"ஊரான், ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்க சொல்லி
கடிதாசு போட்டானாம் வெள்ளக்காரன்!"
என்ற நாட்டார் பாடல் இந்த அன்னிய முதலீடு பற்றி அந்த காலத்திலேயே தெளிவாக சொல்கிறது.
அன்னிய முதலீடு இங்கு சில்லறை வணிகர்கள் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சில்லறை வணிகர்கள் மட்டும்தான் இந்த நாட்டின் பிரஜைகளா ? சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு கம்பனிகளின் வரவு நுகர்வோருக்கு பெரிய நன்மையை கொடுக்கும். வணிகர் சங்கங்கள் இந்த கொள்கைக்குக் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் நுகர்வோர் அமைப்புகள் கொள்கைக்கு ஆதரவாக போராட வேண்டும். மிகவும் வரவேற்கவேண்டிய விஷயம். துபாய், சிங்கப்பூர், மலேசியா செல்லும்போதெல்லாம், நம் நாட்டிலும் பெரிய சூப்பர் மார்கெட்கள் எப்பொழுது வரும் என ஏங்கியதுண்டு. நம் நாட்டில் சிறிய வியாபாரிகளுக்கு நாணயம் நேர்மை துளியளவும் கிடையாது என்றெல்லாம் பேசப்படுகிறது.
1. அதிக அளவில் நேரடியாக கொள்முதல் செய்வதால் குறைந்த விலைக்கு பொருள்கள் கிடைக்கும். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக (விவசாயிகள் உட்பட) பெறப்படுவதால் இடைத் தரகர்கள் ஒழிந்து உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பயனடைவார்கள்.
2. நுகர்வோர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரமான ஊள்ளூர் மற்றும் வெளியூர் பொருள்களை தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் நுகர்வோர் கலச்சாராம் கொடிகட்டிப் பறக்கும்.
3. ஊள்ளூர் வணிகர்கள் செய்யும் ஏமாற்று, கலப்படம் என எதுவும் கிடையாது.
4. மேலும் சீனா உட்பட பெரும்பாலும் எல்லா நாடுகளும் அன்னிய முதலீட்டைஐ
அனுமதிக்கின்றன. இவற்றை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
அதிக அளவு நேரடி கொள்முதல் என்பது மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே சாத்தியம் சிறு உற்பத்தியாளர்களிடம் சாத்தியமில்லை. இந்த அரசிற்கு விவசாய நாடான இந்தியாவின் வேளாண்மை, விவசாயிகள் குறித்த அறிவு இல்லை அல்லது அக்கறை இல்லை.
இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளே அதிகம். சராசரியாக அவர்கள் வைத்திருப்பது 5 ஏக்கர் தொடங்கி அதற்கும் கீழே. இவர்கள் தங்களின் நேரடி உபயோகம் மற்றும் சிறிய அளவு விற்பனைக்கு மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். இவை அந்த அந்த சுற்றுபுறங்களிலேயே முடிந்து விடும். மேலும் விதைப்பு, கால்நடை பராமரிப்பு போக இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களில் 40% மட்டுமே விற்பனைக்காக நகர்புற சந்தைக்கு வருகிறது.
வெளிநாடுகளில் ஒரு விவசாயி சராசரியாக 300 லிருந்து 1000 ஏக்கர் வரை வைத்திருக்கிறார் என்கிறது புள்ளிவிவரம். எனவே வால்மார்ட் போன்ற நிறுவனம் அங்கே செய்வது போன்று இங்கு செய்ய இயலாது. ரிலையன்ஸ் மோர் எல்லாவற்றின் நிலையும் இதுவே.
இதை சமாளிக்க சிறு நிலங்களை சேர்த்து பெரும்பண்ணையாக்க இவர்கள் முயற்சித்தால் சிறு விவசாயிகள் பண்ணைக்கூலிகளாக மாறும் அபாயம் ஏற்படும். விவசாயிகள் வேலை இழப்பதுடன் பாரம்பரிய விவசாயம் முற்றிலுமாக அழிந்து போய்விடும். இவ்வாறு செய்யமாட்டார்கள் என்றால் அவர்களது பொருள்களை குறைந்த விலைக்கு தர அவர்களால் முடியாது. இதுக்கு பெரிய பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை நம்மூர் கீரைகாரம்மாவே சொல்வாங்க!
2. இது மேலோட்டமாகப் பார்க்க சரியாகத் தெரிந்தாலும், உண்மையில் இதுவும் ஒரு ஏமாற்று வேலையே! இவர்கள் ஒரே மாதிரியான தயாரிப்புகளை வேறு வேறு பெயர்களில் விற்பார்கள். உதாரணத்திற்கு பருப்பு வகைகளில் A B C D என்று நான்கு பிராண்டுகள் மார்கெட்டில் இருக்கும். ஐந்தாவதாக இவர்களது பிராண்ட் ஐ கொண்டுவருவார்கள். உண்மையென்னன்னா மேலே உள்ள நாலுபேரிடமும் எக்ஸ்போர்ட் க்வாலிட்டி என்று சொல்லப்படுகிற வகைகளை கொள்முதல் செய்து பேக் செய்து சற்று கூடுதல் விலையுடன் விற்கப்படும். பின்னர் படிப்படியாக நுகர்வோரை உளவுரீதியாக தங்களது பொருள் உயர்ந்தது என்ற நிலைக்கு கொண்டு வந்ததும் விலையைக் கூட் டுவார்கள். இதுக்காக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை! ஆரம்பத்தில் டிமாண்டை அதிகரிக்க செய்து பின்னர் சப்ளை செய்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மேலேக் கூறப்படும் மற்ற பிராண்டுகள் தெருமுனை அண்ணாச்சி கடைல மட்டுமே கிடைக்கும். அங்கும் என்னண்ணே ‘அந்த’ பிராண்ட் பருப்பு இல்லையா என்று கேட்க, அவரும் அதை வாங்கி வைப்பார். இப்படி கைமாறி MRP கூடி ஒரு நல்ல கணிசமான விலையில் வந்து நிற்கும்.
அடுத்ததாக பக்கத்து கடைகளில் மாதாந்திர சாமான் வாங்கும் போது நமது தேவைக்கு மட்டுமே வாங்குவோம். இது போன்ற சூப்பர் மார்கெட்டில் காட்சி(display) சலுகை, இலவசம் என்று நமது பட்ஜட் கணிசமாகக் கூடும். மாத செலவு இரண்டாயிரம் ஆகுமிடத்தில் கூடுதலாக 500லிருந்து 1000வரை கூடும். நகர் புறத்தில் பணமிருப்பவனுக்கு பிரச்சினையில்லை. ஆனால் வருமானம் குறைந்த பகுதிகளில் இந்த நுகர்வோர் கலாச்சாரம் மறைமுக சமுதாய அழுத்தத்தை (social pressure)ஏற்படுத்தும். அதனால என்ன என்கிறீர்களா? ஒன்றுமில்லை! ஊழல், லஞ்சம், ஏமாற்று, கொள்ளை என்ற சமுதாய சீரழிவுகளுக்கு இதுதான் முதல்படி. சும்மா அண்ணா தாத்தாவிற்கு பின்னாடி விளக்கு புடிச்சுகிட்டு நின்னா மட்டும் போதாது.
3. ஏமாற்று, கலப்படம்
இதுவும் சேம் பிளட். இடம் வேற. அண்ணாச்சியும், அப்புச்சியும் எடை குறைப்பு செய்வாங்க. தரமற்ற பொருளைக் கொடுப்பாங்க. சரிதான். அதுக்காக ரிலையன்ஸிலும், மோரிலும் அம்பானிகளும், பிர்லாக்களும் ‘இந்திய மக்கள் நல்லா இருக்கனும்ன்னு’ அவுங்களே உட்கார்ந்து இரவு பகலா தரம், எடையெல்லாம் பார்த்து பண்ணுவாங்க நினைக்கிற அளவுக்கு நாம முட்டாள் கிடையாதுன்னு அவுங்களுக்கு தெரியாம இருக்கலாம். நமக்கு தெரியும்ல்ல.
500 கிராம் பேக்கிங்ல விலையென்னவோ 500கிராமுக்குதான் இருக்கும் ஆனா எடை 450 கிராம்தான் இருக்கும் (net wight 500g after packing இதான் அந்த உள்குத்து ). பருப்பு, எண்ணெய்னு இல்ல சோப்பு கூட அப்படித்தான். தரத்திலும் பத்து பாக்கெட்டுக்கு மூன்று பாக்கெட் மோசமாக இருக்கும்.
என்ன அண்ணாச்சி கிட்ட நேரடியா சண்டை போடலாம். “என்னங்க இவ்வளவு நாளா உங்ககிட்ட வாங்கி கிட்டு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!” கடைக்காரரும் டென்ஷன் ஆவார் கஸ்டமர் போய்டக் கூடாதுன்னு. சூப்பர் மார்கெட்ல நாம கேட்கமாட்டோம். அப்படியே கொஞ்சம் சொரணை வந்து போய் கேட்டாலும், ஒவ்வொருத்தனும் இன்னொருத்தன கைநீட்டுவான். கடைசியா மேனேஜர்ன்னு ஒருத்தர் டையும், சிரிப்புமா வந்து ஹெட்ஆபீஸ் பாம்பேல இருக்கு. நாங்க இன்ஃபார்ம் பன்றோம்! நீங்களும் ஒரு மெயில் அனுப்பிடுங்க என்று கூறிவிட்டு அதோடு மறந்து விடுவார். இந்த ஆட்களை டென்ஷனாக்க கனவிலும் நினைக்க முடியாது. காறி துப்பினாலும். துடைச்சுகிட்டு சிரிச்சுக்கிட்டே போறளவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டிருக்கும்! இதுக்கு பேர்தான் சர்வைவல். மறைமுகமாக அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் நாளடைவில் தரம், கண்காணிப்பு எல்லாவற்றையும் கண்துடைப்பாகவே மாற்றிவிடுவார்கள்.
4. சீனா உட்பட பெரும்பாலும் எல்லா நாடுகளும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கின்றன.
உண்மை. ஆனால் அதே சமயம் அமெரிக்காவும் சீனாவும் தான் அன்னிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் முதலிரண்டு நாடுகள்.
எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே. அதுவும் அன்னிய முதலீடு என்னும்போது ஐயத்திற்கு சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே.
அதிலும் அன்னிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டை திரும்பப் பெறுவதில் நீண்டகால நடைமுறைக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவுகளுக்கு மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்பிற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப்போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக முதலீட்டின் அளவு அதிகரிப்பதை தமது சாதனையாக முன்னிறுத்துகின்றது.
தற்போது அன்னிய முதலீட்டிற்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கிடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அனுமதி பெறும் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டிருக்கின்றன. அளவுக்கு அதிகமான வரிசலுகைகளும். நேற்று அளிக்கப்பட்ட ஒப்புதலின்படி இனி ரூ.1200 கோடிக்கு மேல் அன்னிய முதலீடு செய்யப்படும் திட்டங்கள் மட்டும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி ரூ.1200 கோடிக்குள் உள்ள திட்டங்கள் நிதியமைச்சரால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும். இனி அடிக்கடி நிதியமைச்சக ஊழல் விவாதங்களை பார்லிமெண்டில் கேட்டு நமது கருத்துக்களை சீரியஸாகவோ இல்லை காமெடியாகவோ பதிவு செய்யலாம். மேலும் ஒரு நாட்டு மக்களின் நலனையும், நாட்டின் வருவாயையும் கணக்கில் வைக்க வேண்டிய மிக முக்கியமான மின் உற்பத்தி, மருந்துப்பொருட்கள் தயாரிப்பு, சுற்றுலாத்துறை போன்ற மிக முக்கியமான துறைகளில் நூறு சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதால் , நமது நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு தேவையான வருமானம் வெளிநாடுகளுக்கு செல்லவும் தனி மனிதர்களின் கருப்புபணம் அதிகமாவதற்கும் இது எளிதாக வழிவகுக்கும்!
சீனா உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 27% பெற்றிருந்தாலும் இந்தியா அளவிற்கு படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ளவில்லை. சீனா அன்னிய முதலீட்டில் கிடைக்கும் லாபத்தில் தங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. சீனாவின் கணக்குப்படி சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் சதவீதம் 1981 ஆம் ஆண்டு 53%. அது 2005-ஆம் ஆண்டு வெறும் 2.5 சதவீதம்தான். சீனா வாங்கி வைத்திருக்கும் அமெரிக்காவின் கருவூல கடன் பத்திரங்கள்களின் (Treasury Bills) மதிப்பு கிட்டத்தட்ட $1 Trillion. இதன் மூலம் அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சு வார்த்தைகளின்போது அமெரிக்காவின்மீது சீனாவால் கடுமையான் அழுத்தம் கொடுக்க முடியும். அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. அமெரிக்கா அதன் உள்விவகாரங்களிலோ, திபெத் விஷயத்திலோ மூக்கை நுழைத்தால் ‘வெளியே போ’ என்று முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடும்.
இங்கோ வணிகம், அரசியல் நல்லுறவு, நாட்டின் உள்விவகாரம் இவற்றை பிரித்துப் பார்க்கும் அறிவு கூட இல்லை. ஏற்கனவே பேட்ண்ட் ரைட், அணு சக்தி ஒப்பந்தம், காலாவதியான அல்லது ஆபத்தான மருந்து மற்றும் ஊரங்கள் இறக்குமதி என்று நம்மை அடகு வைத்துவிட்டார்கள். இப்போது இந்த முடிவால் மொத்தமாக விற்றுவிடுவார்கள்.
1600 ல் வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து நமது கோவணம் வரை உருவியதை அவர்கள் மறக்கலாம். நாம்?!
( நன்றி cpi(m) agrarian crisis, Dr. குருமூர்த்தி, எகனாமிக் & பொலிட்டிக்கல் நியூஸஸ்)
.
2 கருத்துகள்:
இதற்கு தீர்வுதான் என்ன?
தீர்வு இல்லாமல் இல்லை. ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் பல ஆய்வு குழுக்கள் கூறியிருக்கிறார்கள். விற்பனை விலைக் கட்டுப்பாடு, சீரான விநியோகம், தானியங்கள் சேமிக்கும் கிடங்குகளை, உணவு பதனிடுதலை நவீனப் படுத்துவது {இதில் அந்நிய முதலீடு செய்யலாம்} என்று ஆனால் மக்களைப் பற்றிய அரசாங்கம் இருந்தாலே இதெல்லாம் சாத்தியம்!
கருத்துரையிடுக