திங்கள், 15 நவம்பர், 2010

ஜம்ப்பிங் தாத்தா!

எனது பால்யகாலத்து நண்பர்களுள் ஒருவர். அப்போது அவரது வயது எண்பது! அந்த தெருவில் இருந்த பெரியவர்களுக்கு அவர் "தோட்டத்து தாத்தா", சில இளைஞர்களுக்கு "எஸ்.வி", (சைடு வீங்கி)அவரது தாடைக்கும்,காதுக்கும் இடையில் சுமாரான அளவில் இருந்த ஒரு வீக்கமே இந்த நாமகரணத்திற்கு காரணம். குழந்தைகளுக்கு காந்தி தாத்தா! ஆம்! தோற்றத்தில் தொண்ணூறூ சதவிகிதம் வரலாறு புத்தகத்தில் காணப்படும் காந்திஜியை ஒத்து இருப்பார். அந்த உருவ ஒற்றுமை அதுவாக அமைந்ததா? அல்லது அமைத்துக் கொண்டாரா? தெரியாது. மொட்டை தலை,வட்டகண்ணாடி, பெரிய காதுகள். மேல் சட்டை அணிய மாட்டார்.கதர் துண்டு, ஒருமாதிரியாக சுற்றப்பட்ட கதர்வேட்டி, காலில் கட்டை செருப்பு. காந்திஜியே டென்ஷன் ஆகிற அளவுக்கு தீவிர காந்தியவாதி!


வைகை ஆற்றின் கரை ஓரமாக அமைந்திருந்த அந்த தெருக்கோடியில் உள்ள லைன் வீட்டின் கடைசியாக இருந்த எட்டுக்கு பத்து அளவுள்ள அறைதான் அவரது வீடு. அதை அடுத்து ஆற்றின் கரை வரையிலும் நீண்ட சற்றே பெரிய தோட்டம் அவருடையது. வீடுகள் மருமகனுடையது. அந்த தோட்டம்தான் அவரது வாழ்க்கை. மகள், மருமகன், பேரன், கொள்ளு பேரன்,பேத்திகள் எல்லோரும் நாலு தெருக்கள் தள்ளி இருந்தார்கள். ஆனாலும் தாத்தா தனிக் குடித்தனம்தான். பிரச்சினை எதுவும் கிடையாது. சுயமரியாதை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை அவ்வளவுதான்.

அதிகாலை எழுந்து தோட்டத்தை சுத்தம் செய்து, தண்ணீர் பாய்ச்சுதல் இவரது தலையாயக் கடமை. இவர் தண்ணீர் பாய்ச்சும் விதமே அலாதி! கிணற்றில், விவசாயிகளைப் போன்று ஏற்றம் அமைத்து தலைப்பாத்தி, கிளைப்பாத்தி என்று கனகச்சிதமாக கால்வாய்கள் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடி செடி,கொடி,மரம் அனைத்திற்கும் நீர் பாய்ச்சிவிடுவார்.பின்னர் நீரிறைத்து குளித்து சூரிய நமஸ்காரம் செய்து உணவு அருந்த செல்வார். சமையலும் செல்ஃப் குக்கிங்தான்! உதவிக்கு ஒரு ஆள் கூட வைத்துக்கொள்ள மாட்டார். மதிய ஓய்வுக்கு பிறகு மாலை தோட்டத்திலேயே நடை பயிற்சி.இரவு உறக்கம். இதுதான் இவரது தினசரி அட்டைவணை.


யாரிடமும் அதிகம் பேசிப் பார்த்தது இல்லை. செடிகளிடம் பேசி பார்த்திருக்கிறேன். வாரம் ஒரு முறை வெளியே வருவார். நான் என் நண்பர்களுடன் அவரது தோட்டத்திற்கு விளையாட போவது உண்டு. எனது நண்பர்கள் அவர் மதியம் ஓய்வெடுக்க செல்லும் போது மட்டுமே விளையாடுவார்கள். கேட்டால் தாத்தா ஏதாவது சொல்வார் என்பார்கள். அவர் யாரையும் கடிந்து கொண்டதாக தெரியவில்லை. அந்த தோட்டம் என் பிரியத்திற்கு உரிய இடமானது.அதனால் அடிக்கடி மற்ற நேரங்களிலும் தோட்டத்திற்கு தனியே செல்ல ஆரம்பித்தேன். நான் தனியே விளையாடுவதைப் பார்த்து கூப்பிட்டு பேச ஆரம்பித்தார். விரைவிலேயே நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம். பள்ளி விடுமுறை நாட்களில் (அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்) காலை பத்து மணிக்கெல்லாம் அவரைப் பார்க்க ஓடிவிடுவேன். வாங்க,வாங்க என்று வரவேற்பார். சிறுமியான என்னை வாங்க,போங்க என்றுதான் அழைப்பார். அந்த நேரம் அவர் பெரும்பாலும் சமைத்துக் கொண்டு இருப்பார். சிறிய பானையில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு கைப்பிடி அரிசி போடுவார். பின்னர் பருப்பைப் போட்டு வெந்ததும் தோட்டத்தில் பறித்து வந்த காய்கறிகளை கீரை உட்பட நறுக்கிப் போட்டு அரைவேக்காடாக எடுத்து விடுவார். அதான் லஞ்ச்.


அந்த சிறிய அறை அத்தனை சுத்தமாக இருக்கும். ஒரு மரமேஜை, நாற்காலி,அலமாரியில் புத்தகங்கள்,எழுது பொருள்கள், ஒரு சிறிய டிரான்சிஸ்டர். அதை ஒட்டி படுப்பதற்கு ஒரு பெஞ்ச். பெஞ்சை ஒட்டிய ஜன்னல் பகுதியில் பெட்டிக்கடையில் இருப்பது போன்று நாலைந்து பாட்டில்களில் கடலைமிட்டாய்,பொரிகடலை,தேன்மிட்டாய் வகையறாக்கள். மறுபுறத்தில் சிறிய மேஜையின் மேல் மண்ணெண்ணை ஸ்டவ்வும்,கொஞ்சம் பாத்திரங்களும். சமைத்து கொண்டு இருக்கும் போதே அந்தகால வரலாற்றைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார். பெரும்பாலும் காந்தியைப் பற்றிதான். பின்னர், அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எனது மன தைரியம் அல்லது பெருந்தன்மையைப் பாராட்டும் விதமாக கடலைமிட்டாயோ, தேன் மிட்டாயோ கொடுத்து அனுப்புவார். நம்புங்கள், நான் அந்த கடலை மிட்டாய்க்காக செல்லவில்லை. அவரது நட்பை நான் விரும்பினேன். அப்போது புரியவில்லை. பின்னர் யோசிக்கும் போதுதான் தோன்றியது. வாரம் ஒரு முறை அவர்கள் வீட்டிற்கு செல்வார். அவரது கொள்ளு பேரன், பெயர்த்திகள் அவருடன் நேரம் செலவழித்து இல்லை.அவர்கள் வெளியில் விளையாடப் போய் விடுவார்கள். நான் தாத்தாவின் அன்பைப் பெற்றது இல்லை. அப்பா வழி தாத்தா நான் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். அம்மா வழி தாத்தாவிடமோ, டாமைக் கண்ட ஜெர்ரியைப் போல் நாலடி தள்ளியே இருப்பேன். அவரும் நட்பு பாராட்டியதில்லை.இதன் காரணமாகத்தான் எங்கள் இருவரிடையே நேசம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சில வேளைகளில் பகலுணவுக்கு பின் செல்வேன். அந்த நேரத்தில் தாத்தா தோட்டத்து கெஸ்ட் ஹவுஸில் இருப்பார். அது தென்னை ஒலையால் வேயப்பட்ட சிறு குடில் தோட்டத்தின் கோடியில் இருந்தது. அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் ஏதாவது ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருப்பார். தூக்கமும் அதில்தான். அருகில் ஒரு மரபெஞ்ச் ஒரு சிறிய மேஜையில் குடிநீர் மண்பானை, கைவிசிறி மற்றும் டிரான்சிஸ்டர். அங்கு அமர்ந்து கையோடு கொண்டு செல்லும் சொப்பு (விளையாட்டு பாத்திரங்கள்) வைத்து விளையாடுவேன். அவரும் நான் கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதைப் போல் பாவணை செய்வார். சில நேரங்களில் ஏதாவது எழுதுவார். அவர் வெண்பாக்கள் எழுதியிருந்ததும் இரண்டு கவிதை தொகுப்பில் சில பாக்கள் இடம்பெற்றதும் தமிழ் புலமை உடையவர் என்பது எல்லாம் நான் வளர்ந்த ‌பிறகுஅறிந்தது.

அவருடன் பழகிய சில காலங்கள் இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. நாடு விட்டு நாடு வந்தும் வாழ்க்கை முறைகள் மாறிய போதும் நான் இன்றும் இயற்கையின் காதலியாய் இருப்பதற்கு அவர் மிக முக்கிய காரணம். முதுமையிலும் ஆரோக்கியமாகவும்,கம்பீரமாகவும் யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்த அவர் என்னுடைய ஹீரோக்களில் ஒருவர்.

என்ன, தாத்தாவுக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிறீர்களா? அது, தாத்தா தனது தொண்ணூற்றி ஏழாவது வயதில் ஒரு மாலையில் மகள் வீட்டு மாடியில் இருக்கும் போது அந்த பக்கம் போன உருவத்தை திருடன் என எண்ணி துரத்தி ஓடிய போது மொட்டைமாடி குட்டை சுவர் தடுக்கி மேலே இருந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட்டார். அது வரை பல பெயர்கள் கொண்டிருந்த அவர் அன்று முதல் ஜம்ப்பிங் தாத்தா என்ற ஒரே பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

5 கருத்துகள்:

Solai Kannan சொன்னது…

நடை அமர்க்கலம், ரமா. தெரிந்ததை எழுதுவது ஒருவகை. அப்படி எழுதும் பொழுது நடை படிக்கும்படியாக சுவாரசியமாக இருப்பது என்பது அதைவிட மேல். ஆனால், ஒரு எழுத்து முழுமை பெருவது அதை படிக்கும் பொழுது உணர்ச்சிகள் நம்முள் எழுந்து படித்து முடித்தபின்பும், நம்மோடு இருப்பது தான். அப்படித்தான் இந்த தொடர்-பதிவு இருக்கிறது. சபாஷ்.

உங்கள் இருவருக்கும் இருந்த பந்தம், தாத்தா பேரப்பிள்ளைகள் உறவு கிடைக்காமல் இருந்ததால் அல்ல. ஏதோ இரண்டு நபர்களுக்கு இடையில் இனம்தெரியாத ஈர்ப்பும் பந்தமும் ஏற்படுவது இயற்கை. அது பருவ வயதில் ஏற்படும் பொழுது காதலாக அல்லது நட்பாக ஆகிறது. அந்த வயது தாண்டி வரும் பொழுது எதிர் பாலின மனிதர் என்றால், சமுதாயத்துக்கு பயந்து ஒதுங்கி போய்விடுகிறேம். ஆனால், அதே பந்தம் வயது அதிக வித்தியாசத்தில் ஏற்படும் பொழுது, எந்த குறிக்கீடும் எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்மால் அந்த நட்பை ஆராதிக்க முடியுகிறது.

Generation gap, வயது வித்தியாசம், அனுபவ வித்தியாசம், அறிவு வித்தியாசம், பாலின கவர்ச்சி போன்ற எல்லாவற்றையும் கடந்து எந்த வரமுறைக்கும் இடம் கொடுக்காமல் ஏற்படும் இதுமாதிரியான பந்தங்கள் பொக்கிஷம்.

rama kannan சொன்னது…

Thank u anna.

TAMILSUJATHA சொன்னது…

கட்டி தாத்தாவை நானும் பார்த்திருக்கிறேன். அரிதாகப் பேசியிருக்கிறேன். ஆனால் உன்னைப் போல் நெருங்கியது இல்லை. சில விஷயங்கள் எனக்குப் புதிதாக இருந்தன. 97 வயதில் இயற்கை மரணமாக இல்லாமல், விழுந்து இறந்ததுதான் வருத்தம்.

ரகுராமன் சொன்னது…

நானும் இவரை பற்றி கேள்வி பற்றியிருக்கிறேன்.நல்ல கட்டுரை.இன்னும் நல்ல மனிதர்களை பற்றி எழத வேண்டும்.

rama kannan சொன்னது…

@raghu thank u