சனி, 30 ஜூன், 2012

ராமானுஜம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “தல-தளபதி”. இவருக்கு நெருக்கமானவர்கள் இவரை ஜாம் என்று விளிப்பார்கள். ஸ்வீட் மேன். கணிதம் மற்றும் கணினி பேராசிரியர் (டாக்டரேட்). (Institute of Mathematical Sciences) தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் நண்பர் வள்ளிதாசனுடன், அவரது அசிஸ்டெண்ட்டாக சுற்றிக் கொண்டு இருந்த காலத்தில், தென் சென்னை அறிவொளி இயக்கம் சம்பந்தமாக ராமானுஜத்தை சந்திக்க வேண்டும் என்று என்னை அழைத்து சென்றார். அவரைப் பற்றி அவரது அறிவியல் கட்டுரைகள் மற்றும் நண்பர்கள் மூலமாகவும் மட்டுமே தெரியும். ஒரு மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம். மாடி வீட்டில் யாரும் இல்லை. கீழேயிருந்த வீட்டு உரிமையாளரிடம் சாவி பெற்று திறந்து அமர்ந்திருந்தோம். அப்போது நண்பர், ஜாம் ஒரு சாவியை கீழ் வீட்டில் கொடுத்து இருப்பார். யார் வந்து அவர் பெயரை சொல்லி சாவி கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். எந்த நிபந்தனையும் கிடையாது என்றார். எனக்கு ராமானுஜத்தை விட, அந்த வீட்டு உரிமையாளர்களை நினைத்து ஆச்சரியமாக இருந்தது! வாடகைக்கு குடியிருப்பவர்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில், சாவியை வாங்கி வைத்துக் கொண்டு, வருபவர்களுக்கு கொடுத்துகொண்டிருந்தால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். அது 'பேஜர்' காலம். எனவே யாருக்கோ தொலைபேச வேண்டும் என்று நண்பர் வெளியே போய்விட்டு வருகிறேன் என்றார். நண்பரும் நிறைய நல்ல பிரின்ஸ்பில்ஸோடு வாழ்பவர். அதில் ஒன்று, அவருக்கு வரும் அழைப்புகளுக்கு யாராக இருந்தாலும் முடிந்தவரை உடனடியாக பதிலளிப்பது. அவர் வெளியே சென்றுவிட, ஹாலில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து முன்னால் இருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்தேன். அச்சமயத்தில் கதவை திறந்து கொண்டு, அந்த காலத்து அரவிந்சாமி, அஜீத் டைப் ஹீரோக்களை மொத்தமாக கலக்கி எடுத்த பெஸ்ட் அவுட்புட் போன்று ஒரு இளைஞன் உள்ளே வந்தான். வசீகரமான தோற்றம். ஒரு நீல ஜீன்ஸும், காட்டன் குர்தாவும் அணிந்திருந்தான். என்னைப் பார்த்து ஹலோ என்று புன்னகைக்கவும், நானும் ஹலோ என்றேன். ஜாமின் மாணவனாக இருக்கலாம் என்று எண்ணினேன். இளைஞன் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வெளிப்பட்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு கோப்பையை நட்புடன் என்னிடம் நீட்டி, ஹலோ! நான் ராமானுஜம். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? என்றார். எனக்கு பேச்சே வரவில்லை. ஏனெனில் அவரது பெயர், படிப்பு வேலை எல்லாவற்றையும் வைத்து ஒரு சிறிய வழுக்கை அல்லது நரையுடன் கூடிய கண்ணாடி அணிந்த ஒரு வயதானவரை எதிர்பார்த்து சென்றிருந்த எனக்கு அதிர்ச்சி. ச்சே! இந்த மாதிரி ஒரு நபர் நமக்கு வாத்தியாராக வந்திருந்தால், கணிதப்புலி, கணினி புலியாக மாறியிருப்போம் என்ற கண நேர ஜொள்ளை துடைத்துவிட்டு பேசத் துவங்கினேன். நண்பர் வள்ளிதாசனும், நானும் அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். எங்களுடன் உரையாடிக் கொண்டே பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று வேலைகளை செய்து கொண்டிருந்தார். பின் கம்ப்யூட்டரில் சிறிது நேரம் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். இரவு தோசை செய்து கொடுத்தார். பின்னர் ஹாலில் அமர்ந்து நள்ளிரவு வரை அறிவொளி இயக்கம் தொடர்பான வேலைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் பற்றி விசாரித்தார். கல்லூரி படிப்பு தாண்டி படிப்பீர்களா? எனக் கேட்டார். பு.பி, திஜா தொடங்கி ஜெகே, வண்ணநிலவன், அசோகமித்திரன், சுஜாதா, அழகிரிசாமி என்று மிகப் பெரிய பட்டியலைக் கொடுத்தேன். படிப்பை பொழுதுபோக்கா இல்லாம தினசரி பழக்கமா வச்சிருக்கீங்க போல பாராட்டுக்கள் என்றார். தமிழ் ஓகே! ஆங்கிலத்தில்? என்று கேட்டார். உண்மையில் ரஷ்ய, பிரஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களைத் தாண்டி எனது ஆங்கில அறிவு ரொம்ப, ரொம்ப கம்மி. தமிழ் வழிக் கல்வியில் படித்ததால் ஆங்கில அறிவை வளர்த்து கொள்வதற்காக கல்லூரி நண்பர்களிடம் ஒன்றிரண்டு புத்தங்கள் வாங்கிப் படித்திருக்கிறேன். அதோடு அப்போது குமுதத்தில் இது போன்ற ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பு, தொடராக வந்ததையும் படித்ததுண்டு அவ்வளவே! இருந்தாலும் அழகான பேராசிரியர் முன் அதையெல்லாம் வெளிப்படுத்த விரும்பாமல், சேஸ், நான்சி ட்ரூ என்று சொல்லி வைத்தேன். தமிழ் அளவுக்கு உங்களுக்கு ஆங்கிலத்தில் சரியான கைடன்ஸ் இல்லை. என்னிடமிருக்கும் புத்தகங்களை எடுத்து படியுங்கள் என்றார். இடையே ஆரிகாமி (காகிதக் கலை) தவளை ஒன்றை செய்து தவளைகளைப் பற்றி சில சுவையான விஷயங்களை கூறினார். மணி ஒன்றை நெருங்கியதும், உறங்கலாம்! அதிகாலை செல்ல வேண்டும். ம்யூசிக் கிளாஸ் போகவேண்டும் என்றார். பாட்டா? என்றேன் ஆச்சரியத்துடன். ஆமாம் வயலின் எளிதாக கற்றுக் கொள்வதற்கு வாய்பாட்டு நல்லது என்று போகிறேன் என்று கலவரப்படுத்தினார். இவரென்ன மனுஷனா? ரோபோவா என்று ஆச்சரியம் வந்தது. எனது வாழ்க்கையில் ஓரிரவுக்குள் மிகப் பெரிய அபிப்பிராயத்தை எனக்குள் ஏற்படுத்திய ஒரு மனிதர் இவர் மட்டுமே! நான் எல்லாம் தெரிந்த பெரிய ஆள் இல்லையென்றாலும் யாரிடமும், எந்த விஷயத்திலும் எளிதில் இம்ப்ரெஸ் ஆகிவிட மாட்டேன். அறிவியல் இயக்க பட்டறையில் விஷயங்களை இவர் எளிமையாக விவரிக்கும் விதம், வித்தியாசங்கள் இன்றி எல்லோரிடமும் நட்பு பாராட்டும் முகம் , கணிதம், அறிவியல் துறைகளை தாண்டிய ஆர்வங்கள் இவர் என்று ஏற்படுத்திய ஆச்சரியங்கள் ஏகப்பட்டவை! மிக எளிய மனிதர்! நம்மூரில் எளிமை பலவகைப்படும். முதலாவது அதிகம் செலவு செய்து எளிமையாக இருப்பது. இது காந்தியவகை! இரண்டாவது, எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு ஒரு கட்டத்தில், போங்க பாஸ்! என்னால முடியாது என்று உடம்பு முறுக்கிக் கொள்ளும் போது எளிமையாக இருப்பது. இது இன்றைய தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ட்ரெண்ட். மூன்றாவது, தேர்தல் நேரங்களில் கிராமத்து எளிய மக்களின் வீடுகளில் நுழைந்து கலவரப்படுத்துவது. நான்காவது, முதல் வாரத்தை கேட்பரீஸோடு தள்ளி, இரண்டாவது வாரத்தில் ஒரு வேளை காப்பியை தள்ளி, மூன்றாவது வாரத்தை முக்கி, முக்கி தள்ளி, நான்காவது வாரத்தில் நாக்கு வெளியே தள்ளி, முப்பது நாட்களை ஒரு மாதத்திற்கு வைத்தவனை சபித்துக் கொண்டிருக்கும் கட்டாய எளிமை. இது பெரும்பாண்மை சமூகம். இது எதையும் சாராத எளிமை இவருடையது. சம்பாதிப்பதற்கான படிப்பு, திறமை, வாய்ப்பு எல்லாம் இருந்தும் அதை பொருட்படுத்தாது தான் சார்ந்திருக்கும் இந்த சமூகத்திற்கு இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்று வாழ்வது. இடத்திற்கேற்றவாறு அனுசரித்து இருந்து கொள்வது. எளிமையான, சௌகரியமான உடை. கையில் வாட்ச் கூட அணிந்து இருக்கமாட்டார். விஷயங்களை எளிய தமிழ், கடின தொழில்நுட்ப மொழி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிராளிகளின் அலைவரிசைக்கு ஏற்ப பேசுவார். எந்த விஷயத்தையும் யாரிடமும் சிரித்த முகத்துடன் விளக்குவார். யார் என்ன சொன்னாலும் குழந்தையாக இருந்தாலும் பொறுமையாக கவனித்து கேட்பார். இன்றும் துறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பவர். தேசிய பாடதிட்ட கட்டமைப்பில் (NCF) முக்கிய பங்குவகிப்பவர். NCERT பாட புத்தகவடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். சமையலில் இருந்து கணிதம், கம்ப்யூட்டர், அறிவியல், இலக்கியம், சமூகம், சங்கீதம் என்று A-Z பேசக் கூடிய லெஜண்ட். இவர் வெளியில் பாடப் படாத(un sung) நிகழ்கால ஹீரோ என்று சொல்லலாம். இன்றும் யூ டியூபிலிருந்தும் மற்ற செய்திகளில் இருந்தும் இவரைப் பற்றி வெளியாகும் தகவல்களை தேடிப் படிக்கிறேன். NCERT இயக்குனர் பதவிக்கு அவரது பெயர் முதலாவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது வரை! அறிவியல் இயக்கம், குழந்தைகளுக்கான அறிவியல் பங்களிப்பு, இந்த சமூகத்தில் எளிய மனிதர்களின் மீதான அக்கறை என்ற இவரது பாதை வணக்கத்திற்கு உரியது. Hats off to you Mr. Ramanujam. மனிதம், ஹ்யூமன்(humane) இந்த வார்த்தைக்கு அகராதியைப் பொறுத்தவரை அன்பு, கருணை, உயர்ந்த பண்பு என்று பலவாறாக அர்த்தப்படுத்தபடுகிறது. அத்தகைய குணங்களை கொண்டவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று அழைக்கும் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள் என்றுதானே அர்த்தம். எத்தனை மனிதர்கள் மனிதகுலப் பாதையில் சத்தமின்றி தங்களை வெளிப்படுத்தாது மகத்தான காரியங்களை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டு இருக்கிறார்கள் சக உயிரினங்களுக்காக. ஒவ்வொரு நாளும் முகமறிந்த, அறியாத மனிதர்களின் உதவியுடன்தான் நாம் நமது வாழ்வின் நிம்மதியையும் சௌகரியங்களையும் அனுபவிக்கிறோம். எத்தனை மனிதர்கள் தங்களை அழுக்காக்கிக் கொண்டு நமக்கு சுத்தத்தை தருகிறார்கள். அடிவயிற்று பசியுடன் உணவளிக்கிறார்கள். கந்தலாடைகளை உடுத்திக் கொண்டு நல்ல உடைகளை தருகிறார்கள். இந்த பூமியில் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது. ஆதியில் மனித இனம் குழுக்களாக காடுகளில் திரிந்த காலத்தில் ஒன்று மற்றொன்றை அழித்து கடைசியாக நிலை கொண்டவர்கள்தான் தற்போதைய மனித இனம் என்கிறது வரலாறும் அறிவியலும். அக் கூற்றுப்படி நாம் ஒரே மனிதஇனம் அவ்வளவே. மனிதர்களின் பேராசையாலும் வக்கிரத்தாலும் இந்த பூமி சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித இனத்தை தவிர்த்து தனது தேவைக்கு அதிகமாக சேர்ப்பதாக, தனது சக இனத்தை சுரண்டி கொழுப்பதாக வேறு ஒரு உயிரினத்தை சுட்டி கூற முடியுமா நம்மால்? எங்கே தொடங்கியது இந்த சுரண்டல்? தோழியின் மகள் (சிறுமி) சமீபத்தில் கூறினாள். இந்த பணத்தை கண்டுபிடித்தவரை கண்டுபிடித்து உதைக்க வேண்டும். அதனால்தான் இந்த ஏற்ற தாழ்வு என்று. அவளிடம் கூறினேன் பணம் என்பது வேறு எந்த கண்டுபிடிப்புகளையும் போலவே சில வசதிகளுக்காக செய்யப்பட்ட ஒன்று. கண்டுபிடிப்புகளை நம்மால் ஒரு போதும் குற்றப்படுத்த இயலாது. நமது பேராசைகளையும் அதற்கு சாதகமாக கண்டுபிடிப்புகளை மாற்றி உபயோகிக்கும் வக்கிரத்தையும் மட்டுமே குற்றப்படுத்த முடியும். நமது வாழ்வின் மகத்தான தருணங்கள் என்று நாம் எதை சொல்கிறோம்? ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். வீடு, கார் வாங்கியதையா? பதவியையா? நிச்சயம் இல்லை. நமது வீட்டில் ஒரு உயிரினம் பிறந்த அல்லது வந்த தருணத்தைதான். அது ஒன்றுதான் இந்த பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. யார் எப்படி போனால் என்ன? நமது பிள்ளைகள் நல்லபடியாக இருந்தால் போதும் என நினைக்கும் நமது பேராசையின் காரணமாக நம்மால் நாசமாக்கப்பட்ட ஒரு சூழலில் நமது சந்ததியினர் எங்கனம் நிம்மதியாக வாழ இயலும்? எத்தனை, எத்தனை மனிதர்கள் நம் வாழ்வில் கடந்து செல்கிறார்கள் ஏதோ ஒரு பாடத்தை, செய்தியை சொல்லியவண்ணம்! நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கும் என்பார்கள். செய்யக் கூடியது, செய்ய கூடாதது என்று இரண்டுமே இருக்கும். தங்கள் வாழ்க்கையின் மூலம் மேற்சொன்ன இந்த இரண்டையும் எனக்கு கற்று தந்த, தருகின்ற, தர இருக்கிற அனைத்து மனிதர்களுக்கும் நன்றி!

ஞாயிறு, 10 ஜூன், 2012

SPL -II

மறுநாள் காலை சுந்தர், வெற்றியுடன் முதலாவதாக சென்றுவிட்டான். மற்றவர்கள் ரமேஷ் வீட்டு வாசலில் சேர ஆரம்பித்தனர். முருகேசன் தம்பியுடன் வந்து சேர்ந்தான். 'மொட்ட' ரவி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இருவரை கூட்டி வந்தான். பாஸ்கர் ஒரு நண்பனையும் செந்தில் ஒருத்தனையும் கூட்டிக் கொண்டு வர சீனு டென்ஷனான். எதுக்குடா இத்தனைபேர் என்று கேட்க, அதனால என்னடா? பார்வையாளர்கள், உதவிக்கு ஆட்கள் என்று பதிலளித்தான் 'மொட்ட'ரவி. நம்ம விளையாடும் போது தண்ணி கிண்ணி எடுத்து கொடுக்க, ஸ்கோர் போர்டு பக்கத்துல என்று நம் ஆட்கள் இருக்கிறது சேஃப்தானே? இதுவும் சரி என்று பட்டது. பார்த்தா வரவில்லை. இந்த பரதேசி பார்த்தா என்ன பன்றான்? என்று கொந்தளித்தனர். ரமேஷும் பாலாஜியும் பார்த்தா வீட்டிற்கு சென்றனர். அங்கு நிலமை சரியில்லாமல் இருந்தது. ஸாரிடா! பாட்டி தவறிட்டா. காலம்பற நியூஸ் வந்தது. ஊருக்கு கிளம்பிண்டு இருக்கோம். யாரண்டையாவது சொல்லி அனுப்பலாம்ன்னு வெய்ட் பண்ணின்டு இருந்தேன். நீங்களே வந்துட்டேள் என்றான் பரிதாபமாக. ஸாரிடா! சரி போய்ட்டு வா என்றனர் டீமின் முக்கிய ஆல்ரவுண்டர் ஒருவனை தவறவிட்ட வருத்ததுடன். நல்லா விளையாடுங்கோ. ஆல் த பெஸ்ட் என்று வழியனுப்பி வைத்தான் பார்த்த சாரதி. இவர்களுக்கு முன்னதாக சென்ற சுந்தரும் வெற்றியும் மைதானத்தில் காத்துக் கொண்டிருந்தனர். நான்கைந்து யமஹா மற்றும் ராஜ்தூத்களில் கணிசமான கும்பல் வந்து இறங்கியது. பற்றாக்குறைக்கு ஒரு ஆட்டோ வேறு! குழப்பமாக பார்த்த சுந்தர் வெற்றியிடம், இவுங்களாடா? என்றான் சந்தேகமாக. அப்படித்தான் நினைக்கிறேன்! என்றான் வெற்றி. என்னது நினைக்கிறியா? அப்போ உனக்கு யாரையும் தெரியாதா? என்றான் கலவரமாக. அது வந்து, நீ என்ன சொன்னியோ அதை அப்படியே என் கசின் கிட்ட சொன்னேன். அவன் சொன்னதை அப்படியே உன்கிட்ட சொன்னேன். என்றான் வெற்றி கூலாக. ஆக்ச்சுவலி என்று தொடங்கிய வெற்றியை இடைமறித்து, பொத்து. மவனே உன்ன அப்புறம் வச்சுக்கிறேன் என்றபடி அவர்களை நெருங்கினான். ஹலோ! ஐயாம் சுந்தர். டீம் வந்துகிட்டு இருக்காங்க. சோ, மத்ததெல்லாம் சொன்ன மாதிரி தானே என்று உறுதிபடுத்திக் கொண்டான் என்ன பேசினார்கள் என்பது தெரியாமலே! அவர்களும் ஆமோதித்தனர். தொடர்ந்து வந்த சீனுவும் மற்றவர்களும் இந்த கும்பலைப் பார்த்து ஜெர்க் ஆகினர். என்னடா இவனுங்க “சூப்பர் சுப்பராயனோட” அசிஸ்டென்டுகள் மாதிரி இருக்கானுங்க என்று மிரட்சியுடன் கேட்டனர். சுந்தர், அதெல்லாம் ஒன்னுமில்லடா. நம்ம பாட்டுக்கு விளையாடுவோம் என்றான் கலவரத்தை மறைத்தவாறு. அனைவரும் ஒரே மாதிரியாக கருப்பு பேண்ட், கருப்பு ரவுண்ட் நெக் டி ஷர்ட். அதில் சிவப்பாக பூராண் மாதிரியான டிசைன் வேறு! தொப்பி. ஷூக்கள் என்று ஆஜானுபாகுவாக ஏதோ விஜயகாந்த் சண்டைப்பட ஷுட்டிங்கிற்கு வந்தது போல் தோற்றமளித்தனர். ‘மொட்ட’ ரவி அவர்களிடம் எதுக்கு இத்தனை பேர்? யாரெல்லாம் விளையாட போகிறார்கள்? என்று விவரம் கேட்டான். கேப்டன் என்று சொல்லப்பட்ட ஜெயமணி, பதினோரு பேர் விளையாடுவோம். மூன்று அம்பையர். ஸ்கோர் எழுத நாலு பேர். ஃபிசியோதெரபிஸ்ட் என்று அடுக்கினான். பாலாஜி, என்னது ஃபிசியோதெரபிஸ்ட்டா? என்று கேட்டான். ஆமா, அங்கே பெரிய பேக் வைத்துக் கொண்டு நிற்கிறானே அவன்தான். ஏதாவது அடிபட்டா ஹெல்ப் பண்ணுவான். அந்த பேக்ல பாண்ட்-எய்ட், டெட்டால், மருந்து எல்லாம் இருக்கு. உங்களுக்கு அடிபட்டா நீங்க கூட யூஸ் பண்ணிக்கலாம் தம்பி என்றான் பெருந்தன்மையாக! பாலாஜிக்கு கண்ணைக் கட்டியது. வில்லன் பொன்னம்பலத்தின் அண்ணன் போன்று இருந்த ஒருவர் வந்து என்ன மேட்ச் தொடங்கலாமா? என்று கேட்க, சீனு அவரை கேள்விக்குறியுடன் நோக்கினான். மணி, சீனுவை நோக்கி அவர் தண்டபாணி. எங்க மேனேஜர். ஃபைனான்சியரும் கூட என்றான். நல்லது தொடங்கலாம்ண்ணே என்றான் சீனு. தண்டபாணி, தம்பி மொதல்ல பணத்த என்கிட்ட கொடுத்துடுங்க மேட்ச் முடிந்ததும் செட்டில் பண்ணிக்கிருவோம் என்றார். மேட்ச் முடியட்டும்ண்ணே என்றான் ரவி. எப்பவுமே இதான் வழக்கம் என்றார். பணம் பாக்கெட் மாறியதும், டாஸ் யார் போடுவது என்று பேச்சு வந்தது. அதெல்லாம் ஒன்னியும் வேண்டாம். நீங்களே பேட் பண்ணுங்க என்றார் தண்டபாணி. முதல் ஓவரை ஒருவன் வீச ஒரு பந்தைக் கூட தொடமுடியவில்லை. அடுத்தடுத்த ஓவர்களிலும் திக்கி திணறினர். காரணம் அவர்கள் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதால் அல்ல. முட்டியிலிருந்து, முகவாய்கட்டை வரை எது சிக்கினாலும் பெயர்த்துவிடுவது என்ற அவர்களது அணுகுமுறையால். அவர்களது அம்பயர்களோ ‘வைட்’ ‘நோ பால்’ என்ற பதங்களை அறியாதவர்களோ? என்று சந்தேகம் வரும்படியாகவே நின்று கொண்டிருந்தனர். இதைக் கண்ட மொட்டரவி ஜெயமணியை அழைத்து அவர்கள் தரப்பில் ஒருவரும் தங்கள் தரப்பிலிருந்து ஒருவரும் அம்பையராக இருக்கவேண்டும் என்று கூறினான். ஒன்னியும் பிரச்சினையில்ல இருக்கட்டும் என்றான். மொட்டரவியின் நண்பனை அழைத்து அம்பையராக்கியதில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. தாக்குவது போல் பௌலிங் போடக்கூடாது என்றபோது, தோடா! கொயந்த புள்ளைங்க மாரி அழுவுறானுங்கோ என்று கிண்டலடித்தனர். அருள் சுந்தர் குமார் மூவரும் வேகத்துடன் சுழற்றி ஒரு வழியாக முடிவில் அறுபத்திஐந்து ரன்களை தேத்தியிருந்தனர். பேட்டிங் முடிந்ததும் ஸ்கோர் போர்டுக்கு அருகில் கண்காணித்துக் கொண்டு இருந்த மொட்ட ரவியின் நண்பனும், முருகேசனின் தம்பியும் வியர்த்து விறுவிறுத்து வந்தனர். அவங்க வைச்சிருக்கிறது வெறும் மருந்து மட்டுமில்ல என்றனர். பின்ன? என்றான் சீனு. அவனுங்க பேக்கை போய் பாருங்க! என்று மட்டும் சொன்னர். இருக்கிற இம்சை போதாதுன்னு இவனுங்க வேற என்று அலுத்துக் கொண்ட முருகேசன், சுந்தர் அவர்கள் அருகில் சென்று நோட்டமிட்டனர். மற்றவர்கள் முறைத்துக் கொண்டிருக்க, வாங்க,வாங்க முறுக்கு, சிப்ஸ் ஏதாவது சாப்பிடுங்க தம்பிகளா என்று உபசரித்தார் தண்டபாணி. அங்கு ஸ்நாக்ஸ், சோடாவிலிருந்து க்வார்ட்டர் பாட்டில்கள் வரை மினி “ஸ்நாக்- “பாரை” கண்டதும் வெலவெலத்து போயினர் இருவரும். ஆனால் அவரோ அலட்டிக் கொள்ளாமல் தம்பிகளா! சில்லறை இல்ல உங்க பசங்க யாரையாவது அனுப்பி சோடாவும், சிகரெட்டும் வாங்கிட்டு வர சொல்லுங்க. கடைசில கணக்கு பார்த்துக்கல்லாம் என்றார். என்ன சார் இது விளையாடிக்கிட்டு இருக்கும் போது இதெல்லாம் என்றான் முருகேசன் அடிக்குரலில். குழுவிலிருந்த ஒருவன், அண்ணனையே எதிர்த்து பேசுறீயா? தட்டினேன்னா தாராந்துடுவ என்று எகிறினான். ஜெயமணி குறுக்கிட்டு, சின்னபசங்க கிட்ட போய் எகிறிக்கிட்டு என்று அதட்டினான். சரிப்பா மேட்ச்க்கு டைமாச்சு சீக்கிரம் போய் வாங்கிட்டு வாங்க என்றான். இவர்களிடம் பேசிப் பலனில்லை என்று நகர்ந்தனர். இதைக் கேட்ட அனைவரும் மிரண்டனர். முருகேசனின் தம்பியிடம் காசைக் கொடுத்து அனுப்பினர். ஏண்டா பேசாம இப்படியே போய்ருவோமா என்றான் வெற்றி பயத்துடன். இப்ப வேற காசக் கொடுத்திருக்கோம், விளையாடி பார்த்துவிடுவோம் என்றனர் மற்றவர்கள். இதற்கிடையே அந்த க்ரூப்பில் இருவர் எல்லைக் கோட்டிற்காக (பவுண்டரி) போட்டிருந்த சுண்ணாம்பு பவுடர் மேல் சிரத்தையாக வேறு ஒரு கோடு வரைந்து கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களில் ஒருவன் பழைய கோட்டை அழித்த வண்ணம் வர, மற்றவன் அரை அடி முன் தள்ளி பவுடரைத் தூவி எல்லைக்கோட்டை குறுக்கி கொண்டிருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை. வேறு வழியின்றி ஆட்டத்தைத் தொடங்கினர். முதலாவது ஓவரை தொடங்கினான் பாஸ்கர். பாஸ்கர், ரவி, சுந்தர் என்று மாறி, மாறி, நாக்கு வெளி தள்ள பந்துகளை வீசினர். ஏற்கனவே இருந்த போட்டி டென்ஷனுடன் இப்போது புதிதாக பயமும் சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட அனைவரின் பௌலிங்கும் “இருபத்திமூன்றாம் புலிகேசி”யின் அம்பைப் போல் இலக்கின்றி பாய்ந்து கொண்டிருந்தது! பந்து பேட்ஸ்மேன்னை தவிர்த்து அனைவரையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. கோபமான சீனு, அனைவரையும் அழைத்து என்னங்கடா ஆச்சு? என்று எகிறினான். எல்லோருமே, என்னன்னு தெரியலை. கன்ட்ரோலே இல்லை என்று ஒரே மாதிரியாக பதிலல்லாத பதிலை கூறினர். எனக்கு இந்த ஷூ செட்டாகவில்லை. இதை கழற்றி விட்டு ஓடினால் கண்ட்ரோலுடன் பந்து வீச முடியும் என்றான் பாஸ்கர். எதையாவது பண்ணித் தொலை! என்றான் சீனு. ஷூக்களை கழற்றி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அடுத்த ஓவரை வீசினான். இந்த முறை அவனது ஓவரில், பந்துக்களின் எண்ணிக்கை பண்னிரெண்டு! வெறுத்துபோன சீனு, வேடிக்கை பார்க்க வந்த முருகேசனின் தம்பியை விளித்து பந்து வீச பணித்தான். இந்த வியூகம் வீண் போகவில்லை! டென்ஷன் இல்லாததாலும், “திண்ணைல உட்கார்ந்து இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்ததாம் கல்யாணம்” என்கிற எதிர்பாரா சந்தோஷத்தாலும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி டீமின் ஸ்டார் பௌலர் ஆனான். ஆயினும் சூடு கண்ட ஆட்டோ மீட்டரைப்போல் அங்கு ஸ்கோர்போர்டில் ரன்கள் ஏறி இருந்ததால், அவர்கள் டீம் வெற்றிபெற்றதாக அவர்களே அறிவித்து மகிழ்ந்து கொண்டாடினர். இதற்கிடையில், எதிரணியில் ஒருவன், விளையாட்டை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பாஸ்கரின் இரவல் ஷூவில் கூரிய கருங்கல்லை வைத்து குத்திக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட பாஸ்கருக்கு மயக்கமே வந்து விட்டது. ஓடிச் சென்று ஷூவைப் பறித்தான். அந்தக் கல்லைக் கொண்டு அவன் நெஞ்சில் குத்தியிருந்தாலும் வலித்திருக்காது. மனுஷனாடா நீ? ஷூல கல்ல வச்சு குத்தி பேத்து வச்சிருக்க என்று அவனுடன் சண்டையிட்டான். அவனும் வேண்டுமென்று செய்யாத காரணத்தால் செய்த செயலின் வீரியத்தை அறியவில்லை. சப்ப மேட்டருக்கு போய் ஏதோ உன் ஷூவை திருடிக்கிட்ட மாதிரி பேசிக்கிட்டு இருக்க. ஷூ போடறதுக்கு கால் இருக்காது என்று கத்தினான். சீனு, ‘மொட்ட’ரவி, அவனது நண்பர்கள் அனைவரும் சண்டையை விலக்கி சமாதனம் செய்து கொண்டிருந்தனர். மற்ற எல்லாவற்றையும் மறந்து, அருணை எப்படி எதிர்கொள்வது? என்ற கவலையில் ஒரு ஓரமாக ஷூவை மார்போடு அணைத்தபடி அமர்ந்து விட்டான். அனைவரும் பாஸ்கரை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பைக்குகளும், ஆட்டோவும் கிளம்பும் சத்தம் கேட்டது. சீனு, சுந்தர், ரவி மூவரும் அவர்களை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினர். அவர்கள் வண்டியிலிருந்தபடியே ‘தேங்க்ஸ்’ பாய்ஸ்! பை, பை! என்றபடி பறந்தனர். விளையாடிய வலியும், பணத்தை பறி கொடுத்த ஏமாற்றமும் சேர்ந்து, கண்ணீருடன் யாரும் எவருடனும் பேசாமல் வீட்டை நோக்கி சென்றனர். மறுநாள் வழக்கம் போல் மீட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாலை நேரமானதால் இளம் பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை கடந்து சென்ற தெருவாசிகள் சிலர், ஏம்ப்பா! நேத்து ஏதோ கிரிகெட் போட்டிக்கு போனிங்களாமே என்னாச்சு? என்று வினவினர். அதுவா அங்கிள்! ஜெயிச்சிட்டோம்! ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சோம். பட் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்! என்றபடி அரட்டையை தொடர்ந்தனர். பின் குறிப்பு: மேற்கண்ட ‘SPL’லை ‘சொதப்பல்’ / ’சூப்’ ப்ரிமீயர் லீக்! என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். .

ஞாயிறு, 3 ஜூன், 2012

SPL -I

நண்பர்கள் அனைவருக்கும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வணக்கம்! நம்மை ஆள்பவர்கள், ஆள துடிப்பவர்கள், அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ மக்களை ஒருவித அழுத்தத்திற்கும், அதன் காரணமாக ஒரு புரட்சி மனோபாவத்திற்கும் இட்டு செல்லும் நிலையிலும், மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன் மரம் உதிர்க்கும் சருகைப்போல அல்லவை களைந்து நல்லவை ஆற்றும் அனைவருக்கும் வணக்கம். நண்பர்களுக்கு நடந்த அத்தனை நல்ல விஷயங்களுக்கும் மகிழ்ச்சியான தருணங்களுக்கும் வாழ்த்துக்கள்! குழந்தைகள் ஸ்கூல், வேலை இதற்கிடையே உடல் உபாதைகளுக்காக பயிற்சி செய்ய தொடங்கியதில் கழுத்துவலி போய் திருகு வலி வந்ததால் விழுந்த இடைவெளி. இத்துடன் ஐபில் வேறு! இந்த ஐபில்ஐ பார்க்கும் போது, இதில் எவையெல்லாம் முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட ஆட்டங்கள் என்று புள்ளிவிவரங்களை வைத்து தனியாக ஒரு கேம் ஆடிக் கொண்டு இருந்தனர் குடும்பத்தினர். இதன் காரணமாக எழுந்த மலரும் நினைவு கீழே!“ஐபில்”, “சென்னை-28”க்கும் முன்பே நடந்த கதை இது! சென்னை முழுதும் ஆங்காங்கே க்ரிகெட் ஜுரத்தில் டீம்கள் உருவாகி, விடுமுறை நாட்களில் அடிக்கிற வெயில் வீணாகாமல் சிரமேற்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த காலகட்டம். எங்க ஏரியாவிலும் ஒரு டீம் தீவிரமாக நாங்களும் விளையாடுவோம் என்கிற டைப்பில் திரிந்து கொண்டு இருந்தது. உத்தேசமாக பதிமூன்றுபேர். இதில் வீடு மாறி போகிறவர்கள், புதிதாக குடி வருகிறவர்கள் என்று “அவருக்கு பதில் இவர்” என்கிற மெகா சீரியல் மாற்றங்கள் இருக்கும். தெருவில் தொடங்கி அருகில் இருக்கும் ஆவின் பூத்தை ஒட்டிய க்ரவுண்ட் வரை நேரம் கிடைக்கும் போது எல்லாம் க்ரிகெட்தான். அருள், சுந்தர், பாஸ்கர், ரமேஷ், பார்த்தசாரதி இந்த ஐவரும்தான் டீமின் முக்கிய ஆல்ரவுண்டர்கள் மற்றும் மேனஜ்மென்ட் கமிட்டியும் கூட! பாஸ்கர், ரவி, சீனு முதன்மை பந்துவீச்சாளர்கள். இதுபோக அருள் மற்றும் பாலாஜி கம்பெனி ஸ்பான்ஸர்ஸ். இருவரும் வசதியான வீட்டு பையன்கள். எங்கள் தெருமுடிவில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் மேடையில் எப்போதும் கூடி கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த டீம். ஒரு மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மூச்சிரைக்க வந்த சுந்தர் விஷயம் தெரியுமாடா? ராயபுரத்தில ஒரு டீம் நூறு வச்சா இருநூறுன்னு பெட் கட்டி விளையாடுறானுங்களாம். போவமா? என்றான். டேய்! வழக்கம் போல குழப்ப ஆரம்பிச்சுட்டான் என்றான் சீனு. இல்ல மச்சி, அங்க ஒரு டீம் ரெகுலரா க்ரிகெட் விளையாடுதாம். அந்த டீமோட யார் வேணாலும் மோதலாம். பந்தயப் பணத்தை நம்ம தகுதிக்கேத்த மாதிரி நூறோ, இருநூறோ ஏன் ஆயிரம் கூட வச்சிக்கெல்லாம். தீர்மானம் நம்மளோடது. நம்ம தோத்தா நம்ம சொன்ன அமவுண்ட்ட கொடுத்திடனும். ஆனா நாம ஜெயிச்சோம்ன்னா அவனுங்க டபுள் த அமவுண்ட் அதாவது நூறு கட்டியிருந்தா இருநூறா கொடுத்துடுவாங்களாம் என்று விவரித்தான் சுந்தர். உனக்கு யார்டா சொன்னா? என் க்ளாஸ்மேட்ரா. அங்கயிருக்கிற அவனோட கசின் சொன்னதா சொன்னான். சூப்பரா இருக்கே என்றனர் அனைவரும். இதுல ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு வேண்டாம் என்றான் பார்த்தா என்ற பார்த்தசாரதி. சரியான சடடா இவன்! எதுக்கெடுத்தாலும் சந்தேகம் என்று கடுப்பானான் சுந்தர். விளையாட போறோம், தோத்தா நாம சொல்றத கொடுக்க போகிறோம். ஜெயிச்சா டபுளா கிடைக்கும் ரொம்ப சிம்பிள். எல்லோருக்கும் மோதி பார்த்தாலென்ன என்றே தோன்றியது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து இருவாரங்களுக்கு கடுமையாக ப்ராக்டீஸ் செய்வது. பந்தய பணத்தை திரட்டுவது. சுந்தர் க்ளாஸ்மேட் உதவியுடன் அந்த டீமை சந்திப்பது. அதற்கடுத்து வரும் ஞாயிற்றுகிழமையில் போட்டியிடுவது. டீம் மெம்பர்கள் அனைவரும் அவரவர்க்குரிய உபகரணங்களை அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. இத்தனை நாள் பொழுதுபோக்காக இருந்த ஒரு விஷயம் இன்றிலிருந்து ஒரு முக்கிய குறிக்கோளாக ஆன பெருமிதத்துடன் சென்றனர். பாஸ்கர், ரவி இருவரும் ஒரே காம்பவுண்டில் குடியிருந்தனர். அருளும் பாலாஜியும் ஒரே தெருவில் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள். மற்றபடி ப்ளஸ்டூ முடித்துவிட்டு அப்பாவின் கடையிலேயே வேலை பார்த்து கொண்டிருந்த குமார். அரியர்ஸுடன் அலைந்து கொண்டிருந்த முருகேசன். அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த செந்தில் இவர்களுடன் சொற்ப சம்பளத்தில் வேலைபார்த்து வந்த முப்பத்திஐந்து வயதாகியும் திருமணமாகாத மொட்ட ரவியும் அடக்கம். டீமில் இரண்டு ரவிகள் இருந்ததால் இந்த அடைமொழி! காரணம் இஞ்ச் அளவு தாண்டி முடியை வளர விடமாட்டான். இவர்களின் பொருளாதார நிலைகள் வேறு வேறாக இருந்தாலும் இந்த நண்பர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருந்தது. அருள், பாலாஜி சுந்தருடன் சேர்ந்து உருப்படாமல் போவதாகவும், சுந்தர், பார்த்தா, ரமேஷுடன் சேர்ந்து வீணாவதாகவும், ரமேஷ், சீனு மற்றும் குமாரால் நாசமாவதாகவும், குமார், பாஸ்கர் மற்றும் செந்திலுடன் சேர்ந்து கூத்தடிப்பதாகவும், பாஸ்கரை, ரவியும் செந்திலும் சேர்ந்து கெடுப்பதாகவும், அருள் மற்றும் பார்த்தா இருவரின் சேர்க்கையே செந்திலின் எதிர்காலத்திற்கு தடையாக இருப்பதாகவும், பார்த்தாவின் பாழ்விற்கு பாலாஜியும், சீனுவுமே காரணம் என்றும் , சீனு, ரவி இருவரும் முருகேசன் சகவாசத்தால் சீரழிவதாகவும், முருகேசனின் அரியர்களுக்கு ‘மொட்ட’ ரவியே காரணம் என்றும், ‘மொட்ட’ ரவியோ மேற்படி அனைவராலும் மொட்டையாக்கப்பட்டவன் என்றும் மேற்கண்ட இவர்களின் குடும்பத்தினரால் கூறப்படும் குற்றசாட்டுகளே அது! ஆயினும் “செயற்கரிய யாவுள நட்பின் என்று ‘டோண்ட் ஒர்ரி முஸ்தபாக்களாக’ வலம் வந்து கொண்டு இருந்தனர். அடுத்து வந்த நாட்களில் தீவிரமாக விளையாட ஆரம்பித்தனர் அனைவரும். (பயிற்சி என்று சொல்ல இயலாது). அதுவரை சொந்தமாக ஒரு பேட்கூட இல்லாத பாஸ்கர் அம்மாவிடம் பேட்டுக்கு பணம் கேட்டான். அம்மா, அப்பாவிடம் சொல்ல, அப்பாவோ அவனது தங்கையின் எதிர்காலம் தொடங்கி, பாஸ்கரின் பிறவா மகனின் எதிர்காலம் வரையிலான பிரச்சனைகளை அலசத் தொடங்கினார். பேட்டை தொடர்ந்து ஷூவிற்கும் அடித்தளமிட நினைத்திருந்த பாஸ்கர் வெறுத்துப் போனான். கேக்கிறத வாங்கித்தர முடியதாவங்க எதுக்கு பெத்துக்கிறீங்க? என்று முனக, அடி செருப்பால! வாய தச்சுருவேன். பணக்கார பசங்களோட சேர்ந்து மரியாதை தெரியாத தறுதலையா ஆகிட்டு இருக்கான். சொல்லிவை! என்று அம்மாவிடம் எகிறினார் அப்பா. செந்திலின் தீவிர விளையாட்டைக் கண்ட அவனது மாமா அக்காவிடம், அவன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? சொன்னாலும் காதுல போட்டுக்கிறது இல்ல. உங்க அப்பாகிட்ட சொல்லி வை. நாளைக்கு நான் கவனிக்காம விட்டுட்டேன் அப்படின்னு கம்ப்ளைண்ட் வந்தா கடுப்பாகிடுவேன் என்றார். அருளின் வெல் எஜுக்கேடட் அம்மாவோ, இப்படி லோ லெவல் பசங்களோட சுத்திகிட்டு இருந்தா உன் வாழ்க்கையும் லோவாகிடும் என்று எச்சரித்தார். விளையாடுவதே பிரச்சனையாக, பந்தயப் பணம், உபகரணங்கள் இவற்றுக்கு வீட்டில் பணம் கேட்க இயலாத நிலை உருவானது. அருள், ‘மொட்ட’ரவி, பாலாஜி மூவரும் சேர்ந்து கூடுதலாகவும் மற்ற அனைவரும் அவரவர்க்கு இயன்ற அளவும் பணம் திரட்டவும் முடிவு செய்தனர். அதில் வரும் தொகையை வைத்து போக்குவரத்து செலவையும் பந்தயப்பணத்தையும் முடிவு செய்யலாம். உபகரணங்களை வெளி நண்பர்களிடம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ராயபுர டீமை சந்திக்க நாள் குறிக்கப்பட்டது. சீனுவும்,சுந்தரும் சென்று அந்த குழுவினரோடு பேச வேண்டும் என்று முடிவு செய்தனர். சீனு சுந்தரிடம்,உன் க்ளாஸ்மேட், அவன் கசின் இரண்டு பேரோடவும் போய் நீயே பேசிட்டு வந்துடு. நீதான் கரக்ட்டா பேசுவ மச்சான் என்றான். நீ வாடா, நா மட்டும் தனியா போனா சரியா வராது என்றான் சுந்தர். அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.வேணுன்னா உன் க்ளாஸ்மேட் அவன் பேரென்ன ‘வெற்றி’ அவனையும் டீம்ல இருக்கான்னு சொல்லு.சேர்த்துக்கலாம்!எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு என்று போய் விட்டான். சிறிது யோசித்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெற்றியின் வீட்டுக்கு சென்றான். வெற்றி நீ என்ன செய்ற? உன் கசினோட போய் அந்த டீமை மீட் பண்ற. இந்த மாதிரி நம்ம டீம் இண்ட்ரஸ்டா இருக்காப்ல அப்படின்னு சொல்லி ஒரு சண்டேயா பார்த்து முடிவு பண்ணிரு.சரியா? என்றான். டென்ஷனான வெற்றி, டேய்! கேணத்தனமா பேசாதே. ஒரு விவரமும் தெரியாம நா எப்படி? நீயும் வா என்றான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் சொல்றத அப்படியே சொல்லிரு.உன் கசின் அவனையும் டீம்ல சேர்த்துக்கலாம். நோ ப்ராப்ளம் ப்ளீஸ்ரா!என்ற சுந்தர் பந்தய பணத்தை இரண்டு நாளில் தெரிவிப்பதாகவும் கூறினான். அடுத்து வந்த நாள்களில் வெற்றியை வைத்தே எல்லாம் பேசி முடிக்கப்பட்டது. இதற்கிடையே பாஸ்கர், பார்த்தசாரதி, ரவி, ‘மொட்ட’ ரவி நால்வரும் பேட் மற்றும் ஷூவுக்கு அலைந்து திரிந்தார்கள். அருள் தன்னிடமுள்ள இன்னொரு ஷூவை பார்த்தாவிற்கு தருவதாகக் கூறினான்.மொட்ட ரவி அலுவலகத்தில் தேற்றிக் கொண்டான். பாஸ்கர் அவன் காம்பவுண்டிற்கு எதிர் வீட்டிலிருக்கும் வசதியான அருணிடம் பேசிப் பார்த்தான். சிறிது யோசனைக்கு பிறகு, டேய் எங்கப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட்! என்னோடது காஸ்ட்லி ஷூ. அதனால நீட்டா திருப்பி தரணும் ஓகே! மேட்ச் அன்னைக்கு வந்து வாங்கிக்க. பாஸ்கர் நிம்மதியாக சென்றான். போட்டிக்கு முதல்நாள் பக்கத்து மைதானத்தில் கூடி பேசினார்கள். பேட் ஒன்றும் பிரச்சனையில்லை. அஞ்சு இருக்கு. க்ளவுஸ் மூணு. மேனேஜ் பண்ணிக்கலாம். தண்ணி, ஃபுரூட்டியெல்லாம் அவங்கவங்க கொண்டு வந்துருவோம் என்று முடிவு செய்து கொண்டார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஒயிட் டிரெஸ்ஸா போட்டுக்குவோம். யூனிஃபார்ம் மாதிரி இருக்கும். நம்மள பார்க்கும் போதே மிரளனும். எப்படியாவது ஜெயிச்சிரணும்டா! பணம் கைக்கு வந்ததும் பார்ட்டிதான்! உற்சாகத்துடன் சொன்னான் சீனு. பேட்டிங் பௌலிங் கூட ஓகே. ஃபீல்டிங்தான்டா கொஞ்சம் பார்க்கணும் என்றான் பார்த்தா! அதெல்லாம் பார்த்துக்கெல்லாம் என்ற சீனு சுந்தரிடம், மச்சி! எல்லாம் க்ரெக்ட்டா பேசிட்டேல்ல என்று கேட்க, மையமாக தலையாட்டி வைத்தான் சுந்தர். வெற்றி சரியாக செய்திருப்பான் என்ற நம்பிக்கையில். காலையில் எல்லோரும் எங்க வீட்டு வாசலுக்கு வந்துவிடுங்கள் அங்கிருந்து போகலாம் என்றான் ரமேஷ். இல்லடா, நானும் வெற்றியும் கொஞ்சம் சீக்கிரம் போய்விடுகிறோம். அவங்கள பார்த்து எதுனாலும் பேசி க்ளியர் பண்ணி வச்சிடறோம் என்றான் சுந்தர். அவனுக்கு உள்ளூற ஒரு படபடப்பு இருந்தது. ஓகே கைஸ்! ஆல் த பெஸ்ட் என்று கேப்டனுக்குரிய ஸ்டைலுடன் கை குலுக்கினான் சீனு. மறுநாள் காலை எல்லோரும் ஒன்று சேர்ந்து கிளம்ப வேண்டிய நேரத்தை முடிவு செய்து பெருமிதம், படபடப்பு, பயம் என்று கலவையான உணர்வுடன் கலைந்து சென்றனர். (போட்டி தொடரும்)

வியாழன், 17 மே, 2012

இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானம் ஆக்கப்பூர்வமானதா?

மிகப் பெரிய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களை உலகமெங்கும் செய்துவரும் அமெ ரிக்கா இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணையைக் கொண்டு வருவது நிச்சயம் ஈழமக்கள் மீதான அக்கறையாக இருக்கவே முடியாது. இலங்கையில் நடந்த போருக்கு உதவி செய்வதில் அமெரிக்கா, இந்தியா தொடங்கி சீனா, இஸ்ரேல் வரை ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளன. காரணம் இலங்கை பிராந்தியத்திலும், இந்துமகா சமுத்திரத்தில் கண்டறிப்படுகின்ற எண்ணை வளத்திலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதற்கேயன்றி எளிய மனிதர்கள் மீதான அக்கறையால் அல்ல. அமெரிக்கா, இலங்கையை சீனாவிடமிருந்து தள்ளி வைப்பதற்கான யுக்தியே இது. இலங்கை சம்மதத்தோடு கால் வைப்பது ஒரு விதம். சம்மதமின்றி கால் வைப்பது இன்னொரு விதம். முரண்பாடு ஏற்பட்டால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்க காலூன்ற முனையலாம். அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவின் சாராம்சங்கள் இலங்கைக்கு சாதகமானதாகவே இருக்கிறது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை இலங்கை அரசு விரைந்து செய்வதற்கு அழுத்தம் கொடுத்தல், அதற்கான கால அவகாசங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுதல் என்பதை அன்றி வேறு எதுவும் இல்லை. குற்றம் செய்தவனே அக்குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் அதற்கான கால அவகாசம் ஒரு வருடம். அதற்குள் முடியவில்லை என்றால் மேலும் ஆறுமாதம் நீட்டிப்பது. அதாவது பத்து எண்ணுவதற்குள் முடிக்கவேண்டும். இல்லையென்றால் பதினொன்றில் இருந்து எண்ணுவேன் என்கிற மாதிரி! புணரமைப்பு பணிகள் எல்லாவற்றையும் அரசே மேற்கொள்ளும். அரசு யாரை வைத்து மேற்கொள்ளும்? மீண்டும் இராணுவத்தினரை வைத்துதான்! இதற்கான ஆலோசனை, உதவியை மட்டும் ஐநா வழங்க வேண்டும்! இவையனைத்தும் எந்த வகையில் சரியானதாக இருக்கும்? இருதரப்பிலும் போர்குற்றங்கள் நடைபெற்று இருந்தாலும் அதிகாரமும் படைபலமும் அதிகமான அரசு தரப்பின் நடவடிக்கைகள் இனி யாரும் அரசுக்கு எதிராக சிந்திக்க கூடாது என்கிற அளவில்தான் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் எழுபதுகளில் பண்டாரநாயகே அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த கம்யூனிச சிங்கள இளைஞர்களை அரசு கொடூரமாக கொன்று குவித்தது. இலங்கையில் மட்டுமல்ல பெரும்பாலான அரசுகள், அரசுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களை எதிர்த்து நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளும் அடக்குமுறைகள் வேறுயாரும் அதைப்பற்றி சிந்திப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ நினைக்க கூடாது என்கிற வகையில் தான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த அடக்குமுறைகளும், அவமானங்களும் மக்களின் சுதந்திர உணர்ச்சியை தூண்டுவதாகவே இருக்கும். போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அந்த அளவு முக்கியம் அங்கு இப்போதுள்ள தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும். நமது வீர வசனங்களும், வெற்று கோஷங்களும் அங்குள்ளவர்களுக்கு ஒரு ரொட்டித் துண்டை கூட கொடுத்துவிடாது. கட்சி சார்பற்ற (குறிப்பாக தமிழக கட்சிகள்) உலகளாவிய தொண்டு நிறுவனங்களை புணரமைப்புக்கு ஈடுபடுத்திட வலியுறுத்துவதும், ஜநாவின் சர்வதேச உறுப்பினர்கள் அடங்கிய குழு ஊடகங்களின் நேரடிப்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வைப்பதும்தான் உண்மையில் வடக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்தும். இது போன்ற விஷயங்களை முன் வைத்து தீர்மானம் கொண்டு வர அமெரிக்காவை வலியுறுத்தி அதை செயல்படுத்துவதே தனிமைப்படுத்தப்பட்ட ஈழதமிழர்களுக்கான உண்மையான உதவியாக இருக்கும். இதை செய்யவில்லை என்றால் அமெரிக்கவால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அமெரிக்க சார்பு நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச அளவில் வலியுத்தினால், அமெரிக்காவும் அமெரிக்காவால் இலங்கையும் இறங்கி வருவதற்கு வெகுவாக வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. .

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மோகனா

face book நண்பர்கள் வட்டத்தில் இவரைப் பற்றிய அறிமுகம் இங்கு தேவையற்ற ஒன்று! மோகனா சோமசுந்தரம் அவர்கள்தான். இவரது அறிமுகம் இவரது வாழ்க்கையை பற்றிய விபரங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். இங்கு நான் சொல்லப்போவது அவருடனான எனது அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள் அவ்வளவே! இவர் எனக்கு முதலில் அறிமுகமானது துளிர் இதழ் மூலமாக. எஸ்.மோகனா என்ற பெயரில் இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகள் மூலமாகத்தான். துளிர் ஆசிரிய குழுவில் இருந்தார்(க்கிறார்?!) . அப்போது நடந்த அறிவியல் இயக்க பட்டறை ஒன்றில் அவரை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்தான் பேராசிரியை மோகனா என்று அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்கும் எனது கல்லூரி பேராசிரியர்களுக்குமான உறவு அவ்வளவு சிலாகிப்பாக இருந்ததில்லை. காரணம் (கு)தர்க்கம் பேசியே வளர்ந்த வாய் என்னுடையது. எனது ஆச்சி கூட என்னை வாப்பட்டி, (வாப்பட்டி என்பது மர உரலில் நெல்லு குத்தும்போது சிதறாமல் இருக்க உரல் மீது வைக்கும் அடியில்லாத ஒரு மூங்கில் கூடை) கருப்பட்டி , எங்கிட்ட பேசுற மாதிரி ஏட்டிக்கு போட்டி பேசுனா புருஷன் பனஓலைய பின்னாடி கட்டி பத்திவிட்டுருவான் ஆமா! என்று திட்டும். இந்த வாய் காரணமாக அடிக்கடி பிரச்சனையில் மாட்டி டிப்பார்ட்மென்ட் வாசலில் நிற்பேன்! இந்த லட்சணத்தில் நான் அந்த காலக்கட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) ஆக்டிவ் மெம்பராக இருந்தேன். ஆக்டிவ் மெம்பர் என்றால் போராட்டம், ஊர்வலம், உண்டியல் குலுக்குவது என்று எல்லா செயல்பாட்டிலும் கலந்து கொள்வது. ஆரம்பத்தில் நான் இந்த சங்கத்தில் இருந்தது எனது துறை ஆசிரியர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது., மெம்பர்ஷிப் போடுகிறேன் என்று கையில் புக்குடன் தனியாக சுற்றி திரிந்த போது இதைப்பற்றி தெரிந்து கொள்ளக் கூட யாரும் விரும்பவில்லை. உறுப்பினர் ஆன சிலரும், அப்பாக்கு தெரியக் கூடாது, அப்பத்தாவிற்கு தெரியகூடாது, அவ்வளவு ஏன்! சேர்கிற எனக்கும், சேர்க்கிற உனக்கும் கூட தெரியக்கூடாது! என்று வலக்கை இடுவது இடக் கைக்கு தெரியாத மேன்மக்களாகி, நான் ஏதோ சமூக விரோத காரியம் செய்கிற உணர்வை ஏற்படுத்தினர். கல்லூரியில் மாணவப் பிரதிநிதி என்று கூட யாரும் கிடையாது. இதிலிருந்தே சங்கங்கள் விஷயத்தில் கல்லூரி எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு அவசர மீட்டிங் காரணமாக எனைத்தேடி கல்லூரிக்கே வந்த சட்டக் கல்லூரி மாணவர்களால் துறை ஆசிரியர்களுக்கு தெரிந்து விட்டது. துறை ஆசிரியர்கள் என்னை அழைத்து விசாரித்து இது உன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. பாழாகிவிடும் என்று எச்சரித்தனர்! நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிலிருந்து, என்னை தண்டவாளத்த குண்டு வச்சு தகர்த்த தீவிரவாதி ரேஞ்சுக்கு மரியாதையாக நடத்தினர்! நான் அந்த அளவுக்கு ‘வொர்த்’ இல்லைங்க என்றாலும் கேட்கவில்லை. லீவு, பர்மிஷன் என்று எதுவாக இருந்தாலும் அப்பாவின் கையெழுத்து வேண்டும் என்றார்கள். வெள்ளை தாள்களில் என் அப்பாவின் கையெழுத்தை மொத்தமாக வாங்கி தேவைக்கு ஏற்ப உபயோகித்துக் கொண்டு இருந்தேன்! என்னைப் பற்றிய எனது பேராசிரியர்களின் கணிப்பு உருப்பட மாட்டேன் என்பதாகவே இருந்தது. (இத்தனைக்கும் எனக்கு அரியர்ஸ் எதுவும் இருந்ததில்லை) எனக்கு அவர்கள் மீது கோபம் எதுவும் கிடையாது. வாழ்க்கையில் “உருப்படாமல் போவத”ற்கான லிஸ்ட் எனக்கும் அவர்களுக்கும் முற்றிலும் வேறு வேறாக இருந்ததன்றி வேறொன்றும் இல்லை! ஆனால் இந்த பேராசிரியையுடனான எனது உறவு எவர் க்ரீன் நினைவுகள். இவரை நான் மேடம் என்றோ அம்மா என்றோ அழைத்ததில்லை. மோகனா என்றுதான் அழைத்திருக்கிறேன். இவரென்று இல்லை. பெரும்பாலும் நெருக்கமான உறவினர் தவிர, அனைவரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். அதை மரியாதைக் குறைவாக ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால் இதற்காக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டித்தனர். பல வருடம் மூத்தவர், பேராசிரியர் அவரை பெயர் சொல்லி அழைப்பது மரியாதையான செயல் அல்ல என்று. அவரோ, அவர்களுக்கு தோன்றியதை அவர்கள் கூறுகிறார்கள். நீ என்னை பெயர் சொல்லி அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை மரியாதை குறைவாகவும் நினைக்கவில்லை என்று கூறினார். அவரது பதிலால் அவர் மீதான மரியாதை அதிகமானது. முதலில் எனக்கு இவரிடம் பிடித்தது இவரது சிரிப்பு. (அனுஹாசன் சிரிப்பை போல்) மனதிலிருந்து இயல்பாக வரும். லைஃப்ல எதுவுமே பிரச்சனையில்லை என்று சொல்வது மாதிரியான சிரிப்பு. கோபமா ஏதாவது கேட்கும் போது கூட உதட்டோரத்தில் சிறிய சிரிப்பு ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தோன்றும். எல்லோராலும் எல்லோருடனும் எளிதில் நட்பாவது கடினமானது. மனிதர்களை பார்த்தவுடன் ‘ப்ரீகண்டிஷன் மைண்ட்’ என்ற முன்கூட்டியே ஏற்படுத்திக் கொள்ளும் சில உருவகங்களுடன் கூடிய அணுகுமுறை அற்றவர்களுக்கே இது சாத்தியம். அது இவருக்கு சாத்தியம்! அறிவியல் இயக்கத்தில் கேம்ப், ஒர்க் ஷாப் ஆகிய நாட்களில் அது முடியும் போதே நேரமாகிவிடும். மீண்டும் காலையில் நேரத்துடன் எழுந்திருக்க வேண்டும் என்பதால் உறங்கப் போய்விடுவோம். இவர் படுக்கமாட்டார் பேப்பர், பேனா, புத்தகம் அடங்கிய அவரது ஜோல்னா பையுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பார். எப்போது உறங்குவார் என்று தெரியாது. ஆனால் காலையில் எல்லோருக்கும் முன்பு எழுந்து உலாவிக்கொண்டு எங்களை டென்ஷனாக்குவது இவரது ஹாபி. நாம எப்படின்னா? காலைல சூரியன் நம்மள வந்து பார்த்தால்தான் நமக்கு பெருமைன்னு நினைக்கிற ஆளு! இதுல என்ன பிரச்சனைனு நினைக்கிறீங்களா? நள்ளிரவு நாலரை/ ஐந்து மணிக்கு நம்மையும் கிளப்பி ரவுண்டடிக்கனும்பார். அதிகாலை சூரியன், சனிக்கோள் என்று டெலஸ்கோப்பில் பார்ப்பதற்கு இழுத்து செல்வார். உண்மையில் ‘இழுத்து’ என்பதுதான் சரி! இல்லையென்றால் நான் அசைய மாட்டேன். சின்ன வயதில் மார்கழி மாசத்தில் அதிகாலை எழுந்து பல்லு கூட விளக்காம பெருமாள் கோயில் பொங்கல், புளியோதரைக்கு போனதை தவிர பரீட்சை காலங்களில் கூட நான் எழுந்ததில்லை. நீங்க போய்ட்டு திரும்பி வாங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன் என்பேன். விட மாட்டார். எழுந்து பத்து நிமிடம் நட, அப்புறம் பார்! என்று இழுத்து செல்வார். நான்கைந்து பேராக விஷயங்களை பேசிக் கொண்டு நடக்கும் போதும், திரும்பிவரும் போது டீக்கடையில் ஆவிபறக்க குடிக்கும் அந்த டீயும் (சில சமயங்களில் இட்லி ரெடியான அதுவும்) அடடா! பள்ளிக்கு காலையில் செல்லும் போது அழும் குழந்தை, திரும்பி வரும்போது கண்களை விரித்து கைகளை ஆட்டியபடி தான் பார்த்தது, கேட்டதைப் பற்றி பேசிக் கொண்டே வருமே! அதுபோல் உணர்வேன். இன்று கிடைக்க பெறாதா அந்த அழுத்தமில்லா அற்புதமான காலைகளுக்கு நன்றி மோகனா. பறவைகளை உற்று நோக்குவது இவருக்கு பிடித்தமான ஒன்று. இவருடன் செல்லும்போது எல்லாம் பறவைகளை பற்றி அவைகளின் பெயர்கள், பழக்கவழக்கம் எல்லாவற்றையும் விவரித்துக் கொண்டு வருவார். சிறுவயதிலிருந்து பெரிதாகிய பின்பும் பறவைகள், வண்ணத்துப்பூச்சி, அணில் இவற்றை நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டு இருப்பேன். அதுவரை மையமாக இவற்றை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்த விஷயங்கள் ஆச்சரியமாக இருந்ததோடு சுற்றுபுற சூழலுக்கான அவற்றின் பங்களிப்பு பற்றிய தெளிவினையும் ஏற்படுத்தியது. ஒரு நாள் இரவு ஒரு திருமண மண்டபத்தில் நடந்த பட்டறையில் எனது வேலை முடிய நேரமாகிவிட்டது. பெண்கள் படுத்திருக்கும் அறைக்கு சென்றால் இடமில்லை. அனைவரும் உறங்கிவிட்டனர். இவர் வழக்கம் போல் ஒரு மூலையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். ஆகவே சத்தமில்லாமல் திரும்பி வந்துவிட்டேன். ஹாலின் ஒரு பகுதியில் ஆண்கள் உறங்கிக் கொண்டு இருந்தனர். விரிப்பதற்கோ போர்த்திக் கொள்வதற்கோ ஒன்றும் இல்லை. எனவே அங்கே இருந்த நியூஸ் பேப்பரை விரித்து அதையே போர்த்திக் கொண்டு உறங்கிவிட்டேன். நவம்பர் என்பதால் நல்ல குளிர். மோகனா சிறிது நேரத்தில் தேடிக் கொண்டு வந்துவிட்டார். என்னைப் பார்த்து டென்ஷனாகி எழுப்பி, பேப்பர விரிச்சுகிட்டு தூங்குவியா? என்னை கேட்க வேண்டியதுதானே, என்ன பொண்ணு நீ? என்று கடிந்து கொண்டார். கூட்டிக்கொண்டு வந்து அவரது போர்வையைக் கொடுத்து படுத்துகொள்ள சொன்னார். உண்மையில் அன்று என் அம்மாவை உயிருடன் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இது போல் சாப்பிட்டியா? என்ன வேண்டும் என்று கேட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு . இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருந்திருக்கும். தன்னுடன் இருக்கும் குறிப்பாக சிறிய வயது நபர்களை ஒரு அன்னையைப் போல் கவனித்துக் கொள்வார். நண்பனைப் போல் நடத்துவார். உணவு விஷயத்திலும் பயங்கர கான்ஷியஸ். அதில் இருக்கும் சத்துக்கள், வேகவைக்கும் முறை பற்றி நிறைய பேசுவார். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும்பாலும் என் அப்பாவின் சமையல்தான். எனக்கு சமையலில் பெரிய ஈடுபாடு கிடையாது. நான் சமைக்கும் போது இருமுறை இவர் அருகில் இருந்திருக்கிறார். காய்கறிகளை கழுவிட்டுதான் நறுக்கனும் என்று தொடங்கி கீரைய எப்படி சமைக்கனும், எதுல என்ன என்ன சத்துக்கள் இருக்கு என்று நொய் நொய்னு லெக்சர். எனக்கு உள்ளூற செம டென்ஷன். ஏன்னா நானே விதியேன்னு சமைத்துக் கொண்டு இருந்தேன். இந்த டைப் மாமியார் மட்டும் நமக்கு சிக்கிட கூடாது பிரச்சனை ஆகிடும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இன்று என் குழந்தைகளுக்கு சமைக்கும்போது இவையனைத்தும் மனதில் நிற்கிறது. இன்று என் மாமியாரை படுத்திக் கொண்டு இருக்கிறேன். எதை சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று ! மன உறுதி மிக்கவர். இவர் நோயிலிருந்து மீண்டு வந்தது இங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சுறுசுறுப்பு, தைரியம், தன்னம்பிக்கை, நட்பு, சமூக உணர்வு என்று இவரைப் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு புத்தகமாகவே போடலாம்! அவ்வளவு விஷயங்கள் உண்டு. ஆகவே இதோட முடிக்கிறேன்.

சனி, 14 ஜனவரி, 2012

நண்பன்


எந்த திரைப்படத்தையும் ரிலீஸான முதல் நாளிலேயே பார்த்ததில்லை என்ற சரித்திரத்தை உடைக்கும் விதமாக “நண்பனை” பார்க்க நேரிட்டது!

இன்றைய சூழலில் கல்வி என்பது ஒருவரின் எதிர்கால பாதுகாப்புக்கும் சம்பாத்தியத்திற்குமான கருவியாகவும், கல்வி நிறுவனங்கள் பந்தைய களமாகவும் சமூகத்தால் மாற்றப்பட்டு, அந்த பந்தயத்தில் கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளாக மாணவர்களும், பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையையும்,
கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் உதவும் சாதனம் என்பதை நகைச்சுவையாகவும், கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்பட்ட ‘சேத்தன் பகத்’தின் நாவலான “Five Point Someone – What not to do at IIT!” ஐ அடிப்படையாக வைத்து ஹிந்தியில் வெளிவந்த ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ் வெர்ஷன்தான் நண்பன்!

3 இடியட்ஸ் பார்த்து அது தன்னை மிகவும் பாதித்ததாகவும், அத்தகைய நல்ல படத்தை தமிழில் தர வேண்டும் என்ற ஆர்வத்தில் முதல்முறையாக ரீமேக் செய்திருக்கிறேன். ஆனால் என்னுடைய டச்சில் எடுத்திருக்கிறேன் என்று ஷங்கர் ஆரம்பத்தில் பேட்டியிருந்தாலும், அவர் டச்சே படாமல் வெளிவந்திருக்கிறது !
பொதுவாக ரீமேக்கை பொறுத்தவரை சீனிவாசனின் “சிந்தவிஸ்தையாய சியாமளா” “சிதம்பர அப்பாசாமி”யிடம் அடிவாங்கியது தொடங்கி “கத பறயும் போள்”, ‘பில்லு’ ஷாருக்கானிடம் பிரியாணி ஆனது வரை பெரும்பாலும் ஏற்பட்ட மோசமான அனுபவங்களாலும், ‘3 இடியட்ஸ்’ பார்த்ததாலும் ஒரு ஓரத்தில் கிலியுடனே சென்றேன் !

நல்ல படத்தை சிதைத்து விடக் கூடாது என்ற ஷங்கர்ஜியின் அநியாய அக்கறை டைட்டில் தொடங்கி முடிவு வரை நன்றாகத் தெரிகிறது! லொக்கேஷன்கள், காஸ்ட்யூம்கள், இரண்டு பாடல் காட்சிகள் தவிர்த்து காட்சிஅமைப்பு, வசனங்கள் உட்பட எதையும் மாற்றாமல் அப்படியே கொடுத்து இருக்கிறார். ஒரு வகையில் ஆறுதல்.

விஜய் வழக்கமான சில முகபாவங்கள் தவிர்த்து அண்டர் ப்ளே செய்திருப்பது நல்லதுதான் என்றாலும் நடிகர்கள் எல்லாம் (ஸ்ரீகாந்த், சத்யன் தவிர) ‘3 இடியட்ஸை’ பத்து பதினைந்து தடவை பார்த்திருப்பது அவர்கள் உடல் மொழியிலிருந்து தெரியவருகிறது! (சத்யராஜ்) மகளாக வரும் இலியானாவுக்கு முகபாவங்கள் ஒகே என்றாலும் சரவண பவனில் தயாரிக்கப்பட்ட இத்தாலி ஐட்டம் போல் ஒட்டாமல் தெரிகிறார்.
ஏற்கனவே இந்தப் படம் ஹிந்தியில் வெளியான போது டைரக்டர், ப்ரொடியூசர், ரைட்டர் என்று எல்லோரும் ஒருவரையொருவர் பிறாண்டியிருந்ததால், ஷங்கர், நமக்கேன் வம்பு என்று நினைத்திருப்பார் போல! கடைசியில் வரும் கல்யாணக் காட்சியைக் கூட மாற்றவில்லை. கோயம்புத்தூரில் நடக்கும் ‘டீன் விருமாண்டி சந்தான’த்தின் மகள் திருமணம் “சௌக்கார்பேட்டை நேமிசந்த்” வீட்டு திருமணமாகவே காட்சியளிக்கிறது! இந்த இடத்தில் கூட இத்தனை பெரிய டைரக்டர் நேடிவிட்டியை பயன்படுத்தாதது ஆச்சரியம்!

கடைசியாக என்ட் கார்ட்
A Flim by டைரக்டர் ஷங்கர் என்று முடிகிறது.
என்றைக்கு நம் ஆட்கள் ‘டப்பிங்’ படத்திற்கு ‘A Flim by’
என்று தங்கள் பெயரைப் போட்டு சிதற வைக்கப் போகிறார்களோ?!