மிகப் பெரிய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களை உலகமெங்கும் செய்துவரும் அமெ ரிக்கா இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணையைக் கொண்டு வருவது நிச்சயம் ஈழமக்கள் மீதான அக்கறையாக இருக்கவே முடியாது. இலங்கையில் நடந்த போருக்கு உதவி செய்வதில் அமெரிக்கா, இந்தியா தொடங்கி சீனா, இஸ்ரேல் வரை ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளன. காரணம் இலங்கை பிராந்தியத்திலும், இந்துமகா சமுத்திரத்தில் கண்டறிப்படுகின்ற எண்ணை வளத்திலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதற்கேயன்றி எளிய மனிதர்கள் மீதான அக்கறையால் அல்ல. அமெரிக்கா, இலங்கையை சீனாவிடமிருந்து தள்ளி வைப்பதற்கான யுக்தியே இது. இலங்கை சம்மதத்தோடு கால் வைப்பது ஒரு விதம். சம்மதமின்றி கால் வைப்பது இன்னொரு விதம். முரண்பாடு ஏற்பட்டால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்க காலூன்ற முனையலாம்.
அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவின் சாராம்சங்கள் இலங்கைக்கு சாதகமானதாகவே இருக்கிறது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையை இலங்கை அரசு விரைந்து செய்வதற்கு அழுத்தம் கொடுத்தல், அதற்கான கால அவகாசங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுதல் என்பதை அன்றி வேறு எதுவும் இல்லை. குற்றம் செய்தவனே அக்குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் அதற்கான கால அவகாசம் ஒரு வருடம். அதற்குள் முடியவில்லை என்றால் மேலும் ஆறுமாதம் நீட்டிப்பது. அதாவது பத்து எண்ணுவதற்குள் முடிக்கவேண்டும். இல்லையென்றால் பதினொன்றில் இருந்து எண்ணுவேன் என்கிற மாதிரி! புணரமைப்பு பணிகள் எல்லாவற்றையும் அரசே மேற்கொள்ளும். அரசு யாரை வைத்து மேற்கொள்ளும்? மீண்டும் இராணுவத்தினரை வைத்துதான்!
இதற்கான ஆலோசனை, உதவியை மட்டும் ஐநா வழங்க வேண்டும்! இவையனைத்தும் எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
இருதரப்பிலும் போர்குற்றங்கள் நடைபெற்று இருந்தாலும் அதிகாரமும் படைபலமும் அதிகமான அரசு தரப்பின் நடவடிக்கைகள் இனி யாரும் அரசுக்கு எதிராக சிந்திக்க கூடாது என்கிற அளவில்தான் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் எழுபதுகளில் பண்டாரநாயகே அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த கம்யூனிச சிங்கள இளைஞர்களை அரசு கொடூரமாக கொன்று குவித்தது. இலங்கையில் மட்டுமல்ல பெரும்பாலான அரசுகள், அரசுக்கு எதிராக நடைபெறும் விஷயங்களை எதிர்த்து நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளும் அடக்குமுறைகள் வேறுயாரும் அதைப்பற்றி சிந்திப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ நினைக்க கூடாது என்கிற வகையில் தான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த அடக்குமுறைகளும், அவமானங்களும் மக்களின் சுதந்திர உணர்ச்சியை தூண்டுவதாகவே இருக்கும்.
போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அந்த அளவு முக்கியம் அங்கு இப்போதுள்ள தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும். நமது வீர வசனங்களும், வெற்று கோஷங்களும் அங்குள்ளவர்களுக்கு ஒரு ரொட்டித் துண்டை கூட கொடுத்துவிடாது. கட்சி சார்பற்ற (குறிப்பாக தமிழக கட்சிகள்) உலகளாவிய தொண்டு நிறுவனங்களை புணரமைப்புக்கு ஈடுபடுத்திட வலியுறுத்துவதும், ஜநாவின் சர்வதேச உறுப்பினர்கள் அடங்கிய குழு ஊடகங்களின் நேரடிப்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வைப்பதும்தான் உண்மையில் வடக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்தும். இது போன்ற விஷயங்களை முன் வைத்து தீர்மானம் கொண்டு வர அமெரிக்காவை வலியுறுத்தி அதை செயல்படுத்துவதே தனிமைப்படுத்தப்பட்ட ஈழதமிழர்களுக்கான உண்மையான உதவியாக இருக்கும்.
இதை செய்யவில்லை என்றால் அமெரிக்கவால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அமெரிக்க சார்பு நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச அளவில் வலியுத்தினால், அமெரிக்காவும் அமெரிக்காவால் இலங்கையும் இறங்கி வருவதற்கு வெகுவாக வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.
.