக்ஸ் மற்றும் சிலர்.

***

யுஎன்: ஆங் எல்லாரும் வந்தாச்சா? அப்புறம்
அவன் வரல,எனக்கு சொல்லலன்னு பேசப்படாது.

அமெரிக்கா: எனக்கு நேரமில்ல, சட்டுபுட்னு பேசி முடிங்க.


கூட்டத்தில் ஒருவர்: ஐயா சீனா,பாக் வரலங்க.

யுஎன்: ஏன்? என்னாச்சு?


கூட்டத்தில் ஒருவர்: அது வந்து அவுங்க இரண்டுபேரும் இந்திய
எல்லைய ஒட்டி பாலம் கட்டிகிட்டு இருக்காங்க.


யுஎன்: ஏம்பா இந்தியா, இதுக்கு நீ ஒன்னும்
சொல்லலையா?


இந்தியா: வழக்கம் போல எல்லாத்துக்கும் மாதிரியேஇதுக்கும்
கவலை தெரிவிச்சுட்டேன்.


அமெரிக்கா: சபாஷ்! எனக்கு உங்கிட்ட பிடிச்சதே
இந்த அப்ரோச்தான்!

யுஎன்: சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம சுத்துபட்டு
ஊர்கள்ல உள்ள தலகட்டுக்கெல்லாம் ஐயாதான்
தலைவரு. அவரு இப்போ லிபிய
தலைவரு சரியில்லன்னு தன் பங்காளிகளோட
சேர்ந்து சண்டைய ஆரம்பிச்சுட்டாரு. அப்போ
உங்ககிட்ட கேக்க நேரமில்லை. ஆனா இப்போ
ஏதோ சரியில்லன்னு முனுமுனுப்பு வருதுன்னு
பேச்சு. அதனால உங்க எல்லாரையும் மதிச்சு
கூப்பிட்டிருக்காரு. நீங்க எல்லாரும் அவர்
பெருந்தன்மைய நெனெச்சு இதுக்கு ஆதரவளிக்கனும்.

இந்தியா & அரபு: அதெப்படிங்க சரியாகும்? அது அவுங்க
உள்ளூரு மேட்டரு, நாம தலையிடுறது சரியாப்படலைங்க.


அமெரிக்கா: அப்பு, சரி, தவறு எல்லாம் எனக்கு தெரியும்!
அந்தாளு சொந்த மக்களையே கொல்றாரு. பார்த்துகிட்டு
இருக்க முடியுமா?

கூட்டத்தில் ஒருவர்: அதனால நீங்களே கொல்றேங்கறீங்களா?

அமெரிக்கா: சண்டைன்னா அப்படித்தான். எங்களுக்கு
நல்லதுன்னா, நாலு இல்ல நாலு லட்சம் பேரக்கூட
கொல்லலாம். தப்பில்ல!
(பின்னனி இசை. டொட்ட டொட்ட டொய்)

கூட்டத்தில் ஒருவர்:ஆனா இதுக்கு முன்னாடி இதே மாதிரி
வேற இரண்டு, மூனு ஊர்ல நடந்தப்ப நீங்க
பேசாமத்தானே இருந்தீங்க. ஏன் இலங்கை
கூட கூட்டம், கூட்டமா கொன்னாரே?

அமெரிக்கா: அபத்தமா பேசாதீங்க. அவுங்க எல்லாம் ஊருக்குள்ள
எப்படி இருக்காங்கன்றத விட என்கிட்ட எப்படி
இருந்தாங்கன்றதுதான் முக்கியம். ஆனா இந்தாளு
என்னைய மதிக்கறது கிடையாது. அதனால இங்க
என்னோட தலையீடு அவசியம். அதோட
இப்போவிட்டா பின்னாடி இந்தமாதிரி சந்தர்ப்பம்
கிடைக்காது! எங்களுக்கு தலையாட்ற ஒரு ஆளை
ஏற்பாடு பண்ணிட்டு நாங்க ஒதுங்கிக்குவோம்.
இதே மாதிரி இன்னும் இரண்டு மூனு பேர் திரியிறாங்க.
அங்கேயும் சந்தர்ப்பத்த எதிர்பார்த்துக்கிட்டுதான்
இருக்கோம்! என்ன சொல்றீங்க?

இந்தியா: எங்களுக்கு விருப்பமில்ல, ஊர்ல எலக்சன் டைம் வேற.
ஏற்கனவே அடி மேல அடி வாங்கி
ஆடிப்போயிருக்கோம்.

அமெரிக்கா: என்னப்பா இந்தியா? வாய்ஸ் கூடுது! உன்னை
நல்லவன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

இந்தியா: ஐயா என் விசுவாசத்த சந்தேகப்படாதீங்க!
அணுஆயுத ஒப்பந்தத்துல இருந்து, உங்க ஊரு
காலாவதியான மருந்து,விதை, உரம்னு இறக்குமதி
செஞ்சு எங்க மக்கள அடகு வச்சி தலைமுறையா
விசுவாசத்த காப்பாத்திகிட்டு வர்றோம்.
இப்போ எங்க நிலமையையும் நீங்க நினைக்கனும்.

ரஷ்யா: (இடையில் புகுந்து) இது எங்களுக்கு புடிக்கல.
உங்களுக்கே தெரியும்! ஒரு காலத்துல உங்களுக்கு
சமமான பலத்துடன் நாட்டாமையா இருந்தவுங்க
நாங்க. எங்க நேரம் இப்படி இருக்கோம்.

அமெரிக்கா: அதுக்கு?


ரஷ்யா: இல்ல, சும்மா சொன்னேன்.


அரபு: எங்களுக்கு விருப்பமில்லைங்க.
நாங்க ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்.
இத நாங்களே பாத்துக்கிறலாம்னு நினைக்கிறோம்.

அமெரிக்கா: (அதட்டும் தொனியில்) ஏம்ப்பா அரபு,பழசெல்லாம்
மறந்துபோச்சா.இராக் ஞாபகம் இருக்குல்ல?

அரபு: அவனவன் ஊர்ல பத்து பதினைந்து பிசினஸ்
பண்றவனெல்லாம் சந்தோஷமா இருக்கான்! ஆனா ஒரே
ஒரு எண்ணைய் பிசினஸ வச்சிக்கிட்டு உங்க கிட்ட நாங்க
படுறபாடு இருக்கே கொடுமை!

அமெரிக்கா: அதுக்குதான் சொல்றேன் நான் சொல்றத கேட்டா
பாதி எண்ணையாவது கிடைக்கும். இல்லேன்னா
மொத்தமா வழிச்சுட்டு போய்டுவேன்.

பிரிட்டன்: அண்ணே! ரொம்ப கேள்வி கேக்கிறாய்ங்க.
பழைய மாதிரி ஆளுக்கு கொஞ்சமா ஊர்கள பிரிச்சு
எடுத்துகிட்டு நம்ம இஷ்டத்துக்கு நடப்போம்.

அமெரிக்கா: இருப்பா! பேசிகிட்டு இருக்கேன்ல. சபைல
இதெல்லாம் பேசக்கூடாது. இப்பவே அப்படித்தான்
நடக்குது.

கூட்டம்: இப்ப என்னதாங்க சொல்றீங்க?


யுஎன்: க்கும் (கனைத்துக் கொண்டே)
ஐயா என்ன சொல்றாருன்னா,
நீங்க எல்லாரும் இதுக்கு சம்மதிச்சு அவருக்கு
ஆதரவா கையெழுத்து போடணும்.
மத்தத ஐயாமாருங்க பாத்துக்கிடுவாங்க!

கூட்டம்: இல்லைன்னா?

அமெரிக்கா: (கோவத்துடன்) இல்லேன்னா நானே போட்டுக்கிருவேன்
உங்க கையெழுத்த. கேக்கறாம் பாரு கேணத்தனமா.

யுஎன்: தலைவரே கோபப்படாதீங்க! யாரு என்ன சொன்னாலும்
கடைசில நீங்க சொல்றதுதான். நீங்க போங்க,
நான் பார்த்துக்கிறேன்.


அமெரிக்கா: சொல்லி வை. நல்லதனமா நடந்துகிட்டா எல்லாருக்கும்
நல்லது. நான் வர்றேன்.
(துண்டை உதறி தோளில் போட்டபடி செல்கிறார்).

யுஎன்: தலைவர கோபப்படுத்தி பார்க்காதீங்க. அவர்கிட்ட
வீட்டோ பவர் இருக்குங்கிறத மறந்துடாதீங்க!

ஒருவர் (குறிக்கிட்டு):வீட்டோ பவர்ன்னா?

யுஎன்: ம், உங்கள மாதிரி வீணாப்போனவங்கள நம்பாம
அவரே அதிகாரத்த எடுத்துக்குவார்.
அவர் நினைச்சத சாதிச்சுடுவார்.


மற்றவர்: அப்புறம் எதுக்கு எங்கள கூப்பிட்டீங்க?


யுஎன்: அவர் முறையா நடந்துக்கனும்னு நினைக்கிறார்!
அதோட சண்டை முடிஞ்ச பிறகு நீங்கல்லாம் அந்த
இடத்த சுத்தம்பன்றது, அவுங்களுக்கு சாப்பாடு,
மருந்துன்னு புணர்வாழ்வுக்கு தேவையான நல்ல
விஷயங்களுக்கான செலவ உங்கள பாத்துக்க
சொல்லியிருக்காரு. அவர சர்வாதிகாரின்னு
நினைக்காதீங்க. நீங்க ஒன்னும் சும்மா செய்ய
வேண்டாம்! அதுக்கு, உங்களுக்கு நாங்க கொறஞ்ச
வட்டிக்கு கடன் கொடுக்கனும்னு ஐயா சொல்லி
இருக்காரு. அவர் மனிதாபிமானத்த புரிஞ்சுக்கங்க.


அரபு: நாங்க ஏற்கனவே தலைவர் வீட்டு செலவுல
நிறைய ஏத்துகிட்டுதான் இருக்கோம். ஊருக்கே தெரியும்.

இந்தியா: இரண்டாவது விஷயம் சொன்னீங்களே,
வாஸ்தவமான பேச்சு! ஐயாமார்கள் சாப்பிட்ட
எச்சில் இலைய எடுக்கமாட்டோம்னு
என்னைக்காவது நாங்க சொல்லியிருக்கோமா?
அது எங்க கடமை.எங்க நிலைமையை நீங்களும்
புரிஞ்சுக்கனும். ஐயாகிட்ட எடுத்து சொல்லனும்.


தூரத்திலிருந்து பார்க்கும் கியூபா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகள்:

இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம். அந்த அல்லக்கையை அவங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டா பாதி பிரச்சனை சரியாயிடும்.


யுஎன்: கூட்டம் கலையலாம். தலைவரோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு
சொல்லியனுப்புறேன்.


கூட்டம்: அப்படியே ஆகட்டுங்க!
(இடுப்பில் துண்டைக் கட்டியபடி
ஒரு விதக் கவலையுடன் கலைகிறது).

வெள்ளி, 11 மார்ச், 2011

பெண்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? சீரியல், சினிமாவோடு அவர்கள் ரசனை முடிந்தது. ஆண்களால் மட்டுமே அரசியலை தெளிவாக விமர்சிக்க முடியும். உண்மைதான், அரசியல் ஒரு விமர்சனத்திற்குரிய கருவாக மட்டுமே இருக்கும் பட்சத்தில்.

பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் வீட்டு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். விலைவாசி, கல்வி, வேலை,குடிநீர் பிரச்சனைகளுக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால்! பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லைதான். பெண்களுக்கும் ஆண்களுக்குமே சம்பந்தம் இல்லையென்றால்!

பிடிக்கும், பிடிக்காது என்று சொல்வதற்கு அரசியல் ஒரு பாடமல்ல. செய்திகளில் பார்த்தும், கேட்டும் விட்டு கட்சி, ஊழல் என்று விமர்சன பரிமாற்றத்திற்கு அது பொழுதுபோக்கும் இல்லை. நாட்டின் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு தொடங்கி கல்வி,வேலை, தனி மனித சுயமரியாதை வரை கலந்துள்ள இந்த அரசியல் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் சரிபாதியான பெண்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கை வளமாக இருக்கும் என்று நினைத்தோமேயானால், நம்மைவிட அறிவீலிகள் இருக்க முடியாது. உலகில் ஆண்,பெண் வேலைகள் என்று எதுவுமில்லை. பெண்களின் குழந்தை பேறு என்ற இயற்கையான செயலும், ஆண்களின் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புனிதமான செயலையும் தவிர்த்து.

முதல் உலகப் போரின் போது நிகழ்ந்த முக்கிய மாற்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமன்று. அதைவிட முக்கியமானது, ஐரோப்பா முழுவதும் ஆண்கள் எல்லோரும் போருக்கு சென்றுவிட, நாட்டின் நிர்வாகம் முழுமையையும் பெண்கள் ஏற்றனர். இயந்திரவியல், கப்பல் கட்டுமானம், உணவு மற்றும் உடை உற்பத்தி என்று அனைத்தையும். ஒன்றும் குடி மூழ்கி போய்விடவில்லை. அப்போதே நிரூபிக்கப்பட்டு விட்டது பெண்களால் அனைத்தையும் செய்ய இயலும் என்று. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்களின் வெற்றிக்கு அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

“நான் பெண் என்பதால் என் வெற்றிக்கு அசாத்திய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் நான் தோற்றால், இவளால் முடியாது என்று கூறமாட்டார்கள். பெண்களால் முடியாது என்றே கூறுவார்கள்”.- எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான கிளாரா பூத் லூஸ் கூறியது இது.
உண்மைதான். ஒரு ஆணின் தோல்வி அவனது தனிபட்ட தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் தோல்வி ஒட்டு மொத்த பெண் குலத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலிலும் இதுவே. ஒரு ஆணின் தவறு தனிப்பட்ட தவறு. பெண்ணின் தவறு என்றால், "பொம்பளைங்க கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படித்தான்". இன்று அரசியலில் பிரபலமாக இருக்கும் சில பெண்கள், ஆண்களின் கைபாவையாக இருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு வந்த ஆண்கள் தவறாக இருந்தால், “ஆண்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் இப்படித்தான்” என்று யாரும் சொல்வது இல்லை. பத்தில் நாலு பழுது. நூறில் தொண்ணூற்றி எட்டு பழுது. எது மோசமானது?

மேலாண்மை பாடத்தில் ஒரு விஷயத்தை முக்கியமாக குறிப்பிடுவார்கள் மல்டி டாஸ்க்கிங் (multi tasking force). ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை திட்டமிட்டு முடிப்பது. அதற்கு அதிக திறமை வேண்டும். பெண்கள் ஆண்டுகளாக அதை தினசரி வாழ்வில் அநாயசமாக செய்பவர்கள். காலையில் சமையல் (அதுமட்டுமே ஒரு MTF) தொடங்கி மற்றவர்களின் தேவையை கவனித்து தனது வேலையும் செய்து வேலைக்கும் போவது, அதுவும் வருடம் முழுவதும் என்றால் அசாத்திய உடல் வலிமையும், மன வலிமையும் இன்றி சாத்தியமே இல்லை. ஆணோ, பெண்ணோ எந்த வெற்றிக்கும் தேவை பயிற்சியும், சிந்தனை திறனுமே! சிந்திப்பதற்கு நேரமே இல்லாமல் ஒரு வீட்டின் தினசரி அனைத்து வேலை பளுக்களையும் ஒருவர் மீது திணித்து விட்டு திறமைகளை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தனது தினசரி வேலைகளுக்கு கூட உதவி தேவைப்படுகிற ஒருவர், ஒரே ஒரு விஷயத்தில் சாதித்ததாக கூறினால் அது எந்த விதமான வெற்றி? கயிறுகளால் பிணைக்கப்பட்ட ஒருவருக்கும், சுதந்திரமான ஒருவருக்கும் ஒட்டப்பந்தயம் வைத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மடத்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும்.

விலை ஏற்றமா? வீட்டு செலவை சமன் செய்வது பெண்கள். குடிநீர் பிரச்சனை. சமாளிப்பது பெரும்பாலும் பெண்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்தால் இருப்பதை வைத்து சிறப்பாக உபசரிக்கும் சமயோசித புத்தி அவர்களுடையது. இத்தனை திறமை உள்ளவர்கள் அறிவை விசாலப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தால் சாதிக்கமாட்டார்களா? இது எல்லாவற்றையும் விட குடும்பத்தில் தன் நலனை விட மற்றவர் நலன் கருதுதலும், இயல்பான கருணை உள்ளம் கொண்டவர்களும் அதிகம் பெண்களே. எங்கு அறிவு விசாலமடைகிறதோ, அங்கு சிந்தனை மேம்படும். எங்கு சிந்தனை மேம்படுகிறதோ, அங்கு செயல் வெற்றியடையும்.

ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுடைய தினசரி வேலைகளை நீங்களே செய்யுங்கள். அது உங்களை உற்சாகமாக வைக்கும். வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அது குடும்பத்தின் சக உறுப்பினர்களிடம் உங்கள் மதிப்பை கூட்டும். குடும்பத்தின் மகிழ்ச்சி கூடும் .

பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களின் தந்தை, சகோதரன், கணவர், மாமனார், மகன் என்று யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்தி வேலையை பகிர செய்யுங்கள். பேசுவதில் வல்லவர்கள் நாம். வீட்டு வேலை செய்யும் ஆண்களை மரியாதை, பாசம் என்று குழப்பிக் கொண்டு தடை செய்யாதீர்கள். உங்கள் பாசம் அவர்களை திறனுள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் ஆக்க பயன்பட வேண்டுமேயன்றி, மங்குனிபாண்டியர்களாக மாற்றுவதாக இருக்க கூடாது. நமது அழகு, நம் அறிவிலும் ஆரோக்கியத்திலும் மட்டுமே உள்ளது.

நாம் அனைவருமே நமது சக மனிதர்களை மதிக்க தவறினால், நமது மதிப்பை சுலபமாக இழந்துவிடுவோம். பெண் விடுதலை என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல . அது பொருளாதார சீர்கேடு, சாதி மத பூசல், ஆதிக்க வர்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான நாட்டு மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கான அடிப்படை.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தோழர் முருகாப்பா!


எனது பன்ணிரெண்டாம் வயதில் எங்கள் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதுவரை கோடைவிடுமுறைக்கு சென்னைக்கு வந்து சென்ற நான் முழுவதுமாக அங்கு வாசம் செய்யவேண்டும் என்றதும் ஏக குஷியாகி விட்டேன். முதலாவது என் தந்தையோடு சேர்ந்து இருக்க போகிறேன். இரண்டாவது என் அம்மா கொஞ்சம் நல்ல சமையல் செய்யக்கூடும் என்பதுமாக இரண்டு காரணங்கள்! ஆரம்பத்தில் நாங்கள் கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம். அது ரோட்டை ஒட்டிய ஒரு முட்டு தெரு. அண்டை வீடு சென்னை கலாச்சாரத்தின் பகுதியான லைன் வீடுகள். ஒரே காம்பவுண்டுக்குள் எதிரெதிராக ஒன்பது குடித்தனங்கள். இந்த லைன் வீடுகளில் தளம் போட்ட வீடுகள் நான்கு ஒரு புறமும், ஓட்டு வீடுகள் ஐந்து எதிராகவும் இருந்தன. சிறிய பொதுவான வாசல். நடுவில் சிமென்ட் நடை பாதை. ஓர் ஓரத்தில் கிணறு, கட் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில் இணைப்புடன் கூடிய அடி குழாய், இரு குளியல் மற்றும் கழிப்பறைகள். வந்ததிலிருந்தே அந்த காம்பவுண்ட் என்னை வெகுவாக ஈர்த்தது.எங்கள் வீட்டு மாடியில் இருந்து அனைத்தையும் கவனிக்க முடியும். இந்த தளம் போட்ட வீடுகளின் வாடகை சிறிது கூடுதல். அதில் ஒரு ஓட்டு வீட்டில் அந்த வீடுகளின் உரிமையாளரான நடுத்தர வயது பெண்மணி தனது மூன்று குழந்தைகளுடன் குடியிருந்தார். அவர் கணவர் துபாயில் ஈட்டிய திரவியத்தில் கட்டிய அந்த காம்பவுண்டுடன் இந்த குடும்பத்துடனான தனது கடமை முடிந்தது என்று முடிவு செய்து, வேறு குடும்பத்திற்கு கடமை ஆற்ற சென்று விட்டதாக பேசிக் கொண்டார்கள். சில நாட்களிலேயே நான் அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். காலை, மாலை இரு நேரமும் பரபரப்புடனே இருந்தது அந்த காம்பவுண்ட்.


காலையில் அனைவர் வீட்டு ரேடியோக்களும் ஒரே நேரத்தில் ஆன் செய்யப்பட்டு காக்டெய்லாக கலந்து அடிக்கும். அந்தரங்க விஷயங்கள் நீங்கலாக பல் தேய்ப்பது தொடங்கி அனைத்தும் அந்த ஓபன் ஸ்பேஸில்தான். தண்ணீர் பிடிப்பது, சர்க்கரை, காபி பொடி கடன் வாங்குவது, குழந்தைகளால் ஏற்படும் பஞ்சாயத்துக்கள் என சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தைப்போல், கதம்ப மாலையாக கமகமத்தது அந்த காம்பவுண்ட்.
இதில் மத்தியில் உள்ள தளவீட்டில் இருந்தவர்தான் நம் முருகாப்பா. ஆரம்பத்தில் நான் அவரது பெயரை முருகாப்பா என்றும், அவரது மனைவி பெயர் முருகாம்மா என்றும் நினைத்து, அந்த தம்பதியரின் பெயர் பொருத்தத்தை நினைந்து வியந்தேன். நண்டு, சிண்டுகள் எல்லாம் அவர்களை அப்படித்தான் அழைத்தனர். பின்னர்தான் அவரது பெயர் வீராசாமி என்றும் அங்கு மூத்த குழந்தையின் பெயருடன் சேர்த்து அப்பா அம்மா என்று அழைப்பார்கள் என்றும் தெரியவந்தது. ஆயினும் என் வியப்பு மாறாதவாறு அவரது மனைவி பெயர் வீரலட்சுமியாகவே இருந்தது.பல்லவன் போக்குவரத்து கழத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மாநிறத்தில், சராசரி உயரத்தில், சுருட்டை முடியுடன் தடித்த கருப்பு ஃபிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருப்பார். இரண்டே வித காஸ்டியூம்களில் மட்டுமே காட்சியளிப்பார். கைலி, கை வைத்த பனியன் மற்றும் காக்கி பேன்ட், சட்டை. அவர் வீட்டு ஹேங்கரில் கூடுதலாக சிவப்பு மற்றும் மங்கிய வெள்ளைசட்டை. ஒரு மகனும், இரு மகள்களும். மகன் பத்தாவது வகுப்பை மூன்றாம் முறையாவது பாஸ் பண்ணிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் இருந்தான். மூத்த மகள் எட்டாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவரது நம்பிக்கை நட்சத்திரமான மூன்றாவது மகள் அவரது நம்பிக்கையை சிதைக்காதவாறு ஒழுங்காக ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவருமே எனது நண்பர்களானார்கள். சில நாட்களிலேயே அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியவந்தது. அவரிடம் யார் கையை காட்டி டாடா சொன்னாலும் பதிலுக்கு கையை காட்டமாட்டார். ஏனென்று வினவிய போது அது காங்கிரஸ் சின்னத்தை காட்டுவதாக ஆகிவிடும் என்றும் உண்மையான கம்யூனிஸ்ட் அவ்வாறு செய்யமாட்டான் என்ற அவரது விளக்கத்தில் கம்யூனிஸ்ட் அபிமானியான என் அப்பா ஆடிப்போனார். அவரது மகனுக்கு லெனின் குமார் என்றோ மார்க்ஸ் குமார் என்றோ பெயர் வைத்து மார்க்ஸப்பா அல்லது லெனினப்பா ஆகவேண்டிய அவரது கனவு அவர் மனைவி பெயருக்கேற்றவாறு கோவில்பட்டி வீரலட்சுமியாக இருந்த காரணத்தால் முத்தமிழ் கடவுளின் பெயர் வைக்கப்பட்டு கலைந்துவிட்டதாக அவ்வப்போது வருத்தப்படுவார். முருகனைப் பார்க்கும் போதும், அவனது அம்மா அவனை நாயே, சனியனே என்றழைக்கும் போதும் எனக்கென்னவோ மார்க்ஸ், லெனின் பெயர்களுக்கு ஏற்படவிருந்த களங்கம் தவிர்க்கப்பட்ட மகிழ்ச்சியே மேலோங்கி இருந்தது.அவருக்கு காலையில் தெருமுனைக்கு போய் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. இதன் முக்கிய காரணம் குறிப்பாக செவ்வாய், வெள்ளிகளில் அவரது மனைவி காலையில் குளித்து சாம்பிராணி போட்டு வாசல் கதவு தொடங்கி ஜன்னல் வரை மஞ்சள் குங்குமம் தடவி முடிப்பதற்குள் விடிந்துவிடும். மேலும் இந்த சமயங்களில் டீ கேட்பது வேறு சில விளைவுகளை ஏற்படுத்தியது. இவற்றை தவிர்க்கவும், அவரது வேலை நேர மாறுபாட்டாலும்,அவர் டீ கடைக்கு சென்றுவிடுவார். அங்குதான் அரசியல் நிலவரங்களையும் அவரால் பகிர்ந்து கொள்ள முடிந்ததாலும் இருக்கலாம். யாராவது அவரிடம் அண்ணே கம்யூனிசம்னா என்ன? என்று கேட்டால், அது ஒன்னுமில்லப்பா "இருக்கிறவன்ட்ட இருந்து புடுங்கி இல்லாதவன்கிட்ட கொடுக்கிறது" என்ற அவரது ராபின்ஹுட் பதிலால் அரண்டவர்கள் அனேகம் பேர். அந்த காம்பவுண்டில் அவருக்கு மட்டுமே காசு கொடுத்து செய்திதாள் வாங்கி படிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு முறை ஒருவர் அவரிடம், கம்யூனிஸ்டுங்கிறீங்க தீக்கதிர் வாங்கிப் படிக்கலாமே என்று கேட்க , அதென்னவோ தினத்தந்தி படிச்சுட்டு டீ குடித்தால்தான் வெளிய போகிறது என்றார். அவர் கலாய்க்கிறாரா? சீரியஸாக சொல்கிறாரா? என்று கேட்டவர் குழம்பிவிட்டார்! அந்த ஏரியாவில் ஏதேனும் கட்சி சார்பாக தட்டிகள் வைக்கும் போது களத்தில் ஆஜராகி உதவி செய்வார். அதில் "அமெரிக்காவின் ரீகனே! எச்சரிக்கிறோம்" என்கிற ரீதியில் உள்ள வாசகத்தை பார்த்து தோழர்," ரீகனை எச்சரித்து தமிழ்ல போஸ்டர் போடுறீங்களே? ரீகனுக்கு தமிழ் தெரியுமா? என்று பீதியைக் கிளப்புவார். இவர் மீது ஏற்பட்ட இனப்பற்றின் காரணமாக என் அப்பா அவரை முழு கம்யூனிஸ்ட் ஆக்கிவிடும் முகாந்திரமாக அவருக்கு "குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்", "இயக்கவியல் பொருள்முதல் வாதம்","தாய்" என்று புத்தகங்களைக் கொடுத்து படிக்க சொன்னார். எந்த நூலாக இருந்தாலும் நல்லாருக்கு ஆனா புரியல! என்று நமது சி.எம். மாதிரி குழப்பமான ஸ்டேட்மென்டோடு இரண்டே நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடுவார். மூலதனத்தை கொடுத்தாலும் மூன்றே நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவார் என்று பின்னர் எங்கள் வீட்டு தோழருக்கு புரிந்தது. அது அவரது தவறும் இல்லை. முதலிரண்டு புத்தகங்களில் நான்காவது பக்கத்திற்கு கொட்டாவி விட்டவர்களே அதிகம். (கனமான, சிக்கலான மொழிபெயர்ப்பு) விடிய, விடிய கம்யூனிச புராணம் கேட்டாலும் ஷபானா ஆஸ்மியோட அப்பா சஃப்தர் ஹஷ்மி என்கிற ரீதியில்தான் புரிந்து கொள்வார். எதையும் முழுதாகவும் அவரால் கேட்க முடியாது. ஆனால் சமதர்ம சமுதாயம் என்ற ஒற்றை வரியில் ஈர்க்கப்பட்ட தீவிர அபிமானி. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும், குடும்ப சண்டை என்றாலும் எல்லாவற்றிற்கும், 'புரட்சி வரணும் தோழர்' என்பார். ஏதோ பக்கத்து வீட்டு பரமசிவம் வரணும் என்பது மாதிரி! தவணை முறையில் வாங்கிய டிவியும், க்ரைண்டரும் மட்டுமே அவரது சொத்துக்கள். அந்தம்மா காசுக்கு மாவரைத்துக் கொடுப்பார்.அந்த காம்பவுண்டில் வீட்டுக்காரம்மாவிடமும், இவரிடமும் மட்டுமே இந்த இரண்டு சாதனங்களும் இருந்தன. இவர் டிவி வாங்கியதன் காரணம் மிக சுவாரஸ்யமானது. வீட்டுக்காரம்மா காசு வாங்கிக் கொண்டுதான் யாரையும் டிவி பார்க்க அனுமதிப்பார். வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் என்றால் இருபத்திஐந்து காசும், சினிமா என்றால் ஐம்பது காசும். நல்லவேளையாக அப்போதெல்லாம் ஒரு ஒளிபரப்பு மட்டுமே. இன்று போல் என்றால் அந்த அந்தம்மா கலெக்ஷனைப்போட்டு சொந்தமாக ஒரு சானலே தொடங்கி இருக்கும்! இதனை எதிர்க்கும் விதமாக தவணை முறையில் கண்ணிமைகளை துல்லியமாய் காட்டும் (இதுதான் அந்த டிவியின் விளம்பர வாசகம் ) சாலிடேர் பி/வொயிட் டிவி வாங்கி அனைவருக்கும் இலவசம் என்று அறிவித்தார். இது சம்பந்தமாக மனைவியுடன் நடந்த சண்டையில் முதல் முறையாக வெற்றியும் பெற்றார்!இதன் காரணமாக அந்த பூர்ஷ்வா பெண்மணிக்கும் (அப்படித்தான் அழைப்பார்) இவருக்கும் மறைமுக யுத்தம் தொடங்க ஆரம்பித்தது. காலையில் குளியலறைக்கு அவர் வரும் நேரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்வதில் ஆரம்பித்து 'சைக்கிள ஏன் இங்க வக்கிறீங்க?' உங்க பையன் சத்தம் போடுகிறான் என்று மொன்னையான காரணங்களைக் காட்டி சண்டை போட ஆரம்பித்தார். தோழர் எதையும் சட்டை செய்யமாட்டார். வீட்டை காலி செய்யமுடியாது என்றும் அறிவித்து விட்டார். ஆனாலும் சண்டை வந்து கொண்டுதான் இருந்தது. இதை ஒரு ஆதிக்க சக்தியை எதிர் கொண்டு பெற்ற வெற்றியாகவே நினைத்தார். மற்ற மாத சம்பளகாரர்களைப் போல் குருவி சேர்ப்பது போன்று சேர்த்து புறநகர் பகுதியில் சொந்தவீடு கட்டுவது அல்லது சீட்டுப் போட்டு மகள்களுக்கு நகை, பாத்திரம் வாங்குவது என்பது மாதிரியான எந்த கனவுகளும் அவருக்கு இல்லை. மகள்களுக்கு வரதட்சணை கொடுக்காமலும், மகனுக்கு வரதட்சணை வாங்காமலும் திருமணம் என்பதே அவரது தீர்மானமாக இருந்தது. முருகாம்மாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாததுடன் இந்த துப்புக்கெட்ட மனுசன வச்சிகிட்டு என்ன செய்ய போறனோ தெரியலையே? என்று போவோர் வருவோரிடம் புலம்பியபடி இருந்தார்.நாங்கள் அங்கிருந்து மேற்கு மாம்பலம் பகுதிக்கு மாறிவிட்டோம். எப்போதேனும் அங்கு சென்று பார்த்தோம். நாளடைவில் அதுவும் விட்டுப் போனது. திடீரென்று ஒரு நாள் முருகனும், அவன் அம்மாவும் வீட்டிற்கு விஜயம் செய்து மூத்த பெண்ணின் திருமண அழைப்பிதழை நீட்டி கல்யாணத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதில் "வட்ட செயலாளர் அண்ணன் ------அவர்கள் தலைமையில்" என்று அச்சிடப்பட்டு இருந்தது. முருகாப்பாவைப் பற்றி விசாரித்தபோது, முருகாம்மா ஒரு அலட்சிய பாவணையில், '"அந்த மனுசனுக்கு இந்த கண்ணாலத்துல இஷ்டமில்லை". "அவரு கொண்டு வந்த ரெண்டு வரனும் அவருமாரியே வெட்டிஞாயம் பேசிக்கிட்டு இருக்கிறவங்க"(அது சிஐடியூ தோழர்கள்) நம்ம சாதியும் கிடையாது. இப்ப வீட்ல முருகன்தான் பொறுப்பா இருந்து காரியம் பாக்கிறான். எங்க ஏரியா வட்ட செயலாளர்கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கான்(அடியாளாக). பொறுப்பா இருக்கான்ட்டு இவனாண்ட ரொம்பப் பிரியம். கூட வேல செய்ற பையன்தான் மாப்பிள்ளை. நம்ம ஜனம், நல்ல சம்பாத்யம் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.திருமணத்தின் போது ஒரு பார்வையாளாராக கடைசி வரிசையில் சுரத்தின்றி அமர்ந்திருந்தார் நம் தோழர். எங்களைக் கண்டதும் முகம் மலர நலம் விசாரித்தார். அவஸ்த்தையான சில மௌன நொடிகள் கழிந்து அவராகவே "பிள்ளைகள் தலை எடுத்துவிட்டார்கள். அவரவர் தீர்மானங்கள் அவரவர்க்கு. நாம் பார்வையாளராக மாறியாச்சு என அதிரடியாக சிரித்தார்.“வாழ்க்கை ஒரு சூதாட்டம். விளையாடத் தெரியாதவர்களும், விரும்பாதவர்களும் இங்கு பங்காளர்கள் அல்ல பார்வையாளர்களே”.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

இரு வேறு உலகம்
நேற்றிரவு மகள் கை பிடித்து
என் கதை உலகிற்கு அழைத்து சென்றேன்.
அங்கு காகம் பாட்டியையும்
நரி காகத்தையும் ஏமாற்றியது
சிங்கம் பசுவை வஞ்சித்தது
புலி மானை காயப்படுத்தியது
ஒநாயும் கொக்கும்
பழி தீர்த்துக் கொண்டன.

பின் எனை அழைத்துசென்றாள்
அவளின் கதை உலகிற்கு
அங்கு காகமும் நரியும் கேக்கை
பகிர்ந்து கொண்டன!
எலியும், சிங்கமும்
ஹைட்& ஸீக் விளையாடின.
புலியும் மானும்
பார்ட்டி கொண்டாடின!
ஒநாயும்,கொக்கும்
ஒருவருக்கொருவர் உதவினர்
காயங்களற்ற அவ்வுலகில்
அவளை விட்டு
நான் மட்டும் வெளியேறினேன்!

வெள்ளி, 7 ஜனவரி, 2011

வசந்தி டீச்சர் சார்முதற் காதலையும், முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அதுபோல்தான் நம் ஆரம்பகால ஆசிரியை(யர்)களையும் மறக்க இயலாது. இந்த கேஜி டீச்சர்களைப் பார்த்தால் ஒரு வித அழகுடன் இந்த குழந்தைகள் எல்லாம் மிஸ்,மிஸ் என்று அழைப்பதாலேயே அவர்களுக்கு வயதாவதே இல்லையோ என்றுகூடத் தோன்றும். இந்த உலகத்தில் உள்ள அம்மா அப்பா உட்பட யாரையும் பேட்(bad) என்று ஒத்துக்கொள்ளக் கூடிய குழந்தைகள், தங்கள் மிஸ்ஸை மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஆசிர்வதிக்கப்பட்டவர்களைப் போன்றே எனக்குத் தோன்றும். அவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. இவர்களைப் போன்றே இவர்களது அழகான பெயர்களும் ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று. ரோஸி,ஸ்டெல்லா, மைதிலி என்று.


எனக்கும் இப்படிப்பட்ட டீச்சர்கள் இரண்டு மூன்று பேர் உண்டு. அதில் ஒருவர் வசந்தி. இவர் எனது பள்ளி ஆசிரியை கிடையாது. எனது அத்தை பெண்ணும் அவரும் தோழிகள். ஒரே நர்சரியில் வேலை பார்த்தனர். அந்த பழக்கத்தின் காரணமாக அவரது வீட்டிற்கு செல்வேன்.அழகிய வட்டமுகத்தில் அந்த உதட்டில் நிரந்தரமாக தங்கி இருக்கும் சிரிப்புதான் அடையாளம். நீண்ட கருங்கூந்தலை தளர பின்னி இருப்பார். டிவி காம்பியர் போன்று சைகையுடன்தான் பேசுவார். கூல்,பந்தா போன்ற வார்த்தைகளை அந்த காலத்திலேயே அடிக்கடி உபயோகிப்பார். எங்களது பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். மாலையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பார். நானும் செல்வேன். பெரும்பாலானவர்க்கு கட்டணம் கிடையாது. எனக்கும்தான். வசந்தி, செத்த பாத்துக்கப்பா என்றே பெரும்பாலான தாய்மார்கள் விட்டு விட்டு செல்வார்கள். நான் அப்போது இரண்டாம் வகுப்பு. மற்ற பிள்ளைகள் எல்லாம் நர்சரி லெவல். டீச்சர் பிஸியான நேரத்தில் நானே ஆக்டிங் டீச்சராகும் அபாயமெல்லாம் நடக்கும்.

சுறுசுறுப்பாக சிரித்தபடியே இருக்கும் அவரது சுபாவம் அவருக்கு அழகு சேர்த்தது. புதிதாக திருமணமானவர். அவரது கணவர் ஒரு அரசு அலுவலர். மாலை வேலை முடிந்து அவர் வீட்டுக்குள் வரும் போது வீடு சந்தைக் கடை மாதிரி சத்தமாக இருக்கும். ஆனால் கோபமாகவே மாட்டார். அவரும் குழந்தைகளை நேசிப்பவர். அவர் பெயர் ராமலிங்கம். ஆனால் நாங்கள் அவரை "வசந்தி டீச்சர் சார்" என்றே அழைப்போம். அவர் வந்தவுடன் டீச்சர் மாலை தயாரிப்பிற்கு சென்று விடுவார். இவர் எங்களுடன் பேச ஆரம்பித்துவிடுவார். குழந்தைகளிடம் எப்போதுமே குட், திறமைசாலி, உன்னால் முடியும் என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துவார். டீச்சர் உள்ளிருந்தபடியே அவரிடம், 'குழந்தைகளை படிக்க விடுங்க' என்று சத்தம் போடுவார்.


அப்போதெல்லாம் நான் ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன். என் ஓவியத் திறமை மீது அபார நம்பிக்கை வைத்திருந்த ஒரே ஆள், ஹி,ஹி நான்தான். எனது நம்பிக்கையைப் பார்த்து அவர்கள் இருவரும் எனக்கு ஊக்கம் தர ஆரம்பித்தார்கள். அவர்களது ஊக்குவிப்பால் சுவர், தரை என்று எல்லா இடங்களிலும் கிறுக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டு சுவர்கள் எல்லாம் என் கைவண்ணத்தில் மிளிர ஆரம்பித்தன. மனித உருவங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் வரைவேன். இயற்கை காட்சிகள் என்றால் இரண்டு மலை, நடுவே சூரியன் ஒரு அருவி, இரண்டு தென்னை மரங்கள், ஒரு குடிசை. எப்போதும் இதுதான். என் ஓவிய மனிதர்கள் எல்லாம் சிலுவையில் அறையப்பட்டவர்களை போல் கைகளை விரித்து, கால்கள் பின்னியபடி ஒரு வித சோகத்துடனே காட்சியளித்தார்கள். வேறுமாதிரி வரைய விருப்பம் இல்லாமல் இல்லை. வரல! வேறு மாதிரியாக முயற்சித்தால் ஒரு கை குண்டாகவும், மற்றொன்று போலியோ அட்டாக் ஆனது போலவும் கூடுதலாக இம்சித்தது. ஆனாலும் என் முயற்சியில் நான் மனம் தளரவே இல்லை!


இதற்கிடையில், எனது வேலைகளால் என் அம்மாவிற்கும், பாட்டிக்குமிடையே பனிப்போர் ஆரம்பித்தது. பாட்டி, நான் சுவர்களை பாழ்படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து சுவர்கள் சாரியாகத்தான் காட்சியளித்தன! ஆனாலும் பாட்டிக்கு தான் பார்த்து கட்டிய வீடு என்பதால் இந்த அங்காலாய்ப்பு. அம்மாவிற்கோ, நம்மை பேப்பர் கேட்டு தொந்தரவு செய்யாத வரை ஓகே என்பதாக இருந்தது. இந்த பஞ்சாயத்து சென்னையிலிருக்கும் அப்பா,தாத்தாவிடம் செல்லும் நிலை வர, உடனே, நான் நல்லெண்ண தூதுவராக மாறி இவர்களது பனிப்போரை நிறுத்தும் விதமாக சுவர்களில் வரைவதை நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு ஜனவரியில் வீட்டிற்கு வெள்ளை அடிக்கப்பட, அஜந்தா, எல்லோரா போன்று வரலாற்றில் பதிவாக வேண்டிய ஓவியங்கள் வெளி உலகிற்கு தெரியாமலேயே மறைந்து விட்டன. ஆனால் அதற்கு பதிலாக கைக்கு கிடைக்கும் கோடு போட்ட நோட்டிலிருந்து பேப்பர்களை கிழித்து கைவரிசையைக் காட்டத் தொடங்கினேன்! எனது கிழி திறமையின்மை காரணமாக நோட்டுக்கள் சகட்டு மேனிக்கு கிழிந்து என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன. இதன் காரணமாகக் கிட்டிய வசவுகளின் சோகத்தை டீச்சர்,சாருடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் கண்களின் ஓரம் கண்ணீர் அரும்பாமல் சாதாரணமாகவே கேட்டதில், எனது துக்கம் அதிகமாகியது. நான் வழக்கத்தை விட அமைதியாக படித்துக் கொண்டிருந்தேன்.


மறுநாள் மாலை நான் சென்றபோது டீச்சரும்,சாரும் செய்தித்தாள் சுற்றப்பட்ட ஒரு பார்சலை என்னிடம் கொடுத்தனர். உள்ளே கோடுகளற்ற வெள்ளைத்தாள்கள். மொத்தமாக அவ்வளவு பேப்பரை அதுவரை நான் பார்த்து இல்லை. வறுமையிலிருப்பவள், கையில் பணக் கட்டுக்களைப் பெற்றவள் போலாகிவிட்டேன். அதிரி புதிரியாக வரைய ஆரம்பித்தேன்.ஆனால் ஓவியக் காட்சிகளில் பெரிய மாற்றங்களில்லை. ஆனால் அந்தப் படங்களை தவறாமல் அவர்களிடம் காட்டத் தொடங்கினேன். சார் அந்தப் படங்களை வாங்கிப் பார்த்து பாராட்டியபடியே ஒரு ஃபைலில் போட்டு அவரிடமே வைத்துக் கொண்டார். பின்னர் வேலை மாற்றம் காரணமாக வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். செல்லும் முன்னர் எனக்கு பேப்பர்,கலர் பென்சில்கள் அன்பளித்தார். வழக்கம் போல் இரண்டு நாட்கள் சோகத்துடன் திரிந்தேன். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சரின் தோழியான என் அத்தை பெண், என்னிடம், நான் வசந்தியைப் பார்த்தேன். நீ வரைந்து கொடுத்த படங்கள் அடங்கிய ஃபலை வைத்திருக்கிறார்கள். உன்னை மிகவும் விசாரித்தார்கள் என்று கூறியபோது உண்மையில் அதிர்ந்து போனேன்.

நான் சென்னை வந்த பிறகு என் தந்தை வாங்கிக் கொடுத்த அழகான அட்டைகள் உடைய ஆர்ட் புத்தகங்களும், இப்போது, என் கணவர் வாங்கி வரும் தரமான பேப்பர், மற்றும் வண்ணங்களையும் விட, அன்று 'வசந்தி டீச்சர் சார்' வாங்கிக் கொடுத்த ஒரு குயர் வெள்ளைத் தாள்களும்,பென்சில்களும் மிகவும் விலை உயர்ந்ததாகவே காட்சியளிக்கிறது.