புதன், 29 டிசம்பர், 2010

பூக்களும் மெழுகுவர்த்திகளும்


வேட்டையாடப்பட்ட பூக்களை மறந்துவிடுங்கள்
வேட்டையாடப்படப் போகும் பூக்களுக்கான
மெழுகுவர்த்திகளுடன்
நாம் தயாராக இருப்போம்
நம் பூக்களுக்கான வேலிகளை
வேட்டைக்காரர்களிடமே விட்டுவிடுவோம்
வேட்டை முடிந்ததும்
தீர்ப்பும் அவர்களிடமே!
பூக்கள் உதிரும் தருணம்
அவர்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாம் ஏற்றிவைப்போம்
என் வீட்டுப் பூக்களுக்கான மெழுகுவர்த்திகளை
நாளை வேறு யாரேனும் ஏற்றக்கூடும்.
நம்மிடம் பூக்கள் ஏராளம்
மெழுகுவர்த்திகளை சேகரிக்கத் தொடங்குவோம்

(இக்கவிதை வன்முறையில் இறந்த நீதி கிடைக்காமல் போன அனைத்து குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்.)

செவ்வாய், 28 டிசம்பர், 2010

அர்த்தம்பள்ளி செல்லும் அவசரத்திலும்
பறவைக்கு வீசும் பிடி அரிசியில்
செடிக்கு ஊற்றும் கோப்பை நீரில்
வாட்ச்மேன் அங்கிளுக்கு உதிர்க்கும்
வணக்கத்தில்
வாழ்தலின் காரணத்தை விளக்கிச்
.........செல்கிறாள் மகள்!

செவ்வாய், 7 டிசம்பர், 2010

கடலை கோபால்

கடலேக்கா………! கட்டை குரலில் சத்தமாக கூவியபடி வலம் வரும் கோபாலை மாலை ஐந்து மணி அளவில் தவறாமல் காணலாம். இடது பக்க இடுப்பில் கடலைக் கூடையை வைத்தபடி வலது கையை லாவகமாக வீசியபடி வரும் கோபாலைக் கண்டவுடன் தெருவே களைகட்டி விடும். கருப்பாக, உயரமாக ஆரஞ்சு, சிகப்பு, ரோஸ் என்று ஆளை அடிக்க வரும் கலரில் சேலையும், தலையில் கனகாம்பரமும்,சேலைக்கு மேட்ச்சான வளையல்களும், காலில் கொலுசுமாக வளையவரும் கோபால்.ஆம்!மூன்றாம்பாலினத்தவர்.

போகிறபோக்கில் எல்லோரையும் குசலம் விசாரிக்காமல் போவதே கிடையாது. என்னத்தே! மாமா எப்படி இருக்கு? ஏ கமலா உடம்பு முடியலைன்னு சொன்னியே இப்ப தேவலையா? என் அம்மாவிடம் கூடுதல் ஒட்டுதல். ஏங்க்கா, அத்தான் லெட்டர், கிட்டர் போட்டாரா? (என் அப்பா அப்போது சென்னைவாசி.) என்று எல்லோரையும் உறவு முறை சொல்லித்தான் அழைக்கும்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு டியுஷன் சென்டர். டியுஷன் சென்டர் என்பதைவிட மினி ஸ்கூல் என்று கூறலாம். இள வயது ஸ்கூல் வாத்தியார் நடத்திக்கொண்டு இருந்தார். அவரது வீடு வேறு தெருவில் இருந்தது. மாலை மாணவர்கள் வரும் வரை வீட்டு வாசலில் அமர்ந்து இளவட்டங்களுடன் அரட்டையில் இருப்பார். கோபாலிடம் கடலை வாங்குவதோடு கடலையும் போடுவார். அந்த இளைஞர்களும்தான். என்ன கோபாலி! அப்படித்தான் அழைப்பார். நேத்து ஆளக் காணோம்? பொண்ணு பார்க்க வந்திருந்தாங்களா? ஆமா சீமைல இருந்து ஆள் வந்தான். ஏன்? என்று பதிலளிக்கும். கோபாலி டார்லிங்! நைட் ஷோ சினிமாக்கு போகலாமா?. புள்ளைகளுக்கு பாடஞ்சொல்லி தர்ற வாத்தி மாதிரி பேசுங்க, நல்லா வந்துரும் வாயில ஆமா. ஆல்பர்ட்டு படிச்சு உருப்படற வழிய பாரு. இவரு கூட சேந்து வீணாபோயிடாத. கடலேக்கா………! கையை வீசியபடி அலட்சியமாக போகும். சில நேரங்களில் வாசலில் நிற்கும் என் கையில் நான்கு கடலைகளை திணித்து விட்டு போகும். என் அம்மா பார்த்தால், சரிதான்! நீ பண்ற இந்த நாலணா,எட்டணா வியாபரத்துல சும்மா கொடுத்துட்டு போ வியாபரம் விளங்கிரும் என்று திட்டுவார். சின்னபுள்ளைக்கு ரெண்டு கடலை கொடுக்கிறதுலதான் நட்டமாயிடபோது. போக்கா! என்றபடி போகும்.

பகல் நேரங்களில் ஹோட்டல்களுக்கு தண்ணீர், இலைக்கட்டு எடுத்து கொடுக்கும். திருவிழாக் காலங்களில் வைகை ஆற்றில் கூட்டத்திற்குள் கடலை விற்கும். திடீரென்று இரண்டு நாள் ஆள் காணாமல் போய்விடும். பின்னர் லுங்கியும்,சட்டையும் அணிந்தபடி வரும். அம்மா, அதனிடம் என்ன கோபால் ஆளக் காணோம்? உடம்பு சரியில்லையா? உடம்புக்கு என்ன நல்லாத்தான் இருக்கு. மாசக் கடேசில்ல,வழக்கம் போல கேசு கிடைக்காத மகராசன் என்ன கூட்டிக்கிட்டு போயிட்டாரு. போலீஸ் டேஷனுக்கு போயிருந்தேன். கூப்பிட்டா எதுக்கு போற? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே? நல்லா சொன்ன போ! நா சொன்னவுடனே விட்ருவாங்க பாரு. ஆனா ஏட்டு நல்ல மனுசன். என்ன பத்தி தெரியும். புரோட்டா, டீ வாங்கி கொடுப்பாரு. சில நேரம் சினிமாக்கு கூட காசு கொடுப்பாரு. அம்மாவிற்கு கோபம் வரும். கேஸ் வேணுன்னா ரோட்ல போற யாரையாவது புடிக்க வேண்டியதுதானே? நீ என்ன தொக்கா? விடுக்கா, நீ எதுக்கு கோவப்படற? நான் அவருக்கு உதவி செய்றதா நினச்சுதான் போறேன்! இதுக்கு பேரு உதவி இல்ல,தப்பே செய்யாம குற்றவாளி நீ. ஏன் யோசிக்கமாட்டேங்கிற? என்று இருவரும் பேசுவது புரியாமல் வேடிக்கை பார்ப்பேன்.

கோபால் இப்படி இரு வேறு தோற்றத்தில் வருவது எனக்கு அந்த வயதில் வியப்பையும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அம்மாவிடம், ஏம்மா கோபால் இப்படி இருக்கிறது? அடி! கோபால் உனக்கு தம்பியா? மரியாதையாக பேசு. சரி, இருக்கிறார். சொல்லுங்க என்றேன். இத்தனை நாளும் நீயாக இருந்த நீ, நீ அல்ல வேறு என்று உனக்கு தோன்றினால் எப்படி இருக்கும்? என்று ல.சா.ரா ரீதியில் ஆரம்பித்தவர்,(அம்மா தமிழில் அதிகம் படிப்பவர்) என் முகபாவத்தை பார்த்ததும் நிறுத்திக் கொண்டார். கொஞ்சநாள் போகட்டும் விளக்குகிறேன். எல்லோரையும் போல் ஆனால் ஒரு மாறுதலுக்கு உட்பட்ட மனிதர். என்றார். ஆனாலும் எனக்கு பிடிபடவில்லை.


ஓரு நாள் லூங்கி, சட்டையில் வந்த அவரிடம், நீங்க ஏன் இப்பல்லாம் சேலை கட்டலை? என்றேன். கேள்வியின் அர்த்தமும், வீரியமும் தெரியாமல். பதில் சொல்லாமல் என் கைகளைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு கண்களின் ஓரம் கண்ணீருடன் சிரித்தார்.

பதிவு செய்ய முடியாத ஊமையின் வலியைப் போன்ற அந்த கண்ணீரின் காரணம் என்னவாக இருக்கும்? தான் நினைத்தபடி வாழ முடியாமல் கோபாலைத் தடுத்தது எது? சமூகத்தின் பார்வை கோபாலுக்கு எந்த விதமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும்? குற்றவாளிகள், சமூகத்தை ஏமாற்றி தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் மனிதர்களையும் விட கோபால் எந்த விதத்தில் குறைந்தவர்? சமுத்திரத்தின் "வாடாமல்லி", நடராசனின் "மதி என்ற மனிதனின் மரணம் குறித்து" படிக்கும் போது இன்றும் கண் முன் இரத்த சாட்சியாய் நிற்கிறார் கோபால்.