வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
தோழர் முருகாப்பா!
எனது பன்ணிரெண்டாம் வயதில் எங்கள் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதுவரை கோடைவிடுமுறைக்கு சென்னைக்கு வந்து சென்ற நான் முழுவதுமாக அங்கு வாசம் செய்யவேண்டும் என்றதும் ஏக குஷியாகி விட்டேன். முதலாவது என் தந்தையோடு சேர்ந்து இருக்க போகிறேன். இரண்டாவது என் அம்மா கொஞ்சம் நல்ல சமையல் செய்யக்கூடும் என்பதுமாக இரண்டு காரணங்கள்! ஆரம்பத்தில் நாங்கள் கோடம்பாக்கத்தில் குடியிருந்தோம். அது ரோட்டை ஒட்டிய ஒரு முட்டு தெரு. அண்டை வீடு சென்னை கலாச்சாரத்தின் பகுதியான லைன் வீடுகள். ஒரே காம்பவுண்டுக்குள் எதிரெதிராக ஒன்பது குடித்தனங்கள். இந்த லைன் வீடுகளில் தளம் போட்ட வீடுகள் நான்கு ஒரு புறமும், ஓட்டு வீடுகள் ஐந்து எதிராகவும் இருந்தன. சிறிய பொதுவான வாசல். நடுவில் சிமென்ட் நடை பாதை. ஓர் ஓரத்தில் கிணறு, கட் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில் இணைப்புடன் கூடிய அடி குழாய், இரு குளியல் மற்றும் கழிப்பறைகள். வந்ததிலிருந்தே அந்த காம்பவுண்ட் என்னை வெகுவாக ஈர்த்தது.
எங்கள் வீட்டு மாடியில் இருந்து அனைத்தையும் கவனிக்க முடியும். இந்த தளம் போட்ட வீடுகளின் வாடகை சிறிது கூடுதல். அதில் ஒரு ஓட்டு வீட்டில் அந்த வீடுகளின் உரிமையாளரான நடுத்தர வயது பெண்மணி தனது மூன்று குழந்தைகளுடன் குடியிருந்தார். அவர் கணவர் துபாயில் ஈட்டிய திரவியத்தில் கட்டிய அந்த காம்பவுண்டுடன் இந்த குடும்பத்துடனான தனது கடமை முடிந்தது என்று முடிவு செய்து, வேறு குடும்பத்திற்கு கடமை ஆற்ற சென்று விட்டதாக பேசிக் கொண்டார்கள். சில நாட்களிலேயே நான் அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். காலை, மாலை இரு நேரமும் பரபரப்புடனே இருந்தது அந்த காம்பவுண்ட்.
காலையில் அனைவர் வீட்டு ரேடியோக்களும் ஒரே நேரத்தில் ஆன் செய்யப்பட்டு காக்டெய்லாக கலந்து அடிக்கும். அந்தரங்க விஷயங்கள் நீங்கலாக பல் தேய்ப்பது தொடங்கி அனைத்தும் அந்த ஓபன் ஸ்பேஸில்தான். தண்ணீர் பிடிப்பது, சர்க்கரை, காபி பொடி கடன் வாங்குவது, குழந்தைகளால் ஏற்படும் பஞ்சாயத்துக்கள் என சச்சரவுகள் ஏற்பட்டாலும் ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தைப்போல், கதம்ப மாலையாக கமகமத்தது அந்த காம்பவுண்ட்.
இதில் மத்தியில் உள்ள தளவீட்டில் இருந்தவர்தான் நம் முருகாப்பா. ஆரம்பத்தில் நான் அவரது பெயரை முருகாப்பா என்றும், அவரது மனைவி பெயர் முருகாம்மா என்றும் நினைத்து, அந்த தம்பதியரின் பெயர் பொருத்தத்தை நினைந்து வியந்தேன். நண்டு, சிண்டுகள் எல்லாம் அவர்களை அப்படித்தான் அழைத்தனர். பின்னர்தான் அவரது பெயர் வீராசாமி என்றும் அங்கு மூத்த குழந்தையின் பெயருடன் சேர்த்து அப்பா அம்மா என்று அழைப்பார்கள் என்றும் தெரியவந்தது. ஆயினும் என் வியப்பு மாறாதவாறு அவரது மனைவி பெயர் வீரலட்சுமியாகவே இருந்தது.
பல்லவன் போக்குவரத்து கழத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மாநிறத்தில், சராசரி உயரத்தில், சுருட்டை முடியுடன் தடித்த கருப்பு ஃபிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருப்பார். இரண்டே வித காஸ்டியூம்களில் மட்டுமே காட்சியளிப்பார். கைலி, கை வைத்த பனியன் மற்றும் காக்கி பேன்ட், சட்டை. அவர் வீட்டு ஹேங்கரில் கூடுதலாக சிவப்பு மற்றும் மங்கிய வெள்ளைசட்டை. ஒரு மகனும், இரு மகள்களும். மகன் பத்தாவது வகுப்பை மூன்றாம் முறையாவது பாஸ் பண்ணிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் இருந்தான். மூத்த மகள் எட்டாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவரது நம்பிக்கை நட்சத்திரமான மூன்றாவது மகள் அவரது நம்பிக்கையை சிதைக்காதவாறு ஒழுங்காக ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவருமே எனது நண்பர்களானார்கள். சில நாட்களிலேயே அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியவந்தது. அவரிடம் யார் கையை காட்டி டாடா சொன்னாலும் பதிலுக்கு கையை காட்டமாட்டார். ஏனென்று வினவிய போது அது காங்கிரஸ் சின்னத்தை காட்டுவதாக ஆகிவிடும் என்றும் உண்மையான கம்யூனிஸ்ட் அவ்வாறு செய்யமாட்டான் என்ற அவரது விளக்கத்தில் கம்யூனிஸ்ட் அபிமானியான என் அப்பா ஆடிப்போனார். அவரது மகனுக்கு லெனின் குமார் என்றோ மார்க்ஸ் குமார் என்றோ பெயர் வைத்து மார்க்ஸப்பா அல்லது லெனினப்பா ஆகவேண்டிய அவரது கனவு அவர் மனைவி பெயருக்கேற்றவாறு கோவில்பட்டி வீரலட்சுமியாக இருந்த காரணத்தால் முத்தமிழ் கடவுளின் பெயர் வைக்கப்பட்டு கலைந்துவிட்டதாக அவ்வப்போது வருத்தப்படுவார். முருகனைப் பார்க்கும் போதும், அவனது அம்மா அவனை நாயே, சனியனே என்றழைக்கும் போதும் எனக்கென்னவோ மார்க்ஸ், லெனின் பெயர்களுக்கு ஏற்படவிருந்த களங்கம் தவிர்க்கப்பட்ட மகிழ்ச்சியே மேலோங்கி இருந்தது.
அவருக்கு காலையில் தெருமுனைக்கு போய் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. இதன் முக்கிய காரணம் குறிப்பாக செவ்வாய், வெள்ளிகளில் அவரது மனைவி காலையில் குளித்து சாம்பிராணி போட்டு வாசல் கதவு தொடங்கி ஜன்னல் வரை மஞ்சள் குங்குமம் தடவி முடிப்பதற்குள் விடிந்துவிடும். மேலும் இந்த சமயங்களில் டீ கேட்பது வேறு சில விளைவுகளை ஏற்படுத்தியது. இவற்றை தவிர்க்கவும், அவரது வேலை நேர மாறுபாட்டாலும்,அவர் டீ கடைக்கு சென்றுவிடுவார். அங்குதான் அரசியல் நிலவரங்களையும் அவரால் பகிர்ந்து கொள்ள முடிந்ததாலும் இருக்கலாம். யாராவது அவரிடம் அண்ணே கம்யூனிசம்னா என்ன? என்று கேட்டால், அது ஒன்னுமில்லப்பா "இருக்கிறவன்ட்ட இருந்து புடுங்கி இல்லாதவன்கிட்ட கொடுக்கிறது" என்ற அவரது ராபின்ஹுட் பதிலால் அரண்டவர்கள் அனேகம் பேர். அந்த காம்பவுண்டில் அவருக்கு மட்டுமே காசு கொடுத்து செய்திதாள் வாங்கி படிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு முறை ஒருவர் அவரிடம், கம்யூனிஸ்டுங்கிறீங்க தீக்கதிர் வாங்கிப் படிக்கலாமே என்று கேட்க , அதென்னவோ தினத்தந்தி படிச்சுட்டு டீ குடித்தால்தான் வெளிய போகிறது என்றார். அவர் கலாய்க்கிறாரா? சீரியஸாக சொல்கிறாரா? என்று கேட்டவர் குழம்பிவிட்டார்! அந்த ஏரியாவில் ஏதேனும் கட்சி சார்பாக தட்டிகள் வைக்கும் போது களத்தில் ஆஜராகி உதவி செய்வார். அதில் "அமெரிக்காவின் ரீகனே! எச்சரிக்கிறோம்" என்கிற ரீதியில் உள்ள வாசகத்தை பார்த்து தோழர்," ரீகனை எச்சரித்து தமிழ்ல போஸ்டர் போடுறீங்களே? ரீகனுக்கு தமிழ் தெரியுமா? என்று பீதியைக் கிளப்புவார். இவர் மீது ஏற்பட்ட இனப்பற்றின் காரணமாக என் அப்பா அவரை முழு கம்யூனிஸ்ட் ஆக்கிவிடும் முகாந்திரமாக அவருக்கு "குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்", "இயக்கவியல் பொருள்முதல் வாதம்","தாய்" என்று புத்தகங்களைக் கொடுத்து படிக்க சொன்னார். எந்த நூலாக இருந்தாலும் நல்லாருக்கு ஆனா புரியல! என்று நமது சி.எம். மாதிரி குழப்பமான ஸ்டேட்மென்டோடு இரண்டே நாட்களில் திருப்பிக் கொடுத்துவிடுவார். மூலதனத்தை கொடுத்தாலும் மூன்றே நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவார் என்று பின்னர் எங்கள் வீட்டு தோழருக்கு புரிந்தது. அது அவரது தவறும் இல்லை. முதலிரண்டு புத்தகங்களில் நான்காவது பக்கத்திற்கு கொட்டாவி விட்டவர்களே அதிகம். (கனமான, சிக்கலான மொழிபெயர்ப்பு) விடிய, விடிய கம்யூனிச புராணம் கேட்டாலும் ஷபானா ஆஸ்மியோட அப்பா சஃப்தர் ஹஷ்மி என்கிற ரீதியில்தான் புரிந்து கொள்வார். எதையும் முழுதாகவும் அவரால் கேட்க முடியாது. ஆனால் சமதர்ம சமுதாயம் என்ற ஒற்றை வரியில் ஈர்க்கப்பட்ட தீவிர அபிமானி. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும், குடும்ப சண்டை என்றாலும் எல்லாவற்றிற்கும், 'புரட்சி வரணும் தோழர்' என்பார். ஏதோ பக்கத்து வீட்டு பரமசிவம் வரணும் என்பது மாதிரி! தவணை முறையில் வாங்கிய டிவியும், க்ரைண்டரும் மட்டுமே அவரது சொத்துக்கள். அந்தம்மா காசுக்கு மாவரைத்துக் கொடுப்பார்.
அந்த காம்பவுண்டில் வீட்டுக்காரம்மாவிடமும், இவரிடமும் மட்டுமே இந்த இரண்டு சாதனங்களும் இருந்தன. இவர் டிவி வாங்கியதன் காரணம் மிக சுவாரஸ்யமானது. வீட்டுக்காரம்மா காசு வாங்கிக் கொண்டுதான் யாரையும் டிவி பார்க்க அனுமதிப்பார். வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் என்றால் இருபத்திஐந்து காசும், சினிமா என்றால் ஐம்பது காசும். நல்லவேளையாக அப்போதெல்லாம் ஒரு ஒளிபரப்பு மட்டுமே. இன்று போல் என்றால் அந்த அந்தம்மா கலெக்ஷனைப்போட்டு சொந்தமாக ஒரு சானலே தொடங்கி இருக்கும்! இதனை எதிர்க்கும் விதமாக தவணை முறையில் கண்ணிமைகளை துல்லியமாய் காட்டும் (இதுதான் அந்த டிவியின் விளம்பர வாசகம் ) சாலிடேர் பி/வொயிட் டிவி வாங்கி அனைவருக்கும் இலவசம் என்று அறிவித்தார். இது சம்பந்தமாக மனைவியுடன் நடந்த சண்டையில் முதல் முறையாக வெற்றியும் பெற்றார்!
இதன் காரணமாக அந்த பூர்ஷ்வா பெண்மணிக்கும் (அப்படித்தான் அழைப்பார்) இவருக்கும் மறைமுக யுத்தம் தொடங்க ஆரம்பித்தது. காலையில் குளியலறைக்கு அவர் வரும் நேரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்வதில் ஆரம்பித்து 'சைக்கிள ஏன் இங்க வக்கிறீங்க?' உங்க பையன் சத்தம் போடுகிறான் என்று மொன்னையான காரணங்களைக் காட்டி சண்டை போட ஆரம்பித்தார். தோழர் எதையும் சட்டை செய்யமாட்டார். வீட்டை காலி செய்யமுடியாது என்றும் அறிவித்து விட்டார். ஆனாலும் சண்டை வந்து கொண்டுதான் இருந்தது. இதை ஒரு ஆதிக்க சக்தியை எதிர் கொண்டு பெற்ற வெற்றியாகவே நினைத்தார். மற்ற மாத சம்பளகாரர்களைப் போல் குருவி சேர்ப்பது போன்று சேர்த்து புறநகர் பகுதியில் சொந்தவீடு கட்டுவது அல்லது சீட்டுப் போட்டு மகள்களுக்கு நகை, பாத்திரம் வாங்குவது என்பது மாதிரியான எந்த கனவுகளும் அவருக்கு இல்லை. மகள்களுக்கு வரதட்சணை கொடுக்காமலும், மகனுக்கு வரதட்சணை வாங்காமலும் திருமணம் என்பதே அவரது தீர்மானமாக இருந்தது. முருகாம்மாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாததுடன் இந்த துப்புக்கெட்ட மனுசன வச்சிகிட்டு என்ன செய்ய போறனோ தெரியலையே? என்று போவோர் வருவோரிடம் புலம்பியபடி இருந்தார்.
நாங்கள் அங்கிருந்து மேற்கு மாம்பலம் பகுதிக்கு மாறிவிட்டோம். எப்போதேனும் அங்கு சென்று பார்த்தோம். நாளடைவில் அதுவும் விட்டுப் போனது. திடீரென்று ஒரு நாள் முருகனும், அவன் அம்மாவும் வீட்டிற்கு விஜயம் செய்து மூத்த பெண்ணின் திருமண அழைப்பிதழை நீட்டி கல்யாணத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதில் "வட்ட செயலாளர் அண்ணன் ------அவர்கள் தலைமையில்" என்று அச்சிடப்பட்டு இருந்தது. முருகாப்பாவைப் பற்றி விசாரித்தபோது, முருகாம்மா ஒரு அலட்சிய பாவணையில், '"அந்த மனுசனுக்கு இந்த கண்ணாலத்துல இஷ்டமில்லை". "அவரு கொண்டு வந்த ரெண்டு வரனும் அவருமாரியே வெட்டிஞாயம் பேசிக்கிட்டு இருக்கிறவங்க"(அது சிஐடியூ தோழர்கள்) நம்ம சாதியும் கிடையாது. இப்ப வீட்ல முருகன்தான் பொறுப்பா இருந்து காரியம் பாக்கிறான். எங்க ஏரியா வட்ட செயலாளர்கிட்ட வேலைக்கு சேர்ந்து இருக்கான்(அடியாளாக). பொறுப்பா இருக்கான்ட்டு இவனாண்ட ரொம்பப் பிரியம். கூட வேல செய்ற பையன்தான் மாப்பிள்ளை. நம்ம ஜனம், நல்ல சம்பாத்யம் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
திருமணத்தின் போது ஒரு பார்வையாளாராக கடைசி வரிசையில் சுரத்தின்றி அமர்ந்திருந்தார் நம் தோழர். எங்களைக் கண்டதும் முகம் மலர நலம் விசாரித்தார். அவஸ்த்தையான சில மௌன நொடிகள் கழிந்து அவராகவே "பிள்ளைகள் தலை எடுத்துவிட்டார்கள். அவரவர் தீர்மானங்கள் அவரவர்க்கு. நாம் பார்வையாளராக மாறியாச்சு என அதிரடியாக சிரித்தார்.
“வாழ்க்கை ஒரு சூதாட்டம். விளையாடத் தெரியாதவர்களும், விரும்பாதவர்களும் இங்கு பங்காளர்கள் அல்ல பார்வையாளர்களே”.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நல்ல பதிவு.
உங்கள் எழுத்து நடை இயல்பாக, எளிமையாக இருக்கிறது. நன்கு தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக