புதன், 27 பிப்ரவரி, 2013

எவ்வளவோ பண்றோம்! இத பண்ண மாட்டோமா என்ன?

தேர்வு எழுத போகும் இளம் நண்பர்களுக்கும், நண்பர்களின் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! கடைசி நேர டிப்ஸ்கள் எதுவும் வேலைக்கு ஆகாது என்றாலும் ஒரு சிறிய அக்கறையின் காரணமாக எழுத விழைகிறேன்! முதலில் தேர்வைப் பற்றிய பயம், பதட்டம் இரண்டையும் உங்களை அணுக விடாதீர்கள். தேர்வு என்பது உங்களது அறிவை,திறமையை இந்த உலகிற்கு நிரூபணம் செய்கிறீர்கள்.நாங்கள் பெரிய ஆள்கள்தான் என்று அவ்வளவே. காரணம் நாம் எதற்கும் சான்றிதழ் (ப்ரூஃப்) கேட்கும் உலகத்தில் வாழ்வதால்! இதுவும் மாறும் எனவே பெற்றோர்,ஆசிரியர்கள்,மதிப்பெண்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்களை நம்புங்கள். அது உங்களை கைப்பிடித்து வெற்றியை நோக்கி அழைத்து செல்லும். யார் முன்பும் கைகட்டி தலைகுனிந்து நிற்பதை தவிர்த்துவிடும். வெற்றியாளர்களாக வாழ்வதை காட்டிலும் சுய மரியாதை, மதிப்பு மிக்கவர்களாக வாழ்வது முக்கியம். இதுவரை எந்த அடிப்படையில் படித்தீர்களோ அந்த ஸ்டைலையே தொடருங்கள்.கடைசி நேர மாற்றம் பதட்டத்தை அதிகமாக்கும்.ஆனால் கடினமானதாக தோன்றுவதை புத்துணர்ச்சியுடனும்,சக்தியுடனும் இருக்கும் நேரத்தில் படித்துவிடுங்கள்.எளிதில் வசப்படுத்திவிடலாம். களைப்பை போக்குவதற்கு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து கண்களை மூடி படுத்திருப்பது,விளையாடுவது,நடைபயிற்சி, டான்ஸ்ஆடுவது,பிடித்த இசைகளை கேட்பது என்று வைத்துக்கொள்ளுங்கள்.மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். உணவிலும் பழங்கள்,காய்கறிகள் நிறையசேர்த்துக் கொள்வது உங்களை சக்தியுள்ளவர்களாக வைக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள். விளைவுகளை யோசிக்காதீர்கள். பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பானவர்களே சுதந்திரமானவர்களாக உணர்வார்கள். நீங்கள் முயற்சி செய்யாத வரையில் மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்கள் சக்தி உங்களுக்கே தெரியப்போவதில்லை! தொடர்ந்து முயற்சிப்பவர்களால் மட்டுமே தாங்கள் நினைத்ததையும் தாண்டி அசாதாரண வெற்றிகளை பெற முடியும். வெற்றி பெற்ற மக்கள் யாரும் தவறு செய்யாதவர்கள் அல்ல. ஆனால் தளராதவர்கள். இன்று உங்கள் செயல்திறனை மேம்படுத்துங்கள்! நாளை வெற்றி உங்களை தொடரட்டும்.