செவ்வாய், 29 ஜூன், 2010

உயிர்ப்பு

பனித்துளி ஒன்றுக்கு கடலின் அங்கமாக வேண்டும் என்று ஆசை பிறந்தது. எவ்வள்ளவு பெரிய கடல்! எல்லோரும் கடலைப் பார்த்து பிரமிக்கிறார்கள். நானும் அதன் அங்கமானால் எனக்கும் அந்த பெருமை கிடைக்கும். மாலையில் தோன்றி காலையில் மறையும் இந்த அற்ப வாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்தது.

தன் எண்ணத்தை செயல்படுத்த காற்றின் உதவியை நாடியது. காற்றும் உதவி செய்ய ஒப்புக் கொண்டது . மறு நாள் மாலை பனித்துளி காற்றின் மேல் அமர்ந்து கடலை நோக்கி பயணம் செய்யத்துவங்கியது. பனித்துளி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தது. இன்னும் சில நிமிட நேரத்தில் நான் கடலின் ஒரு அங்கமாகிவிடுவேன். பிரமாண்டத்தின் ஒரு அங்கம். எவ்வளவு பெருமையான விஷயம் இப்படியாக நினைத்துக்கொண்டு இருந்தது.

திடீரென்று, தாகம், தாகம்! தண்ணீர் என்று ஒரு குரல். குனிந்து கீழே பார்த்தது பனித்துளி. இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஒரு வாடிய செடி காம்பு, தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தது. ஒரு நொடி யோசித்த பனித்துளி, காற்றிடம், ஒரு நிமிடம்! காற்றே நில், என்றது. அடுத்த நொடி தாவி குதித்து சரியாக காம்பின் மையத்தில் போய் விழுந்து மறைந்தது.

அதிர்ச்சியுற்ற காற்று, முட்டாள் பனித்துளி இப்படி செய்துவிட்டதே! தனக்கு என்ன வேண்டும் என்று கூடத் தெரியாத இந்த முட்டாளுக்குப் போய் உதவி செய்ய நினைத்தேனே, என்று வருந்தியபடிச் சென்றது. மறுநாள் காலை அந்த வாடிய காம்பின் மேல் அழகாய் பூத்திருந்தது ஒரு பூ பனித்துளியுடன்!

சதுரங்கத்திலும்!


ஆட்டம் தொடங்குகிறது

அரசனை காக்க

அவரவர்க்குரிய பலத்துடன்!

ஆடுகிறாள் ராணி

அசுர பலத்துடன்

தாக்குதல்களும், தாக்குதலுக்குள்ளாதலுமாய்

அனைவரும், அரசனைத் தவிர

இறுதியில்

ஆட்டத்தின் வெற்றி அரசனுக்குரியதாகிறது

விளையாட்டிலும் கூட

உழைப்பவர்களின் வெற்றி

அவர்களுக்கானதாய் இல்லை

ஒரு போதும்.

பதிவு


நடக்கும் வழியில்

முன் கடந்த ஏதோ ஒரு

குழந்தையின் அழுத பதிவு

வெடித்துக் கிடக்கும்

சிவப்பு பலூன்!

பழைய கதை - புதிய நீதி!

ஒரு மகனும், தந்தையும் நதியோரமாக நடந்து சென்றனர். அப்போது தந்தை , மகனே! நான் உன் கையைப் பிடித்துக்கொள்கிறேன், இல்லையென்றால் நதியில் விழுந்து விடுவாய் என்று கூறினாராம். அதற்கு மகன்,வேண்டாமப்பா நான் உங்கள் கையைப் பிடித்துக்கொள்கிறேன் என்றானாம். தந்தை சிரித்தபடியே கேட்டாராம் இரண்டுக்கும் என்ன
வித்தியாசம் என்று. அதற்கு மகன், இருக்கிறதப்பா, நான் உங்கள் கையைப் பிடித்திருக்கும்போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தம் மட்டுமே இருக்கும். நீங்கள் என் கையைப் பிடித்திருக்கும் போது நான் விழுந்தால் உங்களுக்கு வருத்தத்தைவிடக் குற்ற உணர்வு அதிகமாகும் என்றானாம்.

இதிலுள்ள உள்குத்து என்னன்னா, அநாவசியமா நீங்க என் கையப்பிடிக்கத் தேவையில்லை. அவசியம்னா நாங்க பாத்துக்கறோம்.

எல்லா கதைகளிலும் நாம் நீதியை எதிர்பார்த்துப் பழகியிருப்பதால்,

நீதி 1 : குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல கைடாக இருந்தால் போதும். வார்டனாக இரு[று]க்க வேண்டியதில்லை.

நீதி 2 : அவைங்களா வளரும்போது ஏதாவது ஏழரையானா [தப்பானா] வருத்தம் மட்டுமே இருக்கும். நம்ம வளர்த்து
ஏழரையானா நமக்குக் குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ளும் என்பதே:-)

முன் மாதிரி





வாழ்க்கையை கற்றுக் கொடுக்க வந்தவள்.

சிறு துளியாய் என்னுள் வீழ்ந்து

பெருமழையாய் எனை ஆட்கொண்டவள்.

காலை கதகதப்பு, மதிய வெப்பம், இரவின் குளிர்ச்சியையும்

ஒருசேர ரசிக்க வைக்கிறாள்.

விளையாடிக் கற்றலின் இன்பத்தை அறிமுகமாக்குகிறாள்.

அபரிதமான கேள்விகளால்

எனதுத் தேடலை அதிகப்படுத்துகிறாள்.

தளரும் தருணங்களில்

தளிர் கரங்களால் தடவி அன்னையாகிறாள்.

சின்ன, சின்ன ரசனைகளை வெளிக்கொணர்கிறாள்.

ரௌத்திரம் பழகலும், குறைத்தலும்

கற்றுக் கொடுக்கிறாள்.

என் சமையலில் நறுமணத்தைக் கூட்டச் செய்கிறாள்.

அன்பின் மூலம் எதிராளியை வசப்படுத்தும்

தந்திரம் சொல்கிறாள்.

பாராட்டலின் பாங்கினை உரைக்கிறாள்.

புன்னகையின் மதிப்பை உணர்த்துகிறாள்.

நட்பும், நேசித்தலும், பகிர்தலுமே

வாழ்க்கை என்று வலியுறுத்துகிறாள்.

யார் சொன்னது?

அம்மாவே மகளின் முன் மாதிரி என்று.

என் மகளே எனது முன்மாதிரி.

முகம்





முகவரி இல்லா காட்டில் தொலைத்த

முகம் தேடி அலைகின்றேன்!

கடந்து போகின்றன பல முகங்கள்

சிவப்பே சிறந்தது! என்றது ஒரு முகம்

நீலம் உன்னதம் என்றது மற்றொன்று

வெள்ளை என்று சிரித்தது ஒன்று

புறந்தள்ளி நடக்கின்றேன்

நிறமற்ற என் முகம் தேடி.