தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “தல-தளபதி”. இவருக்கு நெருக்கமானவர்கள் இவரை ஜாம் என்று விளிப்பார்கள். ஸ்வீட் மேன். கணிதம் மற்றும் கணினி பேராசிரியர் (டாக்டரேட்). (Institute of Mathematical Sciences)
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் நண்பர் வள்ளிதாசனுடன், அவரது அசிஸ்டெண்ட்டாக சுற்றிக் கொண்டு இருந்த காலத்தில், தென் சென்னை அறிவொளி இயக்கம் சம்பந்தமாக ராமானுஜத்தை சந்திக்க வேண்டும் என்று என்னை அழைத்து சென்றார். அவரைப் பற்றி அவரது அறிவியல் கட்டுரைகள் மற்றும் நண்பர்கள் மூலமாகவும் மட்டுமே தெரியும். ஒரு மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம். மாடி வீட்டில் யாரும் இல்லை. கீழேயிருந்த வீட்டு உரிமையாளரிடம் சாவி பெற்று திறந்து அமர்ந்திருந்தோம். அப்போது நண்பர், ஜாம் ஒரு சாவியை கீழ் வீட்டில் கொடுத்து இருப்பார். யார் வந்து அவர் பெயரை சொல்லி சாவி கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். எந்த நிபந்தனையும் கிடையாது என்றார். எனக்கு ராமானுஜத்தை விட, அந்த வீட்டு உரிமையாளர்களை நினைத்து ஆச்சரியமாக இருந்தது! வாடகைக்கு குடியிருப்பவர்களை படாதபாடு படுத்திக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில், சாவியை வாங்கி வைத்துக் கொண்டு, வருபவர்களுக்கு கொடுத்துகொண்டிருந்தால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். அது 'பேஜர்' காலம். எனவே யாருக்கோ தொலைபேச வேண்டும் என்று நண்பர் வெளியே போய்விட்டு வருகிறேன் என்றார். நண்பரும் நிறைய நல்ல பிரின்ஸ்பில்ஸோடு வாழ்பவர். அதில் ஒன்று, அவருக்கு வரும் அழைப்புகளுக்கு யாராக இருந்தாலும் முடிந்தவரை உடனடியாக பதிலளிப்பது. அவர் வெளியே சென்றுவிட, ஹாலில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து முன்னால் இருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்தேன்.
அச்சமயத்தில் கதவை திறந்து கொண்டு, அந்த காலத்து அரவிந்சாமி, அஜீத் டைப் ஹீரோக்களை மொத்தமாக கலக்கி எடுத்த பெஸ்ட் அவுட்புட் போன்று ஒரு இளைஞன் உள்ளே வந்தான். வசீகரமான தோற்றம். ஒரு நீல ஜீன்ஸும், காட்டன் குர்தாவும் அணிந்திருந்தான். என்னைப் பார்த்து ஹலோ என்று புன்னகைக்கவும், நானும் ஹலோ என்றேன். ஜாமின் மாணவனாக இருக்கலாம் என்று எண்ணினேன். இளைஞன் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வெளிப்பட்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு கோப்பையை நட்புடன் என்னிடம் நீட்டி, ஹலோ! நான் ராமானுஜம். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? என்றார். எனக்கு பேச்சே வரவில்லை. ஏனெனில் அவரது பெயர், படிப்பு வேலை எல்லாவற்றையும் வைத்து ஒரு சிறிய வழுக்கை அல்லது நரையுடன் கூடிய கண்ணாடி அணிந்த ஒரு வயதானவரை எதிர்பார்த்து சென்றிருந்த எனக்கு அதிர்ச்சி. ச்சே! இந்த மாதிரி ஒரு நபர் நமக்கு வாத்தியாராக வந்திருந்தால், கணிதப்புலி, கணினி புலியாக மாறியிருப்போம் என்ற கண நேர ஜொள்ளை துடைத்துவிட்டு பேசத் துவங்கினேன். நண்பர் வள்ளிதாசனும், நானும் அவருடன் பேசிக் கொண்டு இருந்தோம். எங்களுடன் உரையாடிக் கொண்டே பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று வேலைகளை செய்து கொண்டிருந்தார். பின் கம்ப்யூட்டரில் சிறிது நேரம் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். இரவு தோசை செய்து கொடுத்தார். பின்னர் ஹாலில் அமர்ந்து நள்ளிரவு வரை அறிவொளி இயக்கம் தொடர்பான வேலைகளை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் பற்றி விசாரித்தார். கல்லூரி படிப்பு தாண்டி படிப்பீர்களா? எனக் கேட்டார். பு.பி, திஜா தொடங்கி ஜெகே, வண்ணநிலவன், அசோகமித்திரன், சுஜாதா, அழகிரிசாமி என்று மிகப் பெரிய பட்டியலைக் கொடுத்தேன். படிப்பை பொழுதுபோக்கா இல்லாம தினசரி பழக்கமா வச்சிருக்கீங்க போல பாராட்டுக்கள் என்றார். தமிழ் ஓகே! ஆங்கிலத்தில்? என்று கேட்டார். உண்மையில் ரஷ்ய, பிரஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களைத் தாண்டி எனது ஆங்கில அறிவு ரொம்ப, ரொம்ப கம்மி. தமிழ் வழிக் கல்வியில் படித்ததால் ஆங்கில அறிவை வளர்த்து கொள்வதற்காக கல்லூரி நண்பர்களிடம் ஒன்றிரண்டு புத்தங்கள் வாங்கிப் படித்திருக்கிறேன். அதோடு அப்போது குமுதத்தில் இது போன்ற ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பு, தொடராக வந்ததையும் படித்ததுண்டு அவ்வளவே! இருந்தாலும் அழகான பேராசிரியர் முன் அதையெல்லாம் வெளிப்படுத்த விரும்பாமல், சேஸ், நான்சி ட்ரூ என்று சொல்லி வைத்தேன். தமிழ் அளவுக்கு உங்களுக்கு ஆங்கிலத்தில் சரியான கைடன்ஸ் இல்லை. என்னிடமிருக்கும் புத்தகங்களை எடுத்து படியுங்கள் என்றார். இடையே ஆரிகாமி (காகிதக் கலை) தவளை ஒன்றை செய்து தவளைகளைப் பற்றி சில சுவையான விஷயங்களை கூறினார். மணி ஒன்றை நெருங்கியதும், உறங்கலாம்! அதிகாலை செல்ல வேண்டும். ம்யூசிக் கிளாஸ் போகவேண்டும் என்றார். பாட்டா? என்றேன் ஆச்சரியத்துடன். ஆமாம் வயலின் எளிதாக கற்றுக் கொள்வதற்கு வாய்பாட்டு நல்லது என்று போகிறேன் என்று கலவரப்படுத்தினார். இவரென்ன மனுஷனா? ரோபோவா என்று ஆச்சரியம் வந்தது. எனது வாழ்க்கையில் ஓரிரவுக்குள் மிகப் பெரிய அபிப்பிராயத்தை எனக்குள் ஏற்படுத்திய ஒரு மனிதர் இவர் மட்டுமே! நான் எல்லாம் தெரிந்த பெரிய ஆள் இல்லையென்றாலும் யாரிடமும், எந்த விஷயத்திலும் எளிதில் இம்ப்ரெஸ் ஆகிவிட மாட்டேன். அறிவியல் இயக்க பட்டறையில் விஷயங்களை இவர் எளிமையாக விவரிக்கும் விதம், வித்தியாசங்கள் இன்றி எல்லோரிடமும் நட்பு பாராட்டும் முகம் , கணிதம், அறிவியல் துறைகளை தாண்டிய ஆர்வங்கள் இவர் என்று ஏற்படுத்திய ஆச்சரியங்கள் ஏகப்பட்டவை!
மிக எளிய மனிதர்!
நம்மூரில் எளிமை பலவகைப்படும்.
முதலாவது அதிகம் செலவு செய்து எளிமையாக இருப்பது. இது காந்தியவகை!
இரண்டாவது, எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு ஒரு கட்டத்தில், போங்க பாஸ்! என்னால முடியாது என்று உடம்பு முறுக்கிக் கொள்ளும் போது எளிமையாக இருப்பது. இது இன்றைய தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்களின் ட்ரெண்ட்.
மூன்றாவது, தேர்தல் நேரங்களில் கிராமத்து எளிய மக்களின் வீடுகளில் நுழைந்து கலவரப்படுத்துவது.
நான்காவது, முதல் வாரத்தை கேட்பரீஸோடு தள்ளி, இரண்டாவது வாரத்தில் ஒரு வேளை காப்பியை தள்ளி, மூன்றாவது வாரத்தை முக்கி, முக்கி தள்ளி, நான்காவது வாரத்தில் நாக்கு வெளியே தள்ளி, முப்பது நாட்களை ஒரு மாதத்திற்கு வைத்தவனை சபித்துக் கொண்டிருக்கும் கட்டாய எளிமை. இது பெரும்பாண்மை சமூகம்.
இது எதையும் சாராத எளிமை இவருடையது. சம்பாதிப்பதற்கான படிப்பு, திறமை, வாய்ப்பு எல்லாம் இருந்தும் அதை பொருட்படுத்தாது தான் சார்ந்திருக்கும் இந்த சமூகத்திற்கு இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்று வாழ்வது. இடத்திற்கேற்றவாறு அனுசரித்து இருந்து கொள்வது. எளிமையான, சௌகரியமான உடை. கையில் வாட்ச் கூட அணிந்து இருக்கமாட்டார். விஷயங்களை எளிய தமிழ், கடின தொழில்நுட்ப மொழி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிராளிகளின் அலைவரிசைக்கு ஏற்ப பேசுவார். எந்த விஷயத்தையும் யாரிடமும் சிரித்த முகத்துடன் விளக்குவார். யார் என்ன சொன்னாலும் குழந்தையாக இருந்தாலும் பொறுமையாக கவனித்து கேட்பார்.
இன்றும் துறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பவர். தேசிய பாடதிட்ட கட்டமைப்பில் (NCF) முக்கிய பங்குவகிப்பவர். NCERT பாட புத்தகவடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்.
சமையலில் இருந்து கணிதம், கம்ப்யூட்டர், அறிவியல், இலக்கியம், சமூகம், சங்கீதம் என்று A-Z பேசக் கூடிய லெஜண்ட். இவர் வெளியில் பாடப் படாத(un sung) நிகழ்கால ஹீரோ என்று சொல்லலாம். இன்றும் யூ டியூபிலிருந்தும் மற்ற செய்திகளில் இருந்தும் இவரைப் பற்றி வெளியாகும் தகவல்களை தேடிப் படிக்கிறேன். NCERT இயக்குனர் பதவிக்கு அவரது பெயர் முதலாவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது வரை! அறிவியல் இயக்கம், குழந்தைகளுக்கான அறிவியல் பங்களிப்பு, இந்த சமூகத்தில் எளிய மனிதர்களின் மீதான அக்கறை என்ற இவரது பாதை வணக்கத்திற்கு உரியது.
Hats off to you Mr. Ramanujam.
மனிதம், ஹ்யூமன்(humane) இந்த வார்த்தைக்கு அகராதியைப் பொறுத்தவரை அன்பு, கருணை, உயர்ந்த பண்பு என்று பலவாறாக அர்த்தப்படுத்தபடுகிறது. அத்தகைய குணங்களை கொண்டவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று அழைக்கும் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள் என்றுதானே அர்த்தம்.
எத்தனை மனிதர்கள் மனிதகுலப் பாதையில் சத்தமின்றி தங்களை வெளிப்படுத்தாது மகத்தான காரியங்களை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டு இருக்கிறார்கள் சக உயிரினங்களுக்காக. ஒவ்வொரு நாளும் முகமறிந்த, அறியாத மனிதர்களின் உதவியுடன்தான் நாம் நமது வாழ்வின் நிம்மதியையும் சௌகரியங்களையும் அனுபவிக்கிறோம். எத்தனை மனிதர்கள் தங்களை அழுக்காக்கிக் கொண்டு நமக்கு சுத்தத்தை தருகிறார்கள். அடிவயிற்று பசியுடன் உணவளிக்கிறார்கள். கந்தலாடைகளை உடுத்திக் கொண்டு நல்ல உடைகளை தருகிறார்கள். இந்த பூமியில் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது.
ஆதியில் மனித இனம் குழுக்களாக காடுகளில் திரிந்த காலத்தில் ஒன்று மற்றொன்றை அழித்து கடைசியாக நிலை கொண்டவர்கள்தான் தற்போதைய மனித இனம் என்கிறது வரலாறும் அறிவியலும். அக் கூற்றுப்படி நாம் ஒரே மனிதஇனம் அவ்வளவே. மனிதர்களின் பேராசையாலும் வக்கிரத்தாலும் இந்த பூமி சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனித இனத்தை தவிர்த்து தனது தேவைக்கு அதிகமாக சேர்ப்பதாக, தனது சக இனத்தை சுரண்டி கொழுப்பதாக வேறு ஒரு உயிரினத்தை சுட்டி கூற முடியுமா நம்மால்? எங்கே தொடங்கியது இந்த சுரண்டல்? தோழியின் மகள் (சிறுமி) சமீபத்தில் கூறினாள். இந்த பணத்தை கண்டுபிடித்தவரை கண்டுபிடித்து உதைக்க வேண்டும். அதனால்தான் இந்த ஏற்ற தாழ்வு என்று. அவளிடம் கூறினேன் பணம் என்பது வேறு எந்த கண்டுபிடிப்புகளையும் போலவே சில வசதிகளுக்காக செய்யப்பட்ட ஒன்று. கண்டுபிடிப்புகளை நம்மால் ஒரு போதும் குற்றப்படுத்த இயலாது. நமது பேராசைகளையும் அதற்கு சாதகமாக கண்டுபிடிப்புகளை மாற்றி உபயோகிக்கும் வக்கிரத்தையும் மட்டுமே குற்றப்படுத்த முடியும்.
நமது வாழ்வின் மகத்தான தருணங்கள் என்று நாம் எதை சொல்கிறோம்? ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். வீடு, கார் வாங்கியதையா? பதவியையா? நிச்சயம் இல்லை. நமது வீட்டில் ஒரு உயிரினம் பிறந்த அல்லது வந்த தருணத்தைதான். அது ஒன்றுதான் இந்த பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. யார் எப்படி போனால் என்ன? நமது பிள்ளைகள் நல்லபடியாக இருந்தால் போதும் என நினைக்கும் நமது பேராசையின் காரணமாக நம்மால் நாசமாக்கப்பட்ட ஒரு சூழலில் நமது சந்ததியினர் எங்கனம் நிம்மதியாக வாழ இயலும்?
எத்தனை, எத்தனை மனிதர்கள் நம் வாழ்வில் கடந்து செல்கிறார்கள் ஏதோ ஒரு பாடத்தை, செய்தியை சொல்லியவண்ணம்! நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கும் என்பார்கள். செய்யக் கூடியது, செய்ய கூடாதது என்று இரண்டுமே இருக்கும். தங்கள் வாழ்க்கையின் மூலம் மேற்சொன்ன இந்த இரண்டையும் எனக்கு கற்று தந்த, தருகின்ற, தர இருக்கிற அனைத்து மனிதர்களுக்கும் நன்றி!