புதன், 23 நவம்பர், 2011

சௌந்தரவல்லி

பெயருக்கேற்றவாறே ஆளும் அறிவும், ஆளுமையுமாக சௌந்திரமானவர். எனது எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு காலங்களின் வரலாற்று ஆசிரியை.

அந்நாளில் சூளைமேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறிலிருந்து எட்டு வகுப்புகள் வரை மரத்தடியில்தான். ஒன்பதாம் வகுப்புக்கு பில்டிங்குகளுக்கு ப்ரமோஷன் கிட்டும்! அந்த மரத்தடி வகுப்புகள் எனக்கு மிகப் பிடித்தவை! காற்றோட்டமும், பறவைகளின் சங்கீதமுமாக ரம்யமாக இருக்கும். ஆனால் மதிய உணவுக்கு பிறகு உறக்கம் வராமல் ஆசிரியரையும், கரும்பலகையையும் விடாது நோக்குவது சவாலான விஷயம்! மதிய உணவுக்கு பிறகு முதல் பிரியடீற்கு பெரும்பாலும் வரும் சந்தானலக்ஷ்மி டீச்சர் எங்களை வரிசையாக எழுந்து புத்தகத்தை பத்தி, பத்தியாக வாசிக்க சொல்லிவிட்டு, ஒரு கை உடைந்த நாற்காலியில் சம்மணம் போட்டு அமர்ந்து இடது கையை மேசை மேல் வைத்து தலையைத் தாங்கி, புத்தகத்தை விரித்து வைத்த படியே உறங்குவார்! தூரத்திலிருக்கும் ஹெட்மிஸ்டர்ஸ் அறையிலிருந்து இங்கு பார்த்தால் வகுப்பு முறையாக நடப்பது தெரியும்! பள்ளியில் எப்போதும் காலை வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் இவைகள்தான். காலையின் கடைசி மற்றும் மதிய உணவுக்கு பிறகே தமிழ், வரலாறு, புவியியல் வகுப்புகள்! ஒரு வேளை இந்த பாடங்களுக்கு மாணவர்கள் சோர்ந்திருந்தாலோ அல்லது உறங்கிவிட்டாலோ நாட்டிற்கு பெரிய நட்டமில்லை என்று அரசும், ஆசிரியப் பெருந்தகைகளும் முடிவு செய்திருக்கக்கூடும்!
காலை ப்ரேயரின் போது எப்படி இருப்பாரோ அதே எனர்ஜியுடன் மாலை வரை இருப்பார் சௌந்திரவல்லி டீச்சர். சாராசரி உயரம், மஞ்சள் பூசிய முகம் , கோடாலி முடிச்சுடன் கூடிய தளர்வான கூந்தல், அகலமான கண்ணாடி. சற்றே தடிமனான உடல்வாகு. எப்போதும் கையை வீசி வேகமாக நடப்பார். ஒரு அடர்ந்த கரும்பச்சை டிவிஸ்50யில் தான் பள்ளிக்கு வருவார்.

சைலன்ஸ்! என்று சப்தமிட்டபடி வரும் ஆசிரியர்களுக்கு மத்தியில் குட்மார்னிங்/குட்ஆஃப்டர்னூன், இன்றைக்கு என்ன நியூஸ்ப்பா?! என்றபடிதான் வருவார். கடைசி வரிசை மாணவர்கள் வரை யாராக இருந்தாலும் பெயர் சொல்லிதான் அழைப்பார். மையமாக கையை நீட்டி, ‘நீ சொல்லு’ என்கிற வழக்கம் கிடையாது. எருமை, சனி, தடிமாடு, சோறுதானே சாப்பிடுற? போன்ற ஆசிரியர்களின் ஆதர்ச வார்த்தைகள் எதுவும் அவர் வாயிலிருந்து கேட்டது கிடையாது. இவை அனைத்தையும் விட அரசு பள்ளிகளில் இல்லாத வழக்கம் ஒன்றை கொண்டிருந்தார். அது! வாங்க, சொல்லுங்க! என்ற விளி. அன்னைமேரியை கண்டிக்கும் போது கூட, உங்களால மொத்த க்ளாஸும் டிஸ்டர்ப் ஆகுது. புரிஞ்சுக்கங்க மேரி! என்று மாணவர்களை மரியாதையாக அழைக்கும் பண்பு. இதன் காரணமாக ஹெட்மிஸ்டர் சுசீலாவிலிருந்து, பி.டி சந்திரா வரை ஆசிரிய குலங்கள் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் அது, இது, சனியன் என்று சகட்டுமேனிக்கு விளிக்கும் அன்னைமேரி கூட ‘ஹிஸ்டரி டீச்சர்’ சொன்னாங்க என்றுதான் கூறுவாள்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பதை நம்புபவர். பாடங்களோடு அன்றைய முக்கிய செய்திகளையும் பகிர்ந்து கொள்வார். தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார். தமிழ் செய்தித்தாள் படிக்கும் போது ஆங்கில செய்தித்தாள்களையும் படித்தால் ஆங்கிலம் கற்க எளிதாக இருக்கும் என்று குறிப்பிடுவார்.

முதல் ராங்க் எடுக்கும் சாந்தியும், பாடங்களை வெறுக்கும் அன்னைமேரியும் “இவுங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா ஏதாவது சம்பளம் தர்றாங்களா? ‘வந்தமா, பாடம் நடத்தினோமான்னு இல்லாம’ எதுக்கு தேவையில்லாம படுத்துறாங்க? என்று ஒருசேர அலுத்துக் கொள்வார்கள்! இவரது வகுப்பு என்றால் இரண்டு கப் பூஸ்ட் எக்ஸ்ட்ராவாக குடித்த எஃபக்டில் திரிவோம் நான், ஸரீனா, வெங்கட்ரமணி மூவரும். சித்ரஹார், ஒலியும்ஒளியும், சனிக்கிழமை ஹிந்திப்படங்கள், கிசுகிசுக்கள் தாண்டி புத்தகங்கள், ஒவியம் கிரிக்கெட், அரசியல் இவைகள் இணைத்திருந்தது எங்களை. ஸரீனா அற்புதமாக வரைவாள். விளையாட்டிலும் கெட்டி.

“கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்”, “1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது” என்று செய்தி வாசிக்கும் வேலையை செய்யமாட்டார் டீச்சர்.
கொலம்பஸ் கண்டுபிடிப்பு மட்டுமன்றி அதன் பின் இருந்த பழங்குடி மக்கள் மீதான வன்முறை, அடிமைகளாக பிடிக்கப்பட்ட மக்கள் என்று விரியும் அந்த வரலாறு. அன்றைய கால கட்டத்தில் (அப்போது மட்டுமல்ல எப்போதுமே) ஆசிரியர்கள் பேச விரும்பாத விஷயங்களை பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரையிலான அனைத்து விஷயங்களையும் தொட்டு வைப்பார் கருத்து திணிப்புகள் இன்றி. எந்த நாடாக இருந்தாலும் எந்தத் துறையாக இருந்தாலும் தனி நபர் துதி என்பது ஆபத்தான, அசிங்கமான விஷயம் என்று வலியுறுத்துவார்.

இந்த விஷயத்தில் ராஜீவ் காந்திக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது அதி தீவிர ரசிகையான வெங்கட்ரமணியின் அழுத்தமான நம்பிக்கை. ‘அவர் பேச்சை கேட்டிருக்கியா? வரிக்கு வரி இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தே இருக்கும்’. அவர் மாதிரி ஒருத்தர் இந்தியாவிற்கு கிடைத்தது நாம செஞ்ச புண்ணியம் என்பாள். அனுதினமும் நடந்து கொண்டிருந்த இந்திய முன்னேற்றத்தில் சிறிய தடை ஏற்பட்டாலும், ராஜீவ் ஏதேனும் தவறான முடிவுக்கு வந்து விடுவாரோ என்ற பதட்டத்துடன் இருப்பதுபோல் தோன்றும்.
அந்த சமயங்களில், 'இந்தியாவின் முன்னேற்றம் ஒரு மலை உச்சியில் இருக்கும் ஜோதி போலவும், ராஜீவ் காந்தி தனியொரு ஆளாக மொத்த இந்தியாவையும் ஒரு கயிற்றில் கட்டி அந்த ஜோதியை நோக்கி அழைத்து செல்வது போலவும் கற்பனை செய்து பார்ப்பேன். சிரித்தால் கோபமாகி விடுவாள். தற்போதைய இந்தியாவிற்கு தேவை ராஜீவ்தான் என்பாள். ஸரீனா இடையில் புகுந்து ராஜீவ் காந்திக்கு அனுபவம் போதாது, கலைஞர் கூட இருந்தால் இந்தியா எங்கோ சென்றுவிடும் என்பாள். நானோ, என்னை மிகவும் கவர்ந்த, நாட்டில் ரேஷன் அமலில் இருந்த காலத்தில் இரண்டு ஓட்ஸ் ரொட்டிகளை தனக்கு கூடுதலாக தந்த உதவியாளரை கடிந்து கொண்ட தோழர் லெனின் கதையை 108வது முறையாக கூறுவேன்! ஸரீனா என்னை விநோதமாக பார்த்து, இறந்து போன ரஷ்யாவின் லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கடிப்பாள். நான் தலைமையைப் பற்றி பேசுகிறேன் என்றும், நாங்கள் இந்திய முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறோம் என்றும் அவரவர்க்கு தெரிந்ததை தொண்டை நரம்பு புடைக்க அரசியல் என்று கத்திக் கொண்டு இருப்போம். மேரி அல்லது வசந்தி இடையில் புகுந்து “இப்ப நிறுத்துலேன்னா மென்னிய திருகிடுவேன். டீச்சர் இம்சை போதாதுன்னு இதுங்க வேற” என்பார்கள். உருவத்தில் அவர்களைவிட சிறியவர்களாக இருந்ததாலும், மென்னியை பலி கொடுக்கும் அளவிற்கு எங்கள் தேசப்பற்று வளர்ச்சி அடையாததாலும் எங்கள் சபை உடனடியாக கலைந்துவிடும்.

பாடங்கள் மட்டுமல்லாது எங்களது குடிநீர், கழிப்பறை தேவைகளுக்காகவும் பேசிவந்தார் டீச்சர். எங்களது குடிநீர் பிரச்சனை கோமல் சுவாமிநாதனுடைய நாடகத்தைப் போன்றே துயரமிக்கது. பள்ளியில், கட்டி உடைச்சாங்களா இல்ல உடைச்சு கட்னாங்களா என்று சந்தேகம் வரும்படியான டேங்க் ஒன்று உண்டு. அதில் மரக்கட்டையால் அடைக்கப்பட்டு இரு இரும்பு குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதாவது தண்ணீர் வந்தால் வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் அதன் மேல் துணியை வேறு கட்டி வைத்திருப்பார்கள்! ஆகவே தண்ணீர் கொண்டு வந்தேயாக வேண்டும். அதிக புத்கங்களின் சுமை காரணமாக சிறிய தண்ணீர் பாட்டில்களே கொண்டு வருவோம். அதை இயேசுவின் திராட்சை ரசமாக பாவித்து சொட்டு சொட்டாகக் குடித்தாலும் பெரும்பாலும் மதிய உணவிற்கு முன்பே தீர்ந்துவிடும். அப்படியே மீந்தாலும் "மரந்தடுக்கி விழுந்தவன மாடேறி மிதிச்ச கதையா" சில ‘தில்’ சொர்ணாக்காக்கள் பிடுங்கி விடுவார்கள். இதற்காக தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கட்டி தோற்ற அவர் ஒரு நூதன ஏற்பாட்டை செய்தார். சில ஆசிரியைகளை உடன் அழைத்துக் கொண்டு, பள்ளியை ஒட்டி இடப்புறமிருந்த SBIஊழியர்கள் குடியிருப்புக்கும் மற்றும் சில வீடுகளுக்கும் சென்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டார். ஆசிரியர்களே நேரில் வந்து கேட்டதால் தட்டமுடியாமல் மதிய வேளைகளில் வாசலில் குடமும், இரண்டு ப்ளாஸ்டிக் டம்பளர்களையும் வைத்து உதவினார்கள். மேலும் ஆசிரியர்கள், வசதியுள்ள மாணவிகளிடமும் நாப்கின்களை சேகரித்து, ஸ்போர்ட்ஸ் ரூமில் வைத்து, எதிர்பாராமல் ஏற்படும் மாதந்திர தொந்தரவுகளுக்காக மாணவிகளுக்கு உதவிய ஒரே ஒரு ஆசிரியர் இவர்தான். இப்படியாக வகுப்பறையோடு நின்றுவிடாமல் வரலாறுகளை வெளியிலும் தேட தூண்டிய, தனது தொழிலையும் மாணவர்களையும் ஆத்மார்த்தமாக நேசித்த சௌந்தரவல்லி டீச்சரை நாங்கள் மிகவும் நேசித்தோம்.

கருத்துகள் இல்லை: