ஞாயிறு, 28 நவம்பர், 2010

டெய்சி அக்காவும் முருகா போலீஸும்


ஒரு ஞாயிறு அதிகாலை எங்கள் வீட்டின் எதிர் வீட்டுக்கு குடி வந்தது அந்த குடும்பம். அம்மா,அப்பா, ஒரு பையன், ஒரு பெண் என்று அளவான குடும்பம். அந்த சிறிய ஊருக்கு சற்று பொருந்தாத நடை,உடை அமைப்புடன் இருந்தார்கள் அவர்கள். பேங்க் உத்தியோகம் காரணமாக மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டு வாசலில் சிறுமிக்கே உரிய ஆவலுடன் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் பெயர் ஏஞ்சலா டெய்சி. பெயரைப் போலவே ஆளும் தேவதைதான். கதாசிரியர்கள் கதைகளில் வர்ணனை செய்யும் அழகின் இலக்கணங்களுடன் இருந்தார். நான் நிற்பதை பார்த்து டெய்சியின் அண்ணன் என்னை உள்ளே அழைத்தார்.வெட்கத்துடன் தயங்கி நின்றேன். எட்டிப் பார்த்த டெய்சி அக்கா என் கையைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று கைகளில் ஆரஞ்சு மிட்டாய்களை திணித்தது. ஓட்டமாய் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். முன்னே பின்னே தெரியாதவங்களிடம் எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று முதுகில் இரண்டு போட்டார்.

அவர்களது தோற்றத்தைப் பார்த்து யாவரும் நெருங்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களோ யாரைப் பார்த்தாலும் மானாவாரியாக சிரித்து வைத்தனர். டெய்சி அக்காவின் சிரிப்பு அந்த கால கே.ஆர்.விஜயாவை நினைவுபடுத்தியது. இப்போது உள்ள அக்கபோர்கள் அப்போது இல்லாததால் இரண்டாவது நாளே டெய்சி அக்கா எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து விட்டது. அக்கா நான் படிக்கும் பள்ளியில் சேர்ந்தது எனக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது.(அக்கா கல்லூரியில் படிக்கும் பெண் என்றே நினைத்திருந்தேன்). அடுத்து வந்த நாட்களில் அக்காவுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்வது இயல்பானது. பள்ளிக்கு போகும் போது அக்கா என் கையைப் பிடித்தபடி ஏதாவது கதைகள் அல்லது அவர்கள் ஊரைப்பற்றி பேசிக்கொண்டு வரும். அக்காவின் கதை சொல்லும் திறமைக்கு நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்க்ரீன் ப்ளே ரைட்டர் ஆகி இருக்கலாம். காட்சிகளை கண்முன் நிறுத்திவிடும். நான் ஒரு இனம் புரியாத பெருமிதத்துடன் நடந்து வருவேன். அக்காவின் கலகலப்பான சுபாவத்தால் விரைவிலேயே எல்லோரிடமும் நெருக்கமாகி விட்டனர் அவர்கள். அதன் பலனாக அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான பலகாராங்களை செய்து அக்கம் பக்கத்தினரை சோதித்து கொண்டிருந்தார்கள். பிரியாணி தொடங்கி கேக் வரை எங்கள் ஊருக்கு அரிதான அயிட்டங்களை சர்வசாதாரணமாக போட்டு தாக்கினர்! மனிதர்கள் மட்டுமின்றி தெருவில் போகும் மாடு, நாய்களுக்கும் கஞ்சி, தண்ணி எல்லாம் உண்டு. காக்கை குருவியையும் விடுவதில்லை.

ஞாயிற்றுகிழமை பெரும்பாலும் அக்காவுடன்தான். தினமும் அக்கா அதிகாலையில் பெட்ரூம் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கிண்ணத்தில் பாலை வைத்து இங்க் பில்லர் மூலம் அணில்களுக்கு பாலூட்டும். புசு,புசுஅணில்கள் அக்காவின் மடி மீதும் தோள் மீதும் ஓடியாடும். ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறைகளிலும் அந்தக் காட்சியைக் காண ஓடிவிடுவேன். எத்தனை வயதானாலும் மறக்க முடியாத அழகான காட்சி அது. பின்னர் சர்ச். பிற்பகலில் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவோம்.

அந்த நாட்களில் எங்கள் ஊரில் முருகா என்று ஒரு பிச்சைகாரான் இருந்தான். சிவப்பேறிய கண்களும்,ஒட்டிய வயிறும், சடைப்பிடித்து தொங்கும் செம்பட்டை முடியும்,தாடியுமாக பயப்படுத்தும் தோற்றத்துடன் இருப்பான். பிள்ளைகள் மட்டுமன்றி, பெண்களே அவனைப் பார்த்து பயப்படுவார்கள். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் போதும் அசிங்கமாக திட்ட ஆரம்பித்துவிடுவான். வேறு எதுவும் பேசவராது! போலீஸிடம் அடிவாங்கி மன நிலை பிழன்றவன் என்று ஒரு சாரரும், போலீஸீல் வேலை பார்த்து பைத்தியமாகி வேலை இழந்தவன் என்று மற்றவர்களும் ஊகங்களை கருத்துக்களாக சொல்லினர். அடர் நீலம் அல்லது காக்கி வண்ணத்தில் ஒரு அரை டிராயர் அணிந்திருப்பான். கையில் ஒரு அலுமினிய சட்டி. அவன் பிச்சை எடுக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கேட்பது எல்லாம் கிடையாது. இவனைப் பார்த்தால்தான் தெருவே காலியாகிவிடுமே! ஆங்காங்கே வாசலுக்கு முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பான். யாராவது ஏதாவது கொடுத்தால் உண்பான் அவ்வளவே! அடம்பிடிக்கும் குழந்தைகள் அனைத்தும் அவன் பேரைக் கேட்டால் அடங்கி விடும். நான் எப்போதும் மறைந்திருந்தே அவனைப் பார்ப்பேன். பெரிய பையன்கள் மறைந்திருந்து முருகா போலீஸ் என்று கத்தி அவனை டென்ஷன் ஆக்குவார்கள். இவனும் குரல் வரும் திசையைப் பார்த்து கல்லெறிந்து கத்துவான்.

டெய்சி அக்கா வீடு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டைத் தவிர அந்த தெருவில் உள்ள வேறு யார் வீட்டின் முன்பும் அவன் உட்காருவதில்லை. காரணம் அவர்கள் சாதம்,குழம்பு,காயோடு சேர்த்து கொடுத்து விடுவார்கள். ஒரு நாள் அக்கா அவனிடம் ஏதோ பேசியதை தொலைவிலிருந்து பார்த்தேன்.மறுநாள் அக்காவிடம், அவங்கூட பேசாதே புடுச்சுட்டு போய்டுவான், என்றேன். சே!அவன் பாவம், நல்லவன். உனக்கு பிடிக்காததை செய்தாலோ, சொன்னாலோ உனக்கு கோபம் வருமில்லையா? அது போல்தான் அவனும் என்றது. அவன் பேசுவது புரியாவிட்டாலும் அவர்கள் வீட்டில் அவனோடு உரையாடுவார்கள். ஒரு முறை டெய்சி அக்கா அவர் அண்ணனிடம் சொல்லி, அவனைக் கூட்டிப் போய், தலையை மொட்டை அடித்து தாடி எல்லாம் மழித்துவிட்டனர். எப்போதும் கோபமாக இருக்கும் முருகா, அக்காவைக் கண்டால் யேசுவின் கைகளில் இருக்கும் ஆடு போல் ஆகிவிடும். அவர்கள் சொல்லும் சின்ன,சின்ன வேலைகளை அமைதியாக செய்யும். கிறிஸ்மஸ் அன்று புது லுங்கியும்,சட்டையும் வாங்கிக் கொடுத்தனர்.

பின் ஒரு மழைக்கால மாலைப் பொழுதில் அவர்கள் வீட்டை காலி செய்து எல்லோரிடமும் விடை பெற்று ரயிலடிக்கு சென்ற போது பெட்டி படுக்கைகளை தூக்கிகொண்டு முருகாவும் கூடவே சென்றது. ரயில் புறப்படும் வரை அதற்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ரயிலில் ஏறி அது புறப்பட ஆரம்பித்தும் கத்தி அழுது கொண்டே ரயிலுடன் ஓட ஆரம்பித்து. அக்காவின் கண்களிலும் கண்ணீர். அந்தக் காட்சி திரைப் படத்தில் வரும் சோகமான க்ளைமாக்ஸை போன்று இருந்தது. அன்றிலிருந்து கதைகளில் இறக்கைகளும், நட்சத்திரமும் கொண்ட தேவதைகளைப் பற்றி படிக்கும் போது அந்த தேவதைகள், டெய்சி அக்காவின் சாயலுடனே காட்சியளித்தனர்.

திங்கள், 15 நவம்பர், 2010

ஜம்ப்பிங் தாத்தா!

எனது பால்யகாலத்து நண்பர்களுள் ஒருவர். அப்போது அவரது வயது எண்பது! அந்த தெருவில் இருந்த பெரியவர்களுக்கு அவர் "தோட்டத்து தாத்தா", சில இளைஞர்களுக்கு "எஸ்.வி", (சைடு வீங்கி)அவரது தாடைக்கும்,காதுக்கும் இடையில் சுமாரான அளவில் இருந்த ஒரு வீக்கமே இந்த நாமகரணத்திற்கு காரணம். குழந்தைகளுக்கு காந்தி தாத்தா! ஆம்! தோற்றத்தில் தொண்ணூறூ சதவிகிதம் வரலாறு புத்தகத்தில் காணப்படும் காந்திஜியை ஒத்து இருப்பார். அந்த உருவ ஒற்றுமை அதுவாக அமைந்ததா? அல்லது அமைத்துக் கொண்டாரா? தெரியாது. மொட்டை தலை,வட்டகண்ணாடி, பெரிய காதுகள். மேல் சட்டை அணிய மாட்டார்.கதர் துண்டு, ஒருமாதிரியாக சுற்றப்பட்ட கதர்வேட்டி, காலில் கட்டை செருப்பு. காந்திஜியே டென்ஷன் ஆகிற அளவுக்கு தீவிர காந்தியவாதி!


வைகை ஆற்றின் கரை ஓரமாக அமைந்திருந்த அந்த தெருக்கோடியில் உள்ள லைன் வீட்டின் கடைசியாக இருந்த எட்டுக்கு பத்து அளவுள்ள அறைதான் அவரது வீடு. அதை அடுத்து ஆற்றின் கரை வரையிலும் நீண்ட சற்றே பெரிய தோட்டம் அவருடையது. வீடுகள் மருமகனுடையது. அந்த தோட்டம்தான் அவரது வாழ்க்கை. மகள், மருமகன், பேரன், கொள்ளு பேரன்,பேத்திகள் எல்லோரும் நாலு தெருக்கள் தள்ளி இருந்தார்கள். ஆனாலும் தாத்தா தனிக் குடித்தனம்தான். பிரச்சினை எதுவும் கிடையாது. சுயமரியாதை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை அவ்வளவுதான்.

அதிகாலை எழுந்து தோட்டத்தை சுத்தம் செய்து, தண்ணீர் பாய்ச்சுதல் இவரது தலையாயக் கடமை. இவர் தண்ணீர் பாய்ச்சும் விதமே அலாதி! கிணற்றில், விவசாயிகளைப் போன்று ஏற்றம் அமைத்து தலைப்பாத்தி, கிளைப்பாத்தி என்று கனகச்சிதமாக கால்வாய்கள் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடி செடி,கொடி,மரம் அனைத்திற்கும் நீர் பாய்ச்சிவிடுவார்.பின்னர் நீரிறைத்து குளித்து சூரிய நமஸ்காரம் செய்து உணவு அருந்த செல்வார். சமையலும் செல்ஃப் குக்கிங்தான்! உதவிக்கு ஒரு ஆள் கூட வைத்துக்கொள்ள மாட்டார். மதிய ஓய்வுக்கு பிறகு மாலை தோட்டத்திலேயே நடை பயிற்சி.இரவு உறக்கம். இதுதான் இவரது தினசரி அட்டைவணை.


யாரிடமும் அதிகம் பேசிப் பார்த்தது இல்லை. செடிகளிடம் பேசி பார்த்திருக்கிறேன். வாரம் ஒரு முறை வெளியே வருவார். நான் என் நண்பர்களுடன் அவரது தோட்டத்திற்கு விளையாட போவது உண்டு. எனது நண்பர்கள் அவர் மதியம் ஓய்வெடுக்க செல்லும் போது மட்டுமே விளையாடுவார்கள். கேட்டால் தாத்தா ஏதாவது சொல்வார் என்பார்கள். அவர் யாரையும் கடிந்து கொண்டதாக தெரியவில்லை. அந்த தோட்டம் என் பிரியத்திற்கு உரிய இடமானது.அதனால் அடிக்கடி மற்ற நேரங்களிலும் தோட்டத்திற்கு தனியே செல்ல ஆரம்பித்தேன். நான் தனியே விளையாடுவதைப் பார்த்து கூப்பிட்டு பேச ஆரம்பித்தார். விரைவிலேயே நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம். பள்ளி விடுமுறை நாட்களில் (அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்) காலை பத்து மணிக்கெல்லாம் அவரைப் பார்க்க ஓடிவிடுவேன். வாங்க,வாங்க என்று வரவேற்பார். சிறுமியான என்னை வாங்க,போங்க என்றுதான் அழைப்பார். அந்த நேரம் அவர் பெரும்பாலும் சமைத்துக் கொண்டு இருப்பார். சிறிய பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு கைப்பிடி அரிசி போடுவார். பின்னர் பருப்பைப் போட்டு வெந்ததும் தோட்டத்தில் பறித்து வந்த காய்கறிகளை கீரை உட்பட நறுக்கிப் போட்டு அரைவேக்காடாக எடுத்து விடுவார். அதான் லஞ்ச்.


அந்த சிறிய அறை அத்தனை சுத்தமாக இருக்கும். ஒரு மரமேஜை, நாற்காலி,அலமாரியில் புத்தகங்கள்,எழுது பொருள்கள், ஒரு சிறிய டிரான்சிஸ்டர். அதை ஒட்டி படுப்பதற்கு ஒரு பெஞ்ச். பெஞ்சை ஒட்டிய ஜன்னல் பகுதியில் பெட்டிக்கடையில் இருப்பது போன்று நாலைந்து பாட்டில்களில் கடலைமிட்டாய்,பொரிகடலை,தேன்மிட்டாய் வகையறாக்கள். மறுபுறத்தில் சிறிய மேஜையின் மேல் மண்ணெண்ணை ஸ்டவ்வும்,கொஞ்சம் பாத்திரங்களும். சமைத்து கொண்டு இருக்கும் போதே அந்தகால வரலாற்றைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் காந்தியைப் பற்றிதான். பின்னர், அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எனது மன தைரியம் அல்லது பெருந்தன்மையைப் பாராட்டும் விதமாக கடலைமிட்டாயோ, தேன் மிட்டாயோ கொடுத்து அனுப்புவார். நம்புங்கள், நான் அந்த கடலை மிட்டாய்க்காக செல்லவில்லை. அவரது நட்பை நான் விரும்பினேன். அப்போது புரியவில்லை. பின்னர் யோசிக்கும் போதுதான் தோன்றியது. வாரம் ஒரு முறை அவர்கள் வீட்டிற்கு செல்வார். அவரது கொள்ளு பேரன், பெயர்த்திகள் அவருடன் நேரம் செலவழித்து இல்லை.அவர்கள் வெளியில் விளையாடப் போய் விடுவார்கள். நான் தாத்தாவின் அன்பைப் பெற்றது இல்லை. அப்பா வழி தாத்தா நான் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். அம்மா வழி தாத்தாவிடமோ, டாமைக் கண்ட ஜெர்ரியைப் போல் நாலடி தள்ளியே இருப்பேன். அவரும் நட்பு பாராட்டியதில்லை.இதன் காரணமாகத்தான் எங்கள் இருவரிடையே நேசம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சில வேளைகளில் பகலுணவுக்கு பின் செல்வேன். அந்த நேரத்தில் தாத்தா தோட்டத்து கெஸ்ட் ஹவுஸில் இருப்பார். அது தென்னை ஒலையால் வேயப்பட்ட சிறு குடில் தோட்டத்தின் கோடியில் இருந்தது. அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் ஏதாவது ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருப்பார். தூக்கமும் அதில்தான். அருகில் ஒரு மரபெஞ்ச் ஒரு சிறிய மேஜையில் குடிநீர் மண்பானை, கைவிசிறி மற்றும் டிரான்சிஸ்டர். அங்கு அமர்ந்து கையோடு கொண்டு செல்லும் சொப்பு (விளையாட்டு பாத்திரங்கள்) வைத்து விளையாடுவேன். அவரும் நான் கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதைப் போல் பாவணை செய்வார். சில நேரங்களில் ஏதாவது எழுதுவார். அவர் வெண்பாக்கள் எழுதியிருந்ததும் இரண்டு கவிதை தொகுப்பில் சில பாக்கள் இடம்பெற்றதும் தமிழ் புலமை உடையவர் என்பது எல்லாம் நான் வளர்ந்த ‌பிறகுஅறிந்தது.

அவருடன் பழகிய சில காலங்கள் இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. நாடு விட்டு நாடு வந்தும் வாழ்க்கை முறைகள் மாறிய போதும் நான் இன்றும் இயற்கையின் காதலியாய் இருப்பதற்கு அவர் மிக முக்கிய காரணம். முதுமையிலும் ஆரோக்கியமாகவும்,கம்பீரமாகவும் யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்த அவர் என்னுடைய ஹீரோக்களில் ஒருவர்.

என்ன, தாத்தாவுக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிறீர்களா? அது, தாத்தா தனது தொண்ணூற்றி ஏழாவது வயதில் ஒரு மாலையில் மகள் வீட்டு மாடியில் இருக்கும் போது அந்த பக்கம் போன உருவத்தை திருடன் என எண்ணி துரத்தி ஓடிய போது மொட்டைமாடி குட்டை சுவர் தடுக்கி மேலே இருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட்டார். அது வரை பல பெயர்கள் கொண்டிருந்த அவர் அன்று முதல் ஜம்ப்பிங் தாத்தா என்ற ஒரே பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

சனி, 13 நவம்பர், 2010

மனிதர்கள்

என் வாழ்வில் நான் சந்தித்த,பழகிய வியக்க வைத்த மனிதர்களைப் பற்றிய அறிமுகம். இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல என்றாலும் வாழ்க்கையில் எனக்கு வியப்பும், சுவாரஸ்யமும் சில பாடங்களையும் தந்தவர்கள். நீங்களும் படித்துப் பாருங்களேன்!
குமுதா

எல்லோருக்கும் சிறுவயதில் ஏற்படும் முதல் ஞாபகங்கள் பெற்றோரை சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எனக்கு என் உறவினரான இவரது ஞாபங்கள்தான்.

அப்போது நாங்கள் என் அம்மா வழி பாட்டியின் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்தோம்(வாடகை இல்லாமல்தான்). என் உறவினராக எனக்கு அறிமுகமான இவர் சில நாட்களிலேயே எனது அம்மாவிற்கும் மேல் ஆகிவிட்டார். என் மீது பிரியம் அதிகம். அந்நாட்களில் என் அம்மா எங்களிடம் அதிக கவனத்துடன் இருந்ததில்லை. (அதற்கு அவரது உடல் நிலையும் ஒரு காரணம்) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவரது பிஸி ஷெட்யுலுக்கு நடுவிலும் என்னைக் கவனித்து கொண்டார். இதற்காக பிரதி உபகாரம் எதுவும் பெற்றதில்லை.

மெலிந்த கருத்த தேகத்துடன் சற்று உயரமான,அலங்காரங்கள் ஏதுமின்றி வளைய வரும் இவர் எனக்கு அழகானவர்.அன்பும்,சுறுசுறுப்பும்தான் இவரது அடையாளம். கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் யாருடைய உதவியுமின்றி வாழ்ந்து கொண்டு இருந்தார். சத்துணவு கூடத்தில் ஆயாவாக இருந்த இவர், உறவினர் மற்றும் அண்டை வீடுகளில் காலை,மாலை நேரங்களில் வீட்டு வேலைகளையும் பார்த்து வந்தார்.

இவரிடம் என்னை கவர்ந்த விஷயம் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.யாராவது ஏதாவது கேட்டால், அத விடுங்க, என்னைக்கு இல்ல, இன்னைக்கு பேச என்பார். அல்லது வாழனும்னா எல்லாத்தையும் பாத்துதான் ஆகணும் என்று முடித்துவிடுவார். அழுதோ,புலம்பியோ பார்த்ததில்லை நான். அவரது இளம் வயதில் நல்ல வசதியாக வாழ்ந்தவர் என்று மற்றவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். அதைப்பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை.

மழை, வெயில் எல்லாம் ஒன்றுதான் அவருக்கு. தீபாவளி, பொங்கலன்று வேலை கூடுதலாக இருக்கும்.ஆனால், அன்று அரிதாக கூடுதலாக கிடைக்கும் பலகாரங்களைக்கூட தனக்கு, தன் பிள்ளைகளுக்கு என்று இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.

அவரது ஓய்வு நேரம் என்றால் மதியம் மூன்றிலிருந்து நான்கும் இரவு பத்து முதல் அதிகாலை ஐந்துவரையும்தான், இதில் மதியம் பாட்டி வீட்டு முன் வராண்டாவில் சற்று கண்ணசரும் நேரம் மற்ற பெண்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்.இவரையும் விடுவதில்லை.ஏ குமுதா! உனக்கு விஷயம் தெரியுமா என்று எழுப்புவார்கள். இவரும் கூலாக ஆங்! என்று சவுண்டைக் கொடுத்து விட்டு அடுத்த விநாடி தூக்கத்தைத் தொடருவார். உங்கள மாதிரியா நான்? என்று கோபப்பட மாட்டார். பெண்கள் புதிதாக நகையையோ,புடவையையோக் காட்டி எப்படி இருக்கிறது என்றால் சந்தோஷமாக நல்லாருக்கு என்பார். பொறாமை,ஏக்கம் எதுவுமே அந்த கண்களில் நான் பார்த்தது இல்லை.

சத்துணவுக்கூடத்தில் வேலை பார்க்கும் டீச்சரும், மேற்பார்வையாளரும் கூடத்திற்கு வரும் அரிசி,எண்ணைய் போன்றவற்றில் தங்கள் வீடுகளுக்கும் கொஞ்சம் எடுத்து செல்வார்கள்.ஆயாக்களின் வாயை அடைக்கும் விதமாக அவர்களுக்கும் சிறிது ஈயப்படும். அதையும் தொடமாட்டார். மற்றவர்களைப் பற்றி போட்டும் கொடுக்கமாட்டார். உறவினர்கள் கேட்டால், அப்போது மட்டும்,என்ன பாவம் பண்ணினேனோ? நாயா அலையறேன், இதுல பச்சபுள்ளைக பாவத்தவேற சேத்துகணுமா? அரை வயித்து கஞ்சினாலும், மனுசனுக்கு மானம் முக்கியம் என்று பதில் வரும். யாருடனும் சண்டை போட்டு பார்த்ததில்லை. யாராவது திட்டினாலும், போ கழுத! உனக்கு வேற வேல இல்ல என்று இளையவர்களுக்கும், விடுங்க,தப்புனா மன்னிச்சுருங்க என்று பெரியவர்களுக்குமாக ஒரே பொதுவான பதிலாக வைத்திருப்பார்.

பொறாமை,கோபம்,சுயகழிவிரக்கம், எதுவுமின்றி வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த இவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தவிப்பு


காற்றினுள் துழாவுகின்றது என் கைகள்

பின்னிரவின் மௌனங்களின் ஊடாக

சலசலக்கிறது காற்று அமைதியைக் கிழித்தபடி

யாருமறியா இரவில் யாக்கையற்ற மனது

அலைகிறது வெப்பப் பெருவெளியில்

குருதியின் ஊடாக வழிந்தோடும்

மரணத்தின் இரைச்சல்கள் துரத்தும் போதும்

களைத்த கைகளின்

தேடல் முடிவற்று நீள்கிறது...