வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ்செல்வன் M.A இன்ஜினியர்!

தலைப்பை பார்த்து யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்! சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.

இன்று ஆலமரம் போல் வேரூன்றி கிளை பரப்பி நிற்கும் பிரபலமான நிகர்நிலைப் பல்கலைகழகம் அது. மற்றவைகளைப் போலவே கூரைக் கொட்டகையில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம்தான் நதிமூலம். அமோக வளம் கொழிக்கும் கல்வித்துறை என்பதால் விரைவிலேயே நல்ல ஏறுமுகம். அந்த நிறுவனம் தொழில்நுட்ப கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தங்களை தொடங்கிய நேரம். அதில் ஒரு உத்தியோகஸ்தராக சேர்ந்தவர் இவர். எம்.ஏ தத்துவயியல் (அதாங்க பிலாஸஃபி) படித்தவர். அதன் அடையாளமாக முன்தலை பளபளவென்று ஷேவ் செய்தது போல் இருக்கும். பின்னால் உள்ள முடியை லாவகமாக சீவி முன்தலையில் படரவிட்டிருப்பார். அடர்ந்த கருப்புநிறம். முகத்தில் ஒன்றரை இன்ச் பவுடர் இன்றி அவரை பார்த்தவர்கள் மிக சிலரே.விரலில் அவரது இன்ஷியலைத் தாங்கிய செவ்வக மோதிரமும், கழுத்தில் செயினும், மினி பெல்பாட்டம் பேண்ட், பட்டையான கருப்பு பெல்ட், தங்க ஃப்ரேம் உள்ள கூலர் என்று கிராமம்+நகர டிபிக்கல் கலவையாக இருப்பார் . எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தார். பக்கத்து வீடு என்றால் எங்கள் இருவர் வீட்டிற்கும் பொதுவான மெயின் வாசல் மற்றும் மொட்டைமாடி.


காலையில் மேக்கப் முடித்து கருப்பு என்ஃபீல்டில் தட,தடவென்று கிளம்பிவிடுவார். உத்தியோகம் சைட் இன்ஜினியர். இன்று போல் அந்நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் துறைவாரியாக பிரித்து ஆட்களை வேலைக்கு அமர்த்தும் வசதிகள் இல்லாததால், குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த ஆட்களை (அதிலும் நிறுவனரின் சாதிக்காரர்களை) வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தது. இவர் கல்லூரிக் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவரும் நிறுவனரின் இனத்தை சேர்ந்தவர். இவரை அலுவலகம் அனுப்பியது சூப்பரவைசராக. இவர் காட்டிக் கொண்டது இன்ஜினியராக! இவருக்கு கீழ் வேலைப்பார்த்தவர்கள் இவரை இன்ஜினியர் என்றே அழைத்தனர். கட்டுமாணப் பணிகளைப் பொறுத்தவரை இவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை ‘மேஸ்திரிய கேளுங்க. மேஸ்திரிக்கும் இவருக்கும் நல்ல புரிந்துணர்வு! தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வார்.


மேஸ்திரி வராத நாட்களில் குண்டக்க மண்டக்கவென்று ஏதாவது செய்துவிடுவார். மேஸ்திரி அதிகாலையில் வந்து வாசலில் நிற்பார். இன்னா சார், இப்பிடி பண்ணிட்டீங்க? இவர் வாய்ஸை குறைத்து என்ன? என்பார். நேத்து கொத்தனாராண்ட கப்போர்ட காமிச்சு ஜன்னல்னு சொல்லிருக்கீங்க. இல்லையே, அவன் தப்பா புரிஞ்சிருப்பான். இல்ல சார், படத்துல மேக்கால உள்ள ரூமில பீச்சாங்கைப் பக்கமுள்ள சதுக்கம் கப்போர்டு. நீங்க ஜன்னல்னு சொல்லிருக்கீங்க என்பார் தெளிவாக. சரி, சரி பார்த்து செய்ங்க. உங்களமாரி ஒரு வேலையா எனக்கு. ஆயிரம் டென்ஷன்.
எதுல வந்த?
பஸ்லதான் சார்.
இந்தா பத்து ரூபா. சைட்டுக்கு போ. நான் வரேன். அந்த சமயங்களில் நாம் கடந்தோம் என்றால், தலையை உதறிக் கொள்வார். சே! இந்தமாதிரி ஆட்களை வச்சுகிட்டு வேல வாங்கிறது இருக்கே, தலைவலி என்று நம்மிடம் அலுத்துக் கொள்வார். நாம மாடிபடிக்கு பின்னால் நின்று கவனித்ததை அறியாமல். கூடிய விரைவில் ஒரு சிவில் படித்த இளைஞனும் வேலைக்கு சேர்ந்த பிறகு மேஸ்திரியை விலக்கிவிட்டு அவனை சரிகட்டிக் கொண்டிருந்தார்.அதுக்காக அவர் தத்துவத்திலே கரை கண்டவரோ என்று நம்பி.........ப்போய்

ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் பற்றிக் கேட்டால்,

அப்போ படித்தது மறந்திருச்சு. என்பார்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்?
சாய்ஸ்ல விட்டுட்டேன்.

கன்ஃபூசியஸ்?
நிமிர்ந்து கம்பீரமாக சொன்னார். அது சிலபஸ்லையே இல்ல.


எங்கள் வீட்டு சுவற்றில் குடும்பத்தினரின் போட்டோக்களை மாட்டும் வழக்கம் கிடையாது. ஹால் சுவரில் ஒருபுறம் ஆயில் பேஸ்டல் மகாபலிபுர ஒவியம் ஒன்றும், நுழைவாசலுக்கு எதிராக லெனின் ஒவியம் ஒன்றும் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த கண்களின் தீட்சண்யம் மாறாமல் வரையப்பட்ட அந்த ஒவியம் அழகாக இருக்கும். முதன்முதலில் வீட்டுக்குள் நுழைந்த அவர் அந்த ஒவியத்தைக் காட்டி கேட்ட கேள்வி, யாரு உங்க தாத்தாவா? நம்புங்க, லெனின் மேல சத்தியமாக அப்படித்தான் கேட்டார். யார் என்பதோடு நிறுத்தியிருந்தால் கூட ஒகே.
ஆணும், பெண்ணும் சேர்ந்து வந்தால், சிலர், யார் என்றுகூட கேட்காமல் ஹே! யாரு உங்க ஒய்ஃபா/ஹஸ்பெண்டா? என்று நாகரிகமில்லாமல் கேட்பார்களே, அதுபோல் இருந்தது. என் தந்தை டென்ஷனாகி விளக்கினார். ஆனால் அவரோ, வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் சென்றுவிட்டார்.


வீட்டைப் பொறுத்தவரை அவரது உறவினர்கள் என்று யாரையும் பார்த்ததில்லை. மனைவியின் உறவினர்கள் மட்டுமே. ஒரு முறை அந்தம்மா அவர்கள் திருமணத்தை ஒரு விபத்து போலவே சித்தரித்தார். கணவரின் வகையறாக்களை, எல்லாம் நாட்டுபுறங்க. நாகரீகம் தெரியாது என்றார். ஏதோ அந்தம்மா ஆக்ஸ்போர்டில் படித்த மாதிரி. அவர் பத்தாவது கோட். கணவரின் ஊர் கிராமம். இவரது ஊர் சற்று பெரிய கிராமம். தந்தை சற்று வசதியானவர். அதைவிட அந்தம்மா முக்கியமாக குறிப்பிடுவது நிறத்தை. அவர்கள் குடும்பத்தில் எல்லொரும் வெள்ளை நிறம். அதில் மிகப் பெருமை. ஆகையால் நம்மவரும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் அவரைப் போல் இல்லாமல், மனைவி போன்று சிவந்தமேனியர்களாக இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி.


அலுவலகத்திலும் நிறுவனர் எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் முகம் மாறாமல் கேட்டுக் கொள்வார். பின்ன, வருமானம் அப்படி! குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களிலேயே இலவசமா இடம் வாங்கி கைக்காசை செலவழிக்காமல் பத்துலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீட்டையும் கட்டியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமாராகப் படித்த குழந்தைகளையும் அதிகம் செலவில்லாமல் பொறியியல் படிக்கவைத்து வேலையும் வாங்கினார். இப்படியாக வீட்டில், அலுவலகத்தில் காமெடியனாகவும் வெளியில் ஹீரோவாகவும் வலம் வந்து பங்களா, கார், பேங்க்பேலன்ஸ், என்று செட்டிலாகிவிட்ட இவர் சமுதாயத்தின் பார்வையில் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்.

3 கருத்துகள்:

TAMILSUJATHA சொன்னது…

’மனிதர்’களில் இந்தப் பதிவு தரமானதாக இல்லை. தனிப்பட்ட தாக்குதல்கள் கிண்டல்கள் ரசிப்புக்குரியவையாக இல்லை.

rama kannan சொன்னது…

நன்றி! மனிதர்களை பொறுத்தே தரங்கள் நிர்ணயக்கப்படுகின்றன. தனிநபர்! அப்படிப் பார்த்தால் காந்தியிலிருந்து இப்போது உள்ள அரசியலில் உள்ள அனைவருமே தனிநபர்தான். யாரையும் விமர்சிக்க தேவையேயில்லையே. காந்தியிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், மோசமானவற்றை சீர் தூக்கி பார்த்து ஏன் விமர்சிக்கவேண்டும்? தனது உண்மை பிம்பத்தை மறைத்து, தான் வாழ, தனக்கு கீழ் இருக்கும் யாரையும் பலி கொடுத்து வாழும் மனிதர்களை விமர்சிக்கலாம். சமுதாயம் என்பது எல்லா மனிதர்களையும் உள்ளடக்கியதுதான். ஆகவேதான் மனிதர்களின் நல்ல விஷயத்தை விவரிக்கும் போது அவர்களது உண்மை பெயரையும், இது உண்மையாக இருந்தாலும் நான் பெயரை மாற்றி வேறு எதையும் குறிப்பிடாமல் குணத்தினை மட்டுமே கூறியுள்ளேன். கோபாலைப் போன்ற தரமான மனிதர்களை தரங்கெட்டவர்களாக பார்க்கும் இந்த சமுதாயத்தில், பணமும் அதனால் வரும் அந்தஸ்துகளும் பெற்றவுடன் சிலர் அதீத தரமானவராக ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் இதன் சாராம்சம்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்கள் உழைப்பில் பெயர் வாங்கிக் கொள்வார்கள்.
வாழ்த்துக்கள்.