ஞாயிறு, 28 நவம்பர், 2010
டெய்சி அக்காவும் முருகா போலீஸும்
ஒரு ஞாயிறு அதிகாலை எங்கள் வீட்டின் எதிர் வீட்டுக்கு குடி வந்தது அந்த குடும்பம். அம்மா,அப்பா, ஒரு பையன், ஒரு பெண் என்று அளவான குடும்பம். அந்த சிறிய ஊருக்கு சற்று பொருந்தாத நடை,உடை அமைப்புடன் இருந்தார்கள் அவர்கள். பேங்க் உத்தியோகம் காரணமாக மாற்றலாகி அந்த ஊருக்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டு வாசலில் சிறுமிக்கே உரிய ஆவலுடன் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அந்த பெண்ணின் பெயர் ஏஞ்சலா டெய்சி. பெயரைப் போலவே ஆளும் தேவதைதான். கதாசிரியர்கள் கதைகளில் வர்ணனை செய்யும் அழகின் இலக்கணங்களுடன் இருந்தார். நான் நிற்பதை பார்த்து டெய்சியின் அண்ணன் என்னை உள்ளே அழைத்தார்.வெட்கத்துடன் தயங்கி நின்றேன். எட்டிப் பார்த்த டெய்சி அக்கா என் கையைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று கைகளில் ஆரஞ்சு மிட்டாய்களை திணித்தது. ஓட்டமாய் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். முன்னே பின்னே தெரியாதவங்களிடம் எதுவும் வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று முதுகில் இரண்டு போட்டார்.
அவர்களது தோற்றத்தைப் பார்த்து யாவரும் நெருங்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்களோ யாரைப் பார்த்தாலும் மானாவாரியாக சிரித்து வைத்தனர். டெய்சி அக்காவின் சிரிப்பு அந்த கால கே.ஆர்.விஜயாவை நினைவுபடுத்தியது. இப்போது உள்ள அக்கபோர்கள் அப்போது இல்லாததால் இரண்டாவது நாளே டெய்சி அக்கா எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து விட்டது. அக்கா நான் படிக்கும் பள்ளியில் சேர்ந்தது எனக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது.(அக்கா கல்லூரியில் படிக்கும் பெண் என்றே நினைத்திருந்தேன்). அடுத்து வந்த நாட்களில் அக்காவுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்வது இயல்பானது. பள்ளிக்கு போகும் போது அக்கா என் கையைப் பிடித்தபடி ஏதாவது கதைகள் அல்லது அவர்கள் ஊரைப்பற்றி பேசிக்கொண்டு வரும். அக்காவின் கதை சொல்லும் திறமைக்கு நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்க்ரீன் ப்ளே ரைட்டர் ஆகி இருக்கலாம். காட்சிகளை கண்முன் நிறுத்திவிடும். நான் ஒரு இனம் புரியாத பெருமிதத்துடன் நடந்து வருவேன். அக்காவின் கலகலப்பான சுபாவத்தால் விரைவிலேயே எல்லோரிடமும் நெருக்கமாகி விட்டனர் அவர்கள். அதன் பலனாக அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான பலகாராங்களை செய்து அக்கம் பக்கத்தினரை சோதித்து கொண்டிருந்தார்கள். பிரியாணி தொடங்கி கேக் வரை எங்கள் ஊருக்கு அரிதான அயிட்டங்களை சர்வசாதாரணமாக போட்டு தாக்கினர்! மனிதர்கள் மட்டுமின்றி தெருவில் போகும் மாடு, நாய்களுக்கும் கஞ்சி, தண்ணி எல்லாம் உண்டு. காக்கை குருவியையும் விடுவதில்லை.
ஞாயிற்றுகிழமை பெரும்பாலும் அக்காவுடன்தான். தினமும் அக்கா அதிகாலையில் பெட்ரூம் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கிண்ணத்தில் பாலை வைத்து இங்க் பில்லர் மூலம் அணில்களுக்கு பாலூட்டும். புசு,புசுஅணில்கள் அக்காவின் மடி மீதும் தோள் மீதும் ஓடியாடும். ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறைகளிலும் அந்தக் காட்சியைக் காண ஓடிவிடுவேன். எத்தனை வயதானாலும் மறக்க முடியாத அழகான காட்சி அது. பின்னர் சர்ச். பிற்பகலில் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவோம்.
அந்த நாட்களில் எங்கள் ஊரில் முருகா என்று ஒரு பிச்சைகாரான் இருந்தான். சிவப்பேறிய கண்களும்,ஒட்டிய வயிறும், சடைப்பிடித்து தொங்கும் செம்பட்டை முடியும்,தாடியுமாக பயப்படுத்தும் தோற்றத்துடன் இருப்பான். பிள்ளைகள் மட்டுமன்றி, பெண்களே அவனைப் பார்த்து பயப்படுவார்கள். போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் போதும் அசிங்கமாக திட்ட ஆரம்பித்துவிடுவான். வேறு எதுவும் பேசவராது! போலீஸிடம் அடிவாங்கி மன நிலை பிழன்றவன் என்று ஒரு சாரரும், போலீஸீல் வேலை பார்த்து பைத்தியமாகி வேலை இழந்தவன் என்று மற்றவர்களும் ஊகங்களை கருத்துக்களாக சொல்லினர். அடர் நீலம் அல்லது காக்கி வண்ணத்தில் ஒரு அரை டிராயர் அணிந்திருப்பான். கையில் ஒரு அலுமினிய சட்டி. அவன் பிச்சை எடுக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கேட்பது எல்லாம் கிடையாது. இவனைப் பார்த்தால்தான் தெருவே காலியாகிவிடுமே! ஆங்காங்கே வாசலுக்கு முன் சிறிது நேரம் அமர்ந்திருப்பான். யாராவது ஏதாவது கொடுத்தால் உண்பான் அவ்வளவே! அடம்பிடிக்கும் குழந்தைகள் அனைத்தும் அவன் பேரைக் கேட்டால் அடங்கி விடும். நான் எப்போதும் மறைந்திருந்தே அவனைப் பார்ப்பேன். பெரிய பையன்கள் மறைந்திருந்து முருகா போலீஸ் என்று கத்தி அவனை டென்ஷன் ஆக்குவார்கள். இவனும் குரல் வரும் திசையைப் பார்த்து கல்லெறிந்து கத்துவான்.
டெய்சி அக்கா வீடு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டைத் தவிர அந்த தெருவில் உள்ள வேறு யார் வீட்டின் முன்பும் அவன் உட்காருவதில்லை. காரணம் அவர்கள் சாதம்,குழம்பு,காயோடு சேர்த்து கொடுத்து விடுவார்கள். ஒரு நாள் அக்கா அவனிடம் ஏதோ பேசியதை தொலைவிலிருந்து பார்த்தேன்.மறுநாள் அக்காவிடம், அவங்கூட பேசாதே புடுச்சுட்டு போய்டுவான், என்றேன். சே!அவன் பாவம், நல்லவன். உனக்கு பிடிக்காததை செய்தாலோ, சொன்னாலோ உனக்கு கோபம் வருமில்லையா? அது போல்தான் அவனும் என்றது. அவன் பேசுவது புரியாவிட்டாலும் அவர்கள் வீட்டில் அவனோடு உரையாடுவார்கள். ஒரு முறை டெய்சி அக்கா அவர் அண்ணனிடம் சொல்லி, அவனைக் கூட்டிப் போய், தலையை மொட்டை அடித்து தாடி எல்லாம் மழித்துவிட்டனர். எப்போதும் கோபமாக இருக்கும் முருகா, அக்காவைக் கண்டால் யேசுவின் கைகளில் இருக்கும் ஆடு போல் ஆகிவிடும். அவர்கள் சொல்லும் சின்ன,சின்ன வேலைகளை அமைதியாக செய்யும். கிறிஸ்மஸ் அன்று புது லுங்கியும்,சட்டையும் வாங்கிக் கொடுத்தனர்.
பின் ஒரு மழைக்கால மாலைப் பொழுதில் அவர்கள் வீட்டை காலி செய்து எல்லோரிடமும் விடை பெற்று ரயிலடிக்கு சென்ற போது பெட்டி படுக்கைகளை தூக்கிகொண்டு முருகாவும் கூடவே சென்றது. ரயில் புறப்படும் வரை அதற்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் ரயிலில் ஏறி அது புறப்பட ஆரம்பித்தும் கத்தி அழுது கொண்டே ரயிலுடன் ஓட ஆரம்பித்து. அக்காவின் கண்களிலும் கண்ணீர். அந்தக் காட்சி திரைப் படத்தில் வரும் சோகமான க்ளைமாக்ஸை போன்று இருந்தது. அன்றிலிருந்து கதைகளில் இறக்கைகளும், நட்சத்திரமும் கொண்ட தேவதைகளைப் பற்றி படிக்கும் போது அந்த தேவதைகள், டெய்சி அக்காவின் சாயலுடனே காட்சியளித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
அற்புதம். ஒரு நல்ல சிறுகதையை படித்த உணர்வு ஏற்பட்டது.
thank u anna.
டெய்சியைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சோமா போலீஸ் பற்றி நன்றாகவே தெரியும். அந்த ஊருக்கு வந்த புதிதில் நாய்கள் குரைக்கும் சத்தமும் சிறுவர்களின் ‘சோமா போலீஸ், முருகா போலீஸ்’ என்ற கூக்குரலும், அதைத் தொடர்ந்து சோமாவின் மிக மோசமான திட்டுகளையும் கண்டு பயந்துபோயிருக்கிறேன். சோமா எப்போது இந்தத் தெருவை விட்டுக் கடந்து செல்வார் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.
நாங்கள் வேறொரு வீட்டுக்குச் சென்றபோதுதான் அந்த உண்மை தெரிந்தது. எங்கள் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளிதான் சிலோன்காரர் வீடு இருந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் சோமாவுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து, கவனித்து வந்தார்கள். அவர்கள் சொல்லும் சிறிய வேலைகளைச் செய்வார். கொடுக்கும் காசுகளைச் செலவு செய்ய மாட்டார். அவர்கள் உணவு கொடுத்தும் சோமா ஏன் தட்டைத் தூக்கிக்கொண்டு, வெளியே செல்கிறார் என்று தெரியவில்லை!அந்தத் தெருக்காரர்களுக்கு சோமாவைப் பற்றித் தெரிந்திருந்ததால், ஒருவரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். சோமாவும் வசைபாட மாட்டார். அவர் இறந்த பிறகு, தோட்டத்தில் முருங்கை மரத்துக்கடியில், அவர் சேமித்து வைத்திருந்த நாணயங்கள் இருந்ததாகச் சொன்னார்கள்.
I also seen Muruga Police in my childhood.But i don't heard about daisy akka.any way nice to recollect all nostalgia.Please continue further about our town.
@ sujatha:interesting.
@ ragu: thank u
கருத்துரையிடுக