செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மோகனா

face book நண்பர்கள் வட்டத்தில் இவரைப் பற்றிய அறிமுகம் இங்கு தேவையற்ற ஒன்று! மோகனா சோமசுந்தரம் அவர்கள்தான். இவரது அறிமுகம் இவரது வாழ்க்கையை பற்றிய விபரங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். இங்கு நான் சொல்லப்போவது அவருடனான எனது அனுபவங்கள் மற்றும் அவதானிப்புகள் அவ்வளவே! இவர் எனக்கு முதலில் அறிமுகமானது துளிர் இதழ் மூலமாக. எஸ்.மோகனா என்ற பெயரில் இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகள் மூலமாகத்தான். துளிர் ஆசிரிய குழுவில் இருந்தார்(க்கிறார்?!) . அப்போது நடந்த அறிவியல் இயக்க பட்டறை ஒன்றில் அவரை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்தான் பேராசிரியை மோகனா என்று அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்கும் எனது கல்லூரி பேராசிரியர்களுக்குமான உறவு அவ்வளவு சிலாகிப்பாக இருந்ததில்லை. காரணம் (கு)தர்க்கம் பேசியே வளர்ந்த வாய் என்னுடையது. எனது ஆச்சி கூட என்னை வாப்பட்டி, (வாப்பட்டி என்பது மர உரலில் நெல்லு குத்தும்போது சிதறாமல் இருக்க உரல் மீது வைக்கும் அடியில்லாத ஒரு மூங்கில் கூடை) கருப்பட்டி , எங்கிட்ட பேசுற மாதிரி ஏட்டிக்கு போட்டி பேசுனா புருஷன் பனஓலைய பின்னாடி கட்டி பத்திவிட்டுருவான் ஆமா! என்று திட்டும். இந்த வாய் காரணமாக அடிக்கடி பிரச்சனையில் மாட்டி டிப்பார்ட்மென்ட் வாசலில் நிற்பேன்! இந்த லட்சணத்தில் நான் அந்த காலக்கட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) ஆக்டிவ் மெம்பராக இருந்தேன். ஆக்டிவ் மெம்பர் என்றால் போராட்டம், ஊர்வலம், உண்டியல் குலுக்குவது என்று எல்லா செயல்பாட்டிலும் கலந்து கொள்வது. ஆரம்பத்தில் நான் இந்த சங்கத்தில் இருந்தது எனது துறை ஆசிரியர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது., மெம்பர்ஷிப் போடுகிறேன் என்று கையில் புக்குடன் தனியாக சுற்றி திரிந்த போது இதைப்பற்றி தெரிந்து கொள்ளக் கூட யாரும் விரும்பவில்லை. உறுப்பினர் ஆன சிலரும், அப்பாக்கு தெரியக் கூடாது, அப்பத்தாவிற்கு தெரியகூடாது, அவ்வளவு ஏன்! சேர்கிற எனக்கும், சேர்க்கிற உனக்கும் கூட தெரியக்கூடாது! என்று வலக்கை இடுவது இடக் கைக்கு தெரியாத மேன்மக்களாகி, நான் ஏதோ சமூக விரோத காரியம் செய்கிற உணர்வை ஏற்படுத்தினர். கல்லூரியில் மாணவப் பிரதிநிதி என்று கூட யாரும் கிடையாது. இதிலிருந்தே சங்கங்கள் விஷயத்தில் கல்லூரி எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு அவசர மீட்டிங் காரணமாக எனைத்தேடி கல்லூரிக்கே வந்த சட்டக் கல்லூரி மாணவர்களால் துறை ஆசிரியர்களுக்கு தெரிந்து விட்டது. துறை ஆசிரியர்கள் என்னை அழைத்து விசாரித்து இது உன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. பாழாகிவிடும் என்று எச்சரித்தனர்! நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிலிருந்து, என்னை தண்டவாளத்த குண்டு வச்சு தகர்த்த தீவிரவாதி ரேஞ்சுக்கு மரியாதையாக நடத்தினர்! நான் அந்த அளவுக்கு ‘வொர்த்’ இல்லைங்க என்றாலும் கேட்கவில்லை. லீவு, பர்மிஷன் என்று எதுவாக இருந்தாலும் அப்பாவின் கையெழுத்து வேண்டும் என்றார்கள். வெள்ளை தாள்களில் என் அப்பாவின் கையெழுத்தை மொத்தமாக வாங்கி தேவைக்கு ஏற்ப உபயோகித்துக் கொண்டு இருந்தேன்! என்னைப் பற்றிய எனது பேராசிரியர்களின் கணிப்பு உருப்பட மாட்டேன் என்பதாகவே இருந்தது. (இத்தனைக்கும் எனக்கு அரியர்ஸ் எதுவும் இருந்ததில்லை) எனக்கு அவர்கள் மீது கோபம் எதுவும் கிடையாது. வாழ்க்கையில் “உருப்படாமல் போவத”ற்கான லிஸ்ட் எனக்கும் அவர்களுக்கும் முற்றிலும் வேறு வேறாக இருந்ததன்றி வேறொன்றும் இல்லை! ஆனால் இந்த பேராசிரியையுடனான எனது உறவு எவர் க்ரீன் நினைவுகள். இவரை நான் மேடம் என்றோ அம்மா என்றோ அழைத்ததில்லை. மோகனா என்றுதான் அழைத்திருக்கிறேன். இவரென்று இல்லை. பெரும்பாலும் நெருக்கமான உறவினர் தவிர, அனைவரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். அதை மரியாதைக் குறைவாக ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால் இதற்காக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டித்தனர். பல வருடம் மூத்தவர், பேராசிரியர் அவரை பெயர் சொல்லி அழைப்பது மரியாதையான செயல் அல்ல என்று. அவரோ, அவர்களுக்கு தோன்றியதை அவர்கள் கூறுகிறார்கள். நீ என்னை பெயர் சொல்லி அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை மரியாதை குறைவாகவும் நினைக்கவில்லை என்று கூறினார். அவரது பதிலால் அவர் மீதான மரியாதை அதிகமானது. முதலில் எனக்கு இவரிடம் பிடித்தது இவரது சிரிப்பு. (அனுஹாசன் சிரிப்பை போல்) மனதிலிருந்து இயல்பாக வரும். லைஃப்ல எதுவுமே பிரச்சனையில்லை என்று சொல்வது மாதிரியான சிரிப்பு. கோபமா ஏதாவது கேட்கும் போது கூட உதட்டோரத்தில் சிறிய சிரிப்பு ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தோன்றும். எல்லோராலும் எல்லோருடனும் எளிதில் நட்பாவது கடினமானது. மனிதர்களை பார்த்தவுடன் ‘ப்ரீகண்டிஷன் மைண்ட்’ என்ற முன்கூட்டியே ஏற்படுத்திக் கொள்ளும் சில உருவகங்களுடன் கூடிய அணுகுமுறை அற்றவர்களுக்கே இது சாத்தியம். அது இவருக்கு சாத்தியம்! அறிவியல் இயக்கத்தில் கேம்ப், ஒர்க் ஷாப் ஆகிய நாட்களில் அது முடியும் போதே நேரமாகிவிடும். மீண்டும் காலையில் நேரத்துடன் எழுந்திருக்க வேண்டும் என்பதால் உறங்கப் போய்விடுவோம். இவர் படுக்கமாட்டார் பேப்பர், பேனா, புத்தகம் அடங்கிய அவரது ஜோல்னா பையுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பார். எப்போது உறங்குவார் என்று தெரியாது. ஆனால் காலையில் எல்லோருக்கும் முன்பு எழுந்து உலாவிக்கொண்டு எங்களை டென்ஷனாக்குவது இவரது ஹாபி. நாம எப்படின்னா? காலைல சூரியன் நம்மள வந்து பார்த்தால்தான் நமக்கு பெருமைன்னு நினைக்கிற ஆளு! இதுல என்ன பிரச்சனைனு நினைக்கிறீங்களா? நள்ளிரவு நாலரை/ ஐந்து மணிக்கு நம்மையும் கிளப்பி ரவுண்டடிக்கனும்பார். அதிகாலை சூரியன், சனிக்கோள் என்று டெலஸ்கோப்பில் பார்ப்பதற்கு இழுத்து செல்வார். உண்மையில் ‘இழுத்து’ என்பதுதான் சரி! இல்லையென்றால் நான் அசைய மாட்டேன். சின்ன வயதில் மார்கழி மாசத்தில் அதிகாலை எழுந்து பல்லு கூட விளக்காம பெருமாள் கோயில் பொங்கல், புளியோதரைக்கு போனதை தவிர பரீட்சை காலங்களில் கூட நான் எழுந்ததில்லை. நீங்க போய்ட்டு திரும்பி வாங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன் என்பேன். விட மாட்டார். எழுந்து பத்து நிமிடம் நட, அப்புறம் பார்! என்று இழுத்து செல்வார். நான்கைந்து பேராக விஷயங்களை பேசிக் கொண்டு நடக்கும் போதும், திரும்பிவரும் போது டீக்கடையில் ஆவிபறக்க குடிக்கும் அந்த டீயும் (சில சமயங்களில் இட்லி ரெடியான அதுவும்) அடடா! பள்ளிக்கு காலையில் செல்லும் போது அழும் குழந்தை, திரும்பி வரும்போது கண்களை விரித்து கைகளை ஆட்டியபடி தான் பார்த்தது, கேட்டதைப் பற்றி பேசிக் கொண்டே வருமே! அதுபோல் உணர்வேன். இன்று கிடைக்க பெறாதா அந்த அழுத்தமில்லா அற்புதமான காலைகளுக்கு நன்றி மோகனா. பறவைகளை உற்று நோக்குவது இவருக்கு பிடித்தமான ஒன்று. இவருடன் செல்லும்போது எல்லாம் பறவைகளை பற்றி அவைகளின் பெயர்கள், பழக்கவழக்கம் எல்லாவற்றையும் விவரித்துக் கொண்டு வருவார். சிறுவயதிலிருந்து பெரிதாகிய பின்பும் பறவைகள், வண்ணத்துப்பூச்சி, அணில் இவற்றை நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டு இருப்பேன். அதுவரை மையமாக இவற்றை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்த விஷயங்கள் ஆச்சரியமாக இருந்ததோடு சுற்றுபுற சூழலுக்கான அவற்றின் பங்களிப்பு பற்றிய தெளிவினையும் ஏற்படுத்தியது. ஒரு நாள் இரவு ஒரு திருமண மண்டபத்தில் நடந்த பட்டறையில் எனது வேலை முடிய நேரமாகிவிட்டது. பெண்கள் படுத்திருக்கும் அறைக்கு சென்றால் இடமில்லை. அனைவரும் உறங்கிவிட்டனர். இவர் வழக்கம் போல் ஒரு மூலையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார். ஆகவே சத்தமில்லாமல் திரும்பி வந்துவிட்டேன். ஹாலின் ஒரு பகுதியில் ஆண்கள் உறங்கிக் கொண்டு இருந்தனர். விரிப்பதற்கோ போர்த்திக் கொள்வதற்கோ ஒன்றும் இல்லை. எனவே அங்கே இருந்த நியூஸ் பேப்பரை விரித்து அதையே போர்த்திக் கொண்டு உறங்கிவிட்டேன். நவம்பர் என்பதால் நல்ல குளிர். மோகனா சிறிது நேரத்தில் தேடிக் கொண்டு வந்துவிட்டார். என்னைப் பார்த்து டென்ஷனாகி எழுப்பி, பேப்பர விரிச்சுகிட்டு தூங்குவியா? என்னை கேட்க வேண்டியதுதானே, என்ன பொண்ணு நீ? என்று கடிந்து கொண்டார். கூட்டிக்கொண்டு வந்து அவரது போர்வையைக் கொடுத்து படுத்துகொள்ள சொன்னார். உண்மையில் அன்று என் அம்மாவை உயிருடன் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இது போல் சாப்பிட்டியா? என்ன வேண்டும் என்று கேட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு . இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருந்திருக்கும். தன்னுடன் இருக்கும் குறிப்பாக சிறிய வயது நபர்களை ஒரு அன்னையைப் போல் கவனித்துக் கொள்வார். நண்பனைப் போல் நடத்துவார். உணவு விஷயத்திலும் பயங்கர கான்ஷியஸ். அதில் இருக்கும் சத்துக்கள், வேகவைக்கும் முறை பற்றி நிறைய பேசுவார். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெரும்பாலும் என் அப்பாவின் சமையல்தான். எனக்கு சமையலில் பெரிய ஈடுபாடு கிடையாது. நான் சமைக்கும் போது இருமுறை இவர் அருகில் இருந்திருக்கிறார். காய்கறிகளை கழுவிட்டுதான் நறுக்கனும் என்று தொடங்கி கீரைய எப்படி சமைக்கனும், எதுல என்ன என்ன சத்துக்கள் இருக்கு என்று நொய் நொய்னு லெக்சர். எனக்கு உள்ளூற செம டென்ஷன். ஏன்னா நானே விதியேன்னு சமைத்துக் கொண்டு இருந்தேன். இந்த டைப் மாமியார் மட்டும் நமக்கு சிக்கிட கூடாது பிரச்சனை ஆகிடும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இன்று என் குழந்தைகளுக்கு சமைக்கும்போது இவையனைத்தும் மனதில் நிற்கிறது. இன்று என் மாமியாரை படுத்திக் கொண்டு இருக்கிறேன். எதை சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று ! மன உறுதி மிக்கவர். இவர் நோயிலிருந்து மீண்டு வந்தது இங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சுறுசுறுப்பு, தைரியம், தன்னம்பிக்கை, நட்பு, சமூக உணர்வு என்று இவரைப் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு புத்தகமாகவே போடலாம்! அவ்வளவு விஷயங்கள் உண்டு. ஆகவே இதோட முடிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: