என் வாழ்வில் நான் சந்தித்த,பழகிய வியக்க வைத்த மனிதர்களைப் பற்றிய அறிமுகம். இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல என்றாலும் வாழ்க்கையில் எனக்கு வியப்பும், சுவாரஸ்யமும் சில பாடங்களையும் தந்தவர்கள். நீங்களும் படித்துப் பாருங்களேன்!
குமுதா
எல்லோருக்கும் சிறுவயதில் ஏற்படும் முதல் ஞாபகங்கள் பெற்றோரை சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எனக்கு என் உறவினரான இவரது ஞாபங்கள்தான்.
அப்போது நாங்கள் என் அம்மா வழி பாட்டியின் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்தோம்(வாடகை இல்லாமல்தான்). என் உறவினராக எனக்கு அறிமுகமான இவர் சில நாட்களிலேயே எனது அம்மாவிற்கும் மேல் ஆகிவிட்டார். என் மீது பிரியம் அதிகம். அந்நாட்களில் என் அம்மா எங்களிடம் அதிக கவனத்துடன் இருந்ததில்லை. (அதற்கு அவரது உடல் நிலையும் ஒரு காரணம்) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவரது பிஸி ஷெட்யுலுக்கு நடுவிலும் என்னைக் கவனித்து கொண்டார். இதற்காக பிரதி உபகாரம் எதுவும் பெற்றதில்லை.
மெலிந்த கருத்த தேகத்துடன் சற்று உயரமான,அலங்காரங்கள் ஏதுமின்றி வளைய வரும் இவர் எனக்கு அழகானவர்.அன்பும்,சுறுசுறுப்பும்தான் இவரது அடையாளம். கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் யாருடைய உதவியுமின்றி வாழ்ந்து கொண்டு இருந்தார். சத்துணவு கூடத்தில் ஆயாவாக இருந்த இவர், உறவினர் மற்றும் அண்டை வீடுகளில் காலை,மாலை நேரங்களில் வீட்டு வேலைகளையும் பார்த்து வந்தார்.
இவரிடம் என்னை கவர்ந்த விஷயம் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்.யாராவது ஏதாவது கேட்டால், அத விடுங்க, என்னைக்கு இல்ல, இன்னைக்கு பேச என்பார். அல்லது வாழனும்னா எல்லாத்தையும் பாத்துதான் ஆகணும் என்று முடித்துவிடுவார். அழுதோ,புலம்பியோ பார்த்ததில்லை நான். அவரது இளம் வயதில் நல்ல வசதியாக வாழ்ந்தவர் என்று மற்றவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். அதைப்பற்றியும் அவர் அதிகம் பேசியதில்லை.
மழை, வெயில் எல்லாம் ஒன்றுதான் அவருக்கு. தீபாவளி, பொங்கலன்று வேலை கூடுதலாக இருக்கும்.ஆனால், அன்று அரிதாக கூடுதலாக கிடைக்கும் பலகாரங்களைக்கூட தனக்கு, தன் பிள்ளைகளுக்கு என்று இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.
அவரது ஓய்வு நேரம் என்றால் மதியம் மூன்றிலிருந்து நான்கும் இரவு பத்து முதல் அதிகாலை ஐந்துவரையும்தான், இதில் மதியம் பாட்டி வீட்டு முன் வராண்டாவில் சற்று கண்ணசரும் நேரம் மற்ற பெண்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்.இவரையும் விடுவதில்லை.ஏ குமுதா! உனக்கு விஷயம் தெரியுமா என்று எழுப்புவார்கள். இவரும் கூலாக ஆங்! என்று சவுண்டைக் கொடுத்து விட்டு அடுத்த விநாடி தூக்கத்தைத் தொடருவார். உங்கள மாதிரியா நான்? என்று கோபப்பட மாட்டார். பெண்கள் புதிதாக நகையையோ,புடவையையோக் காட்டி எப்படி இருக்கிறது என்றால் சந்தோஷமாக நல்லாருக்கு என்பார். பொறாமை,ஏக்கம் எதுவுமே அந்த கண்களில் நான் பார்த்தது இல்லை.
சத்துணவுக்கூடத்தில் வேலை பார்க்கும் டீச்சரும், மேற்பார்வையாளரும் கூடத்திற்கு வரும் அரிசி,எண்ணைய் போன்றவற்றில் தங்கள் வீடுகளுக்கும் கொஞ்சம் எடுத்து செல்வார்கள்.ஆயாக்களின் வாயை அடைக்கும் விதமாக அவர்களுக்கும் சிறிது ஈயப்படும். அதையும் தொடமாட்டார். மற்றவர்களைப் பற்றி போட்டும் கொடுக்கமாட்டார். உறவினர்கள் கேட்டால், அப்போது மட்டும்,என்ன பாவம் பண்ணினேனோ? நாயா அலையறேன், இதுல பச்சபுள்ளைக பாவத்தவேற சேத்துகணுமா? அரை வயித்து கஞ்சினாலும், மனுசனுக்கு மானம் முக்கியம் என்று பதில் வரும். யாருடனும் சண்டை போட்டு பார்த்ததில்லை. யாராவது திட்டினாலும், போ கழுத! உனக்கு வேற வேல இல்ல என்று இளையவர்களுக்கும், விடுங்க,தப்புனா மன்னிச்சுருங்க என்று பெரியவர்களுக்குமாக ஒரே பொதுவான பதிலாக வைத்திருப்பார்.
பொறாமை,கோபம்,சுயகழிவிரக்கம், எதுவுமின்றி வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த இவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
6 கருத்துகள்:
பிரமாதம், ரமா. மகாத்மா.
உண்மை:-)
குமுதா அத்தை வாழ்க்கையில்தான் எவ்வளவு போராட்டம்! தனி ஆளாக இருந்து, மூன்று பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார். அவரிடம் நானும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு காலம் கழித்துப் பார்த்தாலும், எல்லோரிடமும் அதே அன்புடன் பழகுவார்.
நீ உறவினர் என்று போட்டதை விட, குமுதா அத்தை என்றே எழுதியிருந்தால் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும்.
thank u.நீ சொல்வது சரிதான். அத்தை என்பதை விட அம்மாவிற்கும் மேல் என்று சொல்வது சரியாக இருக்கும் என நினைத்தேன். எதிர்பார்பில்லாத அன்பிற்கு அது சரியாக இருக்கும் என எண்ணினேன்.
தாத்தா அந்த வயதிலும் திருடனை துரத்த கூடிய மனபலமும், உடல் பலமும் கொண்டிருந்தார் என்பதுதான்! :-)
அத்தாச்சி,எனக்கு அழவேண்டும் போல் இருக்கிறது.உங்களுக்குள் ஆச்சி பற்றி இத்தனை பாதிப்பா என்று? நான் பல மாதங்களாக எழதவேண்டும் என்று நினைத்ததை நீங்கள் எழதியது கண்டு நான் மகிழ்ச்சியும்,வெட்கமும் அடைகிறேன்.நன்றி.
கருத்துரையிடுக